கடந்த இரு இதழ்களில் வெளிவந்த அழகிய பெரியவன் அவர்களின் பேட்டி, இந்த இதழிலும் தொடர்கிறது...

தலித் எழுத்தைப் பார்ப்பனியம் எப்படிப் பார்க்கிறது?

Azhakiya Periyavan
தலித்துகள் தீவிரமாக எழுத வருவதற்கு முன்பு தமிழ் இலக்கியம் - பார்ப்பன, வேளாளச் சாதி எழுத்தாளர்களிடம், சில இடை நிலைச் சாதியினரிடம் இருந்தது. விமர்சன அளவுகோல்களும் கூட, மிகக் குறிப்பாகப் பார்ப்பன, வேளாள எழுத்தாளர்களாலேயே உருவாக்கப்பட்டு, தூக்கிப் பிடிக்கப்பட்டன. இந்த நிலை இன்றும்கூட பல வடிவங்களில் தொடர்கிறது. இவை தலித் இலக்கியத்துக்கான நெருக்கடிகளை இன்றளவும் உருவாக்குகின்றன. தலித் இலக்கியத்தின் வரவையும் வீச்சையும் செத்துக் கொள்ள இயலாத விமர்சகர்கள் - தரம், செய்நேர்த்தி, அழகியல் போன்ற சில தரவுகளை தலித் படைப்புகள் மீது சுமத்தி மதிப்பீடுகளைச் செய்கின்றனர். உட்சாதிப் பிரிவுகளைக் கூர்மைப்படுத்திப் பேசும் படைப்புகளை அவர்கள் அதிக கவனத்துடன் முன்மொழிகின்றனர்.

தலித் இலக்கியத்தின் மிகக்கிய கூறுகளில் ஒன்று, அதன் இயல்பான வெளிப்பாட்டுத் தன்மையும், கோபம் தான். இந்த இயல்பே அதன் உயிர்ப்புக்கும் காரணம். அதை மிக நேர்த்தியாக மெருகூட்டுகிறபோது, அதன் இயல்புத் தன்மை கெடுகிறது. இந்த கச்சாத்தன்மை, பிறரால் புரிந்து கொள்ளப்படுவதற்கு மாறாக வெறுக்கப்படுகிறது.

இவ்வகை சாதிய தர அளவுகோல்கள்தான் படைப்பின் தரத்தைத் தீர்மானிக்கிறது என்பதால், தலித் இலக்கியத்தின் வேகம் மட்டுப்படுத்தப்படுகிறது. இந்த அளவுகோல்களே பதிப்பாளர்களிடம் செயல்பட்டு, நூல்கள் வெளியாவதும், பரந்த தளத்துக்குக் கொண்டு செல்லப்படுவதும் நடக்காமல் போய்விடுகின்றன. வெகுசன இதழ்களிலும் இலக்கியப் பகுதிகளைப் பார்க்கிறவர்கள், சாதியக் கருத்தோட்டம் கொண்டவர்களே என்பதால், அவ்விதழ்களில் ஓர் அப்பட்டமான பாலுறவுக் கதையோ, கவிதையோ வருவதற்குக்கூட சாத்தியமிருக்கிறதே ஒழிய, ஒரு வீச்சான தலித் கதை வருவதற்கு சாத்தியம் இல்லை!

தலித் எழுத்தாளர்களுக்கு, பார்ப்பன கருத்தியல் கொண்ட இதழ்கள் எழுத இடம் தருவதும்கூட, ஒருவகையான சமரசத்தின் அடிப்படையிலேதான் என்பதை நாம் நுட்பமாகக் கவனித்து புரிந்து கொள்ளலாம். அவர்களோடு பிணைந்து இருந்தால் தொடர்ந்து அங்கே இடம் கிடைக்கும்!

‘இந்தியா டுடே' உங்களுக்கு ‘சிகரம் 15' என்ற விருதினை வழங்கியது. அதைப் பற்றி என்ன நினைத்தீர்கள்?

மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. ‘இந்தியா டுடே' தமிழ்ப் பதிப்பைத் தொடங்கி 15 ஆண்டுகள் ஆனதையொட்டி திரைப்படம், விளையாட்டு, தொழில், இலக்கியம் எனப் பல்வேறு துறைகளையும் சேர்ந்த இருபத்தைந்து பேர்களை நம்பிக்கைக்குரிய எதிர்கால ஆளுமைகளாகப் பட்டியலிட்டு, அதிலிருந்து 15 பேரை தேர்வு செய்து விருதுகளை வழங்கினர். அவர்கள் பட்டியல் இட்டதில் 3 தலித் எழுத்தாளர்கள் இடம் பெற்றிருந்தனர். விருது பட்டியலில் நானும், கவிஞர்கள் குட்டி ரேவதியும், உமா மகேசுவரியும் இடம் பெற்றோம். தலித் எழுத்தாளர்களும், பெண்ணியப் படைப்பாளிகளும் இலக்கிய உலகில் உருவாக்கியுள்ள அதிர்வலையையும், நெருக்கடியையும் நான் இதன் மூலம் புரிந்து கொண்டேன்.

