பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் முதல் நூல் தொகுப்பில் உள்ள முதல் இரு கட்டுரைகளையும் இங்கு அலசுவதற்கு சில காரணங்கள் உண்டு. அதில், சாதி மற்றும் மொழிவாரி மாநிலங்கள் குறித்து விவாதிக்கப்படுகின்றன. இவற்றுள் முதல் இரு கட்டுரைகளும் சாதி குறித்த அம்பேத்கரின் பார்வைகளை முன்வைக்கின்றன. இரண்டாவது கட்டுரையான ‘சாதி ஒழிப்பு' நூலின் மூன்றாவது பதிப்பின் முன்னுரையில், ‘இந்தியாவில் சாதிகள்' என்ற இத்தொகுப்பில் முதல் கட்டுரையையும் சேர்த்து வெளியிட விரும்பியதாகக் குறிப்பிடுகிறார் அம்பேத்கர். இவ்விரு கட்டுரைகளும் சேர்ந்து, ஒரு முழு நூல் என்கிற நிறைவைத் தரும் என்பது அவருடைய எண்ணம். அதனாலும் நடைமுறை சார்ந்த காரணங்களாலும் எனது தேர்வு சரியானதுதான் என்று கருதுகிறேன்.

Dalit‘இந்தியாவில் சாதிகள்' என்ற கட்டுரை, கொலம்பியா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற மானுடவியல் கருத்தரங்கில் படிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரையாகும். இக்கட்டுரையில் சாதியின் தோற்றம், அதன் தொடக்கப்புள்ளி எது அல்லது யார்? அது எவ்வாறு பரவியது? என்பனவற்றை அவர் தெளிவுபடுத்துகிறார்.

சாதி என்பதன் சாரமாக புறமண முறையின் மீதான தடையும், கறாரான அகமண முறையும் இருக்கின்றன. இந்தியாவை தவிர்த்து பிற நாடுகளில் அகமணக் குழுக்கள் பரவலாக இருந்தாலும், அங்கெல்லாம் சாதிகள் தோன்றவில்லையே என்ற கேள்வி எழலாம். அந்தச் சமூகங்களுக்கும் இந்தியாவிலுள்ள சாதியச் சமூகத்திற்கும் உள்ள வேறுபாடு என்னவெனில், பிற சமூகங்கள் தனித்தனி பண்பாட்டைக் கொண்ட வெவ்வேறு இனக்குழுக்களாக அமைந்தவை. இந்தியாவில் உள்ள நிலை என்னவெனில், ஒரே பண்பாடும், வாழ்முறையும் கொண்ட ஒரே மக்கள் சமூகத்தை அகமண முறையின் மூலம் செயற்கையாகத் தனித்தனி அலகுகளாகத் துண்டாடிய நடைமுறை என அம்பேத்கர் விளக்குகிறார்.

அடிப்படையில் இந்தியச் சமூகம் புராதன காலப் பழக்கங்களைப் பேணுகின்ற ஒரு சமூகமாகும். புறமண முறை (தனது சாதிக்கு வெளியே மணம் செய்வது) என்பதுதான் புராதன காலச் சமூகப் பழக்கம். இப்போதும் கூட இந்தியாவில் புறமண முறைக்குச் சாதகமான சட்டதிட்டங்கள் நடைமுறையில் உள்ளன. ரத்த உறவுடையோர் திருமணம் செய்யக் கூடாது என்பது மட்டுமின்றி, ஒரே கோத்திரத்தைச் சேர்ந்தவர்களிடையே திருமணம் செய்வது கூட, தெய்வ நிந்தனைக்குரியது என்பதுதான் இந்து சமூகத்தின் நடைமுறை. எனவே, அகமண முறை என்பது இடையிலே வந்து சேர்ந்த இந்தியாவுக்கு அந்நியமான நடைமுறை என நிறுவுகிறார் அம்பேத்கர்.

