‘வானத்தை’ தாங்கள் வணங்கும் தெய்வமாக்கிய ஆரியர்கள், ‘பூமி’யை அடிப்படையாகக் கொண்ட நதிக்கரை நாகரிக மக்களை தங்களுக்கு அடிமையாக்கிக் கொள்ள பின்பற்றிய தந்திரங்கள் என்ன? ‘ஏகம்-பிரம்மம்’ என்ற தத்துவங்கள் எப்படி வந்தன? விளக்குகிறது இக்கட்டுரை.
மனிதர்களைப் பாகுபடுத்தும் சித்தாந்த மாகிய பார்ப்பனீயத்தின் பூர்வ சரித்திரத்தை ஆராய்ந்தோமானால் இன்றைய அதன் பாசிசக்குணத்துக்கான வேர்கள் தென்படுகிறது. கி.மு.1500-லிருந்து ஆரிய இனக்குழுக்கள் இந்தியத் துணைக்கண்டத்தின் வடக்கே, வட மேற்குப்பகுதி வழியாக உள்ளே நுழைந்தார்கள். இன்று ஈரான், பெர்சியப் பகுதிகளாக அடை யாளப்படுத்தப்படும் இடங்களிலிருந்து சொந்த நிலம் இல்லாதவர்களாக, ஆடுமாடுகளுக்கு மேய்ச்சல் நிலம் தேடி அலைந்தார்கள். அவ்வாறு இடம் விட்டு இடம் பெயர்ந்துகொண்டு இருந்ததாலேயே சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், வானம் இவற்றில் நிலைமை களில் தொடர்ச்சியாக நிகழும் மாறுபாடுகளை நன்கு அறிந்து வைத்திருந்தவர்கள் அவர்கள்.
போகும் இடமெல்லாம் நெருப்பைச் சுமந்தார்கள். ஆரிய இனக்குழுக்களின் அறிவு, தெய்வங்கள், கலாச்சாரம்,எல்லாம் வானம் சார்ந்தே இருந்தது. எனவேதான் தங்களுடைய கடவுள்களான இந்திரன், அக்னி, வாயு, வருணன், இடி, மின்னல், சூரியன், சந்திரன், ராகு, கேது, என்று எல்லோரும் வானத்திலேயே இருப்பதாகக் கருதினார்கள். வானத்தில் இருக்கும் அவர்களை வணங்க நெருப்பை வளர்த்து அதில் பலி பொருட்களை ஆகுதி யாக்கி வழிபட்டனர். ரிக் வேதப்பாடல்களில் யாகச் சடங்குகளைப் பற்றிய ஏராளமான தகவல்கள் குவிந்திருப்பதற்குக் காரணம் இதுதான்.
ஆரிய இனக்குழுக்கள் இரவு நேரங்களில் தங்குமிடங்களில் பாதுகாப்புக்காக, சமைப்பதற்காக நெருப்பை வளர்த்தார்கள். அந்த நெருப்பை உருவாக்கவும், பாதுகாக்கவும், சிலர் நியமிக்கப்பட்டார்கள். அப்படி நியமனமான நெருப்புப் பாதுகாவலர்கள்தான் புரோகிதர்களாக பின்னர் உருவெடுக்கிறார்கள். வளர்ந்த நெருப்பைச் சுற்றி உட்கார்ந்து, ஆடிப்பாடி, அவர்களுடைய பூர்வ சரித்திரம், கலாச்சாரம், தெய்வ வழிபாடுகள், வாழ்க்கை சடங்குகள், பிறப்பு, இறப்பு, பழக்கவழக்கங்களைப் பாடல்களாக மனனம் செய்து பாடிய ஒரு கூட்டமாக புரோகிதர்கள் மாறினார்கள். இப்படி மாறிய புரோகிதர்களே வேதங்களை இயற்றினர்.
