தமிழீழத் தேசியத் தலைவரின் தாய் பார்வதியம்மாள் (வயது 80) நோய்க்கு மருத்துவம் செய்து கொள்வதற்காக முறைப்படி இந்திய அரசிடம் நுழைவுச் சீட்டு (விசா) பெற்றுத் தமிழகத் தலைநகர் சென்னை வந்தபோது வானூர்தியிலிருந்தே இறங்கவிடாமல் அவர்களைத் திருப்பி அனுப்பி விட்டனர் இந்திய அதிகாரிகள். இந்தக் கொடுமைக்கு யார் காரணம் என்பது பற்றி ஒரு ப+சல் எழுந்துள்ளது.

Nalini_Sriharan_300செயலலிதா முதல்வராக இருந்த போது எழுதிய கடிதம்தான் காரணம் என்கிறார் தமிழக முதல்வர். அப்படியானால், அந்தக் கடிதத்தை அடிப்படையாக வைத்து இந்திய அரசு எடுத்த முடிவை அவர் திட்டவட்டமாகக் காண்பிக்க வேண்டும். தனக்கு வேண்டுகோள் வரவேண்டும் என்கிறார். இந்தியா சார்பில் ‘விசா’ வழங்கும் வேலையை இவருக்கு யார் கொடுத்தது? என்று கேட்க மாட்டார்களா?

இப்போதுள்ள அரசமைப்பில் தமிழ்நாட்டுக்குள் நுழையவிடவும் தமிழ்நாட்டை விட்டு வெளியேற்றவுமான அதிகாரம் தில்லிக்குத்தானே தவிர தமிழ்நாட்டரசுக்கு இல்லை. இந்தியக் குடியுரிமை என்பது போல் தமிழ்நாட்டுக் குடியுரிமை என்பதாக ஒன்று இல்லை. தமிழ்நாட்டுக்கே முதலமைச்சராக இருந்தாலும் அவரால் தமிழ்க்குடிமகன் ஆக முடியாது (வேண்டுமானால் ‘டாஸ்மாக்’ குடிமகன் ஆகலாம்).

தில்லிக்குத் தமிழன் அடிமையாக இருக்கும் வரை பார்வதியம்மாளுக்கு நேர்ந்த கொடுமை எவருக்கும் நிகழலாம் என்பது ஒரு புறமிருக்க, பார்வதியம்மாளை இந்திய அரசு ஏன் இப்படிக் கொடுமை செய்தது? இந்திய அரசு சார்பில் இது வரை தெளிவான விளக்கம் இல்லை. ஆனால் தமிழகச் சட்டப் பேரவையில் காங்கிரசுத் தலைவர் சுதர்சனம் சொல்வதையும், அரசியல் தரகன் சுப்பிரமணியசாமி பேசுவதையும் அடிப்படையாக வைத்துப் பார்த்தால் பார்வதியம்மாள் பிரபாகரனைப் பெற்ற தாய் என்பதற்கு மேல் வேறு எந்தக் காரணமும் காட்டப்படவில்லை. பிறப்பால் வேற்றுமை பாராட்டும் வருணாசிரமமும் கூட யாருக்குப் பிறந்தவர் என்றே பார்க்கும். இவர்களோ யாரைப் பெற்றவர் என்று பார்த்துக் கொடுமை செய்கிறார்கள்.

பார்வதியம்மாள் 80 வயது மூதாட்டி என்பதும,. அவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டுள்ளார் என்பதும், மருத்துவக்காகவே அவர் முறையான இசைவு பெற்றுச் சென்னைக்கு வந்தார் என்பதும் மறுக்க முடியாத உண்மைகள். அவரது வயதில் அரசியல் இல்லை, அவரது மருத்துவத்தில் அரசியல் இல்லை, அவரது சென்னை வருகையிலும் அரசியல் இல்லை. ஆனால் அவரைத் திருப்பி அனுப்பியதில் அரசியலைத் தவிர வேறு எதுவுமில்லை.

