எதிர்பார்த்தது போலவே சிங்களப் பாசிசக் கொலைகாரக் கூட்டணி இரண்டாக உடைந்துள்ளது. மறைக்கப்பட்ட உண்மைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தமிழீழ மக்களது அரசியல் களத்தின் இறுக்கம் குறைந்து வருகிறது. புலம் பெயர் தமிழர்களின் அரசியல் முயற்சிகள் வளர்ந்து வருகின்றன. தமிழினத்துக்கு எதிரான இந்திய வல்லாதிக்கத்தின் கவட்டுச் சூழ்ச்சிகள் - கருணாநிதி வகையறாக்களின் சப்பைக்கட்டுகளை மீறி வெளிச்சத்துக்கு வரத்தான் போகின்றன. இந்நிலையில் வெற்று வீறாப்புகளையும், ஊகக் கதையாடல்களையும் நம்பிக் கொண்டிராமல் கொள்கைவழி நின்று தமிழக மக்களைத் தமிழீழத்துக்கு ஆதரவாய்த் திரட்டியாக வேண்டும்.

தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதற்கு சிங்களம் தடை போட்டது அன்றையச் செய்தி. இந்தியம் தடைபோட முயல்வது இன்றையச் செய்தி. இடைத் தேர்தலை மனத்திற்கொண்டு மீன்பிடித் தடைச் சட்டத்தை ஒத்திப் போட்டிருப்பதாக அறிவிக்கச் செய்துள்ளார்களே தவிர, மீன்பிடித் தொழிலுக்கு வந்த ஆபத்து அடியோடு விலகவில்லை. தங்கள் தொழிலையும் வாழ்வையும் உயிரையும் காத்துக் கொள்ள மீனவர்களை விழிப்புறச் செய்து அணி திரட்ட வேண்டும்.

ஆற்று நீர் உரிமை பறிபோனதால் துவண்டு கிடக்கும் தமிழக உழவர்களை உலக மயச் சூழலில் மரபீனித் தொழில்நுட்பம், மலட்டு விதைகள் என்று புதுப்புதுத் தளைகள் பிணித்து வருகின்றன. எல்லாத் தடைகளையும் மீறிக் கரை சேரும் விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்காத அவலம்!

இந்தப் புவிக்கோளம் நாம் உருவாக்கியதன்று. இது முன்சென்ற தலைமுறைகளால் நமக்குக் கையளிக்கப்பட்டது. அடுத்தடுத்தத் தலைமுறைகளின் கையில் பழுதின்றி இதனைக் கையளிக்கும் பொறுப்பு நமக்குள்ளது. ஆனால் இலாப வெறி கொண்ட முதலாளியத் தொழில் வளர்ச்சி புவிக்கோளத்துக்கே ஆபத்தை உண்டாக்கி வருவதை ‘கோபன்ஏகன’; செய்திகள் புலப்படுத்துகின்றன. மக்களுக்கு விழிப்ப+ட்டுவதன் வாயிலாகவே இந்த உலகத்தை அழியாது காக்க முடியும்.

விலையேற்றம், வேலையின்மை, சமயவெறி, சமூக அநீதி, சாதிய வன்கொடுமைகள், கல்வி வணிகக் கொள்ளை, தமிழ்ப் புறக்கணிப்பு... என்று எத்தனையோ சிக்கல்கள்! ஆக, எத்தனையோ கோரிக்கைகள்! சிக்கல்கள் தீரவும் கோரிக்கைகள் நிறைவேறவும் வெகுமக்களைத் திரட்டுவது ஒன்றே வழி!

இதற்காக ஏடு நடத்தினால் போதாது! கூட்டம் பேசினால் போதாது! பேரணியாகச் சென்று முழக்கம் எழுப்பினால் போதாது! இந்த முயற்சிகள் தேவையற்றவை என்று சொல்லவில்லை; போதவில்லை என்பதே பட்டறிவு. ஏனென்றால் இந்த எல்லா வழிகளிலும் முயன்றும் நம்மால் பெருந்திரளான மக்களில் சிறு பகுதியை மட்டுமே தொட (ஆம், தொட மட்டுமே) முடிந்துள்ளது. இந்த முயற்சிக்கும் கூட ஆள் வலிமை, பொருள் வலிமை போதாமல் தட்டுத் தடுமாறும் நிலை!