இந்த ஆரிய இனக்குழுக்கள் சிந்து சமவெளிப் பிரதேசத்துக்குள் நுழைகிறார்கள். சிந்து சமவெளி, நதிக்கரை நாகரிகம், நதி, மண், செழுமை, வளர்ச்சி, பல்லுயிர் பெருக்கம், செடி,கொடி, பயிர், விளைச்சல், பெண் தெய்வங்கள், விவசாயம், என்று முழுக்க முழுக்க பூமித்தாயின் பன்மைத்தன்மையுடன் சிறந்து விளங்கிய நாகரிகம். ஒற்றைத்தன்மையுடைய நிரந்தரச் சூன்யமான, எல்லையற்றதான வான் வெளியும், உயிர்த்துடிப்புள்ள மாறிக் கொண்டே யிருக்கிற பன்மைத்தன்மை கொண்ட பூமியும் எதிர் எதிராக நின்றன.
சிந்து சமவெளி நாகரிகத்தின் பன்மைத் தன்மையைக் கண்டு பொறாமை கொண்ட ஆரிய இனக்குழுக்கள் தங்களுடைய ஒற்றைத் தன்மையும், பாழ்வெளியுமான வானத்தை உயர்வாக, புனிதமானதாகக் கற்பிதம் செய்தனர். அதனால்தான் பல்லுயிரைப் பெருக்கும் பூமியை, மண்ணைத் தாழ்வாகக் கற்பிதம் செய்தனர். அதில் வேலை செய்யும் மனிதர்களையும் தாழ்வானவர்களாக, புனிதமற்றவர்களாக கற்பிதம் செய்தனர். அவர்கள் சூத்திரப் பிரிவினர், தீண்டத்தகாதப் பிரிவினர் என திட்டமிட்டு பிரிக்கப்பட்டனர். இன்றும் பார்ப்பனீயம் வானம் சார்ந்த யாகச் சடங்குகளை முதன்மையாகக் கருதுகிறது. அவற்றைப் புனிதச் சடங்குகளாக மக்கள் மனதில் நிலைகொள்ள வைப்பதில் வெற்றி பெற்றிருக்கிறது. மண் சார்ந்த பண்பாட்டுச் சடங்குகளை தாழ்வான இடத்தில் வைப்பதிலும் வெற்றி பெற்றிருக்கிறது.
எல்லா மதங்களிலும் பிரபஞ்சத்தின் தோற்றம், பூமியின் தோற்றம், உயிர்களின் தோற்றம், மனிதகுலத் தோற்றம் ஆகியவற்றைப் பற்றிய கதைகள் இருக்கின்றன. ஆரிய மதத்திலும் அத்தகைய கதை ரிக்வேதப் பாடல்கள் பத்தாவது தொகுதியில் 129வது பாடலாக ‘‘படைப்பு குறித்த பாடல்’’ இயற்றப்பட்டிருக்கிறது. ஒரு ஏகம் உருவமற்ற பருப்பொருள் இருந்தது; அதுவே வெப்பத்தினாலும் காமத்தினாலும் தன்னை ஒரு பிரபஞ்சமாக உருமாற்றிக் கொண்டது என்பதாக அப்பாடல் சொல்கிறது. வழிபாடு, நாட்டு நிர்வாகம், தொழில் மேலாண்மை, மற்ற பிரிவினருக்கான வேலைகள் என்ற அடிப்படையில் வகுக்கப்பட்ட வர்ணா சிரமக் கோட்பாடுகளுக்கு ஆதரவாக பின்னால் இடைச்செருகலாக ரிக்வேதப் பாடல்களில் சொருகப்பட்டிருக்கலாம் என்று சொல்லப் படுகிற புருஷ சூக்தா ஒரு யாகச்சடங்காகவே தொடங்குகிறது. தேவர்கள் சேர்ந்து புருஷன் என்ற மகாமனிதனை யாகத்தில் பலியிட, அந்த யாக வேள்வியிலிருந்தே இந்தப் பிரபஞ்சமும், உலகமும், உயிர்களும், மனிதர்களும் தோன்றி னார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அப்படிச் சொல்லும்போதே நான்கு வர்க்கங் களும் (பின்னால் வருணங்கள்) தோன்றின என்று சொல்வதன் மூலம் வர்ணாசிர்மக் கோட் பாடுகளுக்கு ஒரு பழமையையும், பாரம் பரியத்தையும் ஏற்படுத்துவதற்கான முயற்சியைத் தொடங்கி விட்டார்கள். கி.மு.1500 வாக்கில் உள்ளே வந்த ஆரிய இனக்குழுக்கள் சுமார் 400 ஆண்டுகளில் வேதங்களை எழுதுகிறார்கள். அதற்கு முன்னால் அவை வாய்மொழிப் பாடல்களாக தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்டு வந்திருக்கலாம்.
