மஹத் : முதல் தலித் எழுச்சி உருவாக்கம் ஆனந்த் டெல்ட்டும்டே (2016) 

(Mahad: Anand Teltumbde (2016) Published by aakar books)

சென்ற இதழின் தொடர்ச்சி...

1927 மார்ச்சில் நிகழ்ந்த மஹத் மாநாடு, சாதி இந்துக்களின் அடக்குமுறைக்கு ஆளானபோதிலும் கொங்கன் பகுதியில் வாழ்ந்த தீண்டத்தகாதோரிடம் நல்ல முறையிலான தாக்கத்தை ஏற்படுத்தியது. இப்பகுதியில் வாழ்ந்த குன்பிகள், பிராமணர்கள் ஆகியோரிடம் பல நூற்றாண்டுகளாக இரந்துண்டு வாழ்ந்த இம்மக்கள் இதைக் கைவிட்டனர். அத்துடன் இறந்த விலங்குகளை அப்புறப்படுத்தும் வேலையைச் செய்ய மறுத்தனர். இது இச்சமூகங்களுக்கிடையில் மோதலை உருவாக்கியது.

பெரும்பான்மையான தீண்டத்தகாத மக்கள் ஆதிக்க சாதியினருக்கு எதிராகப் போராடினார். தலித் இயக்கச் செயல்பாட்டாளர்கள் இப்பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இவர்களை வழிநடத்தினர்.

மஹத் போராட்டம் வெற்றி பெற்றால் அது கொங்கன் பகுதியில் மட்டுமின்றி மராத்தி மொழி பேசும் பகுதிகளிலும், ஏனைய பகுதிகளிலும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும். அது தோல்வியுற்றாலோ இயக்கத்தை அழிப்பதுடன் இவ்வியக்கத்தின் தொடக்கநிலையிலேயே இம்மக்களின் மனஉறுதியைச் சிதைத்துவிடும் என்பதை அம்பேத்கர் உணர்ந்தார். எனவே இப்போராட்டத்தில் வெற்றி அடையும் வரை இவ்வெழுச்சி உணர்வைத் தக்கவைத்துக் கொள்ள விரும்பினார்.

முதல் மஹத் மாநாட்டின் போராளர்கள், சௌதார் குளம் நோக்கி அணிவகுத்துச் சென்றதும் அதில் தண்ணீர் பருகியதும் சாதி இந்துக்களிடம் கடுமையான எதிர்வினையை ஏற்படுத்தியது. இச்செயலானது எவ்விதச் சீர்திருத்தங்களையும் சாதி இந்துக்கள் எளிதில் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பதை வெளிப்படுத்தியது. போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இது உணர்த்தி நின்றது.

போராட்டத்தை தீவிரப்படுத்தாவிட்டால் தலித்துகளுக்குத் தோல்வியாக மட்டுமின்றி, மாநாட்டின் சாதனைகளைப் பின்னுக்குத் தள்ளிவிடும். எனவே சௌதார் குளத்தின் மீதான உரிமையை நிலைநாட்டும் வரை போராட்ட உணர்வுடன் அவர்கள் இருக்க வேண்டும். இதை நிலைநாட்ட, அதிகக் கால இடைவெளி இல்லாமல் பெரிய அளவில் அறப் போராட்டத்தை நடத்த வேண்டும்.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு முழுமையான தயாரிப்புடன், சௌதார் குளம் மீதான உரிமையை நிலைநாட்டும் வகையில் அறப்போருடன் பிணைப்பு கொண்ட மாநாட்டை நடத்த அம்பேத்கர் முடிவெடுத்தார். இதன் அடிப்படையில் மும்பையில் தலித்துகள் வாழும் பகுதிகளில் நாள்தோறும் கூட்டங்கள் நிகழ்ந்தன. பொதுக்கூட்டங்கள், துண்டறிக்கைகள், சுவர் விளம்பரங்கள் வாயிலாக மும்பையிலும் மராத்தி பேசும் பகுதிகளிலும் கருத்துப்பரப்பல் நிகழ்ந்தது. அறப்போருக்கான நிதிக்காக மக்கள் தாராளமாக நன்கொடை வழங்கலாயினர். மிகவும் விரிந்த முறையில் தீண்டத்தகாத மக்களால் திட்ட மிட்டு நடத்தப்பட்ட முதல் வரலாற்று நிகழ்வாக இது அமைந்தது என்பது நூலாசிரியரின் மதிப்பீடாகும்.

மாநாட்டின் ஏற்பாடுகளைக் கவனிக்க மட்டுமின்றி பாதுகாப்புகளை மேற்கொள்ளவும் குழுக்களை உருவாக்குவது குறித்தும் அம்பேத்கர் சிந்தித்தார்.

···

மஹத் போராட்டத்தில் பிராமணர் அல்லாதாரின் தலைவர்களிடம் இருந்தும் ஆதரவு கிட்டியது.