‘இந்தியா டுடே'வினுடைய இந்துத்துவ ஆதரவு மற்றும் பார்ப்பனியத் தன்மையுடனான அணுகுமுறை பற்றி எனக்குத் தெரியும். மாயாவதி போன்ற தலித் தலைவர்களை மிகக் கேவலமாக இழிவுபடுத்திய கதைகளும் அவ்விதழில் வந்துள்ளன; என்றாலும், தலித் அடையாளத்துடன் புதிய இலக்குகளில் நுழைதல் என்ற அடிப்படையிலும், வேறொரு பரந்த வாசகத்தளத்தின் அறிமுகத்தினைக் கருத்தில் கொண்டும் நான் அவ்விருதைப் பெற்றுக் கொண்டேன். இந்த அறிமுகம் என்னை வேறொரு பரவலான தளத்துக்கு கொண்டு சென்றுள்ளது. வெளியூர்களுக்குச் செல்கிற போது நேரிடும் சந்திப்புகளில் இதை நான் உணர்கிறேன்.

பின் நவீனத்துவ எழுத்துகளில் ஏன் சமூகப் பிரச்சினைகள் கவனத்துக்குள்ளாக்கப்படுவதில்லை?

தமிழின் படைப்பு மனம், நவீனத்துக்கு எதிராகவே இருக்கிறது. இங்கே பின் நவீனத்துவ பாதிப்புடனும், தன்மையுடனும் வெளிவந்த படைப்புகளில் மொழி, சொல்முறை போன்ற புற அம்சங்கள் மட்டுமே நவீனமாக இருந்ததே ஒழிய அப்பிரதிகளின் உள்ளடக்கம் பழையதாகவே இருந்தது. மவுனி, நகுலன், சுந்தரராமசாமி, கோணங்கி, ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன், தமிழவன், யுவன் சந்திரசேகர் என நவீனத்திலும், பின்நவீனத்திலும் தமது படைப்புகளில் சிலவற்றைத் தந்துள்ளவர்களின் ஆக்கங்கள், இந்த உள்ளடக்கப் போதாமைகளைக் கொண்டுள்ளன. ‘ஜே.ஜே. சில குறிப்புகள்' நாவல் மொழியிலும், சொல் முறையிலும், கட்டமைப்பிலும் மட்டுமே நவீனத் தன்மையைக் கொண்டுள்ளது. கோணங்கியின் நாவல்களான ‘பாழியும்', ‘பிதுரவும்' உட்புக முடியாத கட்டமைப்புடன் இருக்கின்றன. தொன்மங்கள், வழக்கங்கள் என்ற அடிப்படையில், விமரிசனத்துக்கு உட்படுத்த வேண்டிய கூறுகளை, கோணங்கி கேள்வி முறையின்றி மறு ஆக்கம் செய்கிறார் தமது பிரதிகளில்.

நவீன எழுத்து முறையைக் கொண்ட ஜெயமோகனின் ‘பின் தொடரும் நிழலின் குரல்' சுரண்டப்படும் மக்களுக்கு ஒரே ஆதரவாக உலகளாவிய தளத்தில் நம்பிக்கையளித்துக் கொண்டிருக்கும் மார்க்சியத்தை கொச்சைப்படுத்தத் துடிக்கிறது. நவீன உலகில் ஒடுக்கப்படும் மனிதர்களின் நிலை குறித்தோ, பெண்களின் இடம் குறித்தோ, மனித இருப்பின் அடிப்படையான கேள்விகள் குறித்தோ இவர்களின் பின்நவீனத்துவ எழுத்துகள் கவலை கொள்வதில்லை. நவீனத்தின் எல்லைக்கு உட்பட்டவையாக மக்கள் பிரச்சினைகள் இல்லை என்று இவர்கள் கருதுகிறார்கள்.

பின் நவீனத்துவ எழுத்துகள் குறித்து தங்களுடைய கருத்து என்ன?