ஏகம் என்றால் அது ஒன்றே இறுதி உண்மை என்று பொருளாகிறது. ஆரிய இனக்குழுக்களின் தத்துவார்த்தமாக இன்றுவரை அது கடைப் பிடிக்கப்படுகிறது. கி.மு.700ஆம் ஆண்டு வாக்கில் உருவாக்கிய உபநிடதங்களில், தங்களைப்பற்றிய உயர்வு, புனிதம், தனித்துவம் ஆகியவற்றை உள்ளடக்கமாகக் கொண்ட பிரம்மம் என்ற கருத்தாக்கத்தை உருவாக்கினார்கள். பிரம்மம் என்ற கருத்தாக்கத்தை உருவாக்க வேண்டிய அவசியம் ஏன் வந்தது? இந்தியாவில் வாழ்ந்து கொண்டிருந்த பூர்வீக இனக் குழுக்களிட மிருந்து தங்களுடைய தனித்துவத்தைப் பாதுகாத்துக் கொள்ளும் முயற்சியில் தங்களைப் புனிதமானவர்களாகக் காட்டிக் கொண்டார்கள். எண்ணற்ற இனக்குழுக்களில் கரைந்து இல்லாமல் போய்விடுவோமோ என்ற அச்சம் காரணமாக அகமணமுறையை (ஒரே வர்ணத்துக்குள் திருமணம்) முதன்முதலில் நடைமுறைப்படுத்தியவர்களாகவும் இருந்தனர். தன்னைப் புனிதமாக உருவகிக்கும்போது இயல்பாக மற்றவர்களை புனிதமற்றவர்களாக வரையறுத்தனர். ஏகம், அத்வைதம் என்ற தத்துவ நிலைப்பாட்டை நிலைநிறுத்தும்போது, மற்றவற்றை பன்மைத்துவமானவை என்றும், எனவே தாழ்ந்தவை என்றும் கூற முற்பட்டனர். பூர்வீக இனக்குழுக்களுக்கும் தாந்திரீகம், சாரு வாகம், ஆசீவகம், சமணம், பௌத்தம், போன்ற மதங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தன. இந்த மதங்களிலெல்லாம் பன்மைத்துவம் பேசப்பட்டது.
ஏகத்தத்துவத்தை மறுத்தது. இவற்றுக்கிடையே வாதப்பிரதிவாதங்களும் நடந்தன. ஏகத்தத்துவம் வருண அமைப்பு முறையைக் கண்டுபிடித்தது. அதன் மூலம் தன்னுடைய பிரம்மம், நிரந்தரம், புனிதம், என்ற கோட்பாடுகளை மக்களிடம் நடைமுறைப் படுத்தியது. பக்தி இயக்கத்தின் எழுச்சியில் மீண்டும் பன்மைத்துவம் மெலெழுந்து வந்தது. ஏராளமான கடவுளர்கள், ஏராளமான வழி பாட்டு முறைகள், வட்டார அடையாளங்கள், குறியீடுகள், பண்பாட்டு நடைமுறைகள், வளர்ந்தன. யாகச் சடங்குகளையும், பார்ப்பனீயத் தலைமையையும், வேதங்களின் ஆதிக்கத்தையும் எதிர்த்தன.
ஏராளமான கடவுள்கள் சுயம்புவாகத் தோன்றினார்கள். இதைச் சூத்திர எழுச்சியாகப் புரிந்து கொண்ட பார்ப்பனீயம், இந்த எழுச்சி யின் விளைவுகளை அங்கீகரிப்பது போல அங்கீகரித்து அப்படியே தன்னுடைய, ஏகத்தத் துவத்துக்குள், புனிதங்களுக்குள் ஸ்வாகா செய்து கொண்டது. முருக வழிபாடு, காளி வழிபாடு, போன்றவற்றை இப்படி ஸ்வாகா செய்யப்பட்டதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.