புறமண முறைக்குப் பதிலாக அகமண முறையைப் புகுத்தியதன் விளைவாகவே சாதி தோன்றியது. அவ்வாறு அகமண முறைக்கு ஒரு சமூகத்தை மாறச் செய்து, அகமண முறையிலேயே அச்சமூகத்தை நிலைத்திருக்கச் செய்ய வேண்டுமெனில் ஆண், பெண் சம எண்ணிக்கை பேணப்படுவது அவசியமான ஒன்றாக இருக்கிறது. இவ்வாறான சம எண்ணிக்கையைப் பேணும் நோக்கத்திலேயே கணவன் இறந்தவுடன் மனைவியை எரிக்கும் சதிப் பழக்கம் தோன்றியது என்கிறார் அம்பேத்கர். தேவைக்கு அதிகமாக இருக்கும் பெண்களை எரிப்பது போல், வலுவுடையவனாகவும், சட்டத்தை வகுப்பவனாகவும் உள்ள ஆணை எரிக்க முடியாது என்பதால், அவனுக்குத் துணையாகத் திருமண வயதை எட்டாத சிறுமிகளை மணம் முடிக்கும் பழக்கமும் தோன்றியது.

சாதியையும் அகமண முறையையும் பேணும் நோக்கத்தில், ஆண் – பெண் எண் ணிக்கையில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளை சரி செய்ய நான்கு வழிகளைக் கையாண்டனர். அவை : 1. விதவையை கணவன் உடலோடு எரித்து விடுவது 2. கணவனை இழந்தவரை அலங்கோலம் செய்து, கட்டுப்பாடுகளை விதித்து விதவைக் கோலம் பூண வைப்பது 3. மனைவியை இழந்தவன் மீது பிரம்மச்சரியத்தை விதிப்பது 4. பருவமெய்தாத சிறுமியை அவனுக்கு மணம் முடிப்பது.

தந்திரமான புகழுரைகள் மூலம் சாதி இந்து அறிஞர்கள் இவற்றைக் கடைப்பிடிப்பது புனிதமானது, வணக்கத்துக்குரியது என்று கூறினர். இதன் விளைவாக தோற்றுவிக்கப்பட்ட சாதி அப்படியே நிலை நிறுத்தப்பட்டு விட்டது.

சாதியின் தோற்றுவாய் அல்லது தொடக்கப்புள்ளியாகப் பார்ப்பனர்களே விளங்கினர் என்பது, அம்பேத்கர் அடுத்ததாக நிறுவுகிற செய்தி. சாதி என்பது தன்னைச் சுற்றி அரண் அமைத்துக் கொண்ட வர்க்கங்களின் தொகுப்பு. அவ்வாறு தன்னைச் சுற்றி அரணிட்டுக் கொண்ட முதல் வர்க்கமாகப் பார்ப்பனச் சாதி அல்லது பூசாரி வர்க்கமே இருந்தது. அகமண முறையைப் பேணும் மேற்கூறிய பழக்கங்கள் அனைத்தும் வழங்கப்படுகிற ஒரே சாதியாகப் பார்ப்பன சாதி மட்டுமே விளங்குகிறது. பார்ப்பனர் அல்லாத சாதிகளிடம் இப்பழக்கங்கள் காணப்பட்டாலும் அவை வெளியிலிருந்து பெறப்பட்டதாகவும், கறாராகவும் முழுமையாகவும் கடைப்பிடிக்கப்படாத நிலையிலும்தான் இருக்கின்றன. பார்ப்பன சாதியிலிருந்து ஒரு சாதி எவ்வளவு தூரத்துக்கு ஒதுக்கப்பட்டு இருக்கிறதோ, அதைப் பொருத்த அளவுக்கு இப்பழக்கங்களிலிருந்து விலகி இருக்கின்றன. எனவே, சாதியின் தோற்றுவாய் பார்ப்பன வர்க்கமே.

இந்து சமூகத்தில் அறிவாளி வர்க்கமாகவும், செல்வாக்கு மிகுந்தவர்களாகவும் இருந்த பார்ப்பன வர்க்கம், தன்னை தனியே மூடுண்டதாக ஆக்கிக் கொண்டு சாதியாக மாறியது. அவர்களைப் போலச் செய்வதின் மூலம் பார்ப்பனர் அல்லாத பிறரிடமும் சாதி பரவியது. அதோடு இவர்களால் சமூக விலக்கம் செய்யப்பட்ட, இவர்களின் கொடுங்கோன்மையோடு ஒத்துப் போகாதவர்களும் – தனி சாதியாக உருவெடுக்க வேண்டிய அவலம் நிகழ்த்தப்பட்டது.

