‘எனது கனவு விடுதலைக் காசுமீர்’

காட்டுமிராண்டிகள் ஒரு ஈகியின் இறுதிச் சடங்கைத் தாக்கினார்கள்
அவர்கள் மக்கள் மீது துப்பாக்கிக் குண்டுகளை மழையாய்ப் பொழிந்தார்கள்
அப்போது அந்தச் சாலையில் இரைந்து கிடந்தவை சடலங்கள் மட்டுமே
தங்கள் இறுதிப்பயணத்தை அவர்கள் முடித்துக் கொண்டார்கள்
அப்போதும் ஒவ்வொருவரின் தலையையும் காலால் எத்தினார்கள்
இந்தப் படுகொலையை ஒருவன் எதிர்த்தபோது
அடிப்படை மனித உரிமையைக் கோரிய போது
அவர்களைக் கண்டு அவன் அஞ்சவில்லை
பின்னர் அவனையும் அவர்கள் தாக்கினார்கள்
விளையாடிக் கொண்டிருந்த முசாபரை அவர்கள் பிடித்துக் கொண்டு போனார்கள்
அந்த அறியாச் சிறுவனை இரக்கமற்ற முறையில் அவர்கள் அடித்தே கொன்றார்கள்
விளையாடச் சென்ற மகன் வினையேதுமின்றி வீடு திரும்பவேண்டும் என்று
வேண்டிக் காத்திருந்தனர் பெற்றோர்
ஆனால் அவன் பிணம் வந்து சேர்ந்தபோது
அவர்கள் நிலைகுலைந்து பேச்சுமூச்சின்றிப் போனார்கள்.

சின்னஞ்சிறு துபாலின் மூளையை அவர்கள்
சுவற்றில் மோதிச் சிதைத்தார்கள்
அவனது குருதியைச் சமவெளியில் தெளித்தார்கள்
அவனது மூளையின் சிதறல்கள் எல்லையில்லா வேதனையை
நம் நெஞ்சில் நிறைக்கவில்லையா?
நாம் நிலைகெட்டு மதியிழந்து போகவில்லையா?

அவர்கள் பாலகன் பைசானை மரணத்திற்குச் துரத்திச் சென்றார்கள்
அவனை நதியில் மூழ்கடித்துக் கொன்றார்கள்
அவன் மூச்சிரைத்து மூழ்கிச் சாவதை
முதுகெலும்பு சில்லிட மக்கள் பார்த்தார்கள்

நோயுற்ற சிறுவனை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற
ஊர்தியை அந்த இரவில் அவர்கள் நிறுத்தினார்கள்
அவனுடைய தந்தையை ஏதோ சொல்லி ஊர்தியிலிருந்து இறக்கினார்கள்
அந்தோ அந்த நோயுற்ற சிறுவன் மிலாதை ஊர்தியில் வைத்தே சுட்டார்கள்
அவர்களின் குண்டுகளை அவன் எப்படி எதிர்கொண்டானோ
அப்படியே அவன் உயிரிழந்து உறைந்து போனான்
அவர்களது துப்பாக்கிகள் அப்பாவிப் பெண்களையும் விட்டுவைக்கவில்லை
அதற்காக அவர்கள் வெட்கப்படவும் இல்லை
அவர்களது கொடுங்கோன்மையில் அவர்கள் தங்கள் வெற்றியைக் கண்டார்கள்
நமக்குள்ளோ அது விடுதலைத் தீக்கொழுந்தை மூட்டிவிடுகிறது

இன்னொரு சோபியான் நிகழ்ந்துள்ளது
தூய்மை உருவெடுத்த சமீராவை அவர்கள் கொன்றுவிட்டார்கள்
கொன்றவர்கள் விட்டேத்தியாய் உலவுகிறார்கள்
உலகின் மௌனம் என்னைக் கொல்கிறது
காட்டுமிராண்டிகள் அவளைத் தலையில் அடித்தார்கள்
அவள் ஆடைகளைக் கிழித்தெறிந்தார்கள்
பற்களால் அவளைக் குதறிக் கொன்றார்கள்

எத்தனை பெண்களை அவர்கள் இப்படிக் கொல்வார்கள்
இன்னும் எவ்வளவு இரத்தம் கொட்டச் செய்வார்கள்
அந்தக் கொலைகாரர்களை நாம் திருப்பி அடிப்போம்
நாம் ஒன்றும் எண்ணிக்கையில் குறைந்தவர்கள் இல்லை
இந்தக் கொடுங்கொன்மையும் நமக்குப் புதிதில்லையே

ஒடுக்குவோரே கேளுங்கள்
நீங்கள் செய்யும் கொலைகளால்
நீங்கள் அழிவீர்கள்
உங்களால் எங்கள் செயலைத் தடுக்க முடியாது

நீங்கள் உமரைக் கொன்றீர்கள்
இன்னும் ஆயிரக் கணக்கானோர் இருக்கின்றோம்
கேளுங்கள்! எங்கள் எல்லோரையும் நீங்கள் கொன்று போட்டாலும்
எங்கள் ஆன்மாக்கள் உங்களைத் திருப்பி அடிக்கும்

தங்கள் சொந்தத் தேவைக்காக
தங்கள் சொந்த மக்களை மறந்துவிட்டு
காட்டுமிராண்டி எஜமானர்களின் காலை நக்கும்
சாத்தானின் வாரிசுகளே ஓடிப் போய்விடுங்கள்

காட்டுமிராண்டிகளே போய்விடுங்கள்
திரும்பிப் போய்விடுங்கள்
எங்கள் பள்ளத்தாக்கை விட்டுப் போய்விடுங்கள்
கேட்டுக்கொள் அடேய் கோடரிக்காம்பே
தீய உன் ஒவ்வொரு திட்டமும் தோற்றுப் போகும்!

மார்க் அதோனிஸ் ஒரு நியூசிலாந்து கவிஞர்
தமிழில்: நிழல்வண்ணன்

Pin It