சிறிலங்கா அதிபர் தேர்தலில் மகிந்த இராசபட்சர் வென்று சரத் பொன்சேகர் தோற்றுள்ளார். சிங்களப் பேரினவாதிகளும் தமிழர்கள் மீது இனக்கொலைப் போரை ஏவியவர்களுமான இருவரில் ஒருவர் வெற்றியும் மற்றவர் தோல்வியும் பெற்றதில் தமிழர்களுக்கு வெற்றியும் இல்லை, தோல்வியும் இல்லை. அதேபோது இந்தத் தேர்தல் முடிவு நமக்கு ஒரு சில படிப்பினைகளைத் தந்துள்ளது.

      சிறிலங்காவின் அரசமைப்புக்கும் தேர்தல் முறைக்கும் உட்பட்டுத் தமிழர்களின் இனச் சிக்கலுக்கு எவ்விதத் தீர்வும் காண முடியாது என்ற முடிவுக்கு ஈழத் தமிழர்கள் வந்து வெகுகாலமாயிற்று. ஆனால் நான்காம் ஈழப் போர் கசப்பான முடிவுக்கு வந்து முள்ளிவாய்க்கால் முழுப் பேரழிவுக்குப் பின் நடைபெறும் தேர்தல் என்பதால், தமிழர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற கருத்து ஒரு சிலரிடம் வெளிப்பட்டது. தேர்தல் புறக்கணிப்பு தவிர, தமிழர்கள் முன் மூன்று வழிகள் இருந்தன:

1)    ஒரு தமிழரே போட்டியிடுவது. இந்த அடிப்படையில்தான் சிவாஜிலிங்கம் போட்டியிட்டார்.

2)    தமிழர்களின் நியாயத்தை ஏற்றுக் கொண்ட இடதுசாரி ஒருவரை ஆதரிக்கலாம் என்றனர் சிலர்.

3)    இரு சிங்களப் பேரினவாத வேட்பாளர்களில் ஒருவரை ஆதரிப்பது. கருணா, பிள்ளையான், டக்ளஸ் தேவா கும்பல் நீங்கலாக எந்தத் தமிழரும் மகிந்த இராசபட்சரை ஆதரிக்கவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொன்சேகரை ஆதரித்தது. மலையகத் தமிழர் அமைப்புகளும் அவரையே ஆதரித்தன.

      இந்த மூன்று அணுகுமுறைகளுமே தோற்றுவிட்டன.

      சிவாஜிலிங்கம், கருணாரத்னா ஆகியோரின் நல்ல நோக்கத்தை ஐயுறத் தேவையில்லை என்றாலும், இவர்களால் எந்தப் பெரிய தாக்கத்தையும் உண்டு பண்ண முடியாது என்று தமிழ் மக்கள் நினைத்தது சரி.

      தமிழர் வாழும் பகுதிகளில் பொன்சேகர் கூடுதலான வாக்குகளைப் பெற்றும் அவரால் வெற்றிக் கோட்டை நெருங்கக் கூட முடியவில்லை. பெரும்பாலான தமிழர்கள் தேர்தலைப் புறக்கணித்து விட்டார்கள். வாக்களித்தவர்கள் மட்டும் பொன்சேகரை ஆதரித்தார்கள்.

      பொன்சேகர் தமிழர்களுக்கு உருப்படியான எந்த வாக்குறுதியும் தரவில்லை. தனி பேரினவாதச் சிந்தனையை மாற்றிக் கொண்டதாகவும் காட்டிக் கொள்ளவில்லை. ஆனால் அவரைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரித்தது என்பதாலும் அவர் வென்றால் தமிழர்களுக்குக் கொஞ்சம் சலுகை காட்டுவார் எனக் கருதப்பட்டதாலும், சிங்களவர்கள் பெருமளவுக்கு அவருக்கு எதிராகத் திரும்பி விட்டார்கள் எனத் தெரிகிறது. பொன்சேகரைத் தமிழர்கள் ஆதரிக்காமல் விட்டிருந்தாலே சிங்களர்கள் இன்னுமதிகமாக அவருக்கு வாக்களித்திருக்கக் கூடும். அவர் வெற்றியே பெற்றிருந்தாலும் வியப்பதற்கில்லை.

      தமிழர்களுக்குச் சிறு சலுகை காட்டுவதான தோற்றத்தையும் சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பது அவர்களிடம் ஊறியிருக்கும் பேரினவாத மனப்போக்கையே புலப்படுத்துகிறது. எனவே தமிழர்களும் சிங்களர்களும் ஒன்றுபட்டுத் தமிழர் உரிமையை வென்றெடுப்பதற்கு இப்போதைய நிலையில் வாய்ப்பே இல்லை.

