மாநிலங்களவையில் மகளிர் மசோதாப் பிரதிகளை சமாஜ்வாதிக் கட்சி, ராஷ்டிரீய ஜனதாதளம், ஐக்கிய ஜனதாதளம் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் வெறித்தனமாகக் கிழித்து எறிந்த, துணைக் குடியரசுத் தலைவரின் ஒலிபெருக்கியை ஆவேசமாகப் பிடித்து இழுத்த காட்சியைப் பார்க்கும்போது கணவன்மார்கள் காட்டுமிராண்டித்தனமாக பெண்டாட்டிமார்களை அடிக்கும் பழகிப்போன காட்சி நினைவிற்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

மசோதாவை எதிர்ப்பவர்கள் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடே கூடாது என்று சொல்லவில்லையே, அதற்குள் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் உள் ஒதுக்கீடு வேண்டும் என்றுதானே கேட்கிறார்கள் என யாரேனும் வாதிடலாம். அதற்கு முன்னதாக அவர்கள் ஒரு விஷயத்தை நினைவுறுத்திக் கொள்வது நல்லது. நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் தற்போது பொதுவாக அப்படி ஏதும் ஒதுக்கீடு இல்லை என்பதுதான் அந்த விஷயம்.

laluprasad_330சமூகநீதியை முன்வைத்து அரசியல் நடத்தும் இந்தக் கட்சிகள் அத்தகைய ஒரு ஒதுக்கீட்டை எப்போதுமே கோரியதில்லை. ஒதுக்கீடும் இல்லை. இந்த நிலையில் பெண்களுக்கு இடஒதுக்கீடு செய்வது பிற்படுத்தப்பட்ட, முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை மேலும் குறைக்கச் செய்யப்படும் சதி என்று முலாயமும், லாலுவும் குற்றம் சாட்டுவது வேடிக்கையாக இருக்கின்றது. முன்னரே அப்படி ஒரு ஒதுக்கீடு இருந்திருந்து, அப்படி ஒதுக்கப்பட்ட தொகுதிகள் பெண்களுக்கு என்று பொதுவாக ஒதுக்கப்பட்டால்தான் சமூகநீதிக்கு பங்கம் ஏற்படும் என்று கூறமுடியும். ஏற்கனவே உள்ளபடி தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கென பெண்களுக்கான ஒதுக்கீட்டிலும் உள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மதச்சிறுபான்மையினருக்குத் தனித் தொகுதிகள் வேண்டும் என்கின்ற கோரிக்கை சுதந்திரத்திற்கு முன்பு எழுப்பப்பட்டது. அது ஏற்றுக் கொள்ளப்படவில்லை. சுதந்திரத்திற்குப் பின்னர் இப்போது அந்தக் கோரிக்கையை பெரிதாக யாரும் எழுப்பவில்லை. இப்போது பெண்களுக்கான ஒதுக்கீட்டின்போது எழுப்புவது சரியல்ல. மேலும், இந்த மதச்சார்பற்ற முதலாளித்துவக் கட்சிகளும் கூட என்னதான் பெரிதாக சிறுபான்மையினரின் நலன் குறித்துப் பேசினாலும் தங்களது கட்சிகளின் சார்பாக 10% முஸ்லிம்களைக் கூட வேட்பாளர்களாக நிறுத்துவதில்லை. சிறுபான்மையினர் கணிசமாக வசிக்கும் தொகுதிகளில் கூட சிறுபான்மையினர் அவ்வளவாக நிறுத்தப்படுவதில்லை என்று சச்சார் அறிக்கை உள்ளிட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடந்த மக்களவையில் 36 ஆக இருந்த முஸ்லிம் எம்பிக்களின் எண்ணிக்கை இந்த மக்களவையில் 29 ஆகக் குறைந்துள்ளது.

