பின்யாமின் நெதன்யாஹு (Binyamin Netanyahu), மெனாகெம் பெகின் என்னும் பெயர்களைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தேடப்பட்டுவரும் ‘சர்வதேசப் பயங்கரவாதிகள்' பட்டியலில் அவர்கள் இருக்கிறார்களா? அமெரிக்காவின் சி.என்.என்.இலிருந்து தமிழ்நாட்டு ‘சன்' தொலைக்காட்சி வரை, அவர்கள் எப்போதேனும் ‘தீவிரவாதிகள்' என்றாவது அழைக்கப்பட்டிருக்கிறார்களா? ‘இல்லை' என்பதுதான் இவற்றுக்கான ஒரே பதிலாக இருக்க முடியும். இவர்கள் இருவரும் வெவ்வேறு காலகட்டங்களில் இஸ்ரேலின் பிரதமர் பதவி வகித்தவர்கள். இஸ்ரேல் என்னும் ‘தேசம்' பிறப்பதற்கு முன்பு, 1946 சூலை 22 இல், அப்போது பாலஸ்தீனத்தைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பிட்டிஷ் அரசாங்கத்தின் பிரதிநிதிகளின் தலைமையகம் இருந்த தாவீது மன்னர் ஓட்டலின் மீது (ஜெருசலேம் நகரில் உள்ளது) வெடிகுண்டுகளை வீசி, அங்கிருந்த பொதுமக்கள் 90 பேரைக் கொன்ற ‘இர்குன்' என்னும் ஜியோனிச அமைப்பின் முக்கியத் தூண்களே இவர்கள். அந்தத் தாக்குதல் நடந்து அறுபதாண்டுகள் நிறைவு பெற்றதை, இஸ்ரேலியர்கள் அண்மையில் அமரிக்கையாகக் கொண்டாடியபோது, பிரிட்டிஷ் அரசாங்கம் தனது ‘வருத்தத்தை' மட்டுமே தெரிவித்தது.

Palastin child killed by Israel
1967 சூன் மாதம் எகிப்து, ஜோர்டான், சிரியா ஆகிய அரபு நாடுகள் மீது இஸ்ரேல் அதிரடியாக ராணுவத் தாக்குதல் நடத்தி, அந்த நாடுகளின் பகுதிகள் பலவற்றை ஆக்கிரமித்துக் கொண்டது. இந்த நாடுகளின் படையெடுப்பிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவே தான் முந்திக் கொண்டதாகத் துணிந்து பொய் கூறியது இஸ்ரேல். போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நாடுகளின் தகவல் தொடர்புகளைக் கண்காணிப்பதற்காக அமெரிக்கா, மிக நவீன மின்னணுச் சாதனங்கள் பொருத்திய ‘யு.எஸ்.எஸ்.லிபர்ட்டி' என்னும் கப்பலை கிழக்கு மத்தியதரைக் கடலுக்கு அனுப்பியிருந்தது. அது, அமெரிக்கக் கப்பல் என்பது இஸ்ரேலுக்கு நன்றாகத் தெரியும். அப்படியிருந்தும் இஸ்ரேலியப் போர் விமானங்கள் மிகத் தாழ்வாகப் பறந்து அதன் மீது குண்டு மழை பொழிந்தன. அந்தக் கப்பலை இஸ்ரேலியப் போர்ப் படகுகள், பல சுற்றிவளைத்துக் கொண்டன. அவையும் அந்தக் கப்பலின் மீது சரமாரியாக ‘டார்பிடோ' குண்டுகளை வீசின. அந்தக் கப்பலில் இருந்த 34 பேர் கொல்லப்பட்டனர். 171 பேர் படுகாயத்துக்குள்ளாயினர். அந்தச் சமயத்திலும் இஸ்ரேல் அமெரிக்காவுக்கு நேசநாடுதான்.

ஆனால், தனது ராணுவ ஆக்கிரமிப்புகளுக்குப் பின்னால் இருந்த உண்மைகளை அமெரிக்காவும்கூடத் தெரிந்து கொள்வதை இஸ்ரேல் விரும்பவில்லை. மத்தியக் கிழக்கில் தனது ‘புறக்காவல் நிலைய'மாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இஸ்ரேல் இழைத்த இந்தப் படுகொலையை, அமெரிக்காவும் மன்னித்துவிடத் தயாராக இருந்தது. இந்த இரண்டு நாடுகளுமே ‘யு.எஸ்.எஸ். லிபர்ட்டி' அமெரிக்கக் கப்பல்தான் என்பதை அடையாளம் கண்டுபிடிக்காமல் இஸ்ரேல் ‘தவறுதலாக' நடத்திவிட்ட தாக்குதல் என்னும் விளக்கத்தைக் கொடுத்துவிட்டன. தங்கள் நீண்டகால நோக்கத்திற்காக தங்களது சகாக்களின் கழுத்துகளைக்கூட அறுக்கத் தயங்காத இந்த தேசங்கள், பயங்கரவாதிகளே அல்ல!