இதுவே சாதி இந்தியாவில் தோன்றிப் பரவிய கதை. இதைப் புரிந்து கொள்ளாமல், அய்ரோப்பாவிலிருந்து சாதியை ஆராய்பவர்கள் தேவையற்ற அளவுக்கு நிறத்தின் பங்கை சாதியில் அழுத்தம் கொடுத்துப் பார்க்கிறார்கள். இதற்கு அவர்களைப் பெரிதும் பாதித்து விட்ட தங்கள் நாட்டில் உள்ள நிறவேற்றுமை நடைமுறை தீர்மானகரமான பங்கை ஆற்றுகிறது என அவர்களை எள்ளி நகையாடுகிறார் அம்பேத்கர். இவையே முதல் கட்டுரையில் அம்பேத்கர் அலசும் செய்திகள்.

இரண்டாவது கட்டுரையான ‘சாதி ஒழிப்பு' 1936இல் எழுதப்பட்டது. லாகூரில் உள்ள ‘ஜாட்–பட்–தோடக்' மண்டல் என்கிற சாதிக்கு எதிரான அமைப்பு நடத்தவிருந்த வருடாந்திர மாநாட்டின் தலைமையுரையாக அம்பேத்கர் தயாரித்தது. அவ்வுரையின் உள்ளடக்கம் மாநாட்டு அமைப்பõளர்களை பீதி கொள்ள வைத்ததால், மாநாடே ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் அம்பேத்கர் அவ்வுரையை நூலாக வெளியிட்டார். அது பரவலான வரவேற்பைப் பெற்றதோடு, பெரும்பாலான இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. ‘தலித் முரசு' அக்டோபர் 2007 இதழ் இதற்கெனவே அர்ப்பணிக்கப்பட்டு, முழுமையாக வெளியிடப்பட்டது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.

இக்கட்டுரையில், சமூக சீர்திருத்தங்களெல்லாம் தேவையற்றவை; அரசியல் சீர்திருத்தம் செய்தாலே போதுமானது என வாதிடுகிற அரசியல் சீர்திருத்தவாதிகள்; பொருளாதார சீர்திருத்தமே போதுமானது, சாதி ஒழிப்பு என்பது அவசியமற்றது என வாதிடுகிற பொருளாதார சீர்திருத்தவாதிகள்; சமூக சீர்திருத்தவாதிகளிலும் சாதியை ஒழிக்காமலே சில்லறை மாற்றங்களின் மூலம் சமூகத்தைச் சீர்திருத்திவிட முடியும் என வாதிடுகிற சமூகச் சீர்திருத்தவாதிகள்; சாதிக்குப் பதிலாக வர்ண வியஸ்தாவின் மூலம் குணத்துக்கேற்ப வர்ணமுறையை உயிர்ப்பிக்க முயல்கின்ற ஆரிய சமாஜிகள்; சாதியைப் பாதுகாக்க விழைபவர்கள்; நடுநிலை வகிக்கிறோம் என பசப்புபவர்கள் என அன்றைய சமூகத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்த அனைத்துப் பிரிவினரையும் விமர்சித்து, சாதி ஒழிப்பு என்பதன் அவசியம் என்ன? அதைச் சாதிப்பது எப்படி என்பது போன்ற கருத்துக்களை முன்வைப்பதாக அம்பேத்கரது இக்கட்டுரை இருக்கிறது.