பின் நவீனத்துவம், மொழிச் செயல்பாட்டை அதிகரித்திருக்கிறது. எதார்த்தத்தின் எல்லைகளை உடைத்திருக்கிறது. ஒற்றைத் தன்மையை சிதைத்திடுவதன் மூலம் பன்முகத் தன்மை சாத்தியமாகியிருக்கிறது. இருண்ட பகுதிகள் இதனால் கவனம் பெறுகின்றன. கட்டுடைத்தல் எனும் செயல்பாட்டின் மூலம் பிரதி கட்டுடைந்து, ஆசிரியரின் மனோபாவத்தைக் காட்டி அதிர்ச்சியுறச் செய்கிறது. தமிழில் சில படைப்புகள் மீதான தலித் படைப்பாளிகளின் கட்டுடைத்தல், பெரும் அதிர்வுகளை உருவாக்கியுள்ளன.

தெலுங்கு மற்றும் கன்னட தலித் இலக்கியத்தைப் பற்றி சொல்லுங்கள்?

கன்னட தலித் இலக்கியங்கள், தமிழில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவையாக இருக்கின்றன. கன்னடத்தின் பெரும் எழுத்தாளர்களான காரந்த், அனந்த மூர்த்தி, பைரப்பா போன்றோரின் படைப்புகள் புதிய எல்லைகளைக் காட்டியவை. ‘அழிந்த பிறகு', ‘சம்ஸ்காரா', ‘பருவம்' போன்ற நாவல்கள் என்னால் மறக்க முடியாத நாவல்களாகும். தமிழ் தலித் இலக்கியத்துக்கு மாதிரிகளாக அமைந்தவற்றுள் கன்னட தலித் இலக்கியங்கள் தன்மையானவை.

சித்தலிங்கைய்யா, தேவனூரு மகாதேவ, அரவிந்த மாளகத்தி, மொகள்ளி கணேஷ் போன்றவர்களின் கதைகளும், சுயசரிதைகளும், கவிதைகளும் மொழிகளைத் தாண்டி உலுக்குபவை. தேவனூரு மகாதேவ அவர்களின் ‘குசுமபாலெ', ‘பசித்தவர்கள்' போன்ற படைப்புகள் எனக்கு மிகப் பிடித்தமானவை. அவரின் எள்ளல் தொனியும், எளிமையும், ஆழம் யாரையும் கவரக் கூடியது.

கன்னடத்துடன் ஒப்பிடும்போது, தெலுங்கு மொழியிலிருந்து தமிழுக்குக் கிடைத்த மொழிபெயர்ப்பு நூல்கள் சொற்பம்தான். மிகச் சமீபத்தில் படித்த ‘தீண்டாத வசந்தம்' என்கிற நாவல், என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. இதை எழுதிய கல்யாண ராவ், நக்சல் குழுக்களின் ஒரு பிரிவில் செயல்படுபவர். மக்கள் பதிப்பாக வெளியிடப்பட்டு, தமிழில் இரண்டு மூன்று பதிப்புகளை இந்த நாவல் கண்டுள்ளது. இந்த நாவல், தலித்துகளின் நூற்றாண்டுகால வரலாறை கவித்துவ அழகோடு, வீச்சு குன்றாமல் சொல்கிறது. ‘தற்காலத் தெலுங்கு கவிதைகள்' என்ற தொகுப்பும் அண்மையில் படித்த முக்கியமானதொரு தொகுப்பு. அதில் இடம் பெற்றிருக்கும் சிவசாகர், பைடி தொரேஷ் பாபு, சதீஷ் சுந்தர், மகி ஜபீன், நஙமுனி போன்றோரின் கவிதைகள் அதிர்வுகளை வாசகர் நெஞ்சில் உருவாக்கக் கூடியவை. நஙமுனியின் ‘மரக்குதிரை' 1977இல் ஆந்திராவில் அடித்த புயலின் பாதிப்பைப் பேசும் குறுங்காவியம். இது, எல்லா சீரழிவுகளின் போதும் பொருந்தக் கூடிய கேள்விகளை எழுப்பக் கூடியது.

மலையாள இலக்கியம் பற்றி...

