இந்தியாவில் எண்ணை சுத்திகரிப்பு மற்றும் எரிபொருள் விற்பனையில் முக்கிய இடம் வகிக்கும் பொதுத்துறை நிறுவனம் பாரத் பெட்ரோலியம். 'பர்மா ஷெல்' என்ற பேரில் தொடங்கப்பட்ட பாரத் பெட்ரோலியம் நிறுவனம், 24 ஜனவரி 1976 இல், எண்ணெய் நிறுவனங்களின் தேசியமயமாக்கல் சட்டத்தின் கீழ், அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டு “பாரத் ரிஃபைனரீஸ் லிமிடெட்” என்று பெயரிடப்பட்டது. பின்னர் 1977 இல், “பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்” (BPCL - பிபிசிஎல்) என மறுபெயரிடப்பட்டது. 2017 ஆம் ஆண்டில், பிபிசிஎல் அதன் செயல்திறனுக்காக "மகாரத்னா" என்ற விருதையும் பெற்றுள்ளது. தற்போது, மும்பை, கொச்சி, பினா, நம்லிகர் ஆகிய 4 நகரங்களில் இந்நிறுவனத்திற்கு சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன.
கொரோனாவினால் சரிந்த பொருளாதாரத்தை உயர்த்துகின்றோம் என்ற பாஜக அரசாங்கம், பொதுத்துறை நிறுவனத்தின் பங்குகளை 100% வரை தனியாரிடம் விற்க திட்டமிட்டது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 17 மே 2020 அன்று, பிபிசிஎல், ஏர் இந்தியா, ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, கண்டெய்னர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, ஐடிபிஐ வங்கி, பிஇஎம்எல், மற்றும் எல்ஐசியின் ஐபிஓ(IPO) ஆகியவை உட்பட 23 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் சுமார் 23 பில்லியன் டாலர்களை திரட்டும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதன்படி, பிபிசிஎல் நிறுவனத்தின் முழுப் பங்குகளையும் விற்க மோடி அரசு திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் பாரத் பெட்ரோலியத்தில் அரசு வைத்திருக்கும் 52.98% பங்குகளைத் தனியாருக்கு விற்பதற்கு, தற்போது எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு துறைக்கான FDI ( Foreign Direct Investment ) கொள்கையில் ஒரு புதிய உட்பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.
12,000-13,000 ஊழியர்களைக் கொண்ட இந்தியாவின் இரண்டாவது பெரிய எண்ணெய் நிறுவனமான பாரத் பெட்ரோலியத்தின் தனியார்மயமாக்கல், எரிவாயு விலையை இன்னும் அதிகப்படுத்தும். மேலும், அங்கு வேலை செய்யும் ஊழியர்களின் வேலைவாய்ப்புகளைக் குறைக்கும் வேலைகளும் தற்போது தொடங்கி விட்டன.
லாபம் ஈட்டும் நிறுவனம்:
பாரத் பெட்ரோலியம்நிறுவனம் பல ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு, கடந்த 16 ஆண்டுகளாக பார்ச்சூன் 500 நிறுவனங்கள் என்னும் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இந்தியாவில் பெட்ரோலியப் சந்தைப் பொருட்களில் சுமார் 24% பங்கு இந்நிறுவனத்திற்கு உள்ளது. இதனால் இந்நிறுவனம் இந்திய பொருளாதாரத்திலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
சமீபத்தில், ஏப்ரல்-ஜூன் மாதத்தில் இந்நிறுவனத்தின் நிகர லாபம் ரூ 2,076.17 கோடியாக இருந்தது. இது தவிர, இந்நிறுவனத்தின் சிஎஸ்ஆர் (Corporate Social Responsibility) பங்கு மட்டும் சுமார் ரூ. 180 கோடி.
இப்படி லாபகரமாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்நிறுவனம் தனியார்மயமாக்கப்படும் போது தொழிலாளர்களின் வேலைவாய்ப்புகளை பெரிதும் பாதிக்கும் என்ற அச்சம் அங்கு பணிபுரிபவர்களிடையே எழுந்துள்ளது. தனியார் நிறுவனங்கள் உற்பத்தியை அதிகரிப்பதை இலக்காகக் கொள்ளாததால் பல சுத்திகரிப்பு நிலையங்கள் மூடப்படும் என்று தொழிலாளர்கள் அஞ்சுகின்றனர்.
