பொன்னேரி வேணுகோபால் இராமானுசம் - புரட்சி
போர்புரியும் இளைஞர்களின் புத்தாக்க அருமருந்து
கார்முகில் சிந்தனையின் களங்கமில்லா படைத்தலைவர்
சோதனைகள் சுட்டபோதும் சுடராய் ஒளிர்ந்தபொன்
மக்களுரிமைக் கழகத்தின் மகத்தான பொதுச்செயலாளர்
சாதனைகள் படைத்தபோதும் தன்னிலை திரியாதவர்
பள்ளிப் பருவத்திலே பரங்கியரை எதிர்த்தவர்
விடுதலைப் போரில் வீறுகொண்டு எழுந்தவர்
குறைந்த அகவையில் குடும்பத்தைத் தாங்கவேண்டி
பதின்ம அகவையிலே பட்டாளம் சேர்ந்தவர்
இந்தியப் பட்டாளத்தில் இணைந்து பணிசெய்தார்
கம்யூனிச மெய்மத்தை கருத்தாய் கற்றறிந்தார்
கமுக்கமாய் படையணிக்கு கற்றதைப் பரப்பினார்
பட்டாள வீரர்களுக்கு பாட்டாளி மெய்மமா?
பாழும்சிறையை பரிசாய் தந்தாள் பாரதமாதா
மக்களுக்குப் பணிசெய்ய படைப்பணி தடையானது
விருப்பஓய்வு பெற்று வெளியேறி வந்தவுடன்
திருப்பத்து ஊரிலே செயல்படத் திட்டமிட்டார்
கம்யூனிஸ்ட் கட்சிகளில் கரமிணைத்து செயல்பட்டார்
தொழிலாளர் சங்கங்களை தோற்றுவித்து செயல்பட்டார்
முப்பதுக்கும் மேற்பட்ட சங்கங்களின் செயலாளராய்
முனைப்புடன் செயல்பட்டார்! முடிவில்லாப் பொருளியல்
போராட்டங்கள் மட்டுமே போதாது என்றுணர்ந்தார்!
அரசியல் போராட்டமே ஆளும்வகுப்பின் அதிகாரம்
அழித்தொழிக்கும் என்ற ஆசான்கள் வழிநின்றார்!
பாட்டாளி வகுப்பு அனைத்ததிகாரமே பாமரர்க்கும்
பயனளிக்கும் பாதை என்று பகுத்தறிந்தார்!
புரட்சிகர அரசியலே பதியதோர் சமுதாயம்
புலர வழிவகுக்கும்! அரசியல் போராட்டமே
அடிமை விலங்கொடிக்கும்! சீர்திருத்த வாதங்கள்
சீரழிக்கும் என்றுணர்ந்தார்! புரட்சி மெய்மமின்றி
புரட்சி நடப்பதில்லை! புரிந்து கொண்டார்!
எழுபதுகளின் காலத்தில் இணைந்தார் மாலெயில்
நக்சல்பாரி உழவர்களின் நடுங்கவைத்த பேரெழுச்சி
நாட்டிற்கோர் பாதையை நன்று காட்டியது! - ஆயினும்
படைக்கலப் போராட்டம் பாதைமாறிப் போனது
தனியாள் அழித்தொழிப்பே தலையாய வேலைமுறை!
சாருவின் வழிமுறை தவறாய்ப் போனது!
உன்னத நோக்கங்கள் உருக்குலைந்து போனது!
வன்தொழில் எதிரிக்கு வாய்ப்பாய் ஆனது!
தியாகத்தின் விளைநிலம் திருப்பத்தூர் சிவந்தது!
தேவாரம் திருவாசகம் திவ்விய பிரபந்தங்கள்
எசமானர் விட்டெறிந்த எழும்பு துண்டுகளை
கவ்விய நாய்களாய்க் கடித்துக் குதறியது!