சென்ற சூன் 6 ஆம் நாள், அமெரிக்காவின் தேசிய ஆவணக் காப்பகம், இரண்டாம் உலகப் போரில் நாஜி ஜெர்மனி தோற்கடிக்கப்பட்டதற்குப் பிறகு, அமெரிக்க உளவு நிறுவனமான சி.அய்.ஏ. முன்னாள் நாஜிக்களுடன் வைத்திருந்த நெருக்கமான உறவுகள் பற்றிய 27,000 பக்கங்கள் கொண்ட ஆவணங்களை வெளியிட்டது. இதில் அதிர்ச்சி தரும் தகவல்கள் பல உள்ளன. இரண்டாம் உலகப் போர் முடிந்ததும், நாஜிக் குற்றவாளிகளை விசாரணை செய்து தண்டிக்க ஜெர்மானிய நகரமான நியூரம்பர்க்கில் ஒரு சர்வதேசக் குற்ற விசாரணை நீதிமன்றத்தை அமைப்பதில் அமெரிக்காவும் முக்கியப் பங்கு வகித்தது. லட்சக்கணக்கான யூதர்களை ஒழித்துக்கட்டிய அடால்ப் ஈய்ச்மன் (Adolf Eichman) என்னும் நாஜி அப்போது பிடிபடவில்லை. எப்படியோ அவன் அர்ஜெண்டினாவிற்குத் தப்பியோடி, அங்கு தனது பெயரை மாற்றிக்கொண்டு பத்தாண்டுகள் வாழ்ந்திருக்கிறான். இந்த விஷயம் சி.அய்.ஏ.விற்கு 1948லேயே தெரிந்திருந்தது. ஆனால், இதனை அது இஸ்ரேலுக்குத் தெரிவிக்காமல் மூடிவைத்திருந்தது. 1960 இல் ஈய்ச்மன் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்த இஸ்ரேலிய உளவு நிறுவனமான ‘மொஸ்ஸாட்', அவனைக் கைது செய்து தனது நாட்டிற்குக் கொண்டு வந்து, இரண்டாண்டு விசாரணைக்குப் பிறகு சுட்டுக் கொன்றது. அப்போதும் அமெரிக்க உளவு நிறுவனம் வாய் திறக்கவில்லை.

காரணம் இதுதான் : இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஜெர்மனி இரண்டாகப் பிளக்கப்பட்டது. கிழக்கு ஜெர்மனி சோவியத் யூனியன் வசமிருந்தது. மேற்கு ஜெர்மனியில், அமெரிக்காவின் தலைமையிலிருந்த ஏகாதிபத்திய நாடுகளுக்கு அனுசரணையாக இருந்த அரசாங்கம் இருந்தது. அதில் முன்னாள் நாஜியொருவர் முக்கிய அமைச்சராக இருந்தார். வேறு பல நாஜிக்கள் ஜெர்மனியிலும் அமெரிக்காவிலும் சி.அய்.ஏ.வுக்கு வேலை பார்த்தனர். சிலர் சி.அய்.ஏ. அதிகாரிகளாகவும் இருந்தனர். யூதர்களைப் பூண்டோடு அழிப்பதற்காக ரசாயன ஆயுதங்களைத் தயாரித்த விஞ்ஞானி, ஜெர்மனியில் ஏவுகணைகளைத் தயாரித்த விஞ்ஞானி போன்றோர் அமெரிக்க அரசாங்கத் துறைகளில் அமர்த்தப்பட்டனர். இந்த விவரங்கள் எதுவுமே யூதர்களின் அரசான இஸ்ரேலுக்குத் தெரிவிக்கப்படவில்லை.