அன்றைக்கு தீண்டத்தகாத மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறைகளையும் வன்முறைகளையும் பட்டியலிட்டு, சான்றுகள் காட்டி, தீண்டத்தகாதாரைப் போன்ற உங்கள் சொந்த நாட்டு மக்கள் பொதுப் பள்ளியில் சேர முடியாமல், பொதுக் கிணறுகளில் நீர் எடுக்க முடியாமல், எல்லா விதக்கொடுமைகளுக்கும் ஆளாக்கப்பட்டிருக்கும் போது, நீங்கள் அரசியல் சீர்திருத்தம் செய்ய தகுதியானவர்களா என அரசியல் சீர்திருத்தம் பேசியவர்களிடம் கேள்வி எழுப்பினார் அம்பேத்கர்.

இந்து சமூகத்தில் அன்றைக்கு இருந்த சமூக சீர்திருத்தவாதிகளை அடுத்ததாகப் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்கிறார். சமூக சீர்திருத்தம் என்பது சமூகத்தை மாற்றிக் கட்டமைப்பது. ஆனால் அன்றைக்கு இருந்த சமூக சீர்திருத்தவாதிகள், படித்த மேட்டுக்குடி இந்துக்களாக இருந்தனர். அவர்கள் சாதி ஒழிப்பில் அக்கறை காட்டவில்லை. அதற்குப் பதிலாக இந்துக் குடும்பத்தை சீர்திருத்துவதையே சமூக சீர்திருத்தமாக வரித்துக் கொண்டனர். தங்கள் குடும்பங்களில் தாங்கள் உணர்ந்திருந்த குழந்தைத் திருமணம், சாதி, விதவை முறை போன்றவற்றை நீக்கவே உத்வேகம் கெண்டனர். எனவே, அரசியல் சீர்திருத்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் மிக எளிதாக இவர்களை வென்று விட்டனர்.

பொருளாதாரச் சீர்திருத்தமே இன்றியமையாதது என்கிற சோஷலிஸ்டுகள், அய்ரோப்பாவிலுள்ள தங்கள் தோழர்களைப் பின்பற்றி வரலாற்றின் பொருளாதார விளக்கங்களை, இந்தியாவிலுள்ள உண்மைகளோடு பொருத்த முனைகிறார்கள் என அம்பேத்கர் விமர்சிக்கிறார். ஒரு தனி மனிதனின் சமூக நிலை அதிகாரத்தின் ஊற்றுக் கண்ணாக இருக்கிறது. கோடீஸ்வரர்கள், பக்கிரிகளுக்கும் சாதுக்களுக்கும் ஏன் கீழ்ப்படிய வேண்டும்? என்று கேள்வி எழுப்பி இதை விளக்குகிறார். இந்தியாவில் நீதிபதிக்கு இருக்கும் அதிகாரத்தை விட, சாமியாரிடம் அதிக அதிகாரம் இருக்கிறது என்பதை சுட்டிக் காட்டுகிறார்.

இன்றைய அய்ரோப்பாவில் அதிகாரத்தின் ஊற்றுக்கண்ணாக சொத்து இருப்பதை வைத்து, நேற்றைய அய்ரோப்பாவிலும் இன்றைய இந்தியாவிலும் சொத்துதான் அதிகாரத்தின் ஊற்றுக் கண்ணாக இருக்க முடியும் என நம்புவது சோசலிஸ்டுகளின் தவறு. மதம், சமூக அந்தஸ்து, சொத்து ஆகியவை அதிகாரம் மற்றும் ஆதிக்கத்தின் ஊற்றுக் கண்களாக இருப்பவை. ஒவ்வொரு சமயத்திலும் இவற்றில் ஒவ்வொன்று மேலோங்கி அதிகாரமளிப்பதாக இருக்கும். எனவே, மதச்சீர்திருத்தம் மற்றும் சமூக சீர்திருத்தத்தின் (சாதி ஒழிப்பின்) அவசியத்தை அவர்கள் உணர வேண்டும் என்கிறார்.

மேலும், கீழ்க்கண்ட கேள்விகளை சோசலிஸ்டுகளுக்கு அவர் முன்வைக்கிறார். அவை, இந்தியப் பாட்டாளியும், புரட்சியும் பற்றியவை.

1. இந்தியப் பாட்டாளிகள் ஒன்றுபட்டு புரட்சி செய்வார்களா?

