ஆர்கானிக் புட் - அதாவது தமிழில் இயற்கை உணவு என்ற வார்த்தை, பொதுவாக இன்றைய நம்முடைய வாழ்வியலில் அதிகம் கேட்கிற, பேசப்படுகிற ஒன்றாக இருக்கிறது. அதுவும் குறிப்பாக உடல் நலம் பற்றி விவாதிக்கும் பொழுது பெரும்பாலானவர்கள் இன்று நாம் சாப்பிடும் உணவில் சரியான சத்துக்கள் இல்லை. ஏனென்றால், நாம் இப்போது உண்கிற உணவுகள் வெறும் இலாபத்தின் அடிப்படையில் செயற்கை உரங்களைப் பயன்படுத்தி விளைவிப்பதால், அந்தக்கால உணவுபோல் அல்லாமல் வெறும் சக்கையாக இருக்கிறது என்ற சொல்லுகிறார்கள்.

அதற்கு அவர்கள் சொல்லும் தீர்வு, அந்தக்காலம் போல் அதாவது 1960 க்கு முன்பு (பசுமைப் புரட்சிக்கு முன்பு) செயற்கை உரங்கள் பயன்படுத்தாமல் இயற்கை உரங்கள் என்று சொல்லப்படுகிற பஞ்சகவ்யம், அமுதக்கரைசல், வளர்ச்சிஊக்கி, பூச்சிவிரட்டி, கழிவுகளை மறு சுழற்சி செய்து உரமாக்குவது போன்ற முறைகளை மட்டுமே பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட உணவுப்பொருள்தான் இயற்கை உணவு என்றும், அவற்றில் தான் நிறைய சத்துக்கள் உள்ளன என்றும் சொல்கிறார்கள்.

இயற்கை, இயற்கை என்று சொல்லுகிறார்களே விவசாயம் என்பது இயற்கையா? அல்லது செயற்கையா? உறுதியாகச் சொல்லுங்கள். விவசாயம் என்பதே செயற்கைதான். ஆம் , உங்களுடைய அறிவால் சிறிது சிந்தித்துப்பாருங்கள். இயற்கை என்றால் இந்தப் பூமிப்பந்தில் மனிதனின் எந்த ஒரு சிறு முயற்சியும், தலையீடும் இல்லாமல் இருக்கிற காடு, மலை, மரம், கடல் , விலங்குகள் போன்ற எண்ணற்றவைதான். விவசாயம் என்பதே மனிதன் தன்னுடைய உணவுப்பற்றாக்குறையின் காரணமாக அனைத்துக் காலங்களிலும் உண்பதற்கு ஏதுவாக செயற்கையாக ஏற்படுத்திக்கொண்ட முறையாகும்.

மேலும் இந்தப் பூமியில் மனிதனைத் தவிர, எந்த ஒரு உயிரினமும் தனது உணவுக்காக செயற்கையான முறையை ஏற்படுத்திக் கொண்டதில்லை. உதாரணமாக மான், யானை போன்ற விலங்குகள் தங்களுக்குத் தேவையான உணவைக் காடுகளில் கிடைக்கும் புல் மற்றும் மரக்கிளைகளின் மூலமாகவும் சிங்கம், புலி போன்றவை மற்ற விலங்குகளின் உடல் பாகங்களையும் உட்கொண்டு உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அப்படியானால் மனிதன் என்ற உயிரினம் மட்டும் தோன்றிய காலத்தில் இருந்து விவசாயம் செய்துதான் உயிர் வாழ்ந்துள்ளதா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும் .

எல்லாமே செயற்கை உணவுகள் தான்

இப்போது மனிதன் என்று சொல்லப்படும் நாம் குரங்கிலிருந்து சுமார் 2.8 மில்லியன் (28 லட்சம் ) ஆண்டுகளுக்கு முன்பு ஹோமோசெபியன்ஸ் (Homosepians) என்ற மனித உயினமாகப் பரிணாம வளர்ச்சி அடைந்தோம். ஆனால் அப்படி நாம் பரிணாம வளர்ச்சி அடைந்த உடனேயே விவசாயம் என்ற முறையை உணவுக்காகக் கடைபிடித்தோமா என்றால் இல்லை. விவசாயம் என்ற செயற்கை முறையே வெறும் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான் கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது மனித இனம் பரிணாம வளர்ச்சி அடைந்து சுமார் 2.7 மில்லியன் (27 லட்சத்து 90 ஆயிரம் ) ஆண்டுகளுக்குப் பிறகுதான். அப்படியெனில் மனிதனின் இயற்கை உணவு என்பது நேரடியாக விலங்குகளில் கிடைக்கும் மாமிசம், விவசாயம் செய்யாமல் கிடைக்கும் ஒரு சில பழங்கள் மற்றும் நட்ஸ் வகைகள் மட்டுமே. எனவே இன்று நாம் தவறாக இயற்கை உணவு என்று அழைக்கிற எதுவுமே - நவதானியங்கள் உள்பட ) இயற்கை கிடையாது, ஆம் எல்லமே செயற்கைதான்.

