2000ஆம் ஆண்டில், சிபிஎம் எடுத்த, ‘சமரசத்துடன் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளுதல்’ என்ற புதிய கொள்கை முடிவு, அக்கட்சிக்குள் ஏற்படுத்திய அதிருப்தியை தொடர்ந்து, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அக்கட்சி உடைந்தது. பஞ்சாபில், சிபிஎம் (பஞ்சாப்) கட்சியும், ஆந்திராவில் எம்சிபிஐ கட்சியும், தமிழகத்தில் கம்யூனிஸ்ட் பேரவையும், கேரளாவில் இஎம்எஸ் ஏகேஜி பேரவையும் அவ்வாறு தோன்றியவையில் சில.

இந்த நான்கு கட்சிகள் 2004இல் கேரள மாநிலம் ஆலுவாயில் ஒன்றிணைந்து விவாதித்தன. 2005இல் இக்கட்சிகள் இணைந்து எம்சிபிஐ (யுனைட்டெட்) உதயமானது.

இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்ட் இயக்கங்கள் ஜாதியற்ற சமூகம் (classless society) என்பதை முன்வைத்து இயங்க, எம்சிபிஐ (யு) வர்க்கபேதமற்ற (classless) மற்றும் ஜாதியற்ற சமூகத்தை (casteless society) முன் வைக்கிறது.

வர்க்கரீதியில் சமநிலையில் இருந்தாலும், சாதி அடிப்படையில் அவர்களுக்குள் ஏற்றத்தாழ்வு நிலவுவதை சுட்டிக் காட்டி, சாதிய பாகுபாடு ஒழியும்வரை சமூகநீதி சாத்தியமில்லை என்பதை வலியுறுத்துகிறது.

இக்கட்சி எடுத்த மற்றுமொரு முக்கிய தீர்மானம், சமூக மறுகட்டமைப்புக்காக போராடிய அம்பேத்கர், பெரியார் இருவரையும் முன்வைத்து போராடுவது. தமிழகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கங்களின் சரிவுக்கு பெரியாரையும், அவரது கொள்கைகளையும் புறக்கணித்ததே முக்கிய காரணம் என அக்கட்சி அறிவுறுத்துகிறது.

சாதி, மத பிரிவினை சக்திகள் வலிமை பெற்றிருக்கும்; இக்காலகட்டத்தில் பெரியார், அம்பேத்கரின் தேவையை கட்சி பூரணமாக உணர்ந் துள்ளது. முக்கியமாக இந்த மக்கள் விரோத சக்தி களுக்கு எதிரான ஆயுதமாக பெரியாரை கட்சி நம்புகிறது.

இந்தியாவில் சிபிஎம் கட்சியின் நலிவுக்கும், சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் ஆதிக்க மனோபாவத்துக்கும் “பிராமணியமே” தலையாய காரணம் என்று எம்சிபிஐ (யு) ஐயமற நம்புகிறது. பிராமணிய எதிர்ப்பை தனது அடிப்படை கூறுகளில் ஒன்றாக அக்கட்சி வரையறுத்துள்ளது.

எம்சிபிஐ (யு) இன் தமிழக மாநிலத் தலைவராக ஜார்ஜ் உள்ளார். தமிழகத்தில், குமரி மாவட்டம் குழித்துறையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இக்கட்சி, லூயி துப்புரவுத் தொழி லாளர்கள் நலச்சங்கத்தை கடந்த ஏழு வருடங்களாக நடத்தி வருகிறது.

தற்போது இச்சங்கம் குமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிகுந்த ஊக்கத்துடன் செயல்பட்டு வருகிறது, பல மாநில மாநாடுகளையும் நடத்தியுள்ளது. கட்சியின் குமரி மாவட்ட செயலாரும், மத்தியக்குழு உறுப்பினருமான வழக்கறிஞர் சுலிஃப்  சங்கத்தை வழி நடத்துகிறார். 

கட்சியின் தலையீடு இல்லாமல், தொழிலாளர்களே சங்கத்தின் நிர்வாகிகளை தீர்மானிக்க வேண்டும் என்பது இச்சங்கத்தின் அடிப்படை விதி. துப்புரவுத் தொழிலாளர்களை ஒன்றிணைத்து போராட தூண்டாமல், அவர்களுக்காக சட்டரீதியாக போராடி, உரிமைகளை பெற்றுத் தருவது என்பதில் சங்கம் உறுதியாக உள்ளது.

பலன் சார்ந்து இயங்கும் சாதிக்கட்சிகள், அரசியல் கட்சிகளுக்கு நடுவில் சமரசமற்று ஒரு சங்கத்தை நடத்திச் செல்வது சவாலானது. ஏழு வருட அனுபவத்தில் சமரசமற்று சமூகப் பணி செய்கிறவர்கள் என கட்சியும், சங்கமும் அடையாளம் கண்டு கொண்டது பெரியாரிஸ்டுகளை மட்டுமே.

பட்டியலின மக்களிடையே தற்போது மதவாத சக்திகள் கடவுள் மற்றும் சடங்குகளின் பெயரில் ஊடுருவ ஆரம்பித்துள்ளனர். இதற்கு எதிரான வலுவான ஆயுதமாக பெரியார் இருப்பார், பெரியாரிஸ்டுகளின் துணையுடன் இவர்களை ஆக்கப்பூர்வமாக எதிர்க்க முடியும் என கட்சியும், சங்கமும் நம்புகிறது.

இந்தப் புரிதல்களின் அடிப்படையில் பெரியாரின் நினைவுதினமான டிசம்பர் 24ஐ ஆக்கப்பூர்வமான தினமாக்க கட்சி விரும்புகிறது.

- விடுதலை இராசேந்திரன்

Pin It