மேற்சொன்ன ஆவணங்கள் வெளியான பிறகும்கூட, யூதர்களின் விரோதிகளுடன் அமெரிக்கா வைத்திருந்த தொடர்புகள் இஸ்ரேலிய ஆளும் வர்க்கத்திடம் சிறு சலனத்தைக்கூட ஏற்படுத்தவில்லை. தனது படைவீரர்கள் ஒரு சிலரைக் கடத்திக் கொண்டுபோய்விட்ட பாலஸ்தீனிய ஹமாஸ் அமைப்பினரையும், லெபனானிய ஹிஸ்புல்லா அமைப்பினரையும் பழிவாங்குவதாகச் சொல்லிக்கொண்டு, பாலஸ்தீனின் ‘காஸா' பகுதியையும், லெபனான் முழுவதையும் தரைமட்டமாக்கிக் கொண்டிருக்கும் இஸ்ரேலிய ஆளும் வர்க்கங்களுக்கு, யூத வெகுமக்கள் மீது உண்மையிலேயே அக்கறை இருக்குமானால், அமெரிக்கா மீது ஒரே ஒரு ஏவுகணையையாவது செலுத்தியிருக்க வேண்டும். ஆனால், அமெரிக்காவின் தலைமையிலுள்ள உலக ஏகாதிபத்தியச் சக்திகளின் மத்தியக் கிழக்குப் புறக்காவல் நிலையமாகச் செயல்படும் இந்த யூத ஆளும் வர்க்கங்கள், இப்படி எதையும் செய்யா. அது, இந்தச் சக்திகளின் நீண்டகால நலன்களுக்கு ஊறுவிளைவிக்கும் என்பது, இந்த ‘ஜியோனிஸ்டு'களுக்கு நன்றாகத் தெரியும்.
யார் இந்த ஜியோனிஸ்டுகள்?

இரண்டாயிரமாண்டுகளாக உலகில் நாடற்றவர்களாக, பல்வேறு சோதனைகளுக்குட்பட்ட, கடைசியில் நாஜிகளால் பேரழிவுக்குள்ளாக்கப்பட்ட யூதர்களுக்கு உலக மக்கள் காட்டிய அனுதாபத்தை, யூத மேட்டுக்குடியினர் ஜியோனிசம் (Zionism) என்னும் இனவெறித் தத்துவமாக மாற்றினர். ஜியோன் (Zion) என்பது, ஜெருசலேம் நகரிலுள்ள ஒரு மலையின் பெயர். இந்தச் சொல்லை ஜெருசலேம் நகர் முழுவதையும், பின்னர் யூதர்களின் தாயகமாகக் கருதப்பட்ட ‘இஸ்ரேல்' முழுவதையும் குறிப்பதற்கான சொல்லாக மாற்றி விட்டனர் ஜியோனிஸ்டுகள். ஓர் அரசியல் இயக்கம் என்னும் வகையில் ஜியோனிசம், பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில், ஆஸ்திரியாவில் இருந்த யூதப் பத்திரிகையாளரான தியோடர் ஹெர்ஸ்ல் (Theodor Herz) என்பவரால் தொடங்கப்பட்டது. உலகம் முழுவதிலும் நாடற்றவர்களாகவும், ஒடுக்கப் பட்டவர்களாகவும் இருந்த யூதர்களின் பிரச்சனைக்கு ஒரே தீர்வு ஒரு யூத தேச - அரசை உருவாக்குவதுதான் என்று அவர் கூறினார்.

இந்த அரசியல் ஜியோனிசத்துடன் ஓர் ‘ஆன்மீக - மத' ஜியோனிசம் சேர்ந்து கொண்டது. இது, உலகெங்குள்ள யூதர்கள் அனைவரும் ‘தனியொரு தனிச்சிறப்பான ஆன்மீக தேசமாக அமைகிறார்கள்' எனக் கூறியது. 1897இல் சுவிட்சர்லாந்தில் ஒரு ஓட்டல் அறையில் நடந்த முதல் உலக ஜியோனிச மாநாடு (World Zionist Conference), உலக ஜியோனிச அமைப்பை (World Zionist Organisation) நிறுவியது. கிட்டத்தட்ட எழுபது நாடுகளில் கிளை பரப்பியிருக்கும் இந்த அமைப்புக்கு, இரண்டு தலைமையகங்கள் உள்ளன; ஒன்று இஸ்ரேலில்; மற்றொன்று அமெரிக்காவில்.

இது, யூத மருத்துவர்கள், யூதப் பெண்கள், யூத இளைஞர்கள், யூதத் தொழிலாளிகள் என யூதர்களின் ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனி அமைப்புகளைத் தன் கட்டுப்பாட்டின் கீழ் உருவாக்கியுள்ளது. இவற்றுக்கு வெளியே, அறக்கட்டளைகள், கல்வி நிறுவனங்கள், கலாச்சார அமைப்புகள் என்னும் பெயரில் ஏராளமான ஜியோனிச அமைப்புகள் செயல்படுகின்றன (இந்தியாவிலுள்ள ‘சங் பரிவாரத்திற்கு' இன்று ஆதர்சமாக உள்ளவை இவை. ‘பலித்தவரை என்பதுதான் பார்ப்பனியம் இந்துமதம்' என்று பெரியார் சொல்வாரே, அதன்படியே இந்துத்துவச் சக்திகளுக்கு நாஜிசம் ஜியோனிசம் மாறி மாறிப் பயன்படுகின்றன - அமெரிக்காவுக்கு முன்னாள் நாஜிகளும் இன்னாள் ஜியோனிஸ்டுகளும் பயன்படுவது போல). தான் கிளை பரப்பியுள்ள நாடுகளில் வலுவான தகவல் தொடர்பு சாதனங்கள், புத்தக வெளியீட்டு நிறுவனங்கள் முதலியவற்றை வைத்திருக்கிறது உலக ஜியோனிச அமைப்பு.