2. அதற்கு அவர்களைத் தூண்டுவதாக எது இருக்கும்?

3. இந்தியப் பாட்டாளியிடம் ஏழை, பணக்காரன் என்பதைத் தவிர சாதி, மதம், அந்தஸ்து, மேல், கீழ் என வேறு வேறுபாடுகள் எதுவும் கிடையாதா?

4. அவ்வாறு வேறுபாடுகள் இருக்குமெனில், அவர்களை ஒன்றுபடுத்துவதாக எது இருக்கும்?

இதுபோன்ற கேள்விகளை எழுப்பி, சாதியை எதிர்கொள்ளாமல் புரட்சியை நடத்த முடியாது என உறுதியாகக் கூறுகிறார் அம்பேத்கர்.

இன்றைக்கு இருக்கிற நவீன மநுவாதிகள் போல் அன்றைக்கு இருந்த மநுவாதிகள் சாதியை நியாயப்படுத்தினர். சாதி என்பது உழைப்புப் பிரிவினைதான். அதில் தீங்காக எதுவும் இல்லை. இனத் தூய்மையையும் ரத்தத் தூய்மையையும் காப்பதுதான் சாதியின் நோக்கம் என்றெல்லாம் இவர்கள் பசப்பினர். சாதி என்பது உழைப்புப் பிரிவினையன்று; உழைப்பாளர்களின் பிரிவினை. உழைப்பாளர்களைப் பிரிவினை செய்து அவர்களைப் படிநிலை அமைப்பில் நிரந்தரமாகப் பூட்டிவிடும் ஏற்பாடு. அவ்வாறே, சாதியால் ரத்தத் தூய்மையையும் இனத் தூய்மையையும் காக்க முடியாது. உண்மையில் இனங்களும் ரத்தமும் கலந்த பிறகுதான் சாதி தோன்றியது. அதோடு வளர்ச்சி குன்றிய, உடல் சத்து வேண்டிய குள்ளர்களான மூன்றாம் தர மனிதர்களைத்தான் இந்தியாவிலுள்ள சாதிகள் தந்திருக்கின்றன. பத்துக்கு ஒன்பது பேர்கள் ராணுவத்துக்கு தகுதியற்றவர்கள் என்று அறிவிக்கப்பட்ட நாடு இந்தியா. எனவே, இன மேம்பாட்டியலின் அடிப்படையில்தான் சாதி செயல்படுகிறது என்பது அபத்தம்.

Radio used by Ambedkarநாலாயிரம் சாதிகளுக்குப் பதிலாக நான்கு வர்ணங்களாக சமூகத்தை மறுகட்டமைப்பு செய்து, சமூக சீர்த்திருத்தம் செய்து விடலாம் என்பது ஆரிய சமாஜிகளின் கருத்து. வர்ணாசிரம தர்மம் பிறப்பின் அடிப்படையில் இருந்ததை எல்லாரும் எதிர்த்ததால், தாங்கள் கட்டியெழுப்பவிருக்கும் நான்கு வர்ண அமைப்பில் வர்ணத்தை குணத்தின் அடிப்படையில் பிரிக்க வேண்டும் என்றனர். நீங்கள் சொல்லும் புதிய நால்வர்ண அமைப்பு பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்ற பழைய பெயர்களிலேயே ஏன் அமைய வேண்டும்? புதிய நம்பிக்கைகளை வளர்த்தெடுக்க வேண்டுமெனில் புதுப்பெயர்கள் இடப்பட வேண்டாமா? சாதியில் உயர்ந்த நிலையை அனுபவிக்கும் ஒருவன், குணத்தின் அடிப்படையில் அவனுக்கு அளிக்கப்படுகிற கீழ் நிலைக்குப் போக எப்படி ஒப்புக் கொள்ளுவான்? அவனைக் கட்டாயப்படுத்த முடியுமா?