தம் ஆதரவை செய்தித்தாள்களில் இரு கடிதங்கள் வாயிலாகத் தெரிவித்தனர். இதில் ஒரு கடிதம், பிராமணர் எவரையும் இணைத்துக் கொள்ளக் கூடாது என்ற நிபந்தனையைக் குறிப்பிட்டிருந்தது. இந்நிபந்தனை குறித்து ‘பகிஷ்கரத் பாரத்’ என்ற இதழில் (29-07-1927) எழுதிய தலையங்கத்தில் அவர் தம் கருத்தை வெளிப்படுத்தினார்.

அதில், பிராமணராகப் பிறந்த எவரும் சீர்திருத்த எண்ணம் உடையவராக இருக்க முடியாது என்ற கருத்தைத் தாம் நம்பவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

பிராமணரோ பிராமணர் அல்லாதவரோ, நம் இலட்சியங்கள் மீது அனுதாபம் கொண்ட அனைவரின் ஆதரவும் நமக்குத் தேவை என்பதை அத்தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தார். பிராமணர்களை விலக்கி வைப்பதென்பது, கொள்கை அடிப்படையில் மட்டுமின்றி நடைமுறைச் செயல்பாட்டின் அடிப்படையிலும் தவறானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இறுதியாக, தீண்டாமையை வேர் அறுக்கவே, அறப்போராட்டம் என்பதையும், வேறு எவ்விதக் குறிக்கோளும் இணைக்கப்படாத இப்போராட்டத்தில் தீண்டத்தகாத மக்கள் பிரிவினருடன் அனைவரும் இணைந்து கொள்ளலாம் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

சாதி இந்துக்களின் சூழ்ச்சி

சௌதார் குளத்தின் மீதான தம் மனித உரிமையை நிலைநிறுத்த அம்பேத்கரும், அவரது தோழர்களும், மஹர் மக்களும் ஒன்றுதிரண்டு செயல்பட்டுக் கொண்டிருக்க, மற்றொரு பக்கம் சாதி இந்துக்கள் தம் சூழ்ச்சிகளை உருவாக்கலாயினர்.

முன்னர் குறிப்பிட்ட, ‘போல் தீர்மானத்தின்’ அடிப் படையிலேயே மஹத் நகராட்சி 1924 சனவரியில் இருந்து, அனைத்துப் பொது இடங்களையும் தீண்டத் தகாத மக்கள் பிரிவினர் பயன்படுத்தும் உரிமையை வழங்கியது.

20 மார்ச் 1927 இல் சௌதார் குளத்து நீரை அம்பேத்கரும் அவருடன் வந்தோரும் பருகியதற்கு இத்தீர்மானம் பக்கபலமாக இருந்தது.

எனவே நகராட்சியின் தீர்மானம், சட்ட விரோதமானது என்று நிறுவ சாதி இந்துக்கள் திட்டமிட்டனர். இதன் அடிப்படையில், சௌதார் குளமானது பொதுச் சொத்தல்ல, தனியார் சொத்து என்று நிறுவும் முயற்சியில் ஈடுபட்டார்கள். ஆனால் இதற்கான சான்றுகளை அவர்களால் திரட்ட முடியவில்லை.

எனவே 'போல் தீர் மானத்தை' நடைமுறைப் படுத்தும்படி அரசு வலி யுறுத்தக் கூடாது என்ற கருத்தை முன்மொழிந்தனர். மும்பை மாநிலத்திலும், கொங்கன் பகுதியிலும் அமைதி நிலவ வேண்டும் என்று அரசு விரும்பினால், அனைத்து நீர்நிலைகளும் பொது இடங்களும் அனை வருக்கும் பொதுவானது என்ற ‘போல் தீர்மானத்தை’ நிறைவேற்றக் கூடாது என்றனர். இக்கருத்தை உள்ளடக்கிய தீர்மானத்தை 4 ஆகஸ்ட் 1927இல் மஹத் நகரசபை நிறைவேற்றி அரசுக்கு அனுப்பியது.

அதிகாரிகளின் மனநிலை

தன் முந்தைய நிலையில் இருந்து பின்வாங்கி, மஹத் நகராட்சி நிறைவேற்றிய தீர்மானத்தை கொலபா மாவட்டத்தின் காவல்துறைக் கண்காணிப்பாளர் வரவேற்று தன்னுடைய இரகசியக் குறிப்பேட்டில் எழுதினார்.

தற்போது பொதுமக்களிடம் நிலவும் கருத்தின் அடிப்படையில் நோக்கும்போது அதன் பழைய தீர்மானத்தை நடைமுறைப்படுத்த முடியாது என்பது அவரது கருத்தாக இருந்தது. இருந்தபோதிலும் எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் தீண்டத்தகாத மக்களுக்கு குடிதண்ணீர் கிடைப்பதில் உள்ள சிரமத்தைப் போக்கவேண்டும் என்றும் அதில் பதிவு செய்திருந்தார்.

ஆனால் மாவட்டக் குற்றவியல் நீதிபதி மஹத் நகரசபையின் இத்தீர்மானம் மோசமானது என்ற கருத்தை, தன் பணிதொடர்பான குறிப்பேட்டில் பதிவு செய்தார். பிரச்சினைகளைச் சிக்கலாக்குவதுடன், தம் உரிமையை நிலைநாட்ட மேலும் துடிப்பான நடவடிக் கைகளை தாழ்த்தப்பட்ட மக்கள் எடுப்பார்கள் என்றும் குறிப்பிட்டார்.