இப்போது உங்களுக்கு ஒரு கேள்வி வரும் ...ஏனுங்க இப்ப நம்மளால விவசாயம் செய்யாமல் நீங்க சொன்ன ஆதிமனிதனின் இயற்கை உணவை மட்டும் எடுத்து உயிர் வாழமுடியுமா? முடியவே முடியாது. ஏனென்றால், மனித இனம் மற்ற உயிரினங்களைக் காட்டிலும் இந்தப் பூமியில் மிக அதிக எண்ணிக்கையில் உள்ளது. காரணம் ஒன்று - மனிதன் இயற்கையின் உணவுச்சங்கலியில் இருந்து தன்னுடைய பகுத்தறிவைப் பயன்படுத்தி மிக அதிமான எண்ணிக்கையில் பெருகினான்.

அதாவது இயற்கை உணவுச்சங்கிலி என்பது புல், இலை -à மான், ஆடு -à சிங்கம், புலி, இயற்கையில் உருவான புல், இலையை மான், ஆடு போன்ற தாவர உண்ணிகள் உண்டும், இவற்றைச் சிங்கம் புலி போன்ற மாமிச உண்ணிகளும் உண்பதுதான். இதில் எந்த ஒன்றுமே ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் உருவாகாது. ஏனென்றால் ஒவ்வொன்றும் அதற்கு மேல் வளர அதற்கு அடுத்த உயிரினம் விடாது.

பட்டினிச்சாவுகளைத் தடுத்த நவீன விவசாயம்

ஆனால் மனிதன் தன்னைக் கொல்லும் விலங்குகளில் இருந்து, தான் கண்டுபிடித்த ஆயுதங்கள் மூலமாகத் தன்னை அழியாமல் தற்காத்துக்கொண்டான், காரணம் இரண்டு - 20ஆம் நூற்றாண்டில் வளர்ந்த நவீன மருத்துவம். ஒரு உதாரணமாக நமது இந்தியாவின் மக்கள் தொகையைப் பார்த்தீர்கள் என்றால் 1900 ல் 27 கோடி 13 இலட்சம் ஆகவும், அதுவே முப்பது ஆண்டுகள் கழித்து 1930 ல் 27 கோடி 71 இலட்சமாகவும் இருந்தது - முப்பது ஆண்டுகளில் கூடிய மக்கள்தொகை வெறும் 58 லட்சம் மட்டுமே. ஆனால் அதுவே 1960 ல் 43 கோடி 14 இலட்சம் என்ற அளவில் இருமடங்காக அதிகரித்தது.

இந்த எண்ணிக்கை, மனித வரலாற்றை ஆராய்ந்தோமானால், அவனுடைய இலட்சக்கணக்கான ஆண்டுகளின் பரிணாம வளர்ச்சியில், இப்படி வெறும் முப்பது ஆண்டுகளில் இருமடங்காக உயர்ந்ததேயில்லை. அதற்குக் காரணம் மருத்துவத் துறையில் ஏற்பட்ட மாபெரும் புரட்சிதான். இதனுடைய பக்க விளைவாக 1950 - 60 களில் நம் நாட்டு மக்கள் மிகப் பெரிய உணவுப்பஞ்சத்துக்கு ஆளானார்கள். சீனாவில் கூட சுமார் 20 கோடிக்கு மேட்பட்ட மக்கள் உணவுப் பற்றாக்குறையில் இறந்தார்கள். அந்த அளவுக்கு நம் நாட்டில் இல்லையென்றாலும் உணவுப்பஞ்சம் என்பது கடுமையாக இருந்தது. அதன் விளைவாகவே அரசாங்கம் ஒரு விவசாயப் புரட்சியை நடைமுறைப்படுத்த ஆயத்தமானது.

ஏனென்றால், 1930 ல் இருந்த அதே விவசாய நில அளவில், அன்று விளைவித்த அளவைவிட இரு மடங்கு உணவை விளைவித்தால்தான் 1960 ல் உள்ள மக்கள் தொகைக்கேற்ப உணவளிக்க முடியும். .ஏனென்றால், விவசாய நில அளவை அதிக அளவில் உயர்த்த முடியாது என்பதுதான் . அப்படியானால் இந்த இயற்கை ஆர்வலர்கள் சொல்லுகிற முறையில் நாம் விவசாயம் செய்தோமானால் இன்று வெறும் 30 கோடி மக்களுக்கு மட்டும் தான் உணவளிக்க முடியும். மீதி உள்ள 90 கோடி மக்கள் உணவுக்கு வழியில்லாமல் சாவதைத் தவிர வேற வழியே இல்லை.