      இந்தப் புரிதலின் அடிப்படையில் சென்ற அதிபர் தேர்தலைத் திரும்பிப் பார்க்கலாம். அந்தத் தேர்தலில் பிரபாகரன் கட்டளைப்படித் தமிழர்கள் தேர்தலைப் புறக்கணித்து விட்டார்கள் என்றும், அப்படிச் செய்யாமல் ரணில் விக்கிரமசிங்கரை ஆதரித்திருந்தால் மகிந்த இராசபட்சர் வென்றிருக்க முடியாது என்றும் ‘இந்து’ நா¼ளடு ஆசிரியவுரை தீட்டியது. சில மாதங்களுக்கு முன்பு சென்னை வந்த ரணில் விக்கிரமசிங்கரும் நக்கீரனுக்கு அளித்த பேட்டியில் இதே கருத்தைச் சொல்லித் தமிழர்களுக்கு நேரிட்ட அவலத்துக்குப் பிரபாகரனும் ஒரு காரணம் என்று சொல்லியிருந்தார். ரணிலின் கருத்தைக் கருணாநிதியும் வழிமொழிந்து, புலிகள் அரசியல் விவேகத்துடன் செயல்படவில்லை என்று குற்றாய்வு செய்தார்.

      முதலாவதாக, பிரபாகரன் கட்டளையிட்டதால் தமிழர்கள் தேர்தலைப் புறக்கணித்தார்கள் என்பது உண்மையன்று. பெரும்பான்மைத் தமிழர்கள் - பிரபாகரன் கட்டளை இல்லாமல் - இப்போது தேர்தலைப் புறக்கணித்து விட்டார்கள்.

      இரண்டாவதாக, ரணிலைத் தமிழர்கள் ஆதரிப்பது போலவும், ரணில் தமிழர்களுக்குச் சலுகை காட்டுவது போலவும் ஒரு தோற்றம் ஏற்பட்டிருந்தால், சிங்களர்கள் பெருமளவில் ரணிலுக்கு எதிராகத் திரும்பியிருப்பார்கள். மகிந்தா இன்னும் கூட பெரிய வெற்றியை ஈட்டியிருப்பார்.

      அரசியல் என்பது வெறும் கூட்டல் கழித்தல் கணிதமன்று என்பதை இந்துவும் ரணிலும் கருணாநிதியும் தெரிந்து கொள்ள வேண்டும். 1981 சட்டப் பேரவைத் தேர்தலில் திமுகவும் காங்கிரசும் சேர்ந்தால் அதிமுகவைத் தோற்கடிக்க முடியும் என்று கருணாநிதி கணக்கிட்டார். இந்தக் கணக்கு பொய்க் கணக்காகிப் போயிற்று. அரசியலில் கூட்டல் கழித்தலுக்கு ஒரு பங்கு உண்டுதான். ஆனால் அதுவே அறுதியானதோ இறுதியானதோ அல்ல. நிலைப்பாடுகளுக்குள்ள பங்கும் முக்கியமானதே.

      தமிழ் மக்கள் தங்கள் அரசியல் வெளியை விரிவாக்கிக் கொள்ள வேண்டும் என்பது சரி. ஆனால் இதன் பொருள் தேர்தலில் சிங்களப் பேரினவாதிகளில் ஒருவரை எதிர்த்து மற்றொருவரை ஆதரிக்க வேண்டுமென்பதில்லை. ஆதரவும் எதிர்ப்பும் கொள்கை வழிப்பட்டதாக இருக்க வேண்டும். இல்லையேல் அது வெறும் வாய்ப்பியமே (சந்தர்ப்பவாதமே).

      தமிழீழ மக்கள் தங்கள் உரிமைக்காகவும் விடுதலைக்காகவும் போராடித்தான் ஆக வேண்டும். இதைத் தவிர்ப்பதற்குக் குறுக்கு வழி ஏதுமில்லை. இது ஈழத் தமிழர்கள் பெற வேண்டிய படிப்பினை மட்டுமன்று.

      தமிழகத்திலும் பெரிய தீமையை எதிர்த்துச் சின்னத் தீமையை ஆதரிப்பது என்ற முறையில் வாதிடுவோர் உண்டு. உபதேசம் ஈழத்திற்கு மட்டும்தான்  உனக்கில்லையடி கண்ணே என்ற பார்வை பயன்படாது.

Pin It