இன்றைய உலக சமுதாயங்களின் முரண்பாடுகள், நாளுக்கு நாள் முற்றி வருவது கண்கூடு. அறிவியலின் வளர்ச்சி அழிவியலை அதிகரிப்பதையும், பொருளாதார முன்னேற்றங்கள் வறுமையை மிகைப்படுத்துவதையும், தனிமனிதனின் சுதந்திரம் தன்னலத்தை முன்வைப்பதையும் - சமூகத்தின் எல்லா தட்டுகளிலும் காணலாம். இன்றைய இக்கட்டான சூழ்நிலை ஒருபுறம் சமூகக் குழுக்களின் மீது குறிப்பாக, விளிம்பு நிலைக்குத் தள்ளப்படும் மக்களின் மீது பெரும் பாரத்தை வைத்து அழுத்துகிறது என்பதைச் சொல்லத் தேவையில்லை. ஆனால், மறுபுறம் இம்மாதிரியான சூழ்நிலைக் குள்ளிருந்தே அதற்கானத் தீர்வுகளும் உருவாகுவதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். உலக அளவிலான பவுத்தத்தின் மறுமலர்ச்சி, அவ்விதத் தீர்வுகளில் ஒன்றாகவே வெளிப்படுகிறது.

Budha
பவுத்தம், அதன் பல்வேறு வரலாற்று சந்தர்ப்பங்களில் அன்பையும் அமைதியையும், அரவணைப்பையுமே முன்வைக்கும் ஒரு தத்துவக் கண்ணோட்டமாக இருந்து வந்திருக்கிறது. அதன் இன்றைய மறுமலர்ச்சி, அதன் காலத்தாலான நெளிவு சுளிவுகளுக்குள்ளிருந்தே எழுந்தாலும் - அதன் ஊற்றை நோக்கியே நகர்ந்து கொண்டு வருகிறது. புத்தரின் வாழ்க்கையும், அவரது கருத்துகளுமே இன்றைய அச்சாரமற்ற தனிமனிதருக்கும், அரவணைப்பற்ற சமூகக் குழுக்களுக்கும், அமைதியற்ற உலகத்திற்கும் ஓர் ஆதரவாகத் தென்படத் தொடங்கியுள்ளது.

பவுத்தம் ஓர் அறிவுப்பூர்வமான தத்துவக் கண்ணோட்டம் என்பது மட்டுமின்றி, காலத்தால் எழுந்த பல்வேறு பண்பாடுகளை யும் அதனதன் தனித்தன்மைகள் கெடாமலேயே வளர்ச்சி பெற ஏதுவாகிறது. பவுத்தம் ஓர் அறிவுப்பூர்வமான கண்ணோட்டம் என்பதில் சிறப்பு வாய்ந்த அம்சம் எதுவென்றால், அது ஓர் அறிவுப்பூர்வமான சமூகக் கண்ணோட்டம். பவுத்தம் முன்வைக்கும் பகுத்தறிவு (Rationality) திடமான சமூகப் பகுத்தறிவு (Social Rationality). அதாவது, சமூக உறவுகளில் தனி மனிதருக்கிடை யிலும், குழுக்களுக்கிடைப்பட்டதாயினும் அறிவின் மேல் கட்டப்படும் அன்பு, அரவணைப்புகளின் ஆதிக்கத்தையே சுட்டுகிறது. மற்றைய அம்சங்கள் யாவும் இரண்டாம் பட்சமே. இந்தியச் சூழ்நிலையில் சமூக உறவுகளின் அறிவுப்பூர்வமான உருவாக்கம் என்பது, பிறப்பால் ஏற்றத்தாழ்வு கற்பிக்கும் அறிவின்மையின் (Irrationality) இல்லாமையையே குறிக்கும் என்பது தெளிவு.

இரண்டாவதாக, பவுத்த தத்துவக் கண்ணோட்டம், வரலாற்று பண்பாட்டுக் குழுக்களை அழித்து ஒருங்கிணைப்பதற்கு உடன்பட்டதல்ல. வேறுபட்ட பண்பாடுகளின் தோற்றம், இயற்கையின் நியதி. இந்நியதிக்குட்பட்டே பவுத்தத்தின் தத்துவக் கண்ணோட்டம் செயல்படுகிறது. இதன் காரணமாகவே பண்டைய பவுத்த அறிவியலார், அந்தந்த மொழிகளிலேயே பவுத்த கண்ணோட்டத்தையும் கருத்துகளையும் வளர்க்க முயன்றுள்ளனர். இதன் காரணமாகவே அயோத்திதாசர் தமிழ் பவுத்தத்தை முன் வைக்கிறார். சுருங்கச் சொன்னால், சமத்துவத்தையும், பண்பாட்டு வேறுபாடுகளையும் ஆதரித்து வளர்ப்பதே பவுத்தத்தின் உட்கரு. ஏனையவெல்லாம் இவ்வுட்கருவை உள் வாங்கியதன் விளைவேயன்றி வேறல்ல.