பிரம்மம் என்பதை தனிப்பெரும் தத்துவமாக கூறும் அறிவுஜீவிகள் பிரம்மத்தின் உள்ளீட்டில் சாதியமைப்பு முறை சூட்சுமக் கருத்துக்களாகச் சொல்லப்படுவதை வசதியாக மறந்துவிடு கின்றனர் அல்லது மறைத்துவிடுகின்றனர். உலகின் மிக உயர்ந்த உண்மையான பிரம்மத் திற்கும் உலகிற்கும் தீட்டு நிலவுகிறது என்று வேதாந்தம் சொல்வது தத்துவமல்ல. கர்மக் கோட்பாடு, சத்வ, ராஜச, தாமச குணங்கள் பற்றிய கோட்பாடுகள், புருஷ சூக்தத்தில் சொல்லப்படுகிற வருண அமைப்பு முறை, தீட்டுக் கொள்கை போன்றவை நேரடியாகவே வருணாசிரம-சாதிக் கோட்பாடுகளோடு தொடர்புடையவையல்லாமல் வேறென்ன? பிரம்மம் தன்னில் தானே நிலை கொள்ள வேண்டும்.
பிறவற்றோடு கலக்கக்கூடாது, அப்படிக் கலந்தால் தீட்டாகிவிடும் என்று கூறுவதன் வழியாக பிரம்மம் உறுதியாகத் தீண்டாமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறது. தனது நிரந்தரத்தை, புனிதத்தை நிறுவுவதற்காக உலகம் மாயை, உடல் மாயை, உடலுழைப்பாளர்கள் மாயை, நிலம், இரும்பு, ரத்தம், பிறப்பு, இறப்பு, எல்லாம் மாயை என்றும் நிலத்தில், இரும்பில், ரத்தம் சம்பந்தமான வேலை செய்பவர்கள் (மருத்துவர்), தோல் பதனிடுபவர்கள், பறை அடிப்பவர்கள், நேரடியாக சுத்தம் செய்யும் வேலை செய் பவர்கள், என்று பல்வேறு உழைப்பாளிகளை அது தீட்டுக்குரியவர்கள் என்று சொல்கிறது. இவற்றில் எல்லாம் கலந்து விடாமல் இருப்பதே பிரம்மத்தின் புனிதம் என்கிறது.
பிரம்மம் என்று வருகிற இடங்களில் எல்லாம் பார்ப்பனீயம் என்று வாசித்துப்பாருங்கள். முடைநாற்றம் எடுக்கும் வருணாசிரம- சாதிக் கோட்பாடுகளின் அழுகிய முகம் தெரியும். அரசியல் அதிகாரம் என்று வரும்போது எந்த சமரசத்துக்கும் தயாராகும் பார்ப்பனீயம் வெகுமக்களின் கடவுள்களையும், அவர்களது வழிபாட்டுத்தலங்களையும், பண்பாட்டு அடை யாளங்களையும் அவர்களது பன்மைத் தத்துவத்தையுமேகூட கபளீகரம் செய்து மீண்டும் ஏகத் தத்துவத்துக்குள் இழுத்துக் கொள்கிறது. வேதம் - வருணாசிரமம் சமஸ்கிருதம் என்ற குடுவைக்குள் திணித்து பார்ப்பனியமாக்கப் போரிட்டுக் கொண்டிருக்கிறது. இந்த ஆன்மீக(?) உண்மைகளை மக்களிடம் அம்பலப்படுத்தினால் மட்டுமே மீண்டும் மீண்டும் பார்ப்பனீயத்துக்கு மக்கள் இரையாகாமல் பாதுகாக்க முடியும். (ஆதார நூல்கள் : 1. ‘இந்தியக் கதை: ஏகம் அநேகம் சாதியம்’ - ந. முத்துமோகன் 2. ‘இந்தியா உருவான விதம்’)
ஷிரீன் மூஸ்வி (‘மார்க்சிஸ்ட்’ டிச 2017, ஜன 2018) இதழில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்