நிலைமை இப்படியிருக்கையில் இதுபற்றிச் சரியான ஆய்வு செய்யாமல், வெறும் இயற்கை விவசாயம், இயற்கை முறை, இயற்கை உணவு என்று சொல்லிக்கொள்வது எப்படி பகுத்தறிவு முறையாகும்? இன்னும் சொல்லப்போனால் இந்த இயற்கை உணவைப் பற்றி பேசுபவர்களும் அதைத் தங்களது வீடுகளில் எந்த ஒரு பெரிய ஆய்வும் செய்யமால் பின்பற்றுபவர்களில் சிலர் பெரியாரிய, மார்க்சிய, முற்போக்குக் கருத்தியல் கொண்டவர்களாக இருப்பது மிகவும் கவலைக்குரியதாக இருக்கிறது.

இயற்கையும் பார்ப்பனர்களும்

இந்தக் கருத்தியலை உருவாக்கி நடத்துபவர்கள் பெரும்பாலும் பார்பனர்களாக உள்ளார்கள். இன்றும் இந்த ஆர்கானிக் உணவைப் பல நாடுகளுக்கு எக்ஸ்போர்ட் செய்வபர்கள் மற்றும் நமது நாட்டில் பெரு நகரங்களில் அதை மார்கெட் செய்யும் நிறுவனங்களையும் பெரும்பாலும் பார்ப்பனர்களே வைத்துள்ளார்கள். நீங்கள் நினைக்கலாம். ஏன் பார்ப்பனர்கள் இந்தத் தொழிலில் ஈடுபடுவதாலேயே எப்படி நாம் அதில் தவறு இருக்கிறது என்று சொல்ல முடியும்? ஆம் அப்படி நாம் ஒரு வறட்டு வாதத்தில் சொல்லமுடியாதுதான்.

ஆனால், இங்குதான் நாம் கவனமாக ஒன்றைச் சிந்திக்க வேண்டும். வரலாற்றுப் பூர்வமாகச் சற்று பெரியாரின் கண்ணாடி கொண்டு சிந்தித்துப் பார்த்தால், எந்த ஒன்றையுமே பார்ப்பனர்கள் வெறும் பொருள் ஆதாயத்திற்க்காக மட்டும் செய்ய மாட்டார்கள். அதில் அவர்களுடைய ஆதிக்கம் மற்றும் சமுதாயத்தின் பழமைவாதச் சிந்தனை ஆகியவை கட்டாயம் இருக்கும். அதுவும் பழமைவாதச் சிந்தனைகளை, மாறிவரும் காலத்திக்கேற்பப் புதுமையான முறையில் புகுத்துவதில் அவர்கள் வல்லவர்கள். அதனாலேயே அவர்கள் இன்னும் திராவிடர்களை மிக எளிதாகத் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்கள்.

உதாரணமாக, பெண்கள் கால் மேல் கால் போட்டு உட்காரக்கூடாது என்ற பழைய ஆணாதிக்கக் கருத்தியலை இன்று அவர்கள் அப்படி நேரடியாகக் கூறாமல், “பெண்கள் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்தால் கர்ப்பப்பை பாதிக்கும்” என்று அவர்களுக்கு வேண்டிய சில மருத்துவர்களை வைத்துச் சொல்லிவிடுவார்கள். சொல்லி வருகிறார்கள். இதைக் கேட்டவுடன் நமது பெண்களில் பெரும் பாலானவர்கள் அதை நம்பிக்கொள்கிறார்கள்.

இப்படித்தான் நம்மை அவர்கள் ஈராயிரம் ஆண்டுகாலமாக அடிமைப்படுத்தி வைத்துள்ளார்கள் இதை பெரியார் அவர்கள் சொல்லும் போது சொல்லுவார், “நமது வாழ்வில் நடக்கும் அனைத்தும் தீர்மானிப்பவர்கள் பார்ப்பனர்களே ஆம் நமது பிறப்பு முதல் , பெயர் சூட்டுவது , எந்த தொழிலை யார் செய்வது , யாரை எப்படி திருமணம் செய்வது , இறந்தவுடன் நம்மை சொர்க்கமோ அல்லது நரகத்துக்கு அனுப்புவது வரைக்கும் அவர்கள் முடிவு செய்யவதுதான்.”

அதனாலேயே பெரியார் அவர்கள் நாம் கடைபிடிக்கிற பழக்கம் அனைத்தையும் கேள்விக்குப்படுத்தினார். மேலும் அவரே முன்வந்து நாம் இதுவரையில் கடைபிடித்து வந்த பல பழக்க வழக்கங்களுக்கு மாறாக அறிவியல் முறையில் ஆராய்ந்து நடைமுறைக்கு ஏற்றவாறு சுயமரியாதை வாழ்வியல் முறை என்ற முறையை துவக்கிவைத்தார்.

