shobasakthiபுலிகளை துரோகி என்றேன்.
அவர்கள் என்னை அரவணைத்துக் கொண்டார்கள்.
ஈழத் தேசியம் ஒரு கற்பிதம் என்றேன்.
பௌத்த மரபு உனக்கு வசதியாய் இருக்கும் என்றார்கள்.
பெருந்தொகையான மக்கள் கொல்லப்பட்ட போது,
புலிகள் மக்களை கலைத்துப் பிடித்துச் சுட்டார்கள் என்றேன்.
எனது நூலை ஆங்கிலத்தில் கொண்டு வர உதவினார்கள்.
போருக்கு உதவிய எல்லா நாடுகள் குறித்தும் மௌனம் காத்தேன்.
சாதகமான ஒன்றைத் தேர்ந்தெடுத்து போருக்கு எதிராக நிறுத்தினேன்.
என்னை நடுநிலையாளர் என்று சான்றிதழ் கொடுத்தார்கள்.
வெளிப்படையாக வரவா என்றேன்.
இல்லை இல்லை நீ இந்த முகத்தோடு இருப்பதுதான்
எங்களுக்கு வசதி என்றார்கள்.
இதற்கு மேல் விற்க எதுவும் இல்லை என்றேன்.
அவர்களோ முட்கம்பி வேலிகளிலும் வனாந்தரங்களிலும்
வீசப்பட்ட மக்களைக் காட்டினார்கள்;
கூடவே எலும்புக் கூடுகளையும்.
இப்போது நான் சொன்னேன்
அவர்களே அவர்களை அழித்துக் கொண்டார்கள் என்று.
இனி எனது நூல்கள்
ஜெர்மன், டேனிஷ், பிரெஞ்ச் மொழிகளிலும் வரும்....
நானும் மாற்றுக்கருத்துப் பாரம்பரியத்தில் வந்த ஒருவனாவேன்.

- யாழினி

Pin It