மாநிலங்களவையில் பா.ஜ.க. வுக்கு போதுமான எண்ணிக்கை பலம் இல்லை என்பதால் மாநிலங்களவையையே புறக்கணிக்கும் செயல்பாடுகளை மோடி ஆட்சி அரங்கேற்றியது. கடந்த 2017 பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கைக்கு நாடாளுமன்றத்தில் ஏற்பு வாங்கப்பட்டபோது, கடைசி நேரத்தில் 40 திருத்தங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றி விட்டார்கள். இந்த திருத்தங்களை மாநிலங்களவைக்கே கொண்டு செல்லவில்லை. நிதி தொடர்பான மசோதாக் களுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் மட்டுமே போதுமானது என்ற சட்டம் தந்துள்ள வாய்ப்பை இப்படி குறுக்கு வழியில் முறை கேடாகப் பயன்படுத்தியிருக்கிறது மோடி ஆட்சி.

இந்த திருத்தங்களில் ஒன்று - வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு வழங்கப்படும் எல்லை மீறிய அதிகாரங்களாகும். நடுவண் ஆட்சி, அரசியல் எதிரிகளை ஒழிப்பதற்குப் பயன்படுத்தும் வலிமையான அதிகார அமைப்புகளில் ஒன்று வருமான வரித் துறை. புதிய திருத்தத்தின்படி, இனி வருமான வரித் துறை அதிகாரிகள், தேவையான ஆதாரங்கள், தடயங்கள் இல்லாமல், சந்தேகத்தின் அடிப்படையிலேயே சோதனையிடவும், சொத்துகளைப் பறிமுதல் செய்யவும் உரிமை வழங்கப்பட்டிருக்கிறது. சோதனையிடப்படு வதற்கான காரணங்களை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உள்ளிட்ட எந்த அமைப்புக்கும் அதிகாரிகள் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. பார்ப்பன அதிகார மய்யமாக திகழும் வருமானவரித் துறையை ‘ஒரு இராணுவ சர்வாதிகாரி’ போல செயல்படுவதற்கான அதிகார அமைப்பாக்கிவிட்டார்கள். அந்த அதிகாரம்தான் இப்போது எதிர்கட்சிகளை அச்சுறுத்தப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது ‘சகாரா’, ‘ஆதித்யா பிர்லா’ குடும்பங்களில் வருமான வரித்துறை நடத்திய சோதனைகளில் மோடிக்கு நன்கொடை தந்ததற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு, அந்த ஆதாரங்கள் வருமான வரித்துறையின் பதிவேடு களிலேயே இடம் பெற்றிருந்ததை சுட்டிக்காட்டி நடவடிக்கைக் கோரி உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆதாரங்களோடு வழக்கு தொடர்ந்தார். மோடி மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்ததற்காகவே, வருமான வரித் துறை அதிகாரியாக இருந்த கே.பி. சவுத்திரி என்பவருக்கு, இலஞ்ச ஒழிப்புத் துறைத் தலைவர் என்ற உயர்ந்த பதவி பரிசாக அளிக்கப் பட்டதையும் பிரசாந்த் பூஷன் சுட்டிக் காட்டியிருந்தார்.

