களமிறங்கினர் கழகத் தோழர்கள்:7 மணி நேரப் போராட்டம் வெற்றி!

ஈரோடு மாவட்டம் ஆர்.என் புதூர் அருகில் உள்ளது சி.எம் நகர். 27.4.16 அன்று அவ்வூரைச் சார்ந்த மாரியம் மாள் (எ) சாந்தி என்பவர் மரண மடைந்தார். ஆர்.என் புதூர், சி.எம் நகர் பகுதி வாழ் மக்கள் அங்குள்ள காவிரிக் கரையோரம் உள்ள மங்கலத்துறை என்ற பகுதியை தங்கள் சுடுகாடாக அனைத்து தரப்பினரும் பயன்படுத்தி வந்துள்ளனர். சில நாட்களுக்கு முன் சுடுகாட்டில் அரசு சார்பில் சுற்றுச் சுவர் எழுப்பப்பட்டு, தகனமேடை அமைக்கப்பட்ட பிறகு, ஆதிக்க சமூகத்தினர் அதற்கு பூட்டு போட்டு தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முனைந்துள்ளனர்.

இந்நிலையில் இறந்து போன மாரியம்மாள் என்பவரின் உடலை அடக்கம் செய்வதற்காக சி.எம். நகர் பகுதி மக்கள் உடலை எடுத்துச் சென்றனர். ஆனால், ஒரு ‘சக்கிலிச்சி’ யின் பிணத்தை புதைக்க அனுமதிக்க மாட்டோம் என்று கூறி, சுடுகாட்டின் பூட்டைப் பூட்டி சாவியை எடுத்து வைத்துக் கொண்டு தர மறுத்த ஆர்.என் புதூரைச் சார்ந்த ஆதிக்க சமூகத்தினர் (தேவர், வன்னியர், நாயக்கர் மற்றும் பள்ளர் சமூகத்தினர் உள்ளிட்டோர்) சாவியைத் தர மறுத்து, உடலை அடக்கம் செய்ய அனுமதிக்க மாட்டோம் என்று கூறி சுடுகாட்டில் கூடி நின்றனர்.

இந்த நிலையில், சி.எம் நகர் பகுதி மக்கள், ஈரோடு - பவானி முக்கிய சாலையில் உடலை வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஈரோடு வட்டாட்சியர், பவானி மாவட்ட காவல்துறை கண்காணிப் பாளர் மற்றும் ஈரோடு நகர காவல் துறை கண்காணிப்பாளர் சிபிச் சக்கர வர்த்தி, பொதுமக்களும், திராவிடர் விடுதலைக் கழக வெளியீட்டுச் செயலாளர் இராம இளங்கோவன் மற்றும் அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி ஆகியோருடனும் பேச்சு வார்த்தை நடத்தினர்.

சிறிது நேரத்தில் அங்கு வந்த, ஈரோடு மாநகர் துணை மேயர் கே.சி பழனிச்சாமி, மக்களுடன் சமாதானப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். அவர் அப்பகுதியைச் சார்ந்தவர். “இப் போதைக்கு நீங்கள் வேறு பகுதியில் புதைத்துக் கொள்ளுங்கள். நான் உங்கள் பகுதியிலேயே தனியாக இடம் ஒதுக்குவதற்கு (தனி சுடுகாட்டுக்கு) ஏற் பாடு செய்கிறேன்” என்றார். ஆனால், மக்கள் ஒப்புக் கொள்ள மறுத்தனர்.

“நாங்கள் ஆண்டாண்டு காலமாக இதைத் தான் சுடுகாடாக பயன்படுத்தி வருகிறோம். சாதியைக் காரணம் காட்டி வேறு இடம் ஒதுக்குவது எங்களுக்கு ஏற்புடையதல்ல” என்று தெரிவித்தனர். பொதுமக்களுக்கு ஆதரவு தெரிவித்து பேசிய கழகத்தின் அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி மீது துணை மேயரின் கோபம் திரும்பி யது. “நீங்கள் எல்லாம் ஈரோட்டுக் காரர்கள். நீங்கள் எங்கள் பகுதிக்கு வந்து மக்களை தூண்டி விடுகிறீர்கள்” என்று நேருக்கு நேராக சண்டை யிட்டார். “நாங்கள் ஈரோட்டுக்காரர் கள் என்பது சரிதான். ஆனால் மக்களுக்கு ஒடுக்குமுறைகள் நிகழும் போது, அவர்கள் உரிமைகள் பறிக்கப் படும் போது எங்கிருந்தாலும் நாங்கள் ஓடிவந்து நிற்போம். உங்களால் முடிந்ததைப் பாருங்கள்” என்று பதிலடி தந்தார். “இனி இந்த மக்களே வேறு இடத்தில் புதைக்க ஒத்துக் கொண்டாலும் கூட, பெரியார் இயக்கத்தவர்களாகிய நாங்கள் அனுமதிக்க மாட்டோம். பொது சுடுகாட்டில் தான் புதைப்போம்” என்று உறுதியுடன் அறிவித்தார்.

