ஒரு நாட்டில் வகுப்புப் பிரிவினைகள் நிலைத்திருக்கும் வரையிலும், ஒவ்வொரு வகுப்பினரும் தாம் தாம் தனித் தனி வகுப்பினரென்றும், தாம் மற்ற வகுப்பினருடன் உடனிருந்து உண்பதும், கலப்பதும், உறவாடுவதும், தமது மதத்திற்கும், கடவுளுக்கும், வேதத்திற்கும், புராதன நாகரீகத்திற்கும் விரோத மான செய்கையாகுமென்றும் நினைத்துக் கொண்டும் உண்மையாகவே நம்பிக் கொண்டும் இந்த நம்பிக்கையின் படி நடந்து கொண்டும் வருகின்ற வரையிலும் ஒரு வகுப்பினர் மற்றொரு வகுப்பினருடைய நன்மைக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் அந்தரங்க சுத்தியுடன் உழைப்பார்கள் என்று நினைப்பது தவறான எண்ணமேயாகும். இவ் விஷயத்தைத் தெரிந்து கொள்வதற்கு நாம் வேதங்களையோ, சாஸ்திரங்களையோ, சிலாசாசனங் களையோ கஷ்டப்பட்டு ஆராய்ந்து பார்க்க வேண்டிய அவசியமில்லை. தற்காலத்தில் நம் கண் முன் நடைபெறும் காட்சிகளைக் கொண்டே யாவரும் சுலபமாகத் தெரிந்து கொள்ளலாம். உதாரணமாக இன்று அரசியலிலோ, அல்லது உத்தியோகத் துறையிலோ, அல்லது வியாபாரத் துறையிலோ, மற்றும் எந்தத் துறையிலாகட்டும் உயர்ந்த பதவியும், ஆதிக்கமும், செல்வாக்கும் அடைந்திருக்கின்ற அய்யர், அய்யங்கார், முதலியார், பிள்ளை, நாயுடு, செட்டியார், ரெட்டியார், நாடார் முதலிய எல்லா வகுப்பினரும் தங்கள் தங்கள் வகுப்பினருடைய நன்மையையும் முன்னேற்றத்தையும் மாத்திரம் கருதி அவர்களுக்கே உதவி செய்யக் கூடிய நிர்ப்பந்தமான நிலையில் இருப்பதும் தம் வகுப்பினரல்லாத கஷ்டப்படும் மற்ற வகுப்பினர்களுக்கும் உதவி செய்ய வேண்டுமென்ற எண்ணமிருந்து கூட அவ்வாறு செய்ய முடியாத நிலையில் இருப்பதும் சிறிது உலக அனுபவம் தெரிந்த எல்லோருக்கும் விளங்கக் கூடிய விஷயமேயாகும்.

periyar 351மற்ற நாட்டுச் சரித்திரங்களை விட்டு விட்டு, நமது இந்திய நாட்டுச் சரித்திரத்தை மாத்திரம் சிறிது யோசித்துப் பார்த்தாலுங் கூட இந்த விஷயத் தைத் தெரிந்து கொள்ளாமல் இருக்க முடியாது. முஸ்லிம் அரசர்கள் நமது நாட்டை ஆண்டகாலத்தில் அவர்கள் முஸல்மான்கள் நலத்தை மாத்திரமே முதன்மையாகக் கருதி அரசாட்சி செய்து வந்திருக்கிறார்கள் என்பதும், நாயக்க அரசர்கள் ஆண்ட காலத்தில் அவர்கள் தங்கள் குலத்திலுள் ளவர்களையே முதன்மையான பதவிகளில் நியமித்து ஆண்டு வந்திருக்கிறார்கள் என்பதும், வெள்ளைக்காரர்கள் நமது நாட்டை ஆளத் தொடங்கிய நாள் முதல் அவர்களும் தமது வகுப்பினர் நன்மையையே முக்கியமாகக் கருதி ஆண்டு கொண்டிருக்கிறார்கள் என்பதும், முஸ்லிம்கள் ஆண்ட காலத்திலும் நாயக்க அரசர்கள் ஆண்ட காலத்திலும் வெள்ளைக் காரர்கள் ஆளும் இக்காலத்திலும் அரசாங்கத்தில் உயர்ந்த பதவி வகித்திருந்தவர் களும், வகித்திருப்பவர்களும் ஆகிய பார்ப்பனர்க ளெல்லாம் தங்கள் வகுப்பிற்கான நன்மைகளையே சாதித்துக் கொண்டார்கள், சாதித்துக் கொண்டி ருக்கிறார்கள் என்ற விஷயமும் வெளிப்படையாகத் தெரியக் கூடும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த விஷயங்களையெல்லாம் நன்றாக ஆலோசித்துப் பார்க்கின்ற எந்த வகுப்பினரும், தங்கள் தங்கள் வகுப்பின