ஒரு மனித நேயச் சிக்கலை இந்திய வல்லாதிக்க அரசு அரசியலாக்குகிறது. தமிழக முதலமைச்சர் தன் பங்கிற்கு இதில் அற்ப அரசியல் நடத்துகிறார். வைகோ, நெடுமாறன் வரவேற்கப் போனதையே குற்றமாகச் சித்திரித்துத் தன் இரண்டகத்தை மூடி மறைக்க முயல்கிறார்.

பத்தொன்பது ஆண்டுகளாகச் சிறையில் வாடும் நளினியை விடுதலை செய்ய மறுத்துவிட்டது தமிழக அரசு. அவர் பெண், அதிலும் ஒரு பெண் குழந்தைக்குத் தாய், கணவர் முருகன் அதே வழக்கில் தூக்குக்; கைதியாக உள்ளார், நளினி சிறையில் சிறந்த கல்வித் தேர்ச்சி பெற்றுள்ளார், நன்னடத்தை அலுவலரும் உளவியல் வல்லுநரும் அவரை விடுதலை செய்யப் பரிந்துரைக்கின்றனர்... இந்த உண்மைகளையெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு, ஒரு முன்னாள் தலைமையமைச்சர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார் என்று ‘தீர ஆராய்ந்து’ புதிதாய்க் கண்டுபிடித்துள்ள அறிவுரைக் கழகத்தின் பரிந்துரை மறுப்பையும், நளினி வந்தால் இராயப்பேட்டையில் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போகும் என்ற இராயப்பேட்டைக் காவல் ஆய்வாளரின் அறிக்கையையும் காரணங்காட்டி நளினியை வெளியே விட முடியாது என்கிறார்கள் ஆட்சியாளர்கள்.

நளினி விடுதலை என்பது ஒரு மனித உரிமைச் சிக்கல். அவர் பெண் என்பதில் அரசியல் இல்லை, அவருக்கு மகள் இருப்பதில் அரசியல் இல்லை, அவர் சிறையிலேயே கல்விச் சாதனைகள் புரிந்ததில் அரசியல் இல்லை, நன்னடத்தை அலுவலர், உளவியல் வல்லுநரின் பரிந்துரைகளில் அரசியல் இல்லை. நளினியை விடுதலை செய்ய மறுப்பதில் அரசியலைத் தவிர வேறு எதுவுமில்லை. ஒரு மனித உரிமைச் சிக்கலை அரசியல் சிக்கலாக மாற்றி ஆதாயமெடுக்கிற வேலையைக் காங்கிரசு ஆண்டைகளுக்காக கருணாநிதி அடிமை செய்கிறார். இராசீவின் பிணத்தை வைத்துத் தொடர்ந்து அரசியல் செய்வதற்காகவே நளினியையும் மற்றவர்களையும் சாகும்வரை சிறையில் அடைத்துவைப்பது இந்திய வல்;லாதிக்க ஆற்றல்களின் திட்டம். இந்தத் திட்டத்துக்கு ஒரு கைக் கருவியாகவே தமிழக அரசு செயல்படுகிறது. இந்த உண்மையை மூடி மறைக்க முயன்றுதான் கருணாநிதி முரண்பாடுகளில் சிக்கிக் கொள்கிறார். இந்த வம்பே வேண்டாம் என்றுதான் அவர் இப்போது மவுனம் காக்கிறார்.

நாம் தமிழர் இயக்கத் தோழர் புதுக்கோட்டை சுபா. முத்துக்குமார் ஓராண்டு முன்பு தமிழீழ மக்கள் மீது இன அழிப்புப் போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்த போது அவர்களுக்கு மருந்து வாங்கிக் mkumarpp1கொடுத்தாராம். அதற்காக இப்போது அவரைத் தளைப்படுத்திச் சிறையிலடைத்துள்ளது காவல்துறை. காயமடைந்தவர்கள், நோய்வாய்ப் பட்டவர்கள் பொதுமக்கள் ஆயினும், போராளிகள் ஆயினும் அவர்களுக்கு மருந்து வாங்கிக் கொடுப்பது மனிதப் பரிவு, மனிதப் பண்பு. அதிலும் ஈழத் தமிழர்களுக்குத் தமிழ்நாட்டுத் தமிழர்கள் வெடி மருந்தல்ல, வெறும் வலிமருந்து வாங்கிக் கொடுப்பதைத் தமிழக அரசே குற்றமாகக் கொள்வது, அதுவும் இவ்வளவு காலம் கடந்தபின் அதற்காகக் கைது செய்வது கேவலமானது.