உள்துறையின் கணிப்பு

ஆனால் மும்பை மாநில அரசின் உள்துறை (அரசியல் பிரிவு) மஹத் நகராட்சி முதலில் எடுத்த முடிவையே ஆதரித்தது. தற்போது எடுத்துள்ள முடிவு சரியானதல்ல என்று கருதியது. அதே நேரத்தில், சாதி இந்துக்களுக்காக என்றே கட்டப்பட்டு பின்னர் நகராட்சியால் எடுத்துக்கொள்ளப்பட்ட நீர் நிலைகளுக்கு மட்டும் விதிவிலக்களித்தது.

நகராட்சியோ, சாதி இந்துக்களோ, தாழ்ந்த சாதியினர், தம் உரிமையை நிலைநாட்டுவதைத் தடுக்கும் செயலுக்கு மாவட்டக் குற்றவியல் நீதிபதி உதவக் கூடாது என்றும் வலியுறுத்தியது.

நகராட்சியின் குளத்தை தீண்டத்தகாதவர் ஒருவர் பயன்படுத்துவதைத் தடுக்கும் செயலானது மரபு சார்ந்த ஒன்றே தவிர சட்டப் படி சரியானதல்ல. சௌதார் குளம் சாதி இந்துக்களுக் குரிய குளம் என்போர் தம் உரிமையை சட்டப்படி நிலைநாட்ட வேண்டும் என்று உள்துறை வழிகாட்டியது.

சௌதார் குளத்தின் உரிமையைப் பொறுத் தளவில் அதைத் தமது என்று நிரூபிக்கும் ஆவணங்கள் எவையும் சாதி இந்துக்கள் தரப்பில் இல்லை என்று கொலாபா மாவட்டக் குற்றவியல் நீதிபதி உறுதி செய்தார். அது கிராமத்தின் பொதுச் சொத்தாக இருந்துள்ளது. அது யாரால் எப்போது உருவாக்கப் பட்டது என்பதற்கும், இது சாதி இந்துக்களுக்கானது என்பதற்கும் சான்றில்லை. இக்குளத்தை மஹத் நகரசபை தன் பொறுப்பில் எடுத்த போது ஒரு குறிப்பிட்ட வகுப்பாரின் பயன்பாட்டிற்கு மட்டுமே உரியது என்ற விதிமுறைக்கு உட்படவில்லை.

அதே நேரத்தில் இக்குளத்தின் மீதான மஹர்களின் உரிமைக்கு எதிராகவும் சில கருத்துக்களை முன்வைத்தார்.

(1) சாதி இந்துக்களது குடியிருப்புப் பகுதியின் மத்தியில் சௌதார் குளம் உள்ளது.

(2) இதில் இருந்து, தீண்டத் தகாதவர்கள் நீர் எடுக்கும் வழக்கம் இருந்ததில்லை

(3) நகராட்சியால் பராமரிக்கப்படும் கிணறு ஒன்று இக்குளத்தில் இருந்து இரண்டு பர்லாங் (1/4மைல்) தொலைவில் தீண்டத்தகாதவர்களுக்கென்று உள்ளது.

(4) குளத்தைச் சுற்றிலும் குடிஇருக்கும் சாதி இந்துக் களுக்கென்று இருபது படித்துறைகள் குளத்தின் எல்லாப் பக்கங்களிலும் உள்ளன. மூன்று படித்துறைகள் நகராட்சியால் கட்டப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.

இக்குளத்தை 50(2)(பி) பிரிவின் கீழ் நகராட்சி பராமரித்து வருகிறது. ஆனால் இப்பிரிவு ‘பொது வானது’ என்ற சொல்லை வரையறுக்கவில்லை.

சௌதார் குளம் தனியார் சொத்து என்று நிலைநாட்ட மஹத் நகர சாதி இந்துக்கள் முயற்சி செய்வதாகவும், தீண்டத் தகாதவர்கள் டிசம்பர் மாதத்தில் இக்குளத்திற்குள் கூட்டமாகத் திரண்டு செல்ல முயற்சி செய்தால் அச்செயலானது அமைதியை நிலைநாட்ட உதவாது என்றும் ஆபத்தான கல வரத்தை தாம் எதிர்பார்ப்ப தாகவும் குறிப்பிட்டிருந்தார்.

தீண்டத் தகாதவர்கள் குளத்தில் நுழைவதையோ சாதி இந்துக்கள் அதைத் தடுப்பதையோ தடுத்து நிறுத்துவதற்கு, கடுமையான வழிமுறையைத் தாம் மேற்கொள்ள அனுமதிக்கும் வகையில் ஆணை பிறப்பிக்க வேண்டியிருந்தார்.

