markiseyum 400சூழலியலில் மார்க்சின் முக்கிய பங்களிப் பாகக் கருதப்படுவது வளர்சிதை மாற்றப் பிளவு குறித்த கோட்பாடாகும்.ஜெர்மானிய வேதியியல் அறிஞரான லைபிக்கின் ஆராய்ச்சியில் கவரப்பட்ட மார்க்சு ,மக்கள்தொகை திரட்சியாக உள்ள புது நகரங்களின் தொழிற்சாலை உற்பத்தி மையங்களுக்காக முதலாளித்துவமானது மண்ணின் வளங்களான பொட்டாசியம் , நைட்ரஜன் போன்றவற்றைத் திருடி மறுதலையாக புவிக்குத் தூய்மைக்கேட்டை விளைவிக்கிறது என்று விமர்சிக்கிறார்.லைபிக் இதைக் கொடிய சுரண்டல்(“Raubbau” ) அல்லது “கொள்ளை அமைப்பு” என்று அழைக்கிறார்.மார்க்ஸ் இதை விவரிக்கையில்

‘முக்கிய விஞ்ஞானிகளுள் குறிப்பாக, ஜெர்மன் விஞ்ஞானியான லைபிக் என்னை பெரிதும் கவனிக்க வைக்கிறார் மண் வளத்தை சுரண்டுக் கொள்ளை யடிக்கும் இம்முதலாளித்துவ சுரண்டல் அமைப்பு குறைவான காலத்தில் அதிக லாபம் அடைகிறார்கள்.

பழமையான வேளாண் சமூகங்களான சீனா, எகிப்து, ஜப்பான் போன்ற நாடுகளில் அறிவார்ந்த வகையில் வேளாண்மையை மேற்கொண்டு வந்தார்கள். இன்னும் சொல்லப்போனால் பல்லாயிரம் ஆண்டுகளாக மண்ணின் வளங்களைப் பாதுகாத்ததோடு மட்டுமல்லாமல் மண் வளத்தினை அதிகரிக்கவும் வழி செய்தனர்.

ஆனால், முதலாளித்துவ கொள்ளை முறையானது உலகின் சில பகுதிகளில் உள்ள மண்வளத்தை அரை நூற்றாண்டில் சுரண்டியது’’.

மனிதனுக்கும் இயற்கைக்குமான வளர்சிதை மாற்றத்தில் இக்கொள்ளையானது “தீர்க்க முடியாதப் பிளவாக” முதலாளித்துவ சமூகத்திற்குள் வடிவெடுக்கும் என மார்க்ஸ் கருதுகிறார். முதலாளித்துவ வேளாண் உற்பத்திமுறையின் உண்மைப் பண்பு குறித்து மார்க்ஸ் இவ்வாறு கூறுகிறார்.

‘முதலாளித்துவ உற்பத்தியானது தொடர்ச்சியாக மண் மற்றும் உழைப்பு போன்ற வளச் சுரண்டல்களை மட்டுமே வளர்க்கிறது’. இவ்வகை சூழல் உட்கருத்து குறித்த மார்க்சின் திறனாய்வைப் புரிந்துகொள்ள முதலாளித்துவம் பற்றின மார்சின் ஒட்டுமொத்த திறனாய்வோடு இணைத்துப் பார்க்கவேண்டும்.அதாவது,மனிதனுக்கும் இயற்கைக்குமான வளர்சிதை மாற்ற உறவே தானாக உழைப்பு மற்றும் உற்பத்தி நிகழ்முறையாக வடிவம் பெறுகிறதென நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