வர்ண முறையை நடைமுறைப்படுத்த வேண்டுமெனில், சாதியை உடைக்க வேண்டும் அல்லவா? நவீன அறிவியல் குணங்களின் அடிப்படையில் சில வகுப்புகளாகப் பிரித்து, தொகுப்புகளாக அவர்களை குவிக்க முடியும் என்பதை ஏற்கவில்லை அல்லவா? சதுர்வர்ணத்தை பரிந்துரைப்பவர்கள் மக்களை வெற்றிகரமாகப் பகுத்து, அவற்றை மீறுவோர் மீது மநுதர்மம் விதிக்கும் தண்டனைகளைச் செயல்படுத்தத் தூண்டுவோம் என உறுதி கூறுவார்களா? சதுர்வர்ண அமைப்பில் பெண்களின் நிலை என்ன? இவை போன்ற கேள்விகளை எழுப்பி, பிறவி முட்டாளைத் தவிர வேறெவனும் நால்வர்ணத்தை வெற்றிகரமாக உயிர்ப்பிக்க முடியும் என நம்ப மாட்டான்.

அதை நடைமுறைப்படுத்த முடியும் என்றே வைத்துக் கொண்டாலும், இந்த ஏற்பாட்டில் சூத்திரன் தனது அடிப்படைத் தேவைகளுக்காக ஏன் பிறரை நம்பியிருக்க விடப்படுகிறான்? அவனுக்கு எதிராக பிற வர்ணத்தார் ஒன்றுபட்டோ, தனித்தனியாகவோ திரண்டாலோ, அவனைக் காக்க வேண்டிய தமது கடமைகளைக் கைவிட்டாலோ என்ன நடக்கும்? அதனால் சதுர்வர்ணம் கொடுமை யானது. புதிதாய் இருந்தாலும் சரி, பழையதாக இருந்தாலும் சரி என ஆரிய சமாஜிகளின் வாதத்தை நிராகரிக்கிறார் அம்பேத்கர்.

சாதிப் பிரச்சனை குறித்து நடுநிலை அணுகுமுறையைக் கைக் கொள்பவர்களில், சாதியில் வினோதமான வெறுக்கத்தக்க எதுவுமில்லை என்பவர்களின் வாதத்தை எடுத்துக் கொள்கிறார் அம்பேத்கர். இவர்கள், இந்து மதத்தில் மட்டுமா சாதி இருக்கிறது; முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறித்துவர்கள் என்பவர்களிடமும் கூடத்தான் சாதி இருக்கிறது என்று சாக்கு சொல்வார்கள். இந்துக்களிடம் இருக்கிற சாதியும், இந்துவல்லாத பிற சமூகங்களில் இருக்கிற சாதியும் அடிப்படையிலேயே வேறுபட்டிருப்பதைச் சுட்டிக் காட்டுவதோடு, அவ்வேறுபாடுகளையும் பட்டியலிடுகிறார் :

1. இந்துக்களை ஒன்றிணைக்கும் பிணைப்புகள் என்று எதுவும் இல்லை. இந்து அல்லாதோரிடம் அவ்வாறான பிணைப்புகள் நிறைய உள்ளன.

2. இந்துக்களிடம் சாதிக்கு இருக்கும் சமூக முக்கியத்துவம் இந்து அல்லாதவர்களிடம் இல்லை. சாதி விதிகளை மீறியதற்காக ஒரு முஸ்லிமையோ, சீக்கியரையோ சாதியில் இருந்து விலக்கி வைக்க மாட்டார்கள்.

3. பிற மதத்தினரிடையே சாதியைக் கடைப்பிடிப்பது என்பது ஒரு புனிதமான மதக்கடமையாக இல்லை. இந்துக்களிடமோ அது கட்டாயக் கடமை. பிற மதத்தினரிடையே சாதி என்பது வெறுமனே ஒரு பழக்கம். பிற மதத்தவர் சாதியை ஆரம்பித்து வைக்கவில்லை. சாதி அவர்களிடம் மிஞ்சி இருக்கிறது அவ்வளவுதான்.

எனவே, சாதிப்பிரச்சனையில் நடுநிலைமை வகிப்பது என்பது, உண்மையில் சாதிக்கு ஆதரவான நிலையை எடுப்பதுதான் என அவர் நிறுவுகிறார்.