ஆகையால், இந்த மண்ணில் நடக்கும் எந்த ஒன்றையும் நாம் அறிவியல் முறையில் விவாதித்து செயல்படாமல் போனால் பார்ப்பனர்கள் மிக எளிதாக நம்மை அடிமைப்படுத்திவிடுவார்கள். நான் தனிப்பட்ட முறையில் சாதாரண பெரிய முற்போக்கு சிந்தனை இல்லாத மக்களை விட , பெரியாரியல் பேசுகிற மற்றும் அதன் பல கூறுகளை தங்களின் வாழ்வியலில் ஏற்றுக்கொள்கிற சிலர், தங்கள் வாழ்வில் இந்த ஆர்கானிக் உணவை மாற்று மற்றும் முற்போக்கு உணவாக நினைத்து அதைப் பயன்படுத்தி வருகிறார்கள். அப்படியிருக்கும் ஒரு சிலரிடம் அவர்களின் கருத்தைக் கேட்டறிந்து, அதை அறிவியல் முறைப்படி ஆய்வுக்கு உட்படுத்தும் போது நமக்கு மேலும் பல உண்மைகள் வரும் என்று எண்ணி இந்த கட்டுரையை ஒரு நல்ல ஆரோக்கியமான அறிவியல் விவாதமாக எடுத்துச்செல்ல முனைகிறேன்.

இதன் முதல் பகுதியை என் இனிய நண்பரும், தந்தை பெரியாரைத் தனது வாழ்வியல் வழிகாட்டியாகக் கொண்டவரும் மென்பொருள் ஆய்வாளரான தோழர் மணிப்பிரகாசம் அவர்களிடம் நீங்கள் ஏன் இந்த ஆர்கானிக் உணவு பெருள்களை பயன்படுத்துகிறீர்கள் என்ற பொழுது அவர்கூறியது

இயற்கைக்கு முரணான முன்னேற்றங்கள் அழிவுக்கே! - மணிப்பிரகாசம்

“மனிதன் உயிர் வாழ்வதற்கு இன்றியமையாதவைகளில் ஒன்று உணவு. அந்த உணவு சுவையானதாக மட்டும் இல்லாமல் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும் என்பதே நம் எல்லோரது விருப்பம். இன்றைய நவீன உலகத்தில் மிகச் சிறந்த தொழில்நுட்பங்கள் நம் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கிறது. வசதியான வாழ்வைத் தேடி ஓடிக்கொண்டிருக்கிறோம். ஆனால் நம் அடிப்படைத் தேவையான உணவைப்பற்றி பெரிய புரிதல்கள் இல்லாமல் இருக்கிறோம். இன்றைய அதிவேக யுகத்தில் துரித உணவுகள் நம் அன்றாட உணவு பட்டியலில் இடம்பிடித்துவிட்டன. உணவே மருந்து, மருந்தே உணவு என்ற அடிப்படையில் வாழ்ந்த வந்த சமூகம் இன்று சத்தற்ற, கெடுதல் மிகுந்த உணவுகளுக்கு அடிமையாகிவிட்டது. அத்தகைய உணவுகளில் உள்ள ஆபத்துகளைக் கண்டறிய வேண்டும் என்ற எண்ணம் துளியளவும் இல்லாமல் இருக்கிறோம்.

இத்தகைய சூழலில், நாம் எத்தகைய உணவுகளை உண்ணுகிறோம், அதிலுள்ள ஆபத்துக்கள் என்னென்ன என்பதை நாம் ஆராய வேண்டியது அவசியம். மிகப்பெரிய விவசாயப் பாரம்பரியத்தைக் கொண்டது நம் சமூகம். நமக்குத் தேவையான உணவை நாமே விளைவித்துக் கொண்டோம். அத்தகைய உணவுகளை உற்பத்தி செய்ய இயற்கையோடு கரம் கோர்த்துக் கொண்டோம். இயற்கையோடு இணைந்து விளைவித்த உணவுகள் நம்மை நோய்நொடியின்றி வாழவைத்தன. இன்று நம்மை ஆட்டிப்படைக்கும் சர்க்கரை, கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் அன்று இல்லை. இன்று இந்த நோய்களை நாம் சுமந்து கொண்டிருக்கிறோ மென்றால் அதற்க்கு முக்கியக் காரணம் நாம் உண்ணும் உணவே.