இதன் தொடர்ச்சியாக மாவட்ட அதிகாரிகளுக்கும், உள்துறைக்கும் இடையே கடிதப்போக்கு வரத்து நடந்தது. மஹர்களின் நியாயமான வேண்டு கோளை நிறைவேற்றும் ஆர்வத்தைவிட, சௌதார் குளத்தை மையமாகக்கொண்டு உருவாகும் சட்ட ஒழுங்குச் சிக்கலை எதிர்கொள்வது குறித்தே மாவட்ட உயர் அதிகாரிகள் சிந்தித்ததையே இக்கடிதப் போக்கு வரத்து வெளிப்படுத்துகிறது. ஆனால் உள்துறையின் அனுகுமுறை மஹர்களுக்கு ஆதரவாக இருந்தது.

மகாநாட்டுக்கான ஆயத்தம்

நவம்பர் 1927இல் மாநாட்டுக்கான பணிகள் முழு வீச்சுடன் நிகழலாயின. துண்டுப் பிரசுரங்கள் மஹத்திலும், சுற்றியுள்ள பகுதிகளிலும் விநியோகமாயின.

முந்தைய மார்ச் திங்கள் மாநாட்டின்போது தீண்டத் தகாதவர்களைத் தாக்கிய ஒன்பதுபேர் தண்டிக்கப் பட்டனர். இதைச் சுட்டிக்காட்டி, சௌதார் குளத்தில் தண்ணீர் எடுக்க சட்டப்படி தீண்டத்தகாதவர்களுக்கு உரிமை இருப்பதாக இவ்வெளியீடுகள் குறிப்பிட்டன.

தம் உரிமையை நிலைநாட்ட டிசம்பர் 25இல் நிகழும் மாநாட்டிற்கு வரும் படி வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

நவம்பர் 5 ஆவது நாள் வெளியான ‘கொலாபா சமாச்சர்’ என்ற இதழில் டிசம்பரில் நிகழ இருக்கும் அறப்போர் குறித்த செய்தி வெளியானது. அவசர கதியில் அல்லாமல் அமைதியாக இச்சிக்கலை எதிர்கொள்ளும் படி அம்பேத்கருக்கு அறி வுரை கூறியது. அதே நேரத்தில், குளத்தை, தூய்மையாக வைத்திருத்தல் என்ற கட்டுப் பாட்டுடன் அதைப் பயன் படுத்த தீண்டத்தகாத மக்களை அனுமதிக்கும்படி மஹத்தின் சாதி இந்துக் களுக்கு வேண்டுகோள் விடுத்தது. இவ்வாறு மாநாடு குறித்த செய்தி எல்லாப் பகுதிகளிலும் பரவியது.

மாங்கூன் வட்டத்தில் நிதி திரட்டலையும், அறப்போரில் பங்குபெற அழைப்பு விடுத்தலையும் மஹர்கள் மேற்கொள்வதாக 19 நவம்பரில் காவல்துறைக் கண்காணிப்பாளர் குறிப்பிட்டார்.

மற்றொரு பக்கம் மஹர்களின் அறப்போரை எதிர்கொள்வது குறித்து திட்டமிட 17 நவம்பரில் சாதி இந்துக்கள், வீரேஸ்வரர் கோவிலில் கூடியதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிராமணர்கள், குஜார்கள், மராத்தியர் என 200 பேர் இங்குக் கூடியதாகவும், அவர்களில் சிலர் அறப்போருக்கு ஆதரவளித்ததாகவும் அவர் குறிப் பிட்டார். இக்கூட்டத்திற்குத் தலைமை வகிக்க ஒருவரும் விரும்பவில்லை என்றும், எந்த முடிவையும் எடுக்காது இக் கூட்டம் முடிவுற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சில சாதி இந்துக்கள், றப்போருக்கு ஆதரவு தெரிவித்தனர், ‘மராத்தி’, ‘கேசரி’ என்ற பத்திரிகைகளின் துணை ஆசிரியர்கள் 30 நவம்பரில் வீரேஸ்வரர் கோவிலில் நடந்த கூட்டத்தில், தீண்டத்தகாதோரை இனியும் சாதி இந்துக்கள் புறக்கணிக்கக் கூடாது என்றும், ஸ்வராச்சியம் என்ற விருப்பத்தை நிறைவேற்ற அவர் களையும் தம்முடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.

சாதி இந்துக்களில் ஒரு சிறு பகுதியினரே அறப் போராட்டத்துக்கு ஆதரவு அளித்தனர். பெரும்பாலோர் மஹர்களின் சமூக உரிமைப் போராட்டத்திற்கு எதிராகவே இருந்தனர். குளத்தினுள் தீண்டத்தகாதோர் நுழைவதை எதிர்ப்பது அனுமதிக்கப்படாது என்று மாவட்ட குற்றவியல் நீதிபதி அறிவித்தார். இருந்த போதிலும் சாதி இந்துக்கள் தம் எதிர்ப்புநிலையில் இருந்து பின்வாங்கவில்லை.