இஸ்ரேலிய தேச - அரசின் கருத்து நிலையான (Ideology) ஜியோனிசம், இரண்டு வலுவான புனைவுகளின் அடிப்படையிலேயே தன்னை நிலைநிறுத்திக் கொண்டு வருகிறது: 1. யூதர்களின் வரலாறு முழுவதுமே அவர்கள் மீதான இடைவிடாத ஒடுக்குமுறைகளால் நிரப்பப்பட்டிருந்தது; கி.பி. 70க்குப் பிறகு அவர்கள் உலகில் எந்தெந்த இடங்களிலெல்லாம் வாழ்ந்து வந்தார்களோ, அந்தக் காலம் முழுவதும் அவர்களுக்கு இருண்டகாலம் தான்; அவர்கள் தங்களுக்கிழைக்கப்பட்ட துன்ப துயரங்களையெல்லாம் பொறுமையுடன் சகித்துக் கொண்டிருந்தனர்; உலக மக்கள் அனைவருமே யூதர்கள் - யூதர் அல்லாதோர் என்றே பிரிக்கப்பட்டு வந்துள்ளனர். 2. யூதர்கள், தாங்கள் வாழ்ந்து வந்த இடங்களிலுள்ள யூதர் அல்லாதோரின் ஈவிரக்கமற்ற தாக்குதல்களைத் தாங்கிக் கொண்டு வந்ததற்குக் காரணம், தங்கள் சமூகம், பண்பாடு, தேசிய லட்சியங்கள், மதக் கல்வி கற்கும் மரபுகள் ஆகியவற்றின் மீது அவர்களுக்கு ஒருபோதும் தணியாதிருந்த விசுவாசம்தான்.

வரலாற்று ரீதியாக, முதலில் வர்த்தகத்திலும் பின்னர் வட்டித் தொழிலிலும் என திட்டவட்டமான பொருளாதாரச் செயல்பாடுகளை மேற்கொண்டிருந்த ஒரு சமூகக் குழுவினராகவே யூதர்கள் இருந்தனர். அவர்கள் ஒரு வர்க்கமாகவும் ஒரு மக்களாகவும் (People - Class) அமைந்தனர். People - Class என்பது, பெல்ஜிய மார்க்சியரான ஆப்ராம் லியோனின் (இவரும் ஒரு யூதர்தான்!) கருத்து. அதாவது, பொருளாதாரச் செயல்பாடுகளின் மூலம் தங்களை ஒரு வர்க்கமாக வரையறுத்ததன் வழியாகவே அவர்கள் தாங்கள் எல்லாருக்கும் பொதுவான, எல்லாராலும் பகிர்ந்து கொள்ளப்பட்ட மத, மொழி அம்சங்களின் அடிப்படையிலான ஒரு பொதுவான இனத்துவ அடையாளத்தையும் வரையறுத்துக் கொண்டனர். வரலாற்றின் பல்வேறு கட்டங்களில், பல்வேறு நாடுகளில் யூதர்களின் நிலைமை ஒரே மாதிரியானதாகவே இருக்கவில்லை; பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர்கள் பொருளாதார, அரசியல் செல்வாக்குப் பெற்றிருந்தனர் என்பதை யூத ஆராய்ச்சியாளர்களே சுட்டிக்காட்டியுள்ளனர்.

யூதர்கள் தங்கள் தனித்துவத்தை இழக்காமல் இருந்தனர் என்பதும்கூட ஓரளவிற்கே உண்மை. மிகத் தொன்மையான, தனித்துவம் வாய்ந்த இனக் குழுக்களெல்லாம் பிற சமூகங்களில் கரைந்து போனது போலல்லாமல், யூதர்கள் ஓர் இனத்துவக் குழு என்னும் வகையில் தொடர்ந்து நிலைத்து வருவது ஒரு புதிராகத் தோன்றலாம். ஆனால், இந்தப் புதிரை முதலில் விடுவித்துக் காட்டிய காரல் மார்க்சும்கூட (பிறப்பால் மட்டுமே) ஒரு யூதர்தான். ‘‘யூதன் என்னும் புதிருக்கான விடையை அவனது மதத்தில் தேடுவதை விடுத்து, யூத மதம் என்னும் புதிருக்கான விடையை யூதனில் கண்டறிய வேண்டும்'' என ‘யூதப் பிரச்சனை' (On Jewish Question) என்னும் நீண்ட கட்டுரையில் எழுதினார். அதாவது, வரலாற்றில் இத்தனை நீண்டகாலம் யூதர்கள் தனி அடையாளத்துடன் நிலைத்து வருவதற்கு முக்கியமான காரணம், அவர்கள் வகித்து வந்த சமூக, பொருளியல் பாத்திரங்கள்தான்.