நிறுவனத்தை தனியார்மயமாக்க அரசாங்கம் முடிவு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் போராட்டத்தை ஆரம்பித்து உள்ளனர். நவம்பர் 2019 முதல், மும்பை மற்றும் கொச்சி கிளைகளில் உள்ள தொழிலாளர் சங்கங்கள் இதுவரை ஆறு வேலைநிறுத்தங்களை மேற்கொண்டன. தனியார்மயமாக்கல் நடவடிக்கையை மறுபரிசீலனை செய்யுமாறு பல்வேறு தொழிற்சங்கங்கள், துறை அமைச்சருக்கு கடிதமும் எழுதி உள்ளனர்.மேலும் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற மும்பை மற்றும் கேரள உயர் நீதிமன்றங்களில் ஏராளமான மனுக்களை தாக்கல் செய்திருக்கின்றனர்.
பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்பட்டால், பட்டியலின, பழங்குடி மக்கள் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட மக்களின் வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு கொள்கை என்பது மிகப்பெரும் கேள்விக்குறி ஆகிவிடும். பாரத் பெட்ரோலியத்தில் உள்ள மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் 4,670 பேர் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி வகுப்பைச் சேர்ந்தவர்கள்.முன்னர் Group C மற்றும் Group D ஊழியர்களில் பெரும்பாலானவர்கள் SC, ST, OBC வகுப்பிலிருந்து வந்தவர்களாகத்தான் இருப்பார்கள். ஆனால் தனியார்மயமான பின், ஊழியர்கள் ஒப்பந்தக்காரர்கள் மூலம் பணியமர்த்தப்பட்டால் அவர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து விடும்.
மேலும் எண்ணெய் போன்ற துறைகளில் தனியார்மயமாக்கல், சுற்றுச்சூழல் மாசுபாட்டை அதிகரிக்கும். ஏனெனில் தனியாரின் முக்கிய நோக்கம் லாபம் ஈட்டுவதே என்பதால் அவை சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது இல்லை.
நாட்டில் உள்ள 28.5 கோடி LPG நுகர்வோரில் 7.3 கோடி பேர், பாரத் பெட்ரோலியத்தில் நுகர்வோராக உள்ளனர். இனி எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களின் டீலர்களிடமிருந்து சந்தை விலையில் மட்டுமே சமையல் உருளைகள் கிடைக்கும் என்ற சூழலை இவர்கள் எதிர்நோக்கியிருக்கிறார்கள்.
வேதாந்தா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் நிறுவனங்களான அப்பல்லோ குளோபல் மற்றும் ஐ ஸ்கொயர் கேப்பிட்டல் ஆகியவை பாரத் பெட்ரோலியத்தில் அரசின் பங்குகளை வாங்கும் போட்டியில் உள்ளன. ஆனால், நிதிநிலையை சமாளிக்கக் வேண்டிய சூழலில், தற்போது வரை முதலீட்டு பங்காளர்கள் கிடைக்காமல் இந்நிறுவனங்கள் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை வாங்குவதற்கு திணறி வருகின்றன. இதனிடையே, முதலீட்டாளர்கள் கிடைக்காத காரணத்தினால், பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு பங்குச்சந்தையில் 3.5% அளவிற்கு சரிந்தது.
இதே போல் மோடி அரசினால் டாடா நிறுவனத்திற்கு சமீபத்தில் விற்கப்பட்ட முக்கியமான பொதுத்துறை விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா, இந்திய அரசிற்கு சிறிது உற்சாகத்தை அளித்துள்ளது. இவை பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை விற்பதற்கு ஏற்பட்டுள்ள தாமதத்தை ஈடு செய்துள்ளது. எதிர்பார்த்தபடி குறிப்பிட்ட காலத்தில் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் விற்கப்பட்டிருந்தால், சுமார் 13 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிற்கு மோடி அரசினால் தனியாரிடம் விற்கப்பட்டிருக்கும்.
இந்தியாவின் மிகப்பெரிய எரிசக்தி நிறுவனத்தை தனியாரிடம், அதுவும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்குவது என்பது நாட்டின் மூலதனத்தைப் பறிப்பதோடு, பெருந்தொற்று காலத்தில் மக்களின் பொருளாதாரத்தில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். பாசக அரசின் பொருளாதார தோல்வியினால், தற்போது பெட்ரோல் விலை 100 ரூபாயும் சமையல் உருளை விலை 1000 ரூபாயும் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இனி தனியார்மயத்தின் கோர முகம் மெல்ல மெல்ல ஏழை எளிய மக்களின் மானியத்தை அழித்துவிடும்.
- மே பதினேழு இயக்கம்