Azhakiya periyavan receiving award from India Today editor
மலையாள இலக்கியத்தை எனக்கு மிகவும் நெருக்கமானதாக உணர்கிறேன். மொழிபெயர்ப்பின் வழியே அதிகம் வாசித்த ஒன்றாகவும், அதிகம் மொழி பெயர்ப்புகள் கிடைக்கக் கூடியதாகவும் இருப்பது இதற்குக் காரணமாக இருக்கலாம். தகழி, பஷீர் ஆகியோரின் பெரும்பாலான படைப்புகள் தமிழில் வந்துள்ளன. தகழியைக் காட்டிலும் பஷீர், மானுட அவலங்களையும், பல்வேறுபட்ட மனிதர்களையும் சித்தரிப்பவராக இருக்கிறார். அவர் எழுத்துகள் ‘ஆன்ம விசாரணை'யை மேற்கொள்கின்றன. தகழியின் ‘தோட்டியின் மகன்', அதிகம் வாசிக்கப்பட்ட நாவலாக இருந்தாலும், தலித் விமர்சகர்களின் காட்டமான குற்றச்சாட்டுகளை அது எதிர்கொண்டது. தலித் வாழ்வைக் கண்டும், கேட்டும் அறிந்த குறைவான அனுபவத்துடன் தமது சொந்த வாழ்வியல் பார்வையையும் கலந்து உருவான படைப்புகளில் ஒன்று ‘தோட்டியின் மகன்'. இதில் மேலிருந்து கீழாகப் பார்க்கும் பார்வை இருப்பதால், இது தலித் வாசகனுக்கு அந்நியமாய் இருக்கிறது என்றார்கள் அவர்கள். ‘தோட்டியின் மகனை' இன்றைய கருத்து நிலையுடன் விமர்சிப்பதால் உருவாகும் கருத்து இது. ஆனால், அக்கால சூழலைப் பொறுத்தமட்டில் அந்த நாவல், தலித் வாழ்வியலைக் காட்ட முனையும் ஒரு முக்கியமான பிரதிதான்.

எம்.டி. வாசுதேவன் நாயர், பால் சக்காயா, கமலாதாஸ், பாலச்சந்திரன் சுள்ளிக்காடு, சச்சிதானந்தன் என்று எனக்குப் பிடித்தமான பலரை மலையாளத்தில் நான் சொல்ல முடியும். இவர்களில் பால் சக்காயாவின் சிறுகதைகள் மிகவும் புதிதாக இருந்தன; இருக்கின்றன. கிறிஸ்துவின் பிறப்பின்போது கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான குழந்தைகளை முன்வைத்து அவர், ‘யாருக்குத் தெரியும்' கதையில் எழுப்பும் அறம் சார்ந்த கேள்வி என்னை உலுக்கியது. நான் மெதுவாக மத நம்பிக்கையிலிருந்து விடுபட்டுக் கொண்டிருந்த காலத்தில், அக்கதையைப் படிக்க நேர்ந்தது. கதையைப் படித்து முடித்ததும் கொஞ்ச நஞ்சமிருந்த மதப் பிடிமானங்களும் சடாரென உதிர்ந்து போயின. ஒரு தகப்பனும், சிறுவயது மகனும் பழத்தை ஒரு துணியில் சுற்றிச் செய்த போலி வெடிகுண்டினைக் கொண்டு ரயிலை நிறுத்தப் போவதாக ஒரு சிறுகதையுண்டு. அதைப் படித்தபோது சக்காயாவை பிரம்மித்தேன். மனித அவலத்தை துக்கம் பொங்கப் பொங்க பகடி செய்த அது போன்றதொரு கதையை நான் படித்ததில்லை.

கவிதைகளில் சச்சிதானந்தன், சுள்ளிக்காடு, டி.பி. ராஜீவன், அய்யப்பன் போன்றோர் தனித்துப் பதிகிறார்கள். மலையாள இலக்கியத்தின் பல்வேறு வகை மாதிரிகளைக் கொண்ட, விரிந்த தளத்தில் இயங்குகிற தன்மையும், நவீனத்துவம் தனித்தன்மைகளாகத் தெரிகின்றன.

குடும்பத்தைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்? ஒரு எழுத்தாளரின் சுதந்திரத்தை குடும்பம் பாதிக்கிறதா?

குடும்பம் என்கிற நிறுவனம் சிதைக்கப்பட வேண்டும் என்கிற கருத்தில் என்னிடம் குழப்பமான பதில்களே இருக்கின்றன. சமூகம் என்கிற பெரிய நிறுவனம் மாற்றப்படாத வரை, குடும்பம் என்கிற சிறு அலகுகளின் தேவை இருக்கவே செய்கிறது. அடிமைத்தனம், ஆண் ஆதிக்கம், அதிகாரம், சாதிய மனோபாவம் என்கிற கட்டமைப்புகளைக் கொண்ட குடும்ப அலகிலிருந்து ஒருவன் விடுதலை பெறும் பட்சத்தில், அவனுக்கான புகலிடமாக பரந்த சமூகமே இருக்கிறது. அந்தச் சமூகம் அவனுக்கான உகந்த வெளியாக அமையாத போது வாழ்க்கையில் நெருக்கடிகளும், உளவியல் சிக்கல்களும் உண்டாகின்றன. எனவே, சமூகம் என்கிற பெருநிறுவனத்தின் சிதைவும், குடும்பம் என்கிற சிறு நிறுவனத்தின் சிதைவும் ஒன்றுக்கொன்று முன் நிபந்தனைகளாகின்றன.

