பெரியார் மீதான விமர்சனங்களுக்கு மறுப்பு (3)

பெரியார் முடிவெய்தி 50 ஆண்டுகள் கழிந்த பின்னரும் பெரியார் பற்றிய நினைவுகளும், தாக்கங்களும் ஒவ்வொரு நாளும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதே ரவிக்குமாரை ஆசிரியராகக் கொண்டு, நெய்வேலியில் இருந்து வெளிவந்த ‘தலித்’ இதழில் இதே இளையபெருமாள் என்ன சொல்லியிருக்கிறார் என்பதையும் பார்ப்போம்.

‘தலித்’ எண்.1 இதழ் ஏப்ரல்,1997 இதழில் ஒரு நேர்காணல்:

el ilaiyaperumal vaazhvum paniyum “தற்கொலைப் படையாக மாறுங்கள்!

தலைவர் எல்.இளையபெருமாளிடம் ஒரு பேட்டி...என்ற தலைப்பில் பக்கம் 11 முதல் பக்கம் 17 முடிய ஏழு பக்கங்களைக் கொண்ட பேட்டி அது. நாம் விவாதிக்கும் பொருள் குறித்த செய்தி பக்கம் 15இல் உள்ளது.

கேள்வி: கே.பி.எஸ்.மணியோடு உங்களுக்கு எப்போது இருந்து பழக்கம்?

பதில்: 1945 முதல் அவரோடு பழக்கம். முதலில் அவர் பெரியார் கட்சியில் இருந்தார். பெரியார் கூட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு முழு மனசோடு பாடுபடவில்லை. அம்பேத்கர் பிறந்த விழா நடத்தியதற்காக தொண்டு வீராசாமியை பெரியார் கட்சியை விட்டு நீக்கினார். பறை மேளம் அடிக்கக் கூடாது என்று கே.பி.எஸ் மணி பிரச்சாரம் செய்தார்.

பறைமேளம் அடிப்பதால் என்ன தவறு என்று பெரியார் அவரிடம் கேட்டார். நம் கட்சிக்காரர்கள் அனைவரும் மேளம் அடிக்கலாமென உத்தரவு போடுங்கள். நான் அதை எதிர்க்கவில்லை. ஆனால் எங்கள் சாதி மக்களை மட்டும் அடிக்கச் சொன்னால் அதை நான் எதிர்ப்பேன் என்று பெரியாரிடம் கே.பி.எஸ்.மணி சொல்லிவிட்டார். தன்னை எதிர்த்துப் பேசியது பிடிக்காமல் அவரைப் பெரியார் கட்சியைவிட்டு நீக்கிவிட்டார்... என்ற பகுதியே அது.

பூவிழியன் என்பவரால் எழுதப்பட்டு 2005 ஆம் ஆண்டு வெளியிட்ட ”கே.பி.எஸ்.மணி : ஒரு போராளியின் வரலாறு” என்றொரு நூல். எல்.இளையபெருமாள் அவர்களுடன் இணைந்து பணியாற்றிய கே.பி.எஸ்.மணி என்பவரின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் நூல் அது.

அந்நூலின் 110,111 ஆகிய பக்கங்களில் உள்ள செய்தி ஒன்றினைக் காண்போம்.

ராணுவத்திலிருந்து 1946-ல் திரும்பியப் பிறகு ‘விடுதலை’ பத்திரிக்கையை கையில் எடுத்துக்கொண்டு “நான் இந்த கட்சியை இங்கு ஆரம்பிக்கப் போகிறேன்” என கே.பி.எஸ்.மணி அலைந்துள்ளார். தந்தையை ஒரு நாள் நள்ளிரவில் எழுப்பி இதனைக் கூறியும் இருக்கிறார். தீண்டாமை ஒழிப்பு, சாதி ஒழிப்பு பற்றி பெரியார் விடுதலை பத்திரிக்கையில் எழுதியதாலும், இவைகளைப் பற்றி கிராமங்கள் தோறும் பிரச்சாரம் செய்து வருகின்றார் என கேள்விப்பட்டதன் வாயிலாகவும் இவரின் கருத்துக்களை ஏற்றுக் கொண்டவராக இரண்டு வருடங்கள் இருந்தார் கே.பி.எஸ்.மணி.