 அவசரம்...அவசரம்...அவசரம்... இன்று நமக்கு எல்லாவற்றிலும் அவசரம். மிகக் குறுகிய காலத்தில், குறைந்த உழைப்பில், குறுக்கு வழியில் எப்படியாவது அதிக ப்பணம் சம்பாதித்து விட வேண்டும். இந்த எண்ணமே இன்று நம்மை இத்தகைய ஆபத்தான சூழலுக்குள் இழுத்து வந்திருக்கிறது. அன்று விவசாயம் செய்த நம் முன்னோர்கள் நம் மண்ணைப் பற்றி நன்கு புரிந்து வைத்திருந்தனர். அதனாலேயே அவர்களால் இந்த மண்ணுக்குத் தேவையான உரங்களைத் தங்களைச் சுற்றியுள்ள மாட்டுச்சாணம், மக்கிய காய்கறி மற்றும் பழங்கள், மண்புழுக்கள் போன்றவற்றைக் கொண்டு தாங்களாகவே தயாரித்துக்கொண்டார்கள். இத்தகைய உரங்களுக்காக பெரிய அளவில் பொருட்ச்செலவு செய்யவில்லை. அத்தகைய உரங்கள் தான் நம் மண்ணை எந்த விதக் கேடுகளுமின்றி வளப்படுத்தின. நல்ல உற்பத்தியையும் கொடுத்துவந்தன. அந்த மண்ணில் விளைந்த உணவுகள் உடலுக்கு உகந்ததாகவும் அதிக எதிர்ப்பு சக்திகளைக் கொடுக்கும் மருந்தாகவும் இருந்தது.

ஆனால் இன்று நாம் உண்ணும் உணவு நஞ்சாகிவிட்டது. அதற்குக் காரணம் இன்று நம் விவசாயத்திற்குள் ஊடுருவியுள்ள உயிர்கொல்லி உரங்களும், ஆட்கொல்லி ரசாயனங்களும்தான். “குறைந்த செலவில் அதிக விளைச்சளை கொடுக்கும்” என்ற மாய வார்த்தைகளை நம்பி இரசாயன உரங்களையும், பூச்சிக்கொல்லிகளையும் கொட்டிக்கொட்டி மண்ணை மலடாக்கிவிட்டோம். அந்த மண்ணில் இருந்து விளைந்து வரும் உணவுகளும் அதே நச்சுத்தன்மையோடே இருக்கின்றன. அந்த உணவை உண்ணும் நமக்கும் எல்லாவிதமான நோய்களும் எளிதில் தொற்றிக் கொள்கின்றன. மருந்தாக இருந்த உணவு இன்று விஷமாக மாறிவிட்டது. இந்த விஷம் நம்மை மெல்ல மெல்லச் சாகடிக்கிறது. சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் என்ற வடிவில் நம்மை நிரந்தர நோயாளிகளாக மாற்றியுள்ளது. இத்தகைய நோய் உலகத்திலிருந்து நாம் வெளிவர வேண்டுமென்றால் நம் உணவின் மேல் அக்கறை செலுத்த வேண்டும். கெடுதல் தரும் இரசாயன உரங்களையும் , பூச்சிக்கொல்லி மருந்துகளையும் உடனடியாகத் தடை செய்ய வேண்டும்.. இயற்கைத் தன்மையோடு கூடிய இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இயற்கையோடு இணைந்த வாழ்வே நம்மை வளப்படுத்தும். இயற்கைக்கு முரணான எந்த முன்னேற்றமும் நம்மை அழிவுக்குழியில் தள்ளிவிடும்”

இங்கே திரு மணிபிரகாசம் அவர்களின் கருத்தை இரண்டு பிரிவாக வகைப்படுத்தி அதை விவாதிக்கலாம் . ஒன்று - இன்றைய உணவில் சரியான சத்து இல்லை என்கிறார்.

விரைவில் பருவமடைவது ஆரோக்கியத்தின் அடையாளம்

அதாவது 1960 க்கு முன்பு (பசுமை புரட்சிக்கு முன்பு) உண்ட உணவில் மிக அதிகமான சத்து இருந்ததாகவும் அதனால் அப்போது வாழ்ந்த மக்கள் மிகச்சத்து உள்ளவர்களாக இருந்ததாகவும் இப்போதுள்ள நாம் அப்படி இல்லை என்றார்.

இந்தச் சத்து என்பதை மருத்துவப் பிரிவின் படிப் பார்த்தால் Protein, Vitamins and Minerals புரதங்கள், வைட்டமின்கள், தாதுப்பொருள்கள், கால்சியம் , இரும்பு போன்றவை. இந்தச் சத்துக்கள் எல்லாம் அந்தக் காலத்தில் 1960 க்கு முன்பு வாழ்ந்த மக்களுக்கு நம்மைவிட அதிகம் இருந்துள்ளதா என்று பார்த்தால் நிச்சயம் இல்லை. ஏனென்றால், நாம் பயன்படுத்தும் அளவுக்கு பருப்பு, இறைச்சி, மீன் மற்றும் முட்டை போன்றவற்றை நம் முன்னோர்கள் பயன்படுத்தவில்லை. அதற்குக் காரணம் அந்தக் காலத்தில் அந்த உணவு வகைகள் அந்த அளவிற்கு உற்பத்தி செய்யப்படவில்லை.