ஆனால், குடும்பத்தை அதிகபட்ச ஜனநாயகத் தன்மை கொண்டதாகவும், பெண்ணுக்கு முழுச் சுதந்திரம் அளிக்கக் கூடியதாகவும், அதில் வளரும் குழந்தைகளுக்கு ஆக்கப்பூர்வமான சூழலைத் தரக்கூடியதாகவும் மாற்ற வேண்டும் என்று உறுதியாக நினைக்கிறேன். குடும்பம் கலைஞனுக்கு சில வகைகளில் தடையாக இருந்தாலும், அவன் பல்வேறு நெருக்கடிகளிலிருந்து மீளவும், தன்னை உருவாக்கிக் கொள்ளவும், அவன் தலைசாய்க்கும் இடமாகவும் செயல்படுகிறது. அவனுடைய அனுபவக்களன் குடும்பமே. குடும்பம் எழுத்தாளர்களுக்குத் தடையாக இருக்க முடியாது என்றே எண்ணுகிறேன்.

தமிழகத்தில் நிலவும் கருத்துச் சுதந்திரப் பறிப்பை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

கருத்துச் சுதந்திரத்துக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலாகவே நான் இதைப் பார்க்கிறேன். ‘தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம்' என்ற பெயரில் அரசியல் தளத்தில் இணைந்துள்ள விடுதலைச் சிறுத்தைகளும், பாட்டாளி மக்கள் கட்சியும், மூவேந்தர் முன்னேற்றக் கழகம் சமூகத் தளத்திலே ஒன்றிணையாத மக்களை முன்னிலைப்படுத்துபவை. தலித் வன்கொடுமைகளை எதிர்த்து விடுதலைச் சிறுத்தைகள் நடத்தும் போராட்டங்களில், நிச்சயம் மற்ற இரு அமைப்புகளும் பங்கேற்பதில்லை. சமூகச் சிக்கல்கள் எதையும் எதிர்த்துப் போராட முன்வராத தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம், குஷ்பு பிரச்சினையை மட்டும் மூர்க்கத்துடன் கையிலெடுப்பது அரசியல் நோக்கம், உள்நோக்கம், ஆணாதிக்க வக்கிர மனோபாவம் கொண்டது.

கற்பு குறித்து மிகக் கடுமையான கருத்துகளை முன்வைத்தவர் தந்தை பெரியார். அவரால் பண்படுத்தப்பட்ட தமிழகம், இன்றும்கூட தனது பகுத்தறிவுத் தன்மையை இழந்துவிடவில்லை என்பதை இப்பிரச்சினையில் கருத்து தெரிவித்த வாதப் பிரதிவாதங்களைக் கொண்டு பார்க்கலாம். குஷ்புவை எதிர்க்கிறவர்கள் பெரும்பாலும் அரசியல் அமைப்புகளைச் சார்ந்தவர்களாகவே இருக்கின்றனர். இந்த கருத்துப் போரில், கிட்டத்தட்ட எல்லா அரசியல் கட்சிகளுமே குஷ்புவை எதிர்த்துக் கருத்துச் சொல்லியிருக்கின்றன. மக்களிடம் வாக்கு கேட்டு போக வேண்டுமே என்ற எண்ணத்திலேயே அவ்வமைப்புகள் இப்படியான நிலைப்பாட்டை எடுக்கின்றன. ஆனால், இது மக்கள் பிரச்சினையல்ல; பற்றியெரியக்கூடிய வேறு பிரச்சினைகள் அவர்களுக்கு உள்ளன. அறிவுஜீவிகளும் சிந்தனையாளர்களும் இப்பிரச்சினையில் தெளிவாகவே இருக்கிறார்கள். அவர்கள் கருத்துரிமையைப் பாதுகாக்க குரல் கொடுக்கிறார்கள். ஒட்டுமொத்த தமிழகம் இந்த விசயத்தில் ஒரே மாதிரியாக இல்லை என்பதுதான் உண்மை.

நேர்காணல் : டி.டி. ராமகிருஷ்ணன் தொடரும்
புகைப்படங்கள் : புதுவை இளவேனில் நன்றி : ‘மாத்யமம்'