அப்பொழுது பெரியார் சிதம்பரத்தில் திராவிடர் கழகக் கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ள வரும்போது அதில் கே.பி.எஸ்.மணி கலந்து கொண்டார். கூட்டம் நிறைவு பெற்றபின் கே.பி.எஸ்.மணி ஒரு வேண்டுகோளை பெரியாரிடம் கூறினார். அதாவது தாங்கள் தீண்டாமை மற்றும் சாதி ஒழிப்பிற்காக மிகக் கடுமையான முறையில் பாடுபட்டு வருகிறீர்கள். அதனால், தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டுமே செய்கின்ற பிணம் புதைத்தல், பறை அடித்தல், பிணக்குழி வெட்டுதல், இறந்த மாடுகளைத் தூக்குதல் போன்ற வேலைகளை இனி செய்யக்கூடாது. அவரவர் வகுப்பில் உள்ளவர்களே அவர்களுக்கான இவ்வேலையை செய்து கொள்ள வேண்டும் என விடுதலையில் ஒரு நாள் தலையங்கம் எழுதுங்கள் என்று கேட்டார்.

உடனே பெரியார் “மணி, என் கட்சியையும், என் பத்திரிக்கையையும் ஒரே அடியாகக் கெடுக்கிறதா நீ முடிவு பண்ணிட்டியா, இந்தத் தொழில் எல்லாம் தாழ்த்தப்பட்ட மக்கள் செய்யக் கூடாதுன்னா, அப்புறம் யார் தான் செய்யுறது” எனக் கேட்டார். இதற்கு பதில் கூற விரும்பாத கே.பி.எஸ்.மணி அன்றைய தினத்தில் இருந்து பெரியாரின் உறவையும், அவரின் கொள்கைகளையும் விட்டு விலகினார்.

 கே.பி.எஸ்.மணி 1946-இல் இராணுவத்தில் இருந்து திரும்பிய பின்னர் திராவிடர் கழகத்தில் இணைந்தார். இரண்டு ஆண்டுகள் இருந்தார். பெரியார் பறை ஒழிப்பை ஏற்கவில்லை; அதனால் திராவிடர் கழகத்திலிருந்து விலகினார். இதுவே அவரது வாழ்க்கை வரலாற்று நூல் சொல்லும் செய்திகளின் சாரம்.

இவற்றின் உண்மைத் தன்மையை ஆராய்வோம். 1947 முதல் 1948 முடிய பெரியார் இரண்டு முறை மட்டுமே சிதம்பரம் வந்துள்ளார். முதல் முறை 1947 மார்ச் 8ஆம் நாள். இரண்டு ஆண்டுகள் திராவிடர் கழகத்தில் இருந்துள்ளார் கே.பி.எஸ்.மணி. எனவே சந்திப்பும் விவாதமும் நடந்தது அந்த நாளில் இருக்க முடியாது. அடுத்ததாக சிதம்பரம் வந்தது 29.9.1948 அன்று நடந்த பொதுக் கூட்டத்திற்காகத் தான். அன்று நடந்த சிதம்பரம் நிகழ்வை குறித்து 30.9.1948 விடுதலை கீழ் காணும் செய்தியை வெளியிட்டுள்ளது.

 சிதம்பரம்,செப் 29 : கழகக் கொடி தாங்கிய ஆயிரக்கணக்கான கருஞ்சட்டைத் தோழர்கள் முன்னே அழகுற அணிவகுத்துச் செல்ல, பல்லாயிரக்கணக்கான மக்கள் இயக்க ஒலி முழக்கம் செய்து கொண்டு பின் செல்ல, பெரியார் அவர்களும் தோழர் மதியழகன் அவர்களும் காரில் அமர்த்தப்பட்டு இவ்வூர் மேலவீதி அஞ்சல் நிலையத்திலிருந்து ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். மாலை 5 மணிக்கு ஊர்வலம் தொடங்கி தெற்கு வீதி, ரயிலடித் தெரு இவற்றின் ஊடே சென்று 5:45க்கு டவுன்ஹால் மைதானத்தை அடைந்தது. பெரியார் அவர்கள் காரை விட்டு இறங்கவும், ஏற்கனவே மைதானத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களும் “பெரியார் வாழ்க, பெரியார் வாழ்க” என்று வாழ்த்தொலி முழக்கம் செய்து பெரியார் அவர்களை வரவேற்றனர். ஆங்காங்கு மின் விளக்குகளும், ஒலிபெருக்கிகளும் அழகுற அமைக்கப்பட்டிருந்தன.