பெண்களுக்காக ஒதுக்கப்படும் தொகுதிகளில் போட்டியிடும் கட்சிகள் சிறுபான்மையினரை அல்லது பிற்படுத்தப்பட்டோரை வேட்பாளராக நிறுத்துவதற்கு எந்தத் தடையுமில்லை. யார் இவர்களைத் தடுத்தது என்று சோனியா காந்தி மிகச் சரியாவே கேள்வி எழுப்புகின்றார். காங்கிரஸ் கட்சியும் கூட சிறுபான்மையினருக்கு உரிய பிரதிநிதித்துவம் கொடுப்பதில்லை என்பது மற்றொரு விஷயம். எனினும், இந்தப் பின்னணியில் உள் ஒதுக்கீட்டின் பெயரில் பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவைத் தடுப்பது உண்மையில் இவர்கள் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டையே எதிர்க்கிறார்களோ என்கின்ற சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.

ஏற்கனவே ஒதுக்கீடு இல்லை என்றபோதும் சகல கட்சிகளையும் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட சாதியினர் பெரும் எண்ணிக்கையில் போட்டியிடுகின்றனர். வெற்றியும் பெறுகின்றனர். இந்திய நாடாளுமன்றத்தில் சுமார் 25% இதர பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக இருக்கின்றனர். அதன்றி தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான ஒதுக்கீட்டில் 22% உறுப்பினர்கள் இருக்கின்றனர். மேலும், சுமார் 5% சிறுபான்மையினர் இருக்கின்றனர். ஆக இதுவே பெரும்பான்மை ஆகிவிட்டது. எஞ்சியுள்ள 48 வீதமும் பார்ப்பனர் அல்லர். பார்ப்பனரும் பார்ப்பனரல்லாத இதர மேல்சாதியினரும் அதில் அடங்குவர். ஆனால் அவர்கள் பெரும்பாலும் ஆண்களாக மட்டுமே இருக்கின்றனர்.

2004ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் சுயேச்சைகள் 2385 பேரையும் சேர்த்து 5435 பேர் போட்டியிட்டனர். இவர்களில் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த வேட்பாளர்களும் அடங்குவர். ஆனால் பெண்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவுதான்.

நாடு முழுவதும் போட்டியிட்ட 355 பெண்களில் வெறும் 45 பேர்தான் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். கட்சிவாரியாக பெண்களின் வெற்றி விகிதத்தைப் பார்ப்போம். மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை ஆதரிக்கும் காங்கிரசில் 45 பெண்கள் போட்டியிட்டு 12 பேர் வெற்றி பெற்றனர் (26.67%). பாஜகவில் 30 பேர் போட்டியிட்டு 10 பேர் வெற்றி பெற்றனர் (33.33%). மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் 8 பேர் போட்டியிட்டு 5 பேர் வெற்றி பெற்றனர் (62.50%). தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் 5 பேர் போட்டியிட்டு 2 பேர் வெற்றி பெற்றனர். (40%). இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்ட இருவரில் ஒருவர் வெற்றி பெற்றார் (50%). (பொதுவாக இடதுசாரிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை மற்ற தேசிய கட்சிகளைவிட மிகவும் குறைவுதான். ஏனெனில் அவர்களுக்கு தேர்தலில் வெற்றி பெறக்கூடிய அளவு செல்வாக்கு இருக்கும் இடங்கள் என்பது குறிப்பிட்ட சில பிரதேசங்கள் அல்லது மாநிலங்கள் என்கின்ற வரையறைக்கு உட்பட்டவை). இதன்றி மசோதாவை ஆதரிக்கும் மாநிலக் கட்சிகள் இருக்கின்றன. அவற்றில் குறிப்பாக, திமுக சார்பில் 3 பேர் போட்டியிட்டு 3 பேர் வெற்றி பெற்றனர். மசோதாவை எதிர்க்கும் கட்சிகளின் வெற்றி விகிதம் பின்வருமாறு: பகுஜன் சமாஜ் கட்சி 5%; மற்ற மாநிலக் கட்சிகள் 21.21%. (சமாஜ்வாதிக் கட்சி 20ல் போட்டியிட்டு 3ல் வெற்றி 15%; ஐக்கிய ஜனதாதளம் 2ல் போட்டியிட்டு 1 (50%). ஒட்டு மொத்த பெண்கள் வெற்றி விகிதம் 12.68%தான்.) இதன் பொருள் என்னவாகக் கருதப்படாலாம் எனில், பெண் வேட்பாளர்கள் வெற்றி பெறுவதில் கட்சிகளுக்கு அவ்வளவு அக்கறையில்லை எனலாம்; பெண்கள் ஒப்புக்காகத்தான் வேட்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள் எனலாம்; வெற்றி வாய்ப்பு குறைவாக உள்ள தொகுதிகளில் பெண்கள் நிறுத்தப்படுகிறார்கள் என்றும் ஒரு கருத்து இருக்கின்றது.