அப்போது பொதுமக்கள் ரோட்டில் இருந்த பிணத்தைத் தூக்கி சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்ல முனைந்தனர். இரத்தினசாமி தலைமை யில் கழகத் தோழர்களும், பொது மக்களும், “புதைப்போம் புதைப் போம், பொது சுடுகாட்டில் தான் புதைப்போம்” என்று முழக்கமிட்ட வாறு முன்னேறிச் சென்றனர். காவல்துறை தடுத்து நிறுத்தியது.

பிணம் மீண்டும் சாலையில் வைக்கப்பட்டது. இதனிடையே, கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆலோசனையின் பேரில், அதிகாரி கள் மீது தீண்டாமை, வன்கொடுமை சட்டத்தின் கீழ் புகார் அளிக்கவும், முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு பேக்ஸ் அனுப்பவும் ஏற்பாடுகள் தொடங்கின. இறந்து போன, மாரியம்மாளின் கணவர் துரைசாமியின் பெயரால் அரசுக்கு மனு தயாரிக்கப்பட்டது.

மூத்த வழக்குரைஞர் ப.பா மோகனுக்கு அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி தகவல் தர அவரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து அதிகாரிகளிடம் பேசினார்.

ஏறத்தாழ 7 மணி நேரம் நடந்த போராட்டத்தின் விளைவாக, அதி விரைவுப் படையினர் விரைந்து வந்தனர். சுடுகாட்டில் இருந்து கொண்டு தாழ்த்தப்பட்ட மக்களை அனுமதிக்க மறுப்பவர்களை அகற்று வதற்காக விரைவுப் படை சுடுகாட் டிற்கு சென்றது. சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த் துறை அதிகாரி நர்மதா தேவி, பொதுமக்களிடம் “நீங்கள் பொது சுடுகாட்டிலேயே புதைத்துக் கொள்ளலாம்” என்று கூறிச் சென்றார்.

பிணத்தை புதைக்க விடாமல் தடுத்தால் வன்கொடுமை தடுப்புச் சட்டத்துக்கு கழகத்தினர் உள்ளாக்கி விடுவார்கள் என்ற அச்சம் அதிகாரிகளை இறங்கி வரவைத்தது.

பொது மக்கள் மற்றும் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்களின் தொடர் போராட்டத்தின் விளைவாக நள்ளிரவு 12.30 மணிக்கு, மாரியம் மாளின் உடல் சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு எரியூட்டப்பட்டது. அடக்கம் முடிந்த பின் புறப்பட்ட கழகத் தோழர்களிடம் அவ்வூர் பொது மக்களும், இளைஞர்களும், பெண் களும் ஒவ்வொரு கருஞ்சட்டை தோழரையும் தேடி வந்து, கையைப் பிடித்து நன்றி கூறினர்.

களத்தில் உற்ற துணையாக விடுதலை வேங்கைகள் கட்சியின் நிறுவனர் தமிழ் இன்பன், கனிராவுத்தர் குள மீட்பு இயக்க ஒருங்கிணைப் பாளர் நிலவன் ஆகியோர் இருந்தனர்.

பின்குறிப்பு: இறந்து போன மாரியம்மாள் பிறப்பால் வன்னியர் சமூகத்தைச் சார்ந்தவர். அவர் அருந்ததிய சமூகத்தைச் சார்ந்த துரை சாமியை திருமணம் செய்து கொண்ட தால், அவரும் தாழ்த்தப்பட்டவராகி விட்டார் ஆதிக்க சமூகத்தினருக்கு!

செய்தி : ப.சிவக்குமார், அறிவியல் மன்றம்

Pin It