கூட்டத்தில் உள்ளூர் வெளியூர் தோழர்கள் உட்பட சுமார் 15 ஆயிரம் மக்கள் கலந்து கொண்டனர். பெரியார் அவர்கள் மேடை மீது அமரவும் தோழர்கள் இன்னிசை பாடினர். பிறகு மதியழகன் தலைமையில் பொதுக்கூட்டம் இனிது தொடங்கியது. தில்லை திராவிடர் கழகத் தலைவர் தோழர் கிருஷ்ணசாமி அவர்கள் அனைவருக்கும் நல்வரவு கூற, தோழர் திருநாவுக்கரசு அவர்கள் தில்லை திராவிடர் கழகத்தின் சார்பில் பெரியார் அவர்களுக்கு வரவேற்புரை வாசித்தளித்தார். பிறகு செல்வம் வாசகசாலை, அவ்வையார் கல்விக் கழகம், தெற்கிருப்பு மக்கள் கழகம், அண்ணாமலை நகர் இளைஞர் கழகம், புவனகிரி நெசவு தொழிலாளிகள் சங்கம், அண்ணாமலை நகர் திராவிட மாணவர் கழகம், கூத்தன் கோயில் திராவிடர் கழகம் ஆகிய கழகங்கள் சார்பாக மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டதோடு, கூத்தன் கோயில் திராவிடர் கழகத்தின் சார்பாகவும், திருவிடைமருதூர் திராவிடர் கழகத்தின் சார்பாகவும் முறையே 101 நாலணாக்கள் கொண்ட பணமுடிப்புகள் இந்தி எதிர்ப்பு நிதிக்காக நன்கொடையாக அளிக்கப்பட்டது.

தோழர் மதியழகன் தலைமை உரைக்குப் பின்பு தோழர் ஏ.பி. ஜனார்த்தனம் அவர்கள் சிறிது நேரம் பேசினார். பிறகு பெரியார் அவர்கள் நீண்ட கைத்தட்டலுக்கிடையே எழுந்து, காந்தியார் மறைவு குறித்தும், ஜின்னா மறைவு (11.09.1948) குறித்தும் வருத்தம் தெரிவித்துக் கொண்டதோடு இவர்கள் மறைவால் நாட்டுக்கேற்பட்ட நஷ்டத்தைப் பற்றியும் குறிப்பிட்டு விட்டு திராவிடர் கழகத்தின் வளர்ச்சி, திராவிடர் கழகத்தால் சாதிக்கப்பட்ட அருஞ்செயல்கள், காங்கிரசின் பிற்போக்கு, பார்ப்பனிய வர்ணாசிரம தர்மம் அழிக்கப்பட வேண்டியதன் அவசியம், இந்தி எதிர்ப்பின் நேர்மை, மாணவர் கடமை, பெண்கள் முன்னேற்றம் என இன்னோரன்ன பல விஷயங்கள் பற்றியும் மிகத் தெளிவாக சுமார் 3:15 மணி நேரம் பேசினார்.

கூட்டத்திற்கு வந்திருந்த பல்லாயிரக்கணக்கான மக்களும் பெரியார் அவர்களது சொற்பொழிவை மிக அமைதியாகக் கேட்டனர். தாய்மார்களும், குறிப்பாக கல்லூரி மாணவிகளும் பெரும் அளவுக்கு கூட்டத்தில் வந்து கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இரவு 10:30 மணிக்கு கூட்டம் இனிது முடிவுற்றது. பெரியார் அவர்கள் அனைவருக்கும் நன்றியும் வணக்கமும் தெரிவித்துக் கொண்டு, தோழர் பொன் ராமலிங்கம் அவர்கள் அழைப்புக்கிணங்கி அவருடன் புதுவை வந்து இரவு 1 மணிக்கு உணவு எடுத்துக்கொண்டு திண்டிவனம் வழியாக 30ஆம் தேதி காலை சென்னை வந்து சேர்ந்தார்கள்.

இவ்வாறு முழு செய்தியையும் எழுத வேண்டி வந்ததற்குக் காரணம் இல்லாமல் இல்லை.

”பெரியார் சிதம்பரத்தில் கழகக் கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ள வரும்போது அதில் கே.பி.எஸ்.மணியும் கலந்து கொண்டார். கூட்டம் நிறைவு பெற்ற பின் கே.பி.எஸ்.மணி ஒரு வேண்டுகோளை பெரியாரிடம் கூறினார்” என்கிறது கே.பி.எஸ்.மணியின் வாழ்க்கை வரலாறு.

29.9.1948 அன்று கூட்டம் முடிவுற்றதும், ‘பெரியார் அவர்கள் அனைவருக்கும் நன்றியும் வணக்கமும் தெரிவித்துக் கொண்டு தோழர் பொன் ராமலிங்கம் அவர்கள் அழைப்புக்கிணங்கி அவருடன் புதுவை புறப்பட்ட செய்தியை ‘விடுதலை’ ஏடு கூறுகிறது. அவ்வாறாக கூட்ட மைதானத்தில் இருந்து புதுவை தோழருடன் புறப்பட்டு விட்ட பெரியாரிடம் கே.பி.எஸ்.மணியின் வாழ்க்கை வரலாற்று நூல் கூறுவது போன்ற (கூட்டம் நிறைவு பெற்றபின் கே.பி.எஸ்.மணி ஒரு வேண்டுகோளை பெரியாரிடம் கூறினார் ) நீண்ட உரையாடலை நிகழ்த்துவதற்கான வாய்ப்பெதுவும் இருந்திருக்க முடியாது என்பதை எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

தொகுத்துப் பார்ப்போம்.