சாதியை ஒழிக்கும் வழியாக ஜாட் பட் தோடக் மண்டல் அமைப்பினர் தேர்ந்து கொண்ட சாதி மறுப்புத் திருமணத்தை அம்பேத்கர் பாராட்டினாலும், அம்முறையில் பெரிய வெற்றி கிடைத்து விடாது என்கிறார். சாதி மறுப்புத் திருமணங்களும் சமபந்தி விருந்துகளும் ஏன் இந்துக்களிடம் பெரிய அளவுக்கு வரவேற்பைப் பெறவில்லை என்றால், அவற்றுக்குத் தடையாக இந்து மதத்தின் சாஸ்திரங்கள் இருக்கின்றன. சாஸ்திரங்களுக்கு விரோதமான ஒன்றைச் செய்வது மதவிரோதம். எனவேதான் இந்துக்களிடம் அது வரவேற்பைப் பெறவில்லை. சாதி மறுப்புத் திருமணங்கள் பரவலாகாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாய் நடப்பதால் பெரிய பயன் எதுவும் விளையப் போவதில்லை.

எனவே, உண்மையிலேயே சாதி ஒழிக்கப்பட்டு சமூக மாற்றம் வர வேண்டுமானால், சாதிக்கு ஆதாரமாக இருக்கிற சாஸ்திரங்களோடு, இந்து மதத்தையும் ஒழிக்க வேண்டும். இந்து மதம் என வழங்கப்படுவது உண்மையில் ஒரு மதமே அல்ல. கட்டுப்பாடுகளையும், தடைகளையும் விதிக்கின்ற ஒரு சட்டங்களின் தொகுப்புதான். எனவே அதை ஒழிக்க வேண்டும் என்பதில் மதவிரோதம் என்று எதுவுமில்லை. எனவே, நான் மதம் மாற முடிவு செய்து விட்டேன் என்று தனது உரையை முடிக்கிறார்.

இத்தொகுப்பிலுள்ள முதல் கட்டுரையை அம்பேத்கர் 1916 இல் எழுதியிருக்கிறார். அப்போது அவருக்கு வயது 25. அந்தக் கட்டுரையை வாசித்தீர்கள் என்றால், அந்த இளம் வயதிலேயே அவரது மேதமை மட்டுமல்ல; அவ்வுரை முழுக்க ஒரு துடிப்பும், நம்பிக்கையும் தெரியும். நான் அவநம்பிக்கைவாதி அல்ல; தெரிந்து கொள்ளாத பகுதியில் இருப்பதை முடியாது என விலக்கிவிட மாட்டேன்; என்னால் அது முடியும் என்பது தெரியும் என்று தனது உரையின் தொடக்கத்தில் சொல்வார்.

செனார்ட், நெஸ்பீல்ட், ரிஸ்லி என்கிற மேலைய அறிஞர்களின் ஆய்வையும், டாக்டர் கெட்கரின் ஆய்வையும் வெகு சாதாரணமாக எதிர்கொண்டு, அவற்றைக் கடந்து தனது ஆய்வை எடுத்துச் செல்கிறார். அந்த சிந்தனையாளர்கள் இருபது ஆண்டுகள் கழித்து ‘சாதி ஒழிப்பு' என்கிற நூலின் தொடக்கத்தில் தன்னைக் குறித்து அன்றைக்கு நாட்டிலிருந்த சாதி இந்துக்கள் என்ன மாதிரியான மதிப்பீட்டை வைத்திருந்தார்கள் என்று மனம் விட்டுக் கூறுகிறார் கேளுங்கள் : "இந்துக்கள் என்னை வெறுக்கின்றனர். தங்கள் தோட்டத்தில் உலவும் ஒரு பாம்பாகவே என்னைக் கருதுகின்றனர்.''

அதே போன்று தனது உரையின் முடிவில் இப்படிக் குறிப்பிடுகிறார்:

"எனது ஒரே பரிசு தேசியப் பத்திரிகைகள், தேசியத் தலைவர்கள் என்பவர்களின் குற்றச் சாட்டுகள் மற்றும் வசைமாரி ஆகியவை மட்டும்தான்."

Pin It