அடித்தள மக்களுக்கான ஆய்வாளர் ஒருவர் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் எனும் பெயரில் தமிழகத்தில் இருந்தார் என்ற உண்மை அவரது மரணத்துக்குப் பிறகுதான் தமிழ் உலகிற்கு தெரிய வந்திருக்கிறது.அவர் தமிழில் எழுதவில்லை.தமிழகத்தின் ஜாதி – தீண்டாமை எதிர்ப்பு போராட்டங்கள் மற்றும் திராவிடர் இயக்கம் உருவாக்கிய தாக்கங்களை ஆங்கில அறிவுத் தளத்திற்கு கொண்டு சென்றவர் அவர். பல தமிழ்ச் சிற்றிதழ்களில் இப்போது அட்டைகளில் அவரது படம் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தனக்கான அங்கீகாரம் இந்த அளவுக்கு இருந்திருக்குமா என்று பாண்டியன் கற்பனை செய்து கூட பார்த்திருக்க மாட்டார். அவர் வாழும் காலத்தில் இத்தகைய நேசக்கரங்கள் நீண்டிருக்குமானால் அவர் வாழ்நாள் நீண்டிருக்குமோ என்று கூட நினைக்கத் தூண்டுகிறது.

இந்தியாவின் தலைசிறந்த ஆய்விதழாக அங்கீகரிக்கப்பட்டுள்ள "எக்னாமிக் அண்டு பொலிட்டிக்கல் வீக்லி'யில் ஏராளமான கட்டுரைகளை எழுதியவர். 1996 ஆம் ஆண்டு திராவிடர் கழகத்திலிருந்து நானும் சக தோழர்களும் அந்த அமைப்பின் செயல்பாடுகளால் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் வெளியேறினோம். இருபத்தைந்து ஆண்டுகாலம் குடும்பமாகப் பழகிய அந்த இயக்கத்திலிருந்து விலக வேண்டியிருக்கிறதே என்று உளவியல் அடிப்படையில் நான் பாதிக்கப்பட்டிருந்தேன். சிக்கலான அந்த உணர்வுச் சூழலில் பாண்டியனின் தோழமை எனக்குள் நம்பிக்கையையும் ஆறுதலையும் ஊட்டியது.

பெரியார் இயக்கங்கள் பிற்படுத்தப்பட்டோருக்கானதாக மட்டும் குறுகி விடக்கூடாது என்பதையும் தலித் மக்களின் நியாயமான உரிமைகளை முன்னெடுத்துப் போராடுவதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்திச் சொன்னார். பிற்படுத்தப்பட்டோரின் பார்ப்பனியத்தை – ஜாதிவெறியை எதிர்த்து பெரியார் இயக்கங்கள் போராடுவதில் தயக்கம் காட்டக்கூடாது என்பதையும் அவர் அழுத்தமாக வலியுறுத்தினார்.

"பெரியார் திராவிடர் கழகத்தை' உருவாக்கினோம். தலைநகரில் தலித் அமைப்புகளைத் திரட்டி "சமூக நீதி மீட்பு இயக்கம்' என்ற அமைப்பை உருவாக்கி அய்.அய்.டி. பார்ப்பன நிறுவனத்தின் தலித் புறக்கணிப்புக்கு எதிராகத் தொடர்ந்து போராடினோம். தென்மாவட்டங்களில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக வன்முறைகள் வெடித்தபோது ஆதிக்க ஜாதிகளுக்கு எதிராக உறுதியான நிலைப்பாடு எடுக்கவும், கள ஆய்வுகள், பரப்புரை இயக்கங்கள் நடத்தவும் களமிறங்கினோம். "தலித் முரசி'ல் இதற்கான பதிவுகள் இருக்கின்றன.பெரியார் திராவிடர் கழகம் என்பது அம்பேத்கர் திராவிடர் கழகமாகிவிட்டது என்ற விமர்சனங்கள் வந்தன. சரியான பாதையில் பயணிக்கிறோம் என்று நாங்களும் பாண்டியனும் உற்சாகம் பெற்றோம்.

சென்னை அய்.அய்.டி. நிறுவனத்தின் தலித் விரோத பார்ப்பன மேலாதிக்கத்தை பாண்டியன் "எக்னாமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லி' யில் கட்டுரையாக எழுதினார். அந்த ஏடு அதை தலையங்கமாகவே வெளியிட்டது.

"பார்ப்பனரல்லாதார்' என்ற ஒற்றை அடையாளத்துக்குள் தலித் மக்களுக்கான அடையாளங்கள் மூழ்கடிக்கப்பட்டது பற்றி அவர் "பார்ப்பனர் – பார்ப்பனரல்லாதார்' என்ற நூலில் விரிவாக விவாதிக்கிறார். அதே போன்று "தலித்' அடையாளத்துக்குள் மிகவும் கடைசி நிலையில் அழுத்தப்பட்டுள்ள அருந்ததியர்களின் உரிமைகள் மூழ்கடிக்கப்படுவதையும் அவர் ஏற்கவில்லை. அவரது சமூக நீதிப்பார்வை ஜாதிய ஒடுக்குமுறையை எதிர்த்தே நின்றது.