மற்றொரு முக்கிய திருத்தமும் கொண்டு வரப்பட்டது. கார்ப்பரேட் கம்பெனிகள் இனி அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகளை வழங்குவதற்கு உச்சவரம்பு எதுவும் கிடையாது என்பதே இந்த புதிய திருத்தம். தற்போதுள்ள சட்டத்தின்படி ஒரு கார்ப்பரேட் நிறுவனம் தனது நிகர இலாபத்தில் 7.5. சதவீத அளவில் மட்டுமே அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்க முடியும். அது மட்டுமின்றி வழங்கப்பட்ட தொகை, வழங்கிய கட்சிகளின் பெயர்களையும் அறிவித்தாக வேண்டும். இப்போது வரம்பு நீக்கப்பட்டதோடு வழங்கிய கட்சிகளின் பெயர்களையும் வெளியிடத் தேவை இல்லை என்கிறது புதிய திருத்தம். ஏற்கெனவே அரசியல் கட்சிகள் கார்ப்பரேட் நிறுவனங்களின் பிடிக்குள் வந்துவிட்டன. கார்ப்பரேட் நிறுவனங்களோ பார்ப்பன அதிகார வர்க்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றன. அதை மேலும் உறுதிப்படுத்தி யிருக்கிறது மோடி ஆட்சி. தமிழ் நாட்டில் ஆர்.கே. நகர் தொகுதியில் கோடி கோடியாக பணம் புரண்டதற்கான காரணங்களில் ஒன்று, கார்ப்பரேட் கம்பெனி களிடமிருந்து பெற்ற இலஞ்சம். ஸ்டேட் வங்கி மூலம் பத்திரங்கள் வழியாக நன்கொடை வழங்கலாம் எனும் இத்திட்டத்தின் கீழ் வெளிநாட்டு நிறுவனங்கள் தொழிலதிபர்கள் - 1000 கோடி மதிப்பிலான பத்திரத்தை பா.ஜ.க.வுக்கு வழங்கியிருப்பது ஆர்.டி.அய். மூலம் வெளி வந்திருக்கிறது. இலஞ்சத்துக்கு கதவு திறந்துவிடும் பா.ஜ.க.வுக்கு அரசியல் ஊழல்களைப் பற்றிப் பேச என்ன தார்மீக உரிமை இருக்கிறது என்று கேட்கிறோம்.

மற்றொரு திருத்தம் - தீர்ப்பாயங்களை முடக்கியிருப்பதாகும். இந்தத் தீர்ப்பாயங்கள் நீதித் துறைக்குரிய அதிகாரங்களுடன் செயல் படக்கூடிய அமைப்புகள். அரசின் தலையீடுகளுக்கு இதில் இடமில்லை. நீதிமன்ற ஆணைப்படி உருவாக்கப்பட்ட தீர்ப்பாயங் களும் உண்டு. தீர்ப்பாயங்களுக்கு தலைவர்கள், உறுப்பினர்கள், அரசு நிர்வாக அமைப்பு களுக்கு அப்பாற் பட்டவர்கள் என்று உச்சநீதிமன்றம் 2014இல் திட்டவட்டமாக கூறியிருக்கிறது. ஆட்சியாளர்களையே சம்மன் செய்து விசாரிக்கும் உரிமை கொண்டவை. இப்போது தேவையில்லை என்று ஆட்சியாளர் விரும்புகிற தீர்ப்பாயங்களை கலைக்கவும், சில தீர்ப்பாயங்களின் தனித்துவமான உரிமைகளைப் பறித்து, வேறு சிலவற்றுடன் இணைக்கவும் சட்டத்தைத் திருத்தியிருக்கிறார்கள்.

வரி, அரசு வாங்கும் கடன், அரசு செல வினங்கள், கடன் பத்திரங்கள் போன்ற அம்சங்கள் மட்டுமே நிதி மசோதாவின் கீழ் வரக்கூடியவை. மோடி ஆட்சி, வருமான வரித் துறை, கார்ப்பரேட் கம்பெனிகள் சட்டம், தீர்ப்பாயங்கள் போன்றவற்றையும் நிதி மசோதாவுடன் இணைத்து மாநிலங்களவை விவாதத்துக்கு உட்படுத்தாமல் 40 திருத்தங்களை செய்திருப்பது மிகப் பெரும் ஜனநாயகப் படுகொலை.

மாநிலங்களின் உரிமைகளை பறிப்பது மட்டுமின்றி, மாநிலங்களின் அவையையும் முடக்கி விட்டார்கள். ஒற்றை ஆட்சி ஒற்றை கலாச்சாரம் எனும் இந்துத்துவா ஆயுதத்தை மக்களுக்கு எதிராக கூர் தீட்டி வருகிறது மோடி ஆட்சி.

 ‘எக்னாமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி’

Pin It