உதாரணமாக, என் அப்பா சொல்லுவார் வாரம் ஒரு முட்டை என்பதே பெரிது என்பார். அதே போல் தான் இறைச்சி மற்றும் பருப்பு வகைகளும். ஆனால் இன்று நம்மில் பெரும்பாலோனோர் தினமும் ஒரு முட்டையாவது ஆம்லட் போன்ற வடிவில் எடுத்துக்கொள்கிறோம். அதேபோல்தான் பெரும்பாலானவர்கள் இறைச்சி உணவையும் வாரம் இரண்டு முறையாவது எடுத்துக்கொள்கிறார்கள். அதேபோல் பருப்பு வகையும், கிட்டத்தட்ட வாரத்தின் பெரும்பாலான நாட்களில் எடுத்துக் கொள்கிறோம் ஆனால் நம் முன்னோர்கள் பெரும்பாலான நாட்களில் வெறும் கம்பு, சோளம் போன்ற உணவுகளை மட்டுமே எடுத்து வந்தார்கள். ஆகையால் இன்று நாம் இருப்பதைவிட சத்து குறைந்தவர்களாகவே இருந்தார்கள்.

மேலும் பல மருத்துவ குறிப்புகளைப் பார்த்தோமானால், சராசரி எடையை விடக் குறைந்த எடை உள்ளவர்களாகவே 60 சதத்திற்கும் மேற்பட்ட மக்கள் அன்று இருந்தார்கள். இன்று நிலைமை அப்படி இல்லை என்பது நாம் அனைவருக்கும் தெரியும். இன்று நாம் அவர்களை விட அதிகச் சத்தாக இருக்கிறோம் என்பதை விளக்க ஒரு சிறு உதாரணத்தை பார்ப்போம் .

உங்கள் வீடுகளில் உள்ள 60 வயது கடந்த நம் அம்மா, பெரியம்மா, பாட்டி போன்றோரிடம் கேட்டுப்பாருங்கள். நீங்கள் எந்த வயதில் பருவமடைந்தீர்கள் என்றால், அவர்களில் பெரும்பாலானோர் 13 வயது முதல் 15 வயது வரை என்று சொல்லுவார்கள் (இது போல ஒரு தேவையில்லாத சடங்கு ஆண்களுக்கு இல்லாததால் நாம் அவர்களிடம் இருந்து அவர்களின் பருவ வயதை கணக்கிடுவது கடினம் ) ஆனால் நாம் இப்போது பார்க்கிறோம். பெரும்பாலான பெண் குழந்தைகள் 8 வயது முதல் 12 வயதுக்குள் பருவமடைந்து விடுகிறார்கள்.

இப்படிப் பருவம் அடையும் வயது குறைவது மிகத் தவறு என்று நம்மில் பலபேர் பேசுவதைக் கேட்டிருக்கிறோம். ஆனால் இது எதோ இன்றைய வாழ்வியல் தவறா என்றால் அப்படி இல்லை என்கிறர்கள் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய மருத்துவர்கள். இங்கிலாந்தைச் சேர்ந்த பில்லிப் ஹான்சன் (Fellow of the British Association for Counseling and Psychotherapy) "Early puberty is about great nutrition, in the classic sense of getting access to good protein, good vitamins and minerals" அதாவது விரைவில் பருவமடைவது என்பது சிறந்த ஊட்டச்சத்து குறித்தது. நல்ல அளவிலான புரதம், வைட்டமிகள், தாதுக்கள் யார் ஒருவருக்கு இருக்கிறதோ அவர் மேல்சொன்ன மாதிரி 8 வயது முதல் பருவமடைவார்கள். இது தான் இன்று நடைமுறையில் இருக்கிறது. ஆகையால் இன்று வளர்கிற குழந்தைகள் நம் முன்னோர்களைவிட அதிகசத்து உள்ளவர்களாகவே இருக்கிறார்கள்.

இரண்டு : அவர் சொன்னது நாம் இன்றைக்கு செயற்கை உரங்களையும் , நவீனப் பூச்சிக் கொல்லி மருந்துகளையும் பயன்படுத்துவதாலேயே நாம் இப்போது சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், அதிக கொழுப்பு மற்றும் உடல் பருமன் போன்ற பிரச்சனைகளை அதிகம் சந்திக்கிரோம் என்றும் நமது முன்னோர்கள் இது போன்ற பிரச்சனைகளை அதிகம் சந்திக்கவில்லை என்கிறார்.