எவ்வளவோ எம்தோழர் எடுத்துரைத்தும் பயனில்லை!
இழந்தோம் நமதருமை எண்ணற்ற வீரர்களை!
தனியாள் அழித்தொழிப்பு தவறென்ற கார்முகிலின்
மக்கள் திரள்வழியை மனதில் கொண்டுழைத்தார்
தமிழ்நாடு அமைப்புக் குழுதன்னில் இணைந்தார்
அவசரநிலைக் காலத்து அடக்குமுறை எதிர்த்தார்!
அப்புவும் சீராளனும் ஆளும் வர்க்கத்தால்
அடித்தே கொல்லப்பட்ட அநீதிக்குக்குரல் கொடுத்தார்!
பொன்னேரி தொடங்கி புகழ்பெற்ற திருப்பத்தூர்வரை
தன்னேரில்லா தநாஅகு தத்துவ வழிநடந்தார்!
அரசப் படுகொலைகளை அம்பலப் படுத்தினார்!
அரசே உசாவல்குழு அமைக்க வலியுறுத்தி
மனிதஉரிமைக் கழகத்தின் மறவனாய் திகழ்ந்தார்!
இந்தியப் பாசிசத்தை எதிர்த்துநின்ற மஉக
இயக்கத்தை வழிநடத்தி எரிமலையாய் எழுந்தார்!
இந்திய அரசே! ஈழப்போராளிகளை இழிவுசெய்யாதே!
சிங்கள இனவெறிக்குத் துணைபோகாதே என்றகட்சியின்
ஈழமக்கள் விடுதலையின் இயக்கத்தில் இணைந்துநின்றார்!
இந்தியப் பொதுமைய இயக்கத்தின் ஏகாதிபத்தியப்
பொருளியல் கோட்பாட்டை புறந்தள்ளிய கார்முகிலின்
புரட்சிகர தநாமாலெக போர்ப்படையில் இணைந்தார்!
தமிழ்தேசிய விடுதலையே சனநாயகப் புரட்சியை
தமிழ்நாட்டில் நிறைவுசெய்யும் தத்துவ நெறிநின்றார்!
போலிப் பகட்டுகளை புல்லென வெறுத்தவர்!
குடும்ப உறவுகளை கொள்கைக்காய் துறந்தவர்!
கொள்கை உறவுகளை கொண்டாடி போற்றியவர்!
கட்சிஉறவுகளை இருகண்கள் போல் காத்தவர்!
எட்டி உதைத்தாலும் இன்முகம் மாறார்!
குட்டிமுதலாளிய குறுகிய உறவுகளை வெறுத்தார்!
அரத்த உறவேயானாலும் அடியோடு மறுத்தார்!
அவர் உள்ளமோ வெள்ளை! உணர்வுகளோ சிவப்பு!
எழுச்சியில் அவர் ஒரு இமயம்!
எண்ணங்களில் அவர் ஒரு இளைஞன்!
தன்னை முன்னிறுத்தா தன்மையில் ஓர்தாய்!
தாநாமாலெக மகுடத்தில் ஒளிரும் ஓர்தாரகை!
இருபத்தெட்டு மேஇரண்டாயிரத்துப் பதினெட்டு
பூதவுடல் உறங்கியது! பூமியில் நிரந்தரமாய்! - ஆயின்என்
புரட்சியாளர்கள் இப்பூமியில் உள்ளவரை பொவேஇரா - எனும்
போராளி நினைவுகள் இப்பூமியில் அழியாது!
நினைவுகளை நெஞ்சிலேந்துவோம்! நிகரமைய குமுகாயம்
நிலைத்து வளர்ந்தோங்கி பொதுமையம் ஆகும்வரை
போராளி நினைவுகள் பூமியில் அழியாது!
போற்றுவோம் புரட்சியாளன் பொவேஇரா நினைவுகளை!
பொதுமையன் பொவேஇரா புகழ்வாழ்க! வாழ்க!!