இந்தியாவில் மிக நீண்ட காலமாக நடைமுறையில் இருந்துவரும் மனிதக் கழிவுகள் மற்றும் கழிவுநீர்க்கால்வாய்களை மனிதனைக் கொண்டே சுத்தம் செய்ய வைக்கும் மனிதத்தன்மையற்ற கொடுமையான வழக்கத்தை உலகளாவிய மனித உரிமை அமைப்புகளும் பல்வேறு தலித் மக்கள் இயக்கங்களும் மிகக்கடுமையாக எதிர்த்துப் போராடி வருகின்றன.

இச்சூழலில், எழுத்தாளரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளருமான ரவிக்குமார், கழிவுநீர்க் கால்வாயிலும் மலக்குழிக்குள்ளும் இறங்கிச் சுத்தம் செய்யும் தொழிலாளர்கள் குறித்து தனது முகநூலில் தெரிவித்துள்ள கருத்துகள், மனித உரிமைச் செயல்பாட்டாளர்களிடமும் சமூக மாற்றத்திற்காகப் போராடும் அனைவரிடமும் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.

ரவிக்குமார் தனது முக நூலில் (19.11.2014) பின்வருமாறு எழுதியுள்ளார்:

“பாதாளச் சாக்கடைகளில் மனிதர்கள் இறங்கி அதைச் சுத்தம் செய்வது மனித உரிமைகளுக்கு எதிரானது. சட்ட ரீதியாகத் தடை செய்யப்பட்ட அந்த வழக்கம் தமிழ்நாட்டில் இன்னும் நடைமுறையில் உள்ளது.அதைத் தடுக்க அரசு எடுத்த நடவடிக்கை என்ன? என்று விளக்கம் கேட்டு தேசிய மனித உரிமைகள் ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. எந்த ஒரு திட்டமும் இல்லாமல் நகரங்கள் உருவாக்கப்படுவது தொடரும் வரை கழிவுகளை அகற்றும் ஒரு எந்திரத்தின் விலையைவிட மனித உயிர் மலிவானதாக இருக்கும் வரை இது தொடரத்தான் செய்யும்.

“இந்தக் கேவலமான வேலையில் ஈடுபடக்கூடாது என ஏன் அதில் ஈடுபடுபவர்களுக்குத் தெரிவதில்லை? அதில் ஈடுபடும் பெரும்பாலோர் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக அந்த இழிவான வேலையைச் செய்யவில்லை. குடிப்பதற்காகத்தான் செய்கிறார்கள்.குடித்தால்தான் அந்த வேலையைச் செய்யமுடியும், அதைச் செய்தால் குடிக்க முடியும் என்ற விஷச்சூழலிலிருந்து அவர்கள் விடுபடாதவரை எந்தச் சட்டமும் அதை ஒழிக்க முடியாது.”

ரவிக்குமார் தனது முகநூலில் இக்கருத்துகளைத் தெரிவித்த பிறகு இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியதையடுத்து அவரே அக்கருத்தை நீக்கியுள்ளார். அந்தக் கருத்தை வெளியிட்டதற்காக அவர் வருத்தமோ, மன்னிப்போ கோரவில்லை. எதுவும் நடக்கவில்லை என்பது போல அவரது முகநூல் கள்ள மவுனம் காத்து வருகிறது.

கழிவுகளைச் சுத்தம் செய்யும் ‘தொழில்’, அவற்றைச் செய்யும் மக்களின் மீது திணிக்கப்பட்டுள்ள சாதிய சமூக நடைமுறை; அரசு எந்திரத்தின் நேரடியான மற்றும் மறைமுகமான ஒத்துழைப்பின் மூலம் இந்த மக்கள் மீது இழைக்கப்பட்டு வரும் வன்முறை. உலர் கழிப்பிடங்கள், கழிவு நீர்க் கால்வாய்கள், கழிவு நீர் நிலைகள், துர்நாற்றமடிக்கும் குப்பைகள் ஆகிய அனைத்தையும் துப்புரவு செய்யும் தொழிலாளர்கள் குடிப்பதற்கு ஆசைப்பட்டுதான் இந்த வேலையைச் செய்கிறார்கள் என்கிறார் ரவிக்குமார்.

இக்கொடிய கருத்து, மனிதக் கழிவுகள் உள்ளிட்ட அனைத்துக் கழிவுகளையும் குப்பைகளையும் அகற்றும் தொழிலாளர்கள் மீது மட்டுமல்ல; பிணங்களை அகற்றுவோர், பிணப்பரிசோதனையில் மருத்துவமனையில் மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் உதவி செய்பவர்கள், பிணக்கிடங்குகளில் பிணங்களைப் பராமரிப்பவர்கள், பிணம் எரிப்பவர்கள், சாவுக்கு மேளம் அடிப்பவர்கள் ஆகியோரையும் அவதூறு செய்கிற, இழிவுபடுத்துகிற கருத்தாகும்.

அதுமட்டுமல்ல, குடிப்பழக்கத்துக்கு அடிமைப்பட்டவர்கள் இவர்கள் மட்டும்தானா? வேறு தொழில் செய்கிறவர்கள் இந்தப் பழக்கத்துக்கு அடிமையாகவில்லையா? அப்படி இல்லை என்றால், ‘டாஸ்மாக்’கை வைத்தே அரசாங்க எந்திரத்தை ஓட்டிச் செல்வது தமிழகத்தில் சாத்தியம்தானா? ரவிக்குமாரின் தரங்கெட்ட இக்கருத்தை ‘தமிழ்நாடு மாற்றுப்பத்திரிகையாளர், எழுத்தாளர் பேரவை’ (Tamilnadu Alternative Journalist & Writers Forum) மிக வன்மையாகக் கண்டிக்கிறது.

ஒடுக்கப்பட்ட மக்களின் மனித மாண்புக்கு எதிரான கருத்துகளைத் தொடர்ந்து தெரிவித்து வரும் ரவிக்குமார், தமிழகத்தில் முக்கிய தலித் கட்சிகளிலொன்றாக உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளராகவும் இருப்பது எத்தகைய அவப்பேறு என்பதை அந்த கட்சியிலுள்ள லட்சக்கணக்கான உறுப்பினர்களும், அவர்களின் தலைவர் தொல். திருமாவளவன் அவர்களும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இவண் :

தமிழ்நாடு மாற்றுப் பத்திரிகையாளர், எழுத்தாளர் பேரவை,  எஸ்.வி.ராஜதுரை, அய். இளங்கோவன், கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ், தமிழேந்தி, யாக்கன், எழில். இளங்கோவன், புனித பாண்டியன், அழகிய பெரியவன், ஆதவன் தீட்சண்யா, யாழன்ஆதி, ரா. கிருஷ்ணசாமி, ஜெயராணி, கம்பீரன், சு. சத்தியச்சந்திரன், செ. சரவணன், அருண்குமார், சுஜி, சுரேந்தர், கே.எஸ்.முத்து, அய்.ஜா.ம. இன்பக்குமார்

Pin It