மேற்கு அய்ரோப்பாவில் ஏற்பட்ட பூர்ஷ்வா பொருளாதார வளர்ச்சி, கிழக்கு அய்ரோப்பிய நாடுகளில் நிலப்பிரபுத்துவம் நீடித்து வந்தமை, ரஷ்யாவில் ஏற்பட்ட முதலாளித்துவ வளர்ச்சி, முதல் உலகப் போரில் ஜெர்மனிக்கு ஏற்பட்ட தோல்வி, அதன் மீது திணிக்கப்பட்ட வெர்ஸே ஒப்பந்தம் ஆகியவற்றால், ஜெர்மானிய பூர்ஷ்வாக்களுக்கும், குட்டி பூர்ஷ்வாக்களுக்கும் ஏற்பட்ட எரிச்சல் போன்ற காரணிகளே இருபதாம் நூற்றாண்டில் யூதர்களின் ‘தலைவிதி'யைத் தீர்மானித்தன.

வறட்டுத்தனமான யூதமதக் கருத்துகள், அதிதீவிர தேசியவெறி ஆகியவற்றின் கலவைதான் ஜியோனிசக் கருத்துநிலைக் கோட்பாடுகளாகும். யூத மக்கள், ‘தன்னிகரற்ற தேசம்' என்றும் ‘அவர்கள், மரபின - பண்பாட்டு வகையில் மற்ற எல்லா தேசங்களையும்விட மேன்மையானவர்கள்' என்றும் ஜியோனிசம் கூறுகிறது. இந்தக் கருத்தைத்தான் சென்ற மே 6 ஆம் தேதி அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் சேர்ந்த உறுப்பினர்களின் கூட்டத்தில் பேசிய இன்றைய இஸ்ரேலியப் பிரதமர் எஹுத் ஓல்மெர்ட் (Ehud Olmer) வேறு சொற்களில் கூறினார் : ‘‘யூதர்களாகிய எங்களுக்கு, வரலாற்று ரீதியான எங்களது நிலத்தைப் பற்றிய ஏக்கமே ஊட்டமாகவும் ஊக்கமாகவும் இருந்தது. நானும், என்னைப் போன்ற பிறரைப் போலவே, எங்களது முன்னோர்களின் நிலத்தின் எந்தப் பகுதிகளையும் நாங்கள் இழந்து விடக்கூடிய நாள் ஒருபோதும் வராது என்னும் நம்பிக்கையிலேயே வளர்க்கப்பட்டேன். இந்த நிலம் முழுவதற்கும் எங்கள் மக்களுக்கு சாசுவதமான, வரலாற்று ரீதியான உரிமை இருக்கிறது என்பதை நான் நம்பினேன், இன்றுவரை அதை நான் நம்புகிறேன்.''

ஜியோனிஸ்டுகளின் அகராதியில் ‘நிலம் முழுவதும்' என்பதற்கான சொல் ‘யெரெட்ஸ்' (Eretz). ‘மகா இஸ்ரேல்' என்பது இதற்குப் பொருள். இன்றைய பாலஸ்தீனம், லெபனானின் சில பகுதிகள், சியா, ஜோர்டான், எகிப்து ஆகியவற்றை இந்த ‘மகா இஸ்ரேல்' உள்ளடக்கியதாகும் என்பதற்கு விவிலியத்திலேயே சான்று இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் உள்ள ‘எசேக்கியல் ஆகமம்' பகுதி 47 கூறுகிறது :

