சில ஆண்டுகளுக்கு முன் குழந்தைநேயப் பள்ளிக் கூட்டமைப்பின் ஆசிரியர் முகாமில் ஒரு அமர்வில் ‘ஆசிரியர்’ திரைப்படங்கள் குறித்து பேசிக் கொண்டிருந்தேன். எப்போதும்போல முதலாவதாக The Ron Clark Story படத்தின் கதையைச் சொல்லத் தொடங்கினேன்.
அது ஒரு ஆசிரியரின் உண்மைக் கதை. தொடங்கியவுடனேயே யுனிசெப் நிறுவனத்தைச் சார்ந்த கல்வியாளர் அதற்கு மறுப்புத் தெரிவித்தார். நீங்கள் சொல்லும் படங்கள் எல்லாமே ஹீரோயிசத்தை முன்னிறுத்துகின்றன. இப்படி எல்லாம் ஒரு ஆசிரியர் ஹீரோவாக இருக்க முடியாது என்று கூறினார்.
அதுகுறித்த விவாதமாக இருக்க வேண்டாமென்று நினைத்ததை விடச் சுருக்கமாக சில படங்களைப் பற்றியும் ஏன் ஆசிரியர்கள் ஆசிரியர் குறித்த திரைப்படங்களை பார்க்க வேண்டும் என்பது பற்றியும் சொல்ல நினைத்த பல விடயங்களைச் சொல்லாமல் விரைவாகப் பேச்சை முடித்துக் கொண்டேன். ஓரிரு நண்பர்களிடமிருந்தும் இதே விமர்சனத்தை எதிர்கொண்டிருக்கிறேன்.
ஆசிரியர் குறித்த திரைப்படங்கள் இந்தியாவில் மற்றும் உலகமெங்கும் நிறைய வந்து கொண்டே இருக்கின்றன. அவற்றிலிருந்து தமிழில் வெளியாகும் படங்கள் நிறைய மாறுபடுகின்றன. அதனாலேயே இங்கிருப்பவர்கள் தமிழ்ச் சினிமாக் கண்களோடு பிற மொழிப் படங்களைப் பார்க்கிறார்கள். பிற மொழிப்படங்களில் ஒன்றையாவது பார்த்தாலே இந்த மயக்கம் தெளியும்.
நமது வாழ்நாளின் இனிமையான குழந்தைப்பருவம் முழுவதுமே கல்விக்கூடங்களில் கழிகின்றன. ஒவ்வொரு குழந்தைக்கும் ஏற்றபடி எவ்வாறு கற்பிக்கலாம் என்று தேடல் மிகுந்த ஆசிரியர்கள் உலகமெங்கும் இருக்கிறார்கள். அவர்கள் என்ன மாதிரியான செயல்பாடுகளை செய்தார்கள்? அவர்கள் எதிர்கொண்ட தடங்கல்கள் யாவை? அவற்றை எவ்வாறு சமாளித்தார்கள் அல்லது சறுக்கினார்கள் என்பதை எல்லாம் உலகமெங்கும் திரைப்படங்களில் பதிவு செய்திருக்கிறார்கள்.
கற்பனை கதைகளைப் போல நிறைய உண்மைக் கதைகளும் திரைப்படங்கள் ஆகியிருக்கின்றன. ஆசிரியர்களின் புத்தங்கள் படமாகியிருக்கின்றன. சில ஆசிரியர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளைத் தொகுத்து படமாக்கியிருக்கிறார்கள்.
ஒன்றரை மணி நேர திரைப்படத்தில் ஒரு ஆசிரியரின் பல ஆண்டு சாதனைகளை சொல்லும்போது அது ஒரு ஹீரோயிஸம் போல தோன்றலாம். ஆனால் ஆசிரியரின் வாழ்க்கையைச் சொல்லும் உலகப்படங்கள் வெறுமனே வெற்றிக் கதைகள் மட்டும் உள்ள படங்களாக அவை இல்லை. அவர்கள் சந்தித்த தடைகள் ஏற்பட்ட தோல்விகள் அனைத்தையும் பதிவு செய்யும் படங்களாகவே பெரும்பாலும் இருக்கின்றன.
தமிழ்த் திரையுலகம் அவ்வப்போது ஆசிரியர் குறித்த படங்களில் ஆர்வம் காட்டினாலும் இங்கு எல்லாமே ஹீரோ மயம்தான். உதாரணமாக சாட்டையில் இருந்து தொடங்கலாம். அதற்கு முன்னால் கல்வி சார்ந்த படங்கள் அவ்வப்போது வந்திருக்கின்றன.
"நம்மவர்' ஆசிரியரின் கதை என்பதைவிட கமல் படம். ஆசிரியர் படம் என்ற பரவலான பேச்சை சாட்டை உருவாக்கியது. சமீபத்தில் வெளியான ராட்சசியும் அப்படியான பேச்சை உருவாக்கியது. இப்போது ஹீரோ ஓடிக்கொண்டிருக்கிறது. அதன் மைய இழை, இன்றைய கல்வி முறை.