கம்யூனிச/ சோசலிச சமூகம் குறித்த மார்க்சின் தொடக்ககால விளக்கம் அதனாலேயே இவ்வாறாக இருந்தது “ஒன்றிணைந்த உற்பத்தியாளர்கள் மனிதனுக்கும் இயற்கைக்குமான வளர்சிதை உறவை பகுத்தறிவு வழியில் முறைப்படுத்த வேண்டும் அதுவும் குறைவான ஆற்றலை செலவிட்டு நிறைவேற்றவேண்டும்“ என்கிறார். சூழல் குறித்த அவரின் ஒட்டுமொத்த திறனாய்வு ‘முதலாளியத்தின் கீழ் பிளவுபட்ட திறந்த வளர்சிதை(Open metabolic Rift) மாற்றமாக இல்லாமல் மனிதனுக்கும் இயற்கைக்குமான உறவு மூடிய வளர்சிதை (Closed Metabolic Cycle)மாற்றப்பிணைப்பாக இருக்கவேண்டும்‘ எனக் கோருகிறது.

ஏகபோக முதலாளித்துவமும் சூழலியலும்

சூழலியல் குறித்த மார்க்சின் பகுப்பாய்வானது கனிம அறிவியலின் தொடக்க கால கட்டத்தில் மேற்கொள்ளப்பட்டதாகும்.மார்க்சின் சூழலியல் கருத்தமைவுகள், நேரடியாகவோ மறைமுகமாகவோ பல முக்கிய கனிம அறிவியலாளர்களுக்கும் அறிவியல்துறைசார் வல்லுனர்களுக்கும் பெரிதும் ஆர்வமூட்டக்கூடிய கருத்தாக்கமாக பின்னாட்களில் இருந்திருக்க வேண்டும்.ஆனால் நடந்ததென்னவோ வேறு. மார்க்சிய அரசியல் பொருளாதாரப் பகுப்பாய்வுகளில் சூழலியல் குறித்த மார்க்சின் கருத்தமைவான “முதலாளித்துவ கொள்ளை”யானது 19 ஆம் நூற்றாண்டின் இறுதி வரையிலும் கவனம் பெறாமலேயே இருந்தது.

ஆனால் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அதாவது ஏகபோக மூலதனத்தின் தொடக்க காலத்தில் நிலவிய மாறுபட்ட சூழலில், மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தில் சூழலியல் கவனம் பெறத் தொடங்கியது. ஏகபோக முதலாளித்துவ கோட்பாட்டாலர்களுள் முதன்மையானர்கள் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ருடால்ப் ஹில்பெர்டிங்க்(Rudolf Hilferding) மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த வெப்லன் (Veblen)). ஹில்பெர்டிங்க், தனது மார்க்சிய அரசியல் பொருளாதாரப் பகுப்பாய்வில் சூழலியல் நிலைமைகள் குறித்து சிறிதளவே பேசுகிறார்.

மாறாக, பொருளாதார அறிஞரும் சோசலிஸ்ட்டுமான வெப்லனொ, மூலதனத்தின் வளர்ச்சிப் போக்கில் (போட்டி கட்டத்திலிருந்து ஏகபோக முதலாளித்துவ கார்பரைட்டாக மாற்றமடைதல்) ஏற்படுகிற சூழலியல் சிக்கல்கள் குறித்து அதிகம் கவனப்படுத்துகிறார். குறிப்பாக ஏகபோக மூலதனத்தின் எழுச்சியால் இயற்கையின் கனிமவள பயன்பாட்டில் ஏற்படுகிற கெடும் விளைவுகள் குறித்து எச்சரிக்கிறார்.மேலும், ஏகபோக மூலதன கட்டத்தின் உற்பத்தி முறை அனைத்தும் வெறும் பொருளாதார விரையமே அன்றி வேறொன்றுமில்லை என்கிறார். (வெப்லன் தன்னை ஒருபோதும் மார்க்சியவாதி என்று சொல்லிக்கொண்டதில்லை, ஆனால் மார்க்சால் ஈர்க்கப்பட்டவர்!)