ஒடுக்கப்பட்ட ஜாதிகள் கடந்த காலங்களில் எதிர்கொண்ட இழிவுகள், அவலம் நிறைந்த வரலாறுகளை மறைப்பதும் பெருமை பேசுவதும் அவருக்கு உடன்பாடானது அல்ல. தேசியப் பாடநூல் நிறுவன வெளியீட்டில் "நாடார்' சமூகத்தை "சாணார்'கள் என்று அழைக்கப்பட்ட சமூக வரலாறு பதிவானபோது அதற்கு நாடார் சமூகத்தினரிடமிருந்து எதிர்ப்புகள் வந்தன. பாண்டியன் பதிலளித்தார்: “நானும் அந்த சமூகத்திலிருந்து வந்தவன் என்ற உரிமையில் கூறுகிறேன். நாடார்களை சாணார்கள் என்று இழிவுபடுத்தியது உண்மைதானே? அதை ஏன் மறைக்க வேண்டும்?''என்று கேட்டார்.

"வைதிகப் பார்ப்பனர்களைவிட தேசியம் பேசும் பார்ப்பனர்கள் ஆபத்தானவர்கள்' என்று புரட்சியாளர் அம்பேத்கர் கூறினார். அரசியல் போர்வைக்குள் தங்களின் கொடூரமான "வைதிக வெறியை' மறைத்துக் கொண்டவர்கள் தேசியப் பார்ப்பனர்கள். பிரிட்டிஷாரின் ஆங்கிலக் கல்வியைப் பயன்படுத்தி அதிகார மயக்கங்களில் பெரும் பதவிகளைப் பிடித்துக் கொண்டு "நவீனத்துவ' முகம் காட்டிக் கொண்டே "ஆச்சாரம் – வைதிகத்தையும்' இறுக்கமாகப் பிடித்துக் கொண்டிருந்ததைப் பாண்டியன் "நவீனத்துக்கு வெளியே – ஓரடி' என்ற கட்டுரையில் படம் பிடித்தார்.

ஆர். கே. நாராயணன் எழுதிய "மால்குடி நாட்கள்' நாவலிலும் சரி, பி.எஸ். சிவசாமி அய்யர் ("சட்டம் படித்த பேராசிரியர்') எழுதிய சுயசரிதையிலும் சரி ஒரே நேரத்தில் நவீனத்துவத்தையும் "பார்ப்பனியப் பெருமிதங்களை'யும் பேசுவதை எடுத்துக்காட்டினார். மிகச்சிறந்த சமூகவியல் ஆய்வாளராகப் புகழப்படும் எம்.என். சீனிவாஸ் தன்னை ஓர் "தென்னிந்தியப் பார்ப்பனராகவே' அடையாளப்படுத்திக் கொண்டதையும் அவர் வெளியிட்ட "இந்திய நவீனத்துவ சிற்பி'களின் பட்டியலில் அம்பேத்கர், பெரியார் தவிர்க்கப்பட்டுள்ளதையும் அக்கட்டுரை சுட்டிக்காட்டியது.

ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் பாண்டியன் வகுப்பு என்றாலே மாணவர்கள் கூட்டம் நிரம்பி வழியும் என்று அவரது மாணவர்கள் கூறுவார்கள். அம்பேத்கர், பெரியாருக்கான பாடங்களை அவர் தயாரித்தார். சென்னை வரும் போது அது குறித்து பலமுறை என்னிடம் பேசினார். அம்பேத்கருக்கு அவரது எழுத்துகளே சிறப்பான ஆங்கிலத்தில் இருக்கின்றன. ஆனால் பெரியாருக்கு நல்ல ஆங்கிலத்தில் நூல்கள் இல்லை என்ற வருத்தத்தைப் பகிர்ந்து கொள்வார். காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களையும் உள்ளடக்கியதே இந்தியா என்பதை தனது பாடத்திட்டங்கள் வாயிலாகத் தொடர்ந்து உணர்த்தி வந்தார். அதனால்தான் அவரது மரணத்துக்கு மரியாதை செலுத்த காஷ்மீர் மாநிலத்திலிருந்து அவரது மாணவர்கள் சென்னைக்கு வந்திருந்தனர்.