நோயாளிகளாக அறிவித்த பன்னாட்டு நிறுவனங்கள்

ஆம். அவர் சொல்வது சரிதான். நமது முன்னோர்களிடம் இது போன்ற சிக்கல் அதிகம் இல்லாமல் இருந்தார்கள். ஆனால் அவர் சொல்லுவது போல் நாம் இன்று இது போன்ற நோய்களால் அதிகமாகப் பாதிக்கப்படுவதற்கு இந்த நவீன உணவுதான் காரணம் என்றால், இதே நோய்களுக்கு சித்த மருத்துவக் காலத்திலேயே தீர்வு சொல்லியது எதற்காக? அதாவது, இயற்கை உணவுகள், இயற்கை விவசாயம் என்பவை மட்டுமே இருந்த காலத்தில், உருவான சித்த மருத்துவத்திலும், ஆயுர்வேதத்திலும் நீரிழிவு நோய்க்கும், இரத்த அழுத்தம் போன்றவற்றிற்கும் மருத்துவம் எழுதி வைத்தது ஏன்? இயற்கை உணவுகள் மட்டுமே இருந்த காலத்திலேயே இந்த நோய்கள் இருந்துள்ளன. எனவே, இவற்றுக்கு முழுக் காரணிகளாக நவீன உணவு முறையைக் கூறுவது அறிவியல் அடிப்படை அற்ற வாதம்.

மேலும், ஒரு ஆரோக்கியமான மனிதனின் உடலில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு எவ்வளவு - என்பதை நிர்ணயிக்கும் அறிவியலைப் பன்னாட்டு வணிக நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளன. 1960 களுக்குப் பிறகு இந்த அளவுகளை அந்நிறுவனங்கள் குறைத்து நிர்ணயித்தன. அதன் மூலமாகப் பல கோடி மக்களை நீரிழிவுக்காரர்களாக உணர வைத்தன.

சில பன்னாட்டு வணிக நிறுவனங்கள், பொத்தாம்பொதுவாக, ‘கொழுப்பு ஆபத்தானது’ என்ற கருத்தையும் மருத்துவக் கருத்தாகத் திணித்தன. இந்தப் பின்னணிகளையெல்லாம் வைத்துத்தான் நீரிழிவு, கொலஸ்ட்ரால்காரர்களின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளதா? பண்டைய காலத்திலே இருந்த அதே சராசரி அளவில் இருக்கிறதா என்பவைகளை நிர்ணயிக்க முடியும்.

உடலுழைப்பு இன்மை

பிறகு ஏன் என்றால் நம்முடைய வாழ்க்கைமுறை பெரிய அளவில் மாறியிருக்கிறது? குறிப்பாக உடல் உழைப்பு மிக அளவில் குறைந்துள்ளது. இயற்கையின் நியதிப்படி ஒவ்வொரு உயிரினமும் குறிப்பிட்ட அளவு தூரத்தை கடக்கும். யானை குறைத்தது 30 கி.மீ முதல் 60 கி.மீ வரை ஒவ்வொருநாளும் கடக்கிறது அப்படி நடக்கவில்லையென்றால் என்னதான் இயற்கையில் உள்ள இலை மற்றும் கிளைகளை மட்டுமே உண்டாலும் யானைக்கும் பல உடல்நலக் வரும் என்கிறது மருத்துவ உலகம்.

அப்படியிருக்கையில், இதில் மனிதன் மட்டும் விதிவிலக்கல்ல. ஆம். நாம் ஒவ்வருவரும் குறைத்து 5 கி.மீ முதல் 7 கி.மீ வரை கட்டாயம் நடக்கவேண்டும் என்று பல மருத்துவ அறிஞர்கள் கூறியுள்ளார்கள். ஆனால், இன்று நம்முடைய வாழ்வில் இந்த அளவிற்கு நடக்கிறோமா? இல்லை. மோட்டார் பொருத்திய இருசக்கர வாகனம் பிரபலமான பிறகு கடந்த 20 ஆண்டுகளில் அனைத்துத் தரப்பு மக்களுமே தங்களுடைய அன்றாடப் பணிகளுக்காக நடப்பது என்பது மிகக்குறைந்துள்ளது.

ஆனால், இதுபோன்ற நவீன வாகனவசதிகள் நம் முன்னோர்களுக்கு இல்லை. எனவே அவர்கள் இயல்பாகவே தங்களுடைய அன்றாட வாழ்வியலில் மேற்சொன்ன அளவைவிட அதிகமாகவே நடந்தார்கள். ஆகையால்தான் அவர்களுக்குச் சர்க்கரை , கொழுப்பு, உடல் பருமன் போன்ற சிக்கல்கள் அதிகமில்லை. இந்தக் காரணத்திற்க்காகத்தான் பல மேலைநாடுகளில் 10000 Steps a day (அதாவது பத்தாயிரம் எட்டுக்கள் ஒருநாளைக்கு ) என்று மிகப்பிரபலமாக உள்ளது . மேலும் நீங்கள் எந்தவொரு மேலை நாட்டுக்குப் போனாலும், காலையில் பெரும்பாலான மக்கள் நடை அல்லது ஓடும் பயிற்சி மேற்கொள்வதைப் பார்க்கலாம் (இளைஞர்கள் உள்பட ).