‘‘நாட்டின் எல்லைகளாவன : வடக்கே பெருங்கடல் தொடங்கி எத்தாலோன் வழியாய்ச் சேதாதா ஊருக்கு வரும் வரைக்கும், ஏமாதி, பெரோத்தா, தமஸ்குவின் எல்லைக்கும், ஏமாத் எல்லைக்கும் இடைப்பட்ட சபாரீரம், ஆவுரானின் எல்லைக்கடுத்த திக்கோனில் வரைக்குமாகும். அவ்வாறே கடலிலிருந்து ஏனோன்வரை, இது தமஸ்குவின் எல்லையில் உள்ளது - அதன் எல்லை உள்ளது; ஏமாத்தே வடக்கு எல்லையாகும்; இதுவே வடபாகம். கிழக்கு மாநிலமானது, ஆவுரான் நடுவிலிருந்தும் காலாத் நடுவிலிருந்தும் இஸ்ராயேல் நாட்டினின்றும் புறப்பட்டுக் கிழக்குக் கடலில் யோர்தான் நதிவரை பரவியிருக்கும்; கீழ்க்கடலோரத்தையும் சேர்த்து அளந்து கொள்ளுங்கள். தெற்கு மாநிலமானது : ஒரு பக்கத்தில் தாமாலிருந்து சச்சரவு நீர் எனப் பொருள்படும் காதேஸ் என்னும் இடம் வரையிலும், மறுபக்கத்தில் எகிப்து நதி முதல் பெருங்கடல் வரையிலும் பரவியிருக்கும்; இதுவே தென் பகுதி. மேற்கு மாநிலமானது: பெருங்கடல் தொடங்கி நேர்வழியாய் ஏமாத்துக்குச் சேருமட்டும் இடைப்பட்ட நிலமாகும்; இதுவே மேற்குப் பகுதி.

நற்பேறாக, யூதர்களுக்கும் அவர்களது கடவுளுக்கும் இருந்த புவியியல் அறிவு மத்தியக் கிழக்கு நாடுகளுடன் நின்று கொண்டது! இல்லாவிட்டால், ‘வாக்களிக்கப்பட்ட நிலம்' ஆசியாவின் பிற பகுதிகள், அய்ரோப்பா, அமெரிக்கா, ஆப்பிக்கா, ஆஸ்திரேலியா வரை நீண்டிருக்கும்!

நாட்டின் எல்லைகளைத் தீர்மானிப்பதில் மதநூல்களையும் புராணங்களையும் பயன்படுத்தினால் என்ன ஆகும்? ஜியோனிஸ்டுகளைத் தங்கள் வழிகாட்டிகளாகக் கொள்ளும் சங் பரிவாரத்திடம் ஒரு ‘விஷ்ணு புராணம்' இருக்கிறது. இதைப் பார்த்து ராம. கோபாலன் ‘இந்துஸ்தானத்தின்' எல்லைகளை ஏற்கனவே வரையறுத்துள்ளார். இந்திய அரசு இதைப் பின்பற்றுமேயானால், பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், மாலத் தீவு, இலங்கை, பூட்டான், ஆப்கானிஸ்தான் முதலியவை சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்.

இது ஒருபுறமிருக்க, ஓல்மெர்ட் போன்ற ஜியோனிஸ்டுகள், தங்களது முன்னோர்கள் என உரிமை கொண்டாடும் விவிலிய இறைவாக்கினர்கள், யூதர்களுக்கு ‘சாசுவதமாக வாய்க்கப் பெற்ற நிலம்' அவர்கள் கைக்கு எவ்வாறு வந்தது என்பதையும் கூறுகிறார்கள் என்பதைச் சொல்வதில்லை. அதாவது, இந்த ‘வரலாற்று ரீதியான நிலத்'திலிருந்த ஏழு இனங்களைப் படுகொலை செய்த பிறகே இந்த நிலம் கைப்பற்றப்பட்டது. பழைய ஏற்பாட்டிலுள்ள உப ஆகமம் பகுதி 7 கூறுகிறது :

‘‘மேலும், நீ உரிமையாக்கிக் கொள்ளவிருக்கும் நாட்டிலேயே உனது கடவுளாகிய ஆண்டவர் உன்னைப் புகச்செய்து உன்னைக்காட்டிலும் மிகப்பெரிய, வலிமைமிக்க இனத்தாராகிய ஏத்தையர் (Hethite), ஜெற்கேசையர் (Gergezite), அமோறையர் (Amorrite), கானானையர் (Chaananite), பெரோசையர் (Pherezite), ஏவையர் (Hevite), ஜெபுசையர்(Jebusite) என்னப்பட்ட ஏழு இனங்களையும் எனக்கு முன்பாக அழித்து, உன் கடவுளாகிய ஆண்டவர் உன் கைவயப்படுத்திய பின்பு நீ அவர்களை முறியடித்து அடியோடு அழிக்கக் கடவாய். உன் கடவுளாகிய ஆண்டவர்... மகத்துவம் பயங்கரமுமுள்ள கடவுள். அவரே உன் முன்னிலையில் அந்த மக்கள் மெதுவாகவும் கொஞ்சம் கொஞ்சமாகவும் அழிந்துபோகச் செய்வார்... அவர்களைச் சாகடித்துவிடுவார்... நீ அவர்களுடைய பெயர் முதலாய் வானத்தின் கீழ் இராதபடிக்கு, அவர்களை அழிக்கக் கடவாய்.''

