“வெறும் அமைப்பு ஒரு கட்சியாகிவிடாது. ஒரு கட்சி என்பது, கொள்கைகளால் பிணைக்கப்பட்ட மக்களின் அமைப்பு. ஒரு கட்சி கொள்கையின்றி கட்சியாக செயல்பட முடியாது. ஏனெனில், கொள்கையைத் தவிர கட்சியின் உறுப்பினர்களைப் பிணைப்பது வேறெதுவும் இல்லை. கொள்கையற்ற கட்சி, ஒரு மாட்டுக் கொட்டகையைப் போன்றதே.'' - டாக்டர் அம்பேத்கர் 

இந்த நாட்டில் மாட்டுக் கொட்டகைகள்தான் மலிந்து கிடக்கின்றன. அரசியல்வாதிகளிடமிருந்து தேர்தல் வாக்குறுதிகள் மட்டுமே வாக்கு அறுவடைக் காலம்வரை இலவசமாகக் கிடைக்கும். அதற்குப் பிறகு அடுத்த தேர்தல்வரை, ஏமாற்றங்கள் மட்டுமே எஞ்சி நிற்கும்! இத்தகைய கட்சிகளுடன் இணைந்து போட்டியிடும் தலித் கட்சிகள், அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிவிட முடியுமா? திராவிடக் கட்சிகளை இடையறாது விமர்சித்து வரும் தலித் கட்சிகள், ஒவ்வொரு தேர்தலின் போதும் அவர்களுடன் கூட்டணி வைத்துக் கொள்வது, மிகப் பெரிய முரண்பாடாகவே இருக்கிறது.

‘ஜனநாயக முற்போக்குக் கூட்டணி'யில் இடம்பெறக் காத்திருந்தும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டதால், எதிரணிக்குத் தள்ளப்பட்ட விடுதலைச் சிறுத்தைகளும், எந்தக் கூட்டணியிலும் இணைய முடியாமல் தனித்து விடப்பட்ட புதிய தமிழகமும் இணைந்து தேர்தலைச் சந்திக்க முடியாமல் போகின்ற நிலைக்கு, வரவிருக்கின்ற சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், பாடம் புகட்டட்டும். பிற கட்சிகளுடன் ஒன்றிணைந்து செயல்படும் தலித் கட்சிகள், தலித் செயல் திட்டத்தை முதன்மைப்படுத்தி, தங்களுக்குள் ஓர் ஒற்றுமையைக் கட்டத் தவறினால், அரசியல் அதிகாரம் கானல் நீராகவே இனி வரும் காலங்களிலும் இருக்கும்.

தலித் மக்கள் தனித்த ஓர் அரசியல் சக்தியாக மாற வேண்டும்; வாக்கு வங்கியாகத் திரள வேண்டும் என்று தலித் இயக்கங்கள் வலியுறுத்துகின்றன. ஆனால், உண்மை நிலை கசப்பூட்டுவதாகவே இருக்கிறது. மக்கள் தொகையில் அய்ந்தில் ஒரு பங்குள்ள சிறுபான்மையினரான தலித் மக்கள், இன்றுவரை பல்வேறு கட்சிகளுக்கும் நிரந்தர வாக்கு வங்கிகளாக உள்ளனர். மதம் மற்றும் உட்சாதிகளும் அவர்களைப் பிரிக்கின்றன; பல்வேறு தலித் கட்சிகளாலும் வாக்குகள் பிளவுபடுகின்றன. இந்நிலையில் வாக்கு வங்கியாக மாறுவது எப்படிச் சாத்தியமாகும்? இந்தத் தடைகளைக் கடக்க உறுதியான கொள்கை நிலைப்பாடுகளும், உரிமைப் போராட்டங்களும், தலித் இயக்கங்களின் ஒருங்கிணைந்த செயல்பாடுகளுமே அரசியல் அரங்கில் நாம் எண்ணிய இலக்கை அடைய வழிவகுக்கும்.

இன்று பரந்துபட்ட அளவில் தலித் கட்சிகளின் அடையாளமாகத் திகழும் தொல். திருமாவளவன், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிதம்பரம் நடராசன் கோயிலுக்குச் சென்று ஆசி பெற்றார்; இந்தச் சட்டமன்றத் தேர்தலிலும் மணவாள நல்லூர் கொளஞ்சியப்பன் கோயிலுக்குச் சென்று ஆசி பெற்றுள்ளார். அம்பேத்கரை முன்னிறுத்தி, ஒரு மாற்று இயக்கமாகத் திகழ வேண்டிய தலித் இயக்கங்களும் இத்தகைய அடிப்படையான கொள்கைகளில் சமரசங்களை மேற்கொள்வதால், தலித் அரசியல் கடும் பின்னடைவை சந்திக்கிறது. சமூக விடுதலைக் களத்தில் இந்துத்துவ நச்சுக் கருத்துகளை எதிர்ப்பதும், அரசியலில் அதற்கு நேர்மாறாக செயல்படுவதும் நம்மை மாட்டுக் கொட்டகைக்குதான் கொண்டுபோய் சேர்க்கும்.

‘தலித் முரசை'ப் பொறுத்தவரை, நாம் தேர்தலுக்கும், கட்சி அரசியலுக்கும் என்றுமே முக்கியத்துவம் அளித்தது இல்லை. ஒரு ஜனநாயகக் கடமையாக தேர்தலில் வாக்களிப்பதை மட்டுமே பரிந்துரைக்கிறோம். ஏனெனில், அரசியல் கட்சிகளால் தலித் மக்களுடைய நேரம், உழைப்பு, மிகச் சிறிய அளவிலான பொருள் வளம் என அனைத்தும் வீணடிக்கப்படுகிறது. “தீண்டத்தகாத மக்கள் அதிகாரத்தைக் கைப்பற்றவோ, சொத்துகளை அபகரிக்கவோ போராடவில்லை; தங்களுடைய மனித மாண்புகள் காக்கப்பட வேண்டும் என்றுதான் போராடுகிறார்கள்'' என்றார் அம்பேத்கர். அது, தேர்தல் அரசியல் மூலம் சாத்தியமில்லை. சாதி ஒழிப்புக்கான போராட்டத்தின் மூலமே மனித மாண்புகள் மீட்டெடுக்கப்படும். இருப்பினும், தேர்தலை தங்களுக்கான ஓர் உத்தியாகக் கையாளும் தலித் கட்சிகளை ஆதரிக்கிறோம்.

இதுவரை அனைத்துத் தளத்திலும் பறிபோன ஒடுக்கப்பட்ட மக்களுக்கான பிரதிநிதித்துவத்தைப் பெறவும், வன்கொடுமைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கவும், அரசியல் உரிமைகளை வென்றெடுக்கவும், சாதி ஒழிப்பை வலியுறுத்தவும் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தனித்த சின்னத்துடன் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகளையும், கூட்டணியின்றி தனித்துப் போட்டியிடும் புதிய தமிழகத்தையும் ஆதரிக்கிறோம். இவ்விரு கட்சிகளும் நேரடியாகப் போட்டியிடாத பிற இடங்களில், பார்ப்பனத் தலைமையிலான அ.தி.மு.க.வுக்கு எதிரான கூட்டணியாக இருக்கும் ‘ஜனநாயக முற்போக்குக் கூட்டணி'யை ஆதரிக்கிறோம்.
.
Pin It