இந்நிலை மாற என்ன செய்யலாம்? என்று ஒவ்வொருவரும் கருதிப் பார்க்க வேண்டும். மக்கள் நம்மை நாடி வரட்டும் என்று காத்திராமல், நாம் அவர்களை நாடிச் செல்வோம், அவர்களது வாழ்விடத்துக்கும் உழைப்புக் களத்துக்கும் செல்வோம் என்று சிந்தித்ததன் விளைவுதான் தமிழ் மீட்பு தமிழர் மீட்பு நெடுநடைப் பயணம்.

இது நெடுநடைப் பயணமே தவிர நெடுஞ்சாலைப் பயணம் அன்று. ஊர் ஊராகச் செல்வோம். கடலோரம் சென்று மீனவர்களைச் சந்திப்போம். வயலுக்குச் சென்று உழவர்களோடு உரையாடுவோம். தறியடிக்கே சென்று நெசவாளரைப் பார்ப்போம். நாம் பேச மக்கள் கேட்க வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றி, மக்கள் பேச நாம் கேட்போம். அவர்களது குறைகளைத் தெரிந்து கோரிக்கைகளைப் பட்டியலிடுவோம். மக்களுக்குக் கற்றுத் தருவதைக் குறைத்துக் கொண்டு அவர்களிடமிருந்து கற்றுக் கொள்வதைக் கூடுதலாக்குவோம்!

நம் இன்றையப் பணிகளுக்கும் நாளையத் திட்டங்களுக்குமான அடித்தளத்தைச் சிறுகச் சிறுக அவர்களிடமிருந்தே கட்டியமைப்போம்! ஒரே வீச்சில் தமிழ்நாடு முழுவதையும் குறுக்கே நெடுக்கே கடப்பதற்காக இல்லை இந்த நெடுநடைப் பயணம். ஒவ்வொரு பகுதியாக எடுத்துக் கொண்டு ஊர் ஊராக, முடிந்த வரை வீடு வீடாகச் செல்வோம்.

இவ்வகையில் முதற்கட்டமாக நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் ஆயிரம் கிலோமீட்டர் நடக்கத் திட்டம். இதற்கு 30-40 நாள் தேவைப்படலாம்.

பயணப் பாதை இன்னும் வகுக்கப்படவில்லை. ஆனால் புறப்படும் நாள்-இடம் உறுதியாக முடிவு செய்து விட்டோம். தமிழ்த் தேசிய எழுச்சி நாளாம் மொழிப் போர் ஈகியர் நாளில் (25.01.2010) புறப்படுவோம். எட்டும் தொலைவில் ஈழத்து மக்கள் சிந்தும் கண்ணீரால் உப்பேறி வரும் கோடியக்கரைக் கடலில் கால் நனைத்துப் புறப்படுவோம்.

தமிழ் மீட்பிலும் தமிழர் மீட்பிலும் உண்மையான, உறுதியான அக்கறை கொண்டவரா நீங்கள்? அதற்காக அமைதியாகப் பொறுமையாக நீடித்து உழைக்க அணியமாய் இருக்கிறீர்களா? ஆம் என்றால் இந்த நெடுநடைப்பயணத்தில் இணைந்து கொள்ள உங்களை உரிமையோடு அழைக்கிறேன். உங்கள் விருப்பத்தினையும் சூழலையும் பொறுத்து முழுமையாகவோ, பகுதியாகவோ பங்கு பெறலாம்.

பயணத்தில் பங்கேற்பதாய் இருந்தாலும், பயணத்தை வாழ்த்தி வழியனுப்புவதாய் இருந்தாலும், 2010 சனவரி 25 திங்கள் காலை பத்து மணிக்கு...

கூடுவோம் கோடியக்கரையில்!

கூடிப் படைப்போம் புது வரலாறு!

- தியாகு

 

Pin It