1923இல் தான் எழுதிய ‘ ‘Absentee Ownership and Business Enterprise in Recent Times’’ எனும் நூலில், மூலதன குவிப்பதற்காக சுற்றுச்சூழலலையும் பூர்வ குடி மக்களையும் சுரண்டுகிற “அமெரிக்கத் திட்டம்’’ “ குறித்து வெப்லன் கடுமையாக விமர்சிக்கிறார். லோவ் லர்டலே கூறியது போல “பொதுவளம் அனைத்தையும் தனியாரின் லாபத்திற்காக தனியுடமையாக்குகிறப் போக்கை சட்டத்தின் பேரில் நிகழ்த்துகிறத் திட்டம் தான் இது என்கிறார் வெப்லன். லாபத்திற்கான போட்டியில் “உற்பத்தி பெருக்கமும் விலைக் குறைவும் நிலையான கனிம வளங்களை அளவுக்கு அதிகமாக சுரண்டும் போக்கிற்கு வித்திடுகிறது என்று கூறுகிற வெப்லன் தொடர்ந்து, ‘‘இதுவே இயற்கையின் வளங்களை விரைவாக அழித்து நாசப்படுத்தி, இறுதியில் ஒன்றுமில்லாமல் போவதற்கு வித்திடுகிறது” என்கிறார்.

இவ்வாறு ஏகபோக முதலாளித்துவமானது பற்றாக்குறையையும் ஏகபோக விலையையும் கவனமாக நிர்வகித்து, பொதுவளங்களை மறைமுக சூழ்ச்சித் திட்டத்தின் வாயிலாக தனியுடமையாக்கி லாபத்தை குவிக்கிறது.ஏகபோக முதலாளித்துவத்தின் இவ்வெழுச்சிக் கட்டத்தில், நிலக்கரி, எண்ணை மற்றும் எரிவாயு போன்ற பொதுவளங்கள் சூறையாடப்படுகின்றன.பொதுவளங்களை கட்டுப்படுத்துகிற ஏகபோக முதலாளித்துவத்தின் போக்கை இவ்வாறு கவனப்படுத்துகிறார் “ 19 ஆம் நூற்றாண்டின் மத்திய காலகட்டத்தில், லும்பெர்மனின் நிறுவனமானது தேவைக்கும் அதிகமான அளவில் கண்மூடித்தனமாக மரங்களை வெட்டி அழித்தது.” என்கிறார்.

ஏகபோக முதலாளித்துவக் கட்டத்தில் பயன் மதிப்பின் வேறுபட்ட வடிவதையும் நுகர்வு போக்கு குறித்தும் விளக்கியது, வெப்லனின் மிக முக்கிய சூழலிய நுழைபுலத் திறமாகும். உற்பத்தியை கட்டுப்படுத்துவதன் மூலமாக விலைப் போட்டியை விலக்குவது ஏகபோக முதலாளித்துவத்தின் முக்கிய பண்பாகும். விளைவு, “ஏகபோக முதலாளித்துவ” காலகட்டத்தில் பெரும் தொழிற்துறை நிறுவனங்கள் கொள்ளை லாபத்தை குவித்தது.

விலை யுத்தங்கள் வெற்றிகரகமாக தடை செய்தபின்னர் ‘போட்டிக்குரிய செயல் திட்டமானது’ இரண்டு அடிப்படைகளில் அமைகிறது‘ முதலாவதாக உற்பத்திச் செலவை குறைத்து,குறைவான அளவில் பொருட்களை உற்பத்தி செய்வது ;இரண்டாவது,உற்பத்தி செய்தப் பொருளின் விலையைக் குறைக்காமல் விற்பனையை அதிகரிக்க செய்வது. ஏகபோக முதலாளித்துவத்தின் முக்கிய பண்பானது (தொழிலாளர் கூலியைக் குறைத்து) உற்பத்தி விலையை மையப்படுத்தி யுள்ளதை வெப்லன் சுட்டிக் காட்டுகிறார். மார்க்சிய சொற்களில் சொல்வதென்றால் “உபரி இலாபத்தின் அதிகரிப்பு” எனலாம்.

Pin It