2017ஆம் ஆண்டு ஒன்றிய ஆட்சி நாடாளுமன்றத்தில் நிதி மசோதாவின் கீழ் தேர்தல் பத்திரம் எனும் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் சட்டத்தை கொண்டுவந்தது. நிதி மசோதாவுக்கு மாநிலங்களவையின் ஒப்புதல் தேவையில்லை என்பதால் மக்களவையில் மட்டும் இதை நிறைவேற்றிக் கொண்டார்கள். முதலில் தாக்கல் செய்யப்பட்ட போது வெளிநாட்டு நன்கொடைகள் தடை செய்யப்பட்டிருந்தன. பிறகு சட்டத் திருத்தம் கொண்டுவந்து வெளிநாட்டு நன்கொடைகள் பெறுவதற்கு வழி ஏற்படுத்திக் கொண்டார்கள். பாரத ஸ்டேட் வங்கியில் ஒருவர் பணம் கொடுத்து இந்த பத்திரத்தை வாங்கலாம். பிறகு அந்த பத்திரத்தை விரும்பும் கட்சிகளுக்கு நன்கொடையாக தந்து விடலாம், பதினைந்து நாட்களுக்குள் பாரத ஸ்டேட் வங்கியில் பத்திரத்தை பணமாக்கிக் கொள்ள வேண்டும். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் வந்துள்ளன. தலைமை நீதிபதியின் கீழ் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது. வெளிப்படைத் தன்மை வேண்டும் என்ற நோக்கத்திற்காக இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது என்று ஒன்றிய ஆட்சி கூறியது. இப்போது குரலை மாற்றிக் கொண்டு பேசுகிறது.

உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு வழக்கறிஞர் ஆர்.வெங்கட்ரமணி கடந்த திங்கட்கிழமை (30.10.2023) ஒன்றிய அரசு சார்பில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். நன்கொடையாளர்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் உரிமை அவர்களுக்கு கிடையாது என்றும் அடிப்படை உரிமைகளுக்கு கட்டுப்பாடு விதிக்க அரசுக்கு உரிமை உள்ளது என்றும் ஒன்றிய அரசு அந்த மனுவில் தனது மக்கள் விரோத கருத்தை பதிவு செய்துள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இதில் முறைகேடுகள் நடப்பதற்கு வழி இருக்கிறது என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளார்.

2019ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை வங்கிக் கணக்கு, நன்கொடையாளர்களின் பெயர்களை தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க உத்தரவிட்டிருந்தது. அந்த ஓராண்டு மட்டும் தேர்தல் ஆணையத்திற்கு இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. ஒன்றிய ஆட்சி அதற்கு பிறகு தேர்தல் ஆணையத்திடம் இந்த விபரங்களை சமர்ப்பிக்கவில்லை. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகள் அந்த ஓராண்டுக்கு மட்டுமே என்று ஒன்றிய அரசு கூறியதை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இதுவரை கட்சிகள் பெற்ற நன்கொடை விபரங்களை, வங்கிக் கணக்குகளை, நன்கொடையாளர் விபரங்களை, தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் இப்போது உத்தரவிட்டிருக்கிறது. வழக்கு தொடர்ந்த NGO என்ற அமைப்பின் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஒரு அதிர்ச்சியான தகவலை வெளியிட்டார். தேர்தல் ஆணையமும், ரிசர்வ் வங்கியும் இந்த தேர்தல் பத்திரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தன, அதையும் மீறி இதை ஒன்றிய அரசு அமுல்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.

கடந்த ஆறு ஆண்டுகளில் 31 அரசியல் கட்சிகள் ரூ.16,438 கோடி நன்கொடையாக பெற்றுள்ளன. இதில் தேர்தல் பத்திரம் வழியாக கிடைத்த நன்கொடை மட்டும் ரூ.9,188 கோடி (55.9%) கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் பிற வழிகளில் கிடைத்த நன்கொடை ரூ.2,635 கோடி (16%) இதில் பாரதிய ஜனதா கட்சிக்கு தேர்தல் பத்திரம் வழியாக கிடைத்த நன்கொடை ரூ.5,272 கோடி (74.7%) பிரசாந்த் பூஷன் உச்சநீதிமன்றத்தில் தந்துள்ள புள்ளி விவரங்கள் இவை. ஆனால் இவையெல்லாம் மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று ஒன்றிய ஆட்சி கூறுவதுதான் இவர்களின் நேர்மையின் அடையாளமா?

வெளிநாட்டு பணத்தொடர்பு குற்றங்களில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறையை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை குறிவைத்து வேட்டையாடும் ஒன்றிய ஆட்சி தனக்கான தேர்தல் நன்கொடைகளை பெறுவதில் மட்டும் முறைகேடுகளை சட்டமாக்கிக் கொள்வதற்கு பெயர் என்ன? இதுதான் பார்ப்பன பாசிசம்.

விடுதலை இராசேந்திரன்

Pin It