அறப்போருக்கான ஆயத்தங்கள்

சாதி இந்துக்களின் எதிர்வினைகளுக்கு இடையே மாநாட்டுக்கான ஆயத்தங்களை மஹர்கள் மேற் கொண்டனர். மஹத் அறப்போருக்காக நிதி திரட்டலில் அம்பேத்கர் ஈடுபட்டார். உயர்நீதிமன்ற வழக்கறிஞர் களை நேரடியாகச் சந்தித்து நிதி வேண்டினார். சாதி இந்துக்கள் பெரும்பாலோர் நிதி வழங்கவில்லை. இஸ்லாமியர்களும் யூதர்களும் நிதி வழங்கினர். இரண்டாயிரம் ரூபாய் வரை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டிருந்த நிலையில் நூறு ரூபாய்க்கு மேல் சேகரிக்க முடியவில்லை.

இவ்வளவு பெரியதொகையை எப்படிப் பெறுவது என்று அம்பேத்கர் கவலையடைந்தார். பாபுரங் பெர்கார்கர் என்ற நாடகக் குழு உரிமையாளர், எல்பின்ஸ்டன் அரங்கில் நாடகம் ஒன்றை நடத்தி அதன் வாயிலாகக் கிட்டிய 200 ரூபாயைக் கொடையாக வழங்கினார். மஹத் அறப்போருக்கு என்று அறிவிக் காமல் ‘பகிஷ்ஹரத் ஹிதகர்ணி சபை’ நடத்தும் கல்வி நிறுவனங்களுக்காக என்று அறிவித்து நாடக வாயிலாகக் கிடைத்த நிதி வழங்கப்பட்டது.

இந்நிகழ்வைத் தொடர்ந்து சக்கராம் என்பவர் நாடகம் நடத்தி அதன் வாயிலாகத் திரட்டிய 100 ரூபாயைக் கொடையாக வழங்கினார். நிர்மல் என்பவரும் நாடகம் நடத்தி 150 வழங்கினார்.

மஹத் அறப்போருக்காக நாடகங்கள் வாயிலாக நன்கொடை திரட்டப்பட்டதை அறிந்த பாத்தே பாபுராவ் என்பவரும் இம்முறையில் நிதி உதவ முன்வந்தார். பிராமணரான இவர் கீழ்நிலைச் சாதியினரின் கலைவடிவமாகக் கருதப்பட்ட ‘தாமாஷா’ நாடகங்களை நடத்தி வந்தார். மஹர்களுடன் தங்கும் இவர் அவர்கள் மீது மதிப்புக் கொண்டிருந்தார். அம்பேத்கர் தொடங்கியுள்ள அறப்போருக்கு நிதியுதவி செய்ய அவர் முன்வந்தார்.

இதன் பொருட்டு 10 செப்டம்பர் 1927இல் தமது கலைக்குழுவில் உள்ள இரு மஹர் வகுப்பு பெண் கலைஞர்களுடன் அம்பேத்கரைச் சந்திக்க வந்தார். நன்கொடைக்காக நான்கு நிகழ்ச்சிகளை நடத்திக் கொடுப்பதாக அவர் அம்பேத்கரிடம் கூறினார். அம்பேத்கர் கோபத்துடன் அதை ஏற்க மறுத்துவிட்டார். இம் மறுப்புக்கான காரணம் என்ன என்று அவரிடம் கேட்டபோது.

'தாமாஷா நாடகத்தில் மஹர் பெண்களை நடனமாடச் செய்து, இந்த பிராமணன் பணம் சம்பாதிக்கிறான். இப்பணத்தை ஏற்றுக்கொள்ளும் படி என்னிடம் கூறுகிறீர்கள். சுயமரியாதை என்பதன் பொருளை நீங்கள் அறியவில்லை.' என்று விடையளித்தார் (நம்மில் பலர் உணரவேண்டிய செய்தி இது).

மும்பை நகரிலும், அதற்கு வெளியிலும் மஹத் அறப்போருக்கான ஆயத்தமாக நூறு கூட்டங்கள் நடத்தப்பட்டன. சில முக்கிய தலைவர்களின் கூட்டம் 11 செப்டம்பர் 1927 இல் நடந்தது. இக்கூட்டத்தில் அறப்போர் குழு குறித்தும் நிதி சேகரிப்புக்கான இயக்கம் குறித்தும் மாநாட்டுக் குழுக்களின் பெயர் குறித்தும் முறையான அறிவிப்பு அறிவிக்கப்பட்டது.

15 செப்டம்பர் 1927இல் அம்பேத்கர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் 1927 டிசம்பர் 25, 26ஆம் தேதிகள் அறப்போருக்கான நாட்களாக அறிவிக்கப்பட்டன.

தடை ஆணை

அறப்போராட்டத்திற்கு பத்து நாட்களுக்கு முன்னதாக டிசம்பர் 12 ஆவது நாள், அம்பேத்கர் மற்றும் நால்வருக்கு எதிராக மஹத்தின் இரண்டாவது துணை நீதிபதியின் நீதிமன்றத்தில், சாதி இந்துக்கள் வழக்குத் தொடுத்தனர். அவ்வழக்கில் பின்வரும் வாதங்களையும் வேண்டுகோள்களையும் முன் வைத்தனர்.