அனைத்துக் கட்சிகளும் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையில் 33 வீதம் இடங்களை பெண்களுக்கு ஒதுக்கிவிடலாம் என்று இக்கட்சிகள் மாற்று யோசனை தெரிவிக்கின்றன. ஆனால் 33 வீதம் இடங்கள் பெண்களுக்கு மட்டும்தான் என்பதில் சில கட்சிகளுக்கு மட்டும் என்ன பிரச்சனை? தாங்கள் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையில் 33% பெண்களுக்கு ஒதுக்கத் தயாராக இருக்கும் இவர்கள் பெண்களுக்கு 33% தொகுதிகள் ஒதுக்குவதை எதிர்ப்பதற்கு தேர்தல் அரசியல் ரீதியாக ஒரு காரணம்தான் இருக்க முடியும். வெற்றி வாய்ப்பே இல்லாத தொகுதிகளில் எல்லாம் பெண் வேட்பாளர்களை நிறுத்தி விட்டு நாங்கள் 33 அல்ல, 50 வீதமே கொடுத்திருக்கின்றோம் என்று கூட கூறிக் கொள்ள முடியும். இந்த வேலையை மசோதாவை எதிர்க்கும் எல்லாக் கட்சிகளும் செய்ய முடியும். ஆதரிக்கும் கட்சிகளும் கூட செய்ய முடியும். ஆனால், எல்லாக் கட்சிகளின் சார்பாகவும் 33% பெண்கள் போட்டியிட்டிருப்பார்களே ஒழிய, நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் 33% பெண்கள் இருக்க மாட்டார்கள். அதை உறுதிப்படுத்துவதுதான் இந்தச் சட்டம்.

அந்த பொதுத் தொகுதிகளில் 33% இடங்களில் பெண்களை வேட்பாளர்களை நிறுத்துவதில் இக்கட்சிகளுக்கு என்ன சிக்கல் இருக்கின்றது?

போதுமான அளவு பெண் தலைவர்களை இவர்கள் உருவாக்கவில்லை; அல்லது உருவாக விடவில்லை; எதிர்காலத்தில் உருவாக்கும் எண்ணமும் இல்லை.

இந்த ஒதுக்கீட்டின் மூலம் 181 தொகுதிகள் பெண்கள் மட்டும் போட்டியிடத் தக்கதாகும். ஏற்கனவே எஸ்சி-எஸ்டி மக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 122 தொகுதிகளில் இருந்து அதே பிரிவுகளைச் சேர்ந்த பெண்கள் மட்டும் போட்டியிடுவதற்காக இதில் 40 தொகுதிகள் ஒதுக்கப்படும். மொத்தமுள்ள 543 ல் 263 போக மீதி 280 தொகுதிகள் மட்டும்தான் பொதுத் தொகுதிகளாக இருக்கும். அவற்றில் சாதி, மத பேதமின்றி ஆண்கள் போட்டியிடலாம். எஸ்சி-எஸ்டி பிரிவில் எஞ்சியிருக்கும் 82ல் அப்பிரிவுகளைச் சேர்ந்த ஆண்கள் போட்டியிடலாம். மொத்தத்தில் 362 தொகுதிகள் 'ஆண்கள்' போட்டியிடக் கூடிய தொகுதிகளாக இருக்கும். இவற்றில் பெண்களும் விரும்பினால் போட்டியிடலாம். அதாவது இவை ஆண்களுக்கு மட்டும் ஒதுக்கப்பட்ட தொகுதிகள் அல்ல.