இந்தப் படங்கள் எல்லாம் பல ஆசிரியர்களிடம் கேட்ட நிகழ்வுகளின் தொகுப்பாகவும் உலகப் படங்களை பார்த்து அதன் விளைவாக உருவாக்கிய சில காட்சி அமைப்புகளையும் கொண்டு கதாநாயகன்/நாயகிக்காக உருவாக்கப்பட்ட திரைப்படங்களாகவே இருக்கின்றன. கதையை விட "பஞ்ச் டயலாக்', சாகசங்களை உருவாக்குவதில்தான் அதிகக் கவனம் வைக்கிறார்கள்.
சாட்டை குறித்துப் பொதுவெளியிலும் சமூக ஊடகங்களிலும் விவாதங்கள் நடைபெற்றது நம்பிக்கை அளித்தது. அதற்கு இரண்டு ஆண்டுகள் கழித்து வெளியான ‘குற்றங்கடிதல்' குறித்துப் பெரும்பாலான ஆசிரியர்களே அறிந்திருக்கவில்லை.
பிற ஆசிரியர் படங்களைப்போல ஆசிரியர்களைப் பொதுவாகக் கிண்டல் செய்யாமல், தண்டனை குறித்த முழுமையான உரையாடலாக "குற்றங்கடிதல்' ஆசிரியரின் பக்கம் நின்றே பேசியது. அப்படியிருந்தும் அப்படம் குறித்த பரவலான பேச்சு இல்லை.
தமிழ்த் திரையுலகம், கதை யிலும் தயாரிப்பிலும் திரையரங்கிலும் வெளியே தெரியாத ஹீரோக்களின் பிடியில் உள்ளது. அரசியல் ஆசை ஹீரோக்களை இயக்குகிறது.
‘ஹீரோ' படம் வந்த பிறகு ‘குக்கூ' காட்டுப்பள்ளியை உருவாக்கியவர்களில் ஒருவரான சிவராஜ் எழுதிய முகநூல் பதிவு பெரிதும் பேசப்பட்டது. அனில் குப்தாவின் கதையை எடுத்துக் கொண்டு கதாநாயகனுக்காக சில பல விடயங்களை சேர்த்து இந்த படம் உருவாகியிருக்கிறது என்று அவர் கூறியிருந்தார்.
பேராசிரியர் மாடசாமி அவர்களின் ‘எனக்குரிய இடம் எங்கே?' என்ற புத்தகத்தை வாசித்ததில் இருந்து உருவான கதை ‘அடுத்த சாட்டை' என்று அந்தப் படத்தின் கதாநாயகனான சமுத்திரக்கனி கூறியிருந்தார்.
நமது பள்ளிக்காலத்தை நினைத்தாலே எவ்வளவு பசுமையான நிகழ்வுகள் மனதுள் தோன்றுகின்றன! நகைச்சுவை, காதல், சண்டை, போட்டி, வெற்றி, தோல்வி என்று எல்லா உணர்வுகளும் கொட்டிக் கிடக்கின்றன.
தமிழில் வாழ்க்கைக் கதைகள் அதிகம் வெளிவருவதே இல்லை. பெரும்பாலும் புராண இதிகாசம் அல்லது அரசியல் தலைவர்களின் வாழ்வு இதைத்தாண்டி வாழ்ந்த வாழ்ந்து கொண்டிருக்கிற மனிதர்களிடமிருந்து கதைகளை உருவாக்கி இருக்கிறார்களே தவிர இவருடைய வாழ்க்கை கதை என்று அதிகம் வந்ததாகத் தெரியவில்லை.
ஹிந்தியில் ‘Super 30 ' என்று ஆனந்த்குமாரின் வாழ்வு படமாகிறது. ஹீரோ படத்தை அனில் குப்தாவின் வாழ்க்கை கதையாகவே ஏன் எடுக்க முடியவில்லை? அடுத்த சாட்டை படத்தை பேராசிரியர் மாடசாமியின் வாழ்க்கைக் கதையாகவே ஏன் எடுக்க முயற்சி செய்யவில்லை?
தமிழ்த் திரை உலகம் ஹீரோக்களை மையமாக வைத்து இயங்குகிறது. அந்த சூப்பர்மேன் நம்மைக் காக்க வருவார்கள் என்ற நம்பிக்கையை காலம்காலமாக தமிழ் திரையுலகம் விதைத்துக் கொண்டே இருக்கிறது. அதனால்தான் திரை வசனம் பேசும் பலரை இந்த மண் அரசியல் தலைவர்களாகவும் ஆக்கியிருக்கிறது.
எப்போதாவது ஒரு சில படங்கள் அறியாத முகங்களோடு கதையை மையமாக வைத்து வெளி வருவதுண்டு. அவை கொண்டாடப்படும். அப்போது சினிமா காதலர்களின் பேச்சில் நம்பிக்கை ஒளி புலப்படும். அதை அதிக நாள் நீடிக்க விடாமல் உடனடியாக ஒரு சூப்பர்மேன் தோன்றுவார். மீண்டும் தமிழ்த் திரையுலகம் தனது பாரம்பரிய ஹீரோ கனவில் திளைத்துக்கொண்டு பறந்து பறந்து சண்டை போடத் தொடங்கும்.
இதோ, சில்லுக் கருப்பட்டியை ரசித்துக் கொண்டிருக்கிறேன். சில நாட்களில் அதைத் தூள் தூளாக்க ‘தர்பார்' வரப்போகிறது. ஹீரோ ஹீரோ தான்.
- கலகல வகுப்பறை சிவா