பிரச்சினைக்குரிய இக்குளம் சௌதார் குளம் என்பதாகும். இது தனியாருக்கு உரிமையானது. நடைமுறை மரபுப்படி இக்குளத்தில் இருந்து தண்ணீர் எடுக்க தீண்டத்தகாதவர்களுக்கு உரிமை இல்லை. எனவே டாக்டர் அம்பேத்கர் தலைமையில் டிசம்பர் 25 ஆம் நாள் நிகழ இருக்கும் போராட்டம் சட்ட விரோதமானது. எனவே அம்பேத்கருக்கும் அவரது தோழர்களுக்கும் இப்போராட்டத்தை நிறுத்தும்படி உரிய ஆணை பிறப்பிக்க வேண்டும்.

இம்முறையீட்டின் அடிப்படையில், இதைப் பெற்றுக்கொண்ட அன்றே, துணை நீதிபதி வைத்யா தடையாணை பிறப்பித்தார். (இத்தடை ஆணையின் நகல் இந்நூலில் முழுமையாக இடம்பெற்றுள்ளது). அம்பேத்கரும் மற்றவர்களும் இக்குளத்திற்குள் செல்வதோ, அதன் தண்ணீரைத் தொடுவதோ கூடாது என்றும், அவ்வாறு செய்தால் அதைக் குற்றச் செயலாகக் கருதி அவர்களுக்கு எதிராகச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தடையாணையில் அவர் குறிப்பிட்டார்.

எதிர்த்தரப்பு வாதங்களைக் கேட்காமல் நீதிபதி இத் தடையாணையை விதித்துள்ளார். இத்தடை ஆணை மாவட்டக் குற்றவியல் நீதிபதிக்கு உவப்பானதாக இருந்தது. ஆனால் அரசின் உள்துறைக்கு இதில் மகிழ்ச்சியில்லை. சட்ட நடவடிக்கைகளைத் தவறாகப் பயன்படுத்தியதாக இத்தடை ஆணையை அது கருதியது.

மஹத்தின் நிலை

சாதி இந்துக்களின எதிர்ப்பால் மஹத்தில் மாநாடு நடத்த இடம் கிடைப்பது எளிதாக இல்லை. ஃபதே கான் என்ற இஸ்லாமியர் மகிழ்ச்சியுடன் இடம் கொடுத்து உதவினார். இதை அறிந்தவுடன் குஜார் பிராமணர்கள் அவரைச் சந்தித்து மாநாட்டிற்காக இடம் தரவேண்டாம் என்று வேண்டினார்கள். தாம் கொடுத்த வாக்குறுதியை மீறமாட்டேன் என்று அவர் கூறிவிட்டார்.

பின்னர் ஏழாயிரத்தில் இருந்து எட்டாயிரம் பேர் வரை அமரும் வகையில் பெரியபந்தல் அமைக்கப் பட்டது. தோரணங்களாலும் கொடிகளாலும் பந்தல் அலங்கரிக்கப்பட்டது. மராத்தி அருட்கவிஞர்களின் கவிதைவரிகளும் சாதிய வேறுபாடுகளை எதிர்க்கும் முழக்கங்களும் எழுதப்பட்ட பெரிய அட்டைகளும் பந்தலில் தொங்கவிடப்பட்டன. உள்ளூர் வணிகர்களின் புறக்கணிப்பினால் வெளியூரில் இருந்து உணவுக்கான பொருட்கள் வந்தடைந்தன.

அம்பேத்கரின் உரை

1927 டிசம்பர் 24இல் அம்பேத்கர் மும்பையில் இருந்து மஹத்துக்குப் பயணமானார். மாநாட்டில் அவர் ஆற்றிய தலைமை உரை ஓர் ஆய்வுரையாகவும் எழுச்சி உரையாகவும் அமைந்தது. பதினொன்னரைப் பக்க அளவில் இவ்வுரை இந்நூலில் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. அவ்வுரையில் அவர் வெளிப்படுத்திய முக்கிய செய்திகள் வருமாறு:

1) இந்த ஆண்டு மார்ச் 20 ஆம் நாள் சௌதார் குளத்திற்குள் நாம் நுழைவதை சாதி இந்துக்கள் எதிர்க்கவில்லை. பின்னர் நம்மீது வன்முறைத் தாக்குதலை நடத்தினார்கள். நம்மைத் தாக்கியவர்கள் இன்று சிறையில் உள்ளார்கள். நான்கு மாதக் கடுங்காவல் தண்டனை அவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது.

2) நமது செயலை சாதி இந்துக்கள் எதிர்க்காமல் இருந்திருந்தால், இன்று மகாநாடு நடத்த வேண்டிய அவசியம் இருந்திருக்காது.

3) சௌதார் குளம் பொதுக்குளம். இக்குளத்தில் இருந்து தண்ணீர் எடுக்க பிற சமயத்தினரை அனுமதித்துள்ளார்கள். இதன்படி எவ்விதத் தடையும் இன்றி இஸ்லாமியர்கள் தண்ணீர் எடுக்கிறார்கள்.

4) மனிதர்களை விடத் தாழ்ந்ததாகக் கருதப்படும் பறவைகளும் விலங்குகளும் இக்குளத்தில் தண்ணீர் பருகுவதை அவர்கள் எதிர்க்க வில்லை.