மேலும், அனைத்து மாநிலச் சட்டமன்றங்களிலும் மொத்தம் 4109 இடங்கள் இருக்கின்றன. அவற்றில் எஸ்சி-எஸ்டிக்களுக்கு 1167 இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. பெண்களுக்கான ஒதுக்கீடு அமலானால் அதிலிருந்து ஆண்கள் போட்டியிடுவதற்கான தொகுதிகளின் எண்ணிக்கை மொத்தம் 1370 (981 பொதுத் தொகுதிகள், 381 ரிசர்வ் தொகுதிகள்) குறைந்துவிடும். 2739 தொகுதிகள் (ரிசர்வ் 786 உள்பட) மட்டுமே எஞ்சியிருக்கும். இதிலும் பெண்கள் விரும்பினால் போட்டியிடலாம். இதுதான் அனைத்து சாதிகளையும் சேர்ந்த, ஆணாதிக்கவாதிகளை அலறச் செய்கின்றது.

மேலும், இப்படி ஒதுக்கப்படும் தொகுதிகள் தேர்தலுக்குத் தேர்தல் சுழற்சி முறையில் மாறும் என்கின்றது மசோதா. இன்று பொதுத் தொகுதியாக இருப்பது நாளை பெண்களுக்கென ஒதுக்கப்பட்ட தொகுதியாக ஆகலாம். ஆதலால், ஒரு முறை ஒரு தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்றவர், தனக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்காது என்பதால் தொகுதிக்கு எதுவும் செய்யமாட்டார் என்றொரு வாதமும் இந்த மசோதாவிற்கு எதிராக வைக்கப்படுகின்றது. இது பொதுவாக அரசியல்வாதிகளுக்கு எதிராக வைக்கப்படும் வாதங்களில் ஒன்றாகும். கட்சி அம்சத்தை மறந்து விட்டு அல்லது மறைத்து விட்டு தனிநபர்களை மட்டும் பார்க்கும் வாதம். தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநிதி தொகுதிக்கு தான் ஆற்ற வேண்டிய கடமைகளைச் செய்யவில்லை என்றால் அது அவரை மட்டுமல்ல, அவரது கட்சியையும் பாதிக்கும். இதற்கு நிரந்தர தீர்வு தேர்ந்தெடுக்கப்பட்டவரை திரும்ப அழைத்துக் கொள்ளும் வகையில் தேர்தல் முறையில் சீர்திருத்தம் கொண்டு வருவதுதான். ஆனால், அந்தப் பிரச்சனையை இப்போது எழுப்பி, அதைக் காரணம் காட்டி மசோதாவை எதிர்ப்பது உண்மையில் பெண்களுக்கு இடஒதுக்கீடு என்பதையே எதிர்ப்பதாகும்.

எல்லாவற்றுக்கும் மேலாக பெண்களுக்கு நீதி வழங்குவதும் சமூக நீதியின் ஒரு அங்கம்தான். பெண் விடுதலை இல்லாத சமூக விடுதலை என ஒன்று இல்லை. சாதி, மதம் எதுவாக இருந்தாலும் பெண்கள் ஒடுக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றார்கள். ஆனால், எல்லா சாதிப் பெண்களின் நிலையும் சமமமாகவா இருக்கின்றது என்கின்ற கேள்வி வருகின்றது. இல்லைதான். ஆனால், மீண்டும் அதே பதில்தான். அல்லது எதிர்கேள்விதான். இந்தக் கட்சிகள் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பெண்களை, சிறுபான்மை மதத்தைச் சேர்ந்த பெண்களை வேட்பாளராக நியமிப்பதை யார் தடுத்தார்கள்? சமுதாயத்தில் இந்தப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள்தான் பெரும்பான்மை என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. ஆகவே, வெற்றியும் நிச்சயம். அனைத்துக் கட்சிகளுமே இதே உத்தியைப் பயன்படுத்தினால், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை வேட்பாளர்களை நிறுத்துகின்ற இதே உத்தியைப் பயன்படுத்தினால் இன்னும் நல்லதாகப் போயிற்று.