அங்கே போர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அதையொட்டி இங்கே நடந்தவற்றுக்காகத் தொடரப்பட்ட வழக்குகளைப் போர் முடிந்தவுடனே தமிழக அரசு விலக்கிக் கொண்டிருக்க வேண்டும். விலக்கிக் கொள்ளாதது மட்டுமல்ல, நேரம் பார்த்துத் தளைப்படுத்துவதற்கு அந்த வழக்குகளைப் பயன்படுத்துவது பழிவாங்கும் அரசியலே தவிர வேறில்லை.

இந்திய வல்லாதிக்கம் தமிழீழ மக்கள் மீதான இன அழிப்புப் போரைச் சிங்கள அரசுடன் சேர்ந்து நடத்தியது. ஈழத் தமிழர்களையும் இங்குள்ள தமிழர்களையும் தொடர்ந்து அடக்கி ஒடுக்குவது அதன் திட்டம். கருணாநிதியைப் பொறுத்தவரை தன் இரண்டகத்தை மறைக்க என்னென்னவோ செய்கிறார். எல்லாவற்றையும் மீறி எழுந்துவரும் தமிழ்த் தேசிய ஆற்றல்களை நசுக்குவதற்குக் காவல்துறையை ஏவுகிறார். முத்துக்குமார் கைதுக்குப் பின்னால் உள்ள அரசியல் இதுதான்.

பார்வதியம்மாளை மருத்துவம் பார்க்க விடாமல் திருப்பி அனுப்பியது மனித நேயத்துக்கு எதிரானது.

நளினியையும் அதே வழக்கில் மற்றவர்களையும் சிறையில் அடைத்து வைத்திருப்பது மனித உரிமைக்கு எதிரானது.

முத்துக்குமாரைத் தளைப்படுத்தியிருப்பது மனிதப் பரிவுக்கும், தமிழினப் பரிவுக்கும் எதிரானது.

இந்திய வல்லாதிக்கமும் அதன் கையாட்களும் மனித நேயத்துக்கும் மனித உரிமைக்கும மனிதப் பரிவுக்கும் எதிராக அரசியல் செய்யும் போது, நாம் என்ன செய்வது?

பார்வதியம்மாளையும், நளினியையும், முத்துக்குமாரையும் வைத்து அரசியல் செய்ய வேண்டிய தேவை நமக்கில்லை. நாம் அரசியல் செய்வதற்கு எத்தனையோ காரணங்கள்! எத்தனையோ சிக்கல்கள்! காவிரி. முல்லைப் பெரியாறு, மொழியுரிமை, கல்வி, உழவர் நலம்... என்று வரம்பின்றி வரிசைகட்டி நிற்கின்றன.

ஆனால் - ஒரு மூதாட்டியின் மருத்துவத்தையும், ஆயுள் தண்டனை பெற்று 19 ஆண்டு சிறையில் கழித்த ஒருத்தியின் விடுதலையையும், காயமுற்ற தமிழனுக்கு ஓராண்டு முன்பு மருந்து வாங்கி அனுப்பியதாகச் சொல்லப்படுவதையும் கூட நீங்கள் அரசியலாக்குவீர்கள் என்றால்...

இந்திய வல்லாதிக்கத்தின் இந்த அற்ப அரசியலுக்குப் பதிலடியாக எப்படி உரிமை அரசியலை முன்னெடுப்பது என்று தமிழ்த் தேசிய ஆற்றல்களுக்கும் தெரியும்.

- தியாகு 

.
Pin It