Destroying Israel flag
இசையாஸ் ஆகமம் பகுதி 13 - பாபிலோனுக்கு எதிராகக் கூறிய இறைவாக்கு :

‘‘அகப்பட்டுக் கொள்பவன் எவனும் கொல்லப்படுவான். பிடிபடுபவன் வாளால் மடிவான். அவர்களின் கண்கள் காணும்படியே அவர்களுடைய குழந்தைகள் நசுக்கப்படுவர்; அவர்களின் வீடுகள் கொள்ளையிடப்படும்; அவர்களின் மனைவியர் கற்பழிக்கப்படுவர். மேதியரை அவர்களுக்கெதிராய் இதோ நாம் தூண்டுகிறோம்... அவர்கள்... அம்புகளால் இளைஞரைக் கொல்வர்; பால் குடிக்கும் குழந்தைகள் மேல் இரக்கம் காட்டார்; குழந்தைகளுக்கு அவர்கள் கண்கள் இரங்கமாட்டா.''

பாபிலோன் அரசு அழிக்கப்பட்ட பிறகு,

‘‘மக்கள் இனி ஒருபோதும் அங்கே குடியேற மாட்டார்கள்
எல்லாத் தலைமுறைகளுக்கும் அது குடியற்றுக் கிடக்கும்
அராபியர் தம் கூடாரத்தை அங்கு அடிக்க மாட்டார்கள்''

என்கிறார் இசையாஸ். ஜியோனிஸ்டுகள் இந்தக் கூற்றில் ஒரு பகுதியை மட்டுமே ஒப்புக் கொள்வர் : ‘‘அராபியர் தம் கூடாரத்தை அங்கு அடிக்க மாட்டர்கள்.'' மற்ற பகுதி இவர்களுக்கு இசைவானதாக இராது. ஏனெனில் ‘‘அங்கு குடியேறுகிறவர்கள்'' இவர்களல்லவா!

மனிதப் படுகொலைகள் பற்றிய, ரத்தத்தை உறைய வைக்கும் பகுதிகள் பழைய ஏற்பாட்டில் இன்னும் ஏராளமாக இருக்கின்றன. ‘எண்ணாகமம்' பகுதி 32,35; ‘சாவேல் ஆகமம் 1 பகுதி 27; இப்படிப் பல. ஆக, கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே இனம் யூதர்களே என்பதை நிறுவுவதற்காக எழுதப்பட்ட இந்த வசனங்கள்தாம், ‘இனப்படுகொலை' (Genocide), ‘பயங்கரவாதம்' (Terrorism) என்பனவற்றுக்கான வரையறையை வழங்குகின்றன. இந்த ‘இறைவாக்குகள்' ஜியோனிசக் கொலைவெறியை நியாயப்படுத்தும் கருத்துநிலைக் கருவிகளாக இருப்பதில் வியப்பில்லை. இதன் காரணமாகத்தான் யூதர்கள், ஏசுவையும் புதிய ஏற்பாட்டையும் வெறுக்கிறார்கள்.

யூதர்களிடையேயும் வர்க்க வேறுபாடுகள் ஏன், சாதி போன்ற வேறுபாடுகளும்கூட உள்ளன. ஆனால், இந்த வர்க்க வேறுபாடுகளைக் கடந்து எல்லா யூதர்களும் உலகளவிலேயே ஒரு யூத தேசமாக அமைகிறார்கள் என்று ஜியோனிசம் கூறுகிறது. தான் உலகம் முழுவதிலுள்ள யூத மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை நடத்துவதாகவும், இது உலகிலுள்ள பிற நாடுகள் அனைத்திற்கும் பொதுவாக உள்ள யூத விரோதக் கொள்கையை எதிர்த்துப் போராடுவதாகவும் கூறுகிறது. யூத உழைக்கும் மக்கள் பிற தேசிய இனங்களிலுள்ள உழைக்கும் மக்களுடன் இணைவதைத் தடுக்க, இந்த இனவாத தேசியத்தைப் பயன்படுத்துகிறது. அடிப்படையில் ஜியோனிசம், ஏகாதிபத்திய நாடுகளிலுள்ள ஏகபோக மூலதனத்துடன் அய்க்கியமாகியுள்ள யூதப் பெருமுதலாளி வர்க்கத்தின் நலன்களைத்தான் பிரதிநிதித்துவம் செய்கிறது.