Mamata_Banerjee_330மேலும், பேராசிரியர் நாகேஸ்வரராவ் (ஹைத்ராபாத் உஸ்மானியா பல்கலைக்கழகப் பேராசிரியர்) கூறுகின்ற கருத்து கவனிக்கத்தக்கது. நாம் முதலில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டிலிருந்து ஆரம்பிக்கலாம். உயர்சாதிப் பெண்கள், செல்வாக்கு மிக்க அரசியல் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள்தான் அந்த இடங்களை அதிகமாகப் பிடிக்கின்றார்கள் என்றால் பின்னர் அதற்கு ஏற்ற வகையில் சட்டத்தை மாற்றிக் கொள்ளலாம். அதுவுமின்றி, காலப் போக்கில் அரசியல் தலைமை என்பது அவர்கள் மத்தியிலிருந்து தோன்றும். இதுதான் எஸ்சி-எஸ்டிக்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்டபோது ஆரம்பத்தில் நிலப்பிரபுக்கள் தங்களது கையாட்களைப் போட்டியிடச் செய்து அவர்கள் மூலம் அதிகாரத்தை அனுபவித்தார்கள். காலப்போக்கில் அப்பிரிவினர் மத்தியிலிருந்து அரசியல் தலைம உருவாகி வளர்ந்ததைக் காண்கிறோம்.

நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் இடஒதுக்கீடு செய்வதற்குப் பதிலாக கட்சிகளே அதைச் செய்ய வேண்டும் என்பது எப்படி பெண்கள் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யாதோ அதே நிலைமைதானே மற்ற நலிந்த பிரிவினர் விஷயத்திலும் நடக்கும் என்ற கேள்வி எழலாம். எந்த சாதி அல்லது மத வேட்பாளர்களை நிறுத்தினால் வெற்றி வாய்ப்பு இருக்கின்றது என்று கட்சிகள் கருதுகின்றனவோ அவர்களுக்குத்தான் கட்சிகள் வாய்ப்பு கொடுக்கும். ஆனால் பெண்கள் விஷயத்தில் அப்படி இல்லை. எல்லாத் தொகுதிகளிலும் பெண் வாக்காளர்கள் சரிபாதி இருக்கின்றனர். இருந்தும் ஆண் வேட்பாளர்களுக்கு எதிராகப் போட்டியிடும் பெண் வேட்பாளர்களில் பெரும்பகுதியினர் தோற்கடிக்கப்படுகின்றனர். எனவே அவர்களுக்குத் தனி ஒதுக்கீடு அவசியமாகின்றது.

மார்ச் 9ம் தேதி மாநிலங்களவையில் மசோதா நிறைவேறிவிட்டது. முந்தைய தினமான மகளிர் தினத்தன்று அவையில் நடந்த கலவரத்தைக் கண்டு பலர் ஆளும் கட்சி ஏன் இந்த மசோதாவை இப்போது தாக்கல் செய்தது, அதற்கு உண்மையிலேயே பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்கின்ற எண்ணம் இருக்கின்றதா, அல்லது வேறு எதிலிருந்தாவது மக்களின் கவனத்தைத் திசை திருப்ப முயற்சிக்கின்றதா என்கின்ற அய்யங்களை எழுப்பினர். ஏனெனில், காங்கிரஸ் மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகளில் உள்ள ஆணாதிக்கவாதிகள் முணுமுணுத்துக் கொண்டிருக்கின்றனர்; கட்சிகள் எடுக்கும் முடிவிற்குக் கட்டுப்படவேண்டியவர்களாக வெளிப்படையாக எதுவும் பேசவில்லை. இதன் காரணமாக இக்கட்சிகளுக்கு உண்மையிலேயே பெண் விடுதலையில் நாட்டம் இருக்கின்றதா என்கின்ற கேள்வியும் இருந்தது.