5) தீண்டத்தக மக்களுக்கு உரிமையான கால்நடைகளும் இக்குளத்து நீரைப் பருக அனுமதிக்கப்படுகின்றன.

6) நம்மை மட்டும் அவர்கள் ஏன் தடை செய்கிறார்கள்? இக்கேள்விக்கு விடை காண்பது அவசியமானது. இவ்விடையைக் காணாவிடில் இன்றைய கூட்டத்தின் முக்கியத்துவத்தை நீங்கள் அறிந்துள்ளதாக நான் கருதமாட்டேன்.

7) இந்துக்கள் தம் புனிதநூல்களின்படி நான்கு வருணங்களையும் நடைமுறையில் அய்ந்து வருணங்களையும் கொண்டுள்ளார்கள். இவ் வருணங்கள் ஒரே தகுதி உடையன அல்ல. ஒன்றைவிட ஒன்று உயர்வானது என்ற தகுதி வழங்கப்பட்டுள்ளது. ஒன்றை ஒன்று வேறு படுத்தும் வகையில் எல்லை வரையறுக்கப் பட்டுள்ளது.

8) இதுவே, திருமணம், ஒன்றாக அமர்ந்து உணவுண்ணல், பொது நீர்நிலையைப் பயன்படுத்தல் என்பனவற்றைத் தடை செய்துள்ளது.

9) சௌதார் குளத்தின் நீரைப்பருக நீங்கள் அழைக்கப்படவில்லை. இக்குளத்து நீரைப் பருகுவதால் நீங்களோ நானோ சாகாநிலையை அடையப்போவதில்லை.

10) நாம் தண்ணீர் குடிப்பதற்காக அல்லாமல் மற்றவர்களைப் போல் நாமும் மனிதர்கள்தான் என்பதை நிலைநிறுத்தப் போகிறோம்.

11) இன்று நாம் நடத்தும் கூட்டத்திற்கும் 5 மே 1789 இல் பிரான்சின் வெர்சைல்ஸ் நகரில் கூடிய புரட்சிகர தேசியக் கூட்டத் திற்கும் இடையே பெருத்த ஒற்றுமை உள்ளதை நினைவில் கொள்ளுங்கள் (அழுத்தம் அம்பேத்கருடையது).

இக்கருத்துக்களை வலியுறுத்திப் பேசியதுடன் பல நூற்றாண்டுகளாகப் பிராமணர்கள் மேலாதிக்கம் செலுத்தி வந்ததையும், அதிகாரம் மிக்க பிராமணர் களுக்கும் அதிகாரமற்ற மக்கள் பிரிவினருக்கும் இடையில் உள்ள சாதியினர் தீண்டத்தகாத சாதியினர் மீது மேலாதிக்கம் செலுத்த விழைவதையும் விளக்கினார்.

சமூகப் புரட்சியை வலியுறுத்திய அவர், இப் புரட்சியானது, வன்முறை சார்ந்ததா, வன்முறையற்றதா என்பதை சாதி இந்துக்களின் நடத்தைதான் முடிவு செய்யும் என்று குறிப்பிட்டார். சில முக்கிய தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டன. மாநாட்டின் தொடக்கநாள் நிகழ்வாக மனுதர்ம எரிப்பு நடந்தது. இதற்கென்று தனியாக அமைக்கப்பட்ட எரியூட்டு மேடையில், தீண்டத்தகாத சாதியைச் சேர்ந்த சாதுக்களும் துறவிகளும் எரியூட்டும் சடங்கைச் செய்தனர்.

மாநாட்டின் இரண்டாம் நாள்

மஹத் மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வு காலை ஒன்பதுமணிக்கே தொடங்கிவிட்டது. அன்றுதான் அறப்போர் குறித்த முடிவை எடுக்க வேண்டி இருந்தது. அறப்போராட்டத்தை முன்மொழிந்து அம்பேத்கர் உரையாற்றினார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் தம்மைச் சந்தித்த தாகவும் அறப்போராட்டத்திற்குத் தாம் எதிரானவர் அல்ல என்று கூறியதுடன், சாதி இந்துக்கள் இதற்குத் தடை வாங்கியுள்ளதால் சௌதார் குளத்திற்குச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாகவும் கூறினார். இறுதியாக, நீதிமன்ற ஆணையை மீறி சௌதார் குளத்திற்குச் செல்லவேண்டும் என்பதை அம்பேத்கர் வலியுறுத்தினார். அதன் பொருட்டுத் தண்டனை கிடைத்தாலும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று கூறினார். அறப்போராட்டத்தை ஆதரித்துப் பன்னிரு வரும், எண்மர் எதிர்த்தும் உரையாற்றினர்.

தீண்டாமைக்கு ஆட்படுத்தப்படாத சமூகத்தில் இருந்து கலந்துகொண்டோரும் அறப்போராட்டத்தை ஆதரித்துப் பேசினர்.