"தேசியப் பழமையை மறுத்தல்' என்ற அவரது கட்டுரை தேசியம் குறித்த பெரியாரின் பார்வையை துல்லியமாக அலசுகிறது. கடவுள், மதம், காந்தி, காங்கிரஸ், பார்ப்பனர்கள் அனைத்தையும் பெரியார் எதிர்த்ததற்கு காரணம் அவர்கள் பேசிய தேசியம்தான். சூத்திரர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு சமத்துவமான குடியுரிமைக்கு தடையாக இருப்பதை பெரியார் உணர்ந்ததே என்று பாண்டியன் குறிப்பிடுகிறார். மாறாக, பெரியார் முன்வைத்த தேசியம் பார்ப்பனிய ஜாதி எதிர்ப்பை முன்னிறுத்துவதாகும் என்று அக்கட்டுரை விளக்கியது. "ஜாதி' யை ஜாதி என்றே எழுதலாம் அதை "சாதி' என்று எழுதத் தேவையில்லை "தமிழ்த் தேசியம் சில சமயங்களில் நல்லது அல்ல' என்று ராஜன் குறை எழுதிய "கதாநாயகனின் மரணம்' என்ற நூலுக்கு எழுதிய முன்னுரையில் குறிப்பிட்டார்.

தமிழ்நாட்டில் "ஜாதிய அணி திரட்டல்' நடத்தி தருமபுரியில் தலித் மக்களுக்கு எதிராக நடந்த கலவரங்களை விரிவாகப் பதிவு செய்த அவரது "எக்னாமிக் அண்டு பொலிட்டிக்கல் வீக்லி' கட்டுரை மிகவும் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. "இடைநிலை ஜாதிகள்' கருத்து நிலை அடிப்படையில் தலித் மக்கள் மீது ஆதிக்கம் செலுத்த முடியாதபோது வன்முறையை கையில் எடுக்கிறார்கள். இது அவர்களின் மேலாதிக்கம் சரியத் தொடங்குவதன் அடையாளம் என்று எழுதினார். ஜாதிய அணி திரட்டலுக்கு எதிராக திராவிடர் விடுதலைக் கழகம் ஈரோட்டில் நடத்திய மாநாடு மற்றும் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும் அதே கட்டுரையில் பதிவு செய்தார் பாண்டியன்.

ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு மரியாதை செலுத்த 700 மாணவர்கள் திரண்டதாகக் கூறுகிறார்கள். மோடி ஆட்சிக்கு வந்த பிறகு பல்கலையின் பேராசிரியர் அறைகளில் உள்ள பெயர்ப் பலகைகளில் இந்தியிலும் எழுதப்பட்டன. பேராசிரியர் பாண்டியன் ஒரு மாணவரைப் போல் இந்தியில் எழுதப்பட்ட தனது பெயரை தார் கொண்டு அழித்து தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். அவரது உடலுக்கு மரியாதை செலுத்த வந்த மாணவர்கள் அனைத்துப் பேராசிரியர்களின் இந்திப் பெயர்களையும் அழிப்பதே பாண்டியனுக்கு உரிய மரியாதை என்று முடிவெடுத்து, அப்படியே செய்து முடித்ததாக அவரது மாணவர்கள் பெருமையுடன் கூறினார்கள்.

எம்.எஸ்.எஸ். பாண்டியன் எழுதிய ஆங்கிலக் கட்டுரைகளை நூலாக வெளியிட ஒரு நிறுவனம் அவரிடம் உரிமை பெற்றிருந்தது. நூல் தொகுப்புகளை தனது கணினியில் சேமித்த பாண்டியன் இந்நூலை, கொளத்தூர் மணி மற்றும் விடுதலை ராசேந்திரனுக்கு அர்ப்பணித்துள்ளதாகவும் பதிவு செய்திருந்தார். அவர் மரணத்துக்கு அடுத்த சில நாட்களில் அவரது துணைவியார் ஆனந்தி அலைபேசியில் அழைத்து என்னிடம் இதைத் தெரிவித்தார். ஏற்கனவே என்னிடம் பாண்டியன் அதைத் தெரிவித்ததைக் கூறினேன்.

ஆங்கிலப் புலமைத் தளத்தில் பார்ப்பனிய அறிவு ஜீவிகளை தனது வலிமையான மொழியாலும் கருத்தாலும் எதிர்கொண்ட ஒருவர் எங்களைப் போன்ற களப்பணியாளர்களை இப்படி கவுரவப்படுத்த வேண்டும் என்று ஏன் நினைக்க வேண்டும்! அடித்தள மக்களுக்கான ஆய்வாளர் என்பதை உறுதிப்படுத்துவதாகவே இதைக் கருதுகிறேன். ஆங்கில உலகில் பாண்டியன் விட்டுச் சென்றிருக்கிற வெற்றிடத்தை இனி யார் நிரப்பப் போகிறார்கள்? எவராவது வரமாட்டார்களா? இதயம் ஏங்குகிறது. 

Pin It