ரவிக்குமார் இளையபெருமாள் அவர்களின் “75வது பிறந்தநாளின் போது அவரிடம் பதிவு செய்யப்பட்ட அவரது சுருக்கமான தன் வரலாற்றை ‘சித்திரை நெருப்பு’ என்ற பெயரில் சிறு நூலாக வெளியிட்டேன். அந்த ஆண்டுதான் தமிழக அரசின் ‘ அம்பேத்கர் விருது’ அவருக்கு வழங்கப்பட்டது“ என்று அவரது 2010ஆம் ஆண்டு பதிப்பின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். (இளைய பெருமாளுக்கு தமிழக அரசின் ‘அம்பேத்கர் விருது’ வழங்கப்பட்டது 24.12.1998 அன்று ஆகும்)

அந்த ‘சித்திரை நெருப்பு’ நூலின் 56ஆவது பக்கத்தில் பறை ஒழிப்புக்கு ஆதரவு கேட்டபோது “இந்த தொழிலை வேறு யார் செய்வது? இளையபெருமாள் நீயே ஒரு மாற்றுக் கூறு” என்று 20.1948 அன்று சிந்தாதிரிப்பேட்டை வீட்டில் சந்தித்து கேட்டபோது சொன்னதாக குறிப்பிட்டுள்ளார். 20.12.1948 அன்று இரவு தான் சிறைபடுத்தப்பட்ட பெரியார் தஞ்சையில் விடுதலை செய்யப்பட்டார் என்ற செய்தியை முன்னரே கூறியுள்ளோம்.

அதே தலைவர் இளையபெருமாள் நெய்வேலி இருந்து அதே ரவிக்குமாரின் தொகுப்பிலும் தயாரிப்பிலும் வெளிவந்த ‘ தலித்’ ஏட்டின் முதல் இதழில் (1997, ஏப்ரல்) ரவிக்குமாரும் உடன் இருந்து பதிவு செய்த நேர்காணலில்

“பறை மேளம் அடிக்கக் கூடாது” என்று கே.பி.எஸ்.மணி பிரச்சாரம் செய்தார்.

பறைமேளம் அடிப்பதால் என்ன தவறு என்று பெரியார் அவரிடம் கேட்டார், அனைவரும் மேளம் அடிக்கலாம் என்று உத்தரவு போடுங்கள் நான் அதை எதிர்க்கவில்லை, ஆனால் எங்கள் சாதி மக்களை மட்டும் அடிக்கச் சொன்னால் அதை நான் எதிர்ப்பேன் என்று பெரியாரிடம் கே.பி.எஸ்.மணி சொல்லிவிட்டார்“ என்று கே.பி.எஸ்.மணி வாதிட்டதாக உள்ளது.

1997 ‘தலித்’ தலித் ஏட்டில் கே.பி.எஸ்.மணி பறை அடிப்பதை தடுக்க வேண்டும் என்று வாதிட்டதாக ரவிக்குமார் எடுத்த நேர்காணலில் கூறியுள்ளார் இளையபெருமாள்.

1998ஆம் ஆண்டு இளையபெருமாளின் 75ஆவது பிறந்தநாளை ஒட்டி ரவிக்குமார் பதிவு செய்த நேர்காணலில் (‘சித்திரை நெருப்பு நூல்’) இளையபெருமாளே பெரியாரிடம் கேட்டதாகவும் பெரியார் மறுத்ததாகவும், அதே இளையபெருமாள் கூறியுள்ளார்.

இரண்டில் எது உண்மை? இரண்டு நேர்காணலையும் பதிவு செய்த ரவிக்குமார்தான் விளக்க வேண்டும் அல்லது இரண்டுமே பொய்யா?

ரவிக்குமார் இதில் முரண்பட்டு நிற்கிறார். ஒரு நேர்காணல் பதிவில் கே.பி.எஸ்.மணி பெரியார் பறை அடிப்பது குறித்து கேள்விக் கேட்டார் என இளையபெருமாள் கூறினார் என்கிறார். அடுத்த ஆண்டு இளையபெருமாளே பெரியாரிடம் பறை அடிப்பது குறித்து கேட்டதாக இளையபெருமாள் கூறினார் என்கிறார்.

(தொடரும்)

கொளத்தூர் மணி

Pin It