மாவட்ட ஆட்சித்தலைவரின் இடையீடு 

போராட்டத்தில் ஈடுபட்டு சிறை செல்ல ஆயத்த மாக உள்ளோரின் பெயர்ப் பட்டியலைத் தயாரிக்க அம்பேத்கர் சிலரை நியமித்தார். ஒரு மணி நேரத்திற்குள் 3884 பேர் தம் பெயரைப் பதிவு செய்தனர். சிறை செல்வோரின் பெயர்ப்பட்டியலைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் ஒரு கட்டத்தில் சலிப் படைந்துவிட்டனர். அனைவருமே சிறை செல்ல ஆயத்தமாக இருக்கையில், பட்டியல் தயாரிப்பது பொருளற்றது என்று வெளிப்படையாக அவர்கள் அறிவித்துவிட்டனர்.

அம்பேத்கரின் அனுமதியுடன் மாநாட்டிற்கு வந்த மாவட்ட ஆட்சியர், தீண்டத்தகாத மக்கள் பிரிவின் சார்பாகவே அரசு இருக்கிறது என்று உறுதியளித்தார். நீதிமன்ற ஆணையை மீறுவதைத் தவிர்க்கும்படியும், வழக்கை நல்ல தயாரிப்புடன் நடத்தும்படியும் அறிவுறுத்தினார்.

ஆனால் மாநாட்டில் கலந்து கொண்டோரில் மிகப்பெரும்பாலோர், (சாதி இந்துக்கள் சிலர் உட்பட) போராட்டத்தைத் தொடர்வதை வலியுறுத்தினர்.

இதன் அடுத்தகட்டமாக அன்றிரவு நடந்த முக்கிய பொறுப்பாளர்களின் கூட்டத்தில், நடந்த விவாதத்தில் அறப்போராட்டத்தைத் தற்காலிகமாகத் தள்ளிவைப் பதென்றும் மறுநாள் அனைவரும் ஊர்வலமாகச் செல்வதென்றும் முடிவெடுக்கப்பட்டது.

மாநாட்டின் மூன்றாவது நாள்

இம்முடிவானது பின்வரும் தீர்மானமாக மாநாட்டில் முன்மொழியப்பட்டு, நிறைவேற்றப் பட்டது.

‘மஹத்தில் வாழும் சாதி இந்துக்கள், தீண்டத்தகாத மக்களுக்கு எதிராகத் தடையாணையைக் கடைசி நிமிடத்தில் பெற்றுள்ளனர். இச்செயலின் மூலம் அரசுடன் தீண்டத்தகாத மக்கள்பிரிவை மோத விட்டுள்ளனர். நேற்று காலையில் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் உரையாற்றியபோது சமத்துவ உரிமைகளைப் பெறுவதற்கான இம்மக்களின் போராட்டத்தின்பால் அரசு அனுதாபம் கொண்டுள்ளதாகத் தெரிவித்தார். அறப்போராட்டம் மேற்கொள்ள முடிவெடுத் திருந்த இம்மக்கள், அவரது உரையைக் கேட்ட பின்னர் உரிமையியல் நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரை அறப் போராட்டத்தை ஒத்தி வைக்க முடிவு செய்துள்ளனர்’.

இத்தீர்மானத்தை மாநாடு ஏற்றுக்கொண்ட பின்னர் மாநாட்டில் கலந்து கொண்டோர் அனைவரும் ஊர்வலமாக மஹத் நகருக்குள் செல்ல ஆரம்பித்தனர். நான்கு பேர் கொண்ட வரிசையாக அணிவகுத்துச் சென்ற ஊர்வலம் 10-30 மணிக்குத் தொடங்கி 12 மணிக்கு முடிவுற்றது. ஊர்வலத்தின் முன்பகுதியில் சென்றவர்கள் பந்தலுக்குத் திரும்பி வந்தபோது, பின் பகுதி பந்தலை விட்டுப் புறப்பட்டுக் கொண்டிருந்தது. ஊர்வலம் சௌதார் குளத்தையும் சுற்றி வந்தது. சாதி இந்துக்கள் வெளியில் நடமாடாது வீட்டிற்குள்ளேயே முடங்கிவிட்டனர்.

மாநாட்டின் முடிவு

அறப்போராட்டமாக அறிவிக்கப்படாத நிலையில் 1927 மார்ச்சில் மஹத் நகரில் நிகழ்ந்த மாநாடு சௌதார் குளத்தில் தண்ணீர் பருகி, தீண்டாமையை முறியடித்தது. இதே ஆண்டில் டிசம்பரில் தண்ணீர் பருகும் உரிமைக்கான அறப்போராட்டம் நீதிமன்ற ஆணையால் நடைபெறாது போனது.

ஆயினும், தீண்டப்படாத மக்களை ஒன்றிணைப் பதில் இம்மாநாடு வெற்றிபெற்றது. இம்மக்கள் பிரிவினரின் வலிமையை வெளிப்படுத்தியது.

···

(சௌதார் குளம் தொடர்பாக சாதி இந்துக்கள் பெற்றிருந்த தடையாணைக்கெதிராக அம்பேத்கர் நீதிமன்றத்தில் வாதாடி அதை நீக்கி, சௌதார் குளம் அனைவருக்கும் உரிமையானது என்பதை நிலை நிறுத்தினார்).