பவுத்தத்தின் உட்கருவான சமத்துவத்தையும், பண்பாட்டு வேறுபாடுகளையும் மதிக்கும் தன்மை, இந்திய நவீனத்தின் தோற்றமாகிய பத்தொன்பதாம் நூற்றாண்டில் பல்வேறு இடங்களில் கொந்தளிப்புற்றது. அதன் முதல் முழுமையான அச்சாரமே அயோத்திதாசரும் அவருடைய முயற்சிகளும் என்பது, அனைத்து சாதி/சாதியற்ற தமிழருக்குமே பெருமைக்குரியது. அதற்கு அகில இந்திய உருவம் கொடுத்து அரங்கேற்றியவர் அண்ணல் அம்பேத்கர். பண்டித அயோத்திதாசர் அம்பேத்கர் பவுத்த பரம்பரையே நவீன, அறிவுபூர்வமான சமூக உருவாக்கங்களின் அடித்தளமாக அமைய வேண்டும். இவ்வாறு அடித்தளம் அமைத்து அதன் மீது கட்டடம் எழுப்புவதென்றால், அதற்கு கற்களாக அமைந்து பயன்படுவது மனம், வாக்கு, செயல்பாடுகளில் ஏற்பட வேண்டிய மாறுதல்களே. இம்மாறுதல்கள், ‘சமூகப் பகுத்தறிவை' நோக்கியே முன்னேற வேண்டும் என்ற அதே கருத்தையே தந்தை பெரியாரும் வலியுறுத்தியுள்ளார்.

சமூகத்தின் அறிவு, அன்பு, அரவணைப்பு என்ற படிப்படியான அடித்தளங்களை அமைக்கும் மிகச் சிக்கலான, மாபெரும் பணி - இந்தியாவிலும் தமிழகத்திலும் இடையில் நின்று போய்விட்டது என்பது யாவரும் அறிந்த உண்மை. கொள்கைகளைப் பரப்பி, கண்ணோட்டங்களை உறுதிப்படுத்தும் நிலைகளில் இப்பணியைத் தொடர முயன்றிருப்பது, ஆசிரியர் ஏபி. வள்ளிநாயகத்தின் தனிச் சிறப்பு. ஆசிரியர் தமிழ் எழுத்துலகிற்குப் புதியவரல்லர். நவீன காலத்தின் தமிழ்ச் சமூக வரலாற்றைத் திருப்பி, திருத்தி அமைப்பதில் அவரது பங்குக்கு அவரது எழுத்துகளே சாட்சி.

தற்போது ‘தலித் முரசி'ல் வெளிவரும் ஏபி. வள்ளிநாயகத்தின் அம்பேத்கர் பவுத்தம் பற்றிய தொடர் கட்டுரை, நூலாக வெளிவருவது - தமிழ் மக்களுக்கு மிகுந்த பயன்தரும் என்பதில் அய்யமில்லை. எளிமையான சொற்களும், தெளிந்த நடையும் கொண்ட கருத்துச் செறிவுகள், தமிழ் மனதில் - மண்ணில் ஆழப்பதியும் என்பது உறுதி. ஆசிரியரது இம்முயற்சிகள் வெற்றி பெறவும், அவை தொடர்ந்து தமிழ் மக்களுக்கு கிடைக்கவும் ஆசிரியர் ஏபி. வள்ளிநாயகத்தை வாழ்த்துகிறேன்.
____________________

‘அம்பேத்கரின் ஆசான் புத்தர்' தொடர், நூல் வடிவம் பெற்றுள்ளது. இந்நூலுக்கு ஜி. அலாய்சியஸ் எழுதிய அணிந்துரையை இங்கு வெளியிட்டுள்ளோம்.

அம்பேத்கரின் ஆசான் புத்தர் - ஏ.பி.வள்ளிவிநாயகம்
எதிர் வெளியீடு,
305, காவல் நிலையம் சாலை,
பொள்ளாச்சி - 1.
விலை: ரூ.60
பேசி: 04529 - 226012
Pin It