ஆனால், நமது நாட்டில் அப்படி நடை அல்லது ஓடும் பயற்சி மேற்கொள்வப்பார்கள் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் இருக்கிறார்கள். அதுவும் அவர்களில் பெரும்பாலானோர் ஏதாவது நோய்க்கு ஆட்பட்டிருப்பார்கள். பிறகு மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகு வேண்டா வெறுப்பாகச் செய்வார்கள். ஆகையால் இந்த உடல் உழைப்புதான் மிகப்பெரிய காரணமேயொழிய இன்று நாம் சாப்பிடும் உணவு மிகப்பெரிய காரணம் இல்லை.

நவீன விவசாய முறையில் வளரும் சமுதாயம்

நம்மை விட அதிநவீன முறையில் விவசாயம் செய்யும் மேலைநாடுகளில் ஒன்றான ஆஸ்திரேலியாவில் வேலை ஓய்வு வயதை 65 ல் இருந்து 70 வது வயது வரை உயர்த்தியுள்ளார்கள். அதாவது, உங்களுக்கு 70 வயதுக்குப் பிறகுதான் ஓய்வூதியம் கிடைக்கும். அதற்கு அந்த நாட்டு அறிஞர்கள் சொல்லும் காரணம், நாளுக்குநாள் மனிதர்களுடைய உடல் ஆரோக்கியம் வளர்ந்து வருவதால் அவர்களால் 70 வது வயதுவரைத் தங்களுக்கான பொருளாதாரத்துக்கு வேலை செய்து சம்பாதிக்கமுடியும் என்று சொல்லி - அதைப் பல ஆய்வுகளுக்குப் பிறகு அந்த நாட்டு அரசாங்கமும் 2014 - 15 பட்ஜெட்டில் இந்த 70 வயது ஒய்வுபெரும் வயதைஅறிவித்தது.

இன்னும் ஒருபடிமேலேபோனால் உலகில் அதிக நாள் உயிர் வாழக்கூடியவர்கள் உள்ள ஜப்பான் நாடுதான் மிக நவீன முறையில் உணவு உற்பத்தி செய்கிறது. இப்படிப் பல ஆதரங்களைப் பார்க்கலாம். ஆனால், நம் நாட்டில் உள்ள முற்போக்காளர்கள் என்று சொல்லுபவர்கள் கூட எந்த ஒரு அறிவியல் ஆய்வும், மற்ற நாடு மக்களுக்கடைய உணவுப்பழக்கவழக்கங்கள் மற்றும் உணவு உற்பத்திசெய்யும் முறைகளையும் ஒப்பிட்டுப் பகுத்தறியாமல் பேசுவது என்பது, என்னைப் போன்ற பெரியாரின் அறிவியல் முறையில் சிந்திக்கும் நபர்களுக்குக் கவலைக்குரியதாக இருக்கிறது. .ஆகையால் நான் உங்களிடம் கேட்பது, யார் என்ன சொன்னலும் அதை அறிவியல் முறைப்படி ஆராயாமல் ஏற்றுக்கொள்ளாதீர்கள் என்பதுதான்.

குறிப்பு: நான் எனது அறிவியல் அறிவுக்கு எட்டியபடி ஆர்கானிக் பற்றிய சில கருத்துக்களை இங்கு உங்கள் முன்வைத்துள்ளேன். இதில் சற்று மாற்றுக்கருத்துள்ள அல்லது சந்தேகம் உள்ள நண்பர்கள் எனது தனிப்பட்ட அல்லது காட்டாறு மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியாக மிக நீண்ட ஆரோக்கியத்துடன் இருக்கும் பல நாட்டு மக்கள், எந்த மாதிரியான உணவு பழக்கத்தை மேற்கொள்கிறார்கள் என்பதைப்பற்றியும் - அதில் வாய்ப்புள்ளவற்றை நாம் கடைபிடிக்க முடியுமா என்றும், அந்த முறை எவ்வாறு பொதுச் சமையல் அறை (living kitchen i.e. kitchen placed in part of the hall and it’s easy accessible for all members of a family, practically it encourages gents to prepare food) என்று சொல்லப்படுகிற முறைக்கு ஏற்றதாக இருக்குமா என்று விவாதிக்கவுள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் .

Pin It