அணுசக்தி விபத்து நஷ்ட ஈடுச் சட்ட முன்வரைவு தற்போதைய கூட்டத்தில் நிறைவேற்றப்பட காத்திருக்கின்றது. இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தப்படி இந்தியாவில் அந்நிய நிறுவனங்கள் அமைக்கவிருக்கும் அணுஉலைகளில் விபத்து ஏற்பட்டால் அவை கொடுக்க வேண்டிய நஷ்ட ஈடு அதிகபட்சமாக 2785 கோடி என்கின்ற மசோதா. அதிலும் அந்தி நிறுவனங்கள் கொடுக்க வேண்டியது வெறும் 500 கோடிதான். மீதியை இந்திய அரசாங்கம் கொடுக்கும். (என்னவொரு அநியாயம் பாருங்கள். நாட்டை அமெரிக்காவின் காலனியாக மாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.) பெண்கள் மசோதாவால் ஏற்படுகின்ற குழப்பத்தில் இந்தச் சட்டத்தையும், கடும் விமரிசனத்திற்கு உள்ளாகியுள்ள (பட்ஜெட்) நிதி மசோதாவையும் விவாதமின்றி நிறைவேற்றிவிடலாம் என்பது ஆளும் காங்கிரசின் திட்டம் எனப்படுகின்றது. எது எப்படியோ பெண்கள் மசோதா முதல் தடையைத் தாண்டிவிட்டது என்பது இப்போது வரலாறு.

பொதுவாகவே, பெண்களுக்கான ஒதுக்கீடுகள் உடனடியாக பெண்களுக்கு உண்மையான அதிகாரம் அளித்துவிடுவதில்லை. ஆணாதிக்கம் நிலவும் சமுதாயத்தில் பெண்கள் சுயேச்சையாக சிந்திப்பதோ, முடிவெடுப்பதோ அவ்வளவு சுலபமில்லை. உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளபோதும் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களில் பெரும்பாலோர் சுதந்திரமாகச் செயல்பட முடியவில்லை என்பது கண்கூடு. பெயருக்கு பெண்கள் மக்கள் பிரதிநிதிகளாக இருக்கின்றனரே ஒழிய அதிகாரம் செலுத்துவது பெரும்பாலும் ஆண்கள்தான். வேலைக்குப் போகும் பெண்கள் எப்படி சொந்தமாக ஊதியம் ஈட்டியபோதும் ஆணைச் சார்ந்தே இருக்க வேண்டியிருக்கின்றதோ அதே நிலை அரசியல் அதிகாரம் பெற்ற பெண்களுக்கும் தொடர்கின்றது. இருந்தபோதும், செல்வாக்கு உள்ள பின்னணியில் இருந்து அரசியலுக்கு வந்து பின்னர் தங்களவிலேயே அரசியல் தலைவர்களாக ஆனவர்களும் (இந்திரா காந்தி, ஜெயலலிதா போல), உமாபாரதி, மம்தா பானர்ஜி போன்ற எந்தச் செல்வாக்கான பின்னணியும் இல்லாமல் தாங்களாகவே அரசியல் தலைவர்களாக உயர்ந்தவர்களும் இருக்கின்றனர். எனவே இந்த ஒதுக்கீடும் அந்த நல் விளைவை ஏற்படுத்தும்.

பொதுவாகவே, பெண்கள் வேலைக்குப் போவதும், அரசியல் அதிகாரம் பெறுவதும் பெண் ஆணைச் சார்ந்திருக்கும்படி நிர்ப்பந்திக்கும் பொருளாதார, அரசியல் அடிப்படைகளைத் தகர்க்கின்றது. இனி எஞ்சியிருப்பது கலாச்சாரம் எனும் மேல்தளம்தான். அதையும் தகர்த்தெறிவதற்கான போராட்டத்தை இத்துடன் சேர்த்தே நடத்த வேண்டும்.

- அசோகன் முத்துசாமி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

 

Pin It