இஸ்ரேலின் ‘பொருளாதார வலிமை'யை உருவாக்குபவை : 1. ஈவுத் தொகைகளையோ, லாபத் தொகைகளையோ எதிர்பார்க்காமல் ஜியோனிஸ்டுகள் வழங்குகிறார்கள் என்றால், பெரும்பகுதி அமெரிக்காவிலிருந்தே வருகிறது. இதற்கு வரிவிலக்கு அளிப்பதன் மூலம் மறைமுகமாகவும் தானே நிதி உதவிகள் வழங்குவதன் மூலம் நேரடியாகவும் அமெரிக்கா ஒத்துழைப்புத் தருகிறது; 2. யூதர்கள் மீது இழைக்கப்பட்ட கொடூரங்களுக்கு இழப்பீடாக மேற்கு ஜெர்மனி அரசு வழங்கி வந்த பெருந்தொகைகள்; 3. இனவெறி தென்னாப்பிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் போன்ற அய்ரோப்பிய நாடுகள் வழங்கி வந்த உதவிகள்; 4. விரட்டியடிக்கப்பட்ட பாலஸ்தீன அராபியர்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட நிலங்கள், பிற உடைமைகள், வெளிநாட்டு முதலீடுகள், உதவிகள் மீது கட்டுப்பாடு செலுத்தும், அவற்றைத் தன் உசிதம்போல் பயன்படுத்தும் அதிகாரம் இஸ்ரேலிய பூர்ஷ்வா வர்க்கத்திடமல்ல, அந்த நாட்டின் அதிகார வர்க்கத்திடமே உள்ளது. இவற்றால் பயனடைகின்றவர்கள் யூத சமுதாயத்தின் மேலதட்டினர் மட்டுமல்ல; அடித்தட்டினரும்தான். இஸ்ரேலிய சமுதாயத்தின் மிகப் பெரும் பகுதியினர், பிற நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் அல்லது அவர்களது வழித்தோன்றல்கள்; இனவெறி தென்னாப்பிக்கா போல நிலங்களை வாங்கிய, அபகரித்த வந்தேறிகள்.

இஸ்ரேலிய சமுதாயத்தின் உச்சியில் அய்ரோப்பாவிலிருந்து வந்த வெள்ளை நிற யூதர்களும் அடித்தளத்தில் ஆசிய (மத்தியக் கிழக்கு), ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வந்த பழுப்பு, கறுப்பு நிற யூதர்களும் இருக்கிறார்கள். சாதிப் பாகுபாடு போன்ற இந்த வேறுபாடு, வர்க்கப் பிரிவினையாகவும் அமைகிறது. ஆனால், அடித்தட்டு மக்களும்கூட ஜியோனிச இனவெறியைப் பகிர்ந்துகொள்வதுதான் வேதனை. அந்த அளவுக்கு ஜியோனிசக் கருத்துநிலை ஆதிக்கம் செலுத்துகிறது என்றாலும், அதற்கும் ஒரு பொருளியல் அடிப்படை உண்டு. அதாவது, தாங்கள் முன்பு வாழ்ந்து வந்த மத்தியக் கிழக்கு, ஆப்பிரிக்க நாடுகளில் கனவிலும் பார்க்க முடியாத வேலைவாய்ப்புகள், வீட்டுவசதிகள், கல்வி, மருத்துவ வசதி, வாழ்க்கையில் முன்னேற்றமடைவதற்கான வாய்ப்புகள் ஆகியவற்றை இவர்கள் இஸ்ரேலிய அதிகார வர்க்கத்திடமிருந்தே பெறுகின்றனர். அதிதீவிர வலதுசாரி யூத அரசியல் கட்சிகளின் சக அடித்தளமாக விளங்கும் இவர்களின் ஒரே ஆதங்கம், தாங்கள் வெள்ளை நிற யூதர்களுக்கு சமமாக, இஸ்ரேலில் ஒரு பெரும் மாற்றத்தைக் கொண்டுவரக் கூடியவர்களாக இவர்கள் இல்லை.

அமெரிக்காவிலிருந்து சுயேச்சையாக சீனா, இந்தியா போன்ற வளர்முக நாடுகளிடம் வர்த்தக, ராணுவ உறவுகள் வைத்துக் கொள்ளுமளவிற்கு இஸ்ரேல் ஒடுக்குமுறைகளையும் பேணிப்பாதுகாக்கும் பழமைபேண் பிற்போக்கு அரபு அரசுகள் மூலம், மறுபுறம் ஜியோனிச இஸ்ரேல் அரசு மூலம் மத்தியக் கிழக்கு எண்ணெய் வளத்தைச் சுரண்ட, அப்பகுதியில் தனது ‘காவல் நாயாக' இஸ்ரேல் தொடர்ந்து செயல்பட, அனைத்து உதவிகளையும் அமெரிக்கா வழங்குகிறது.

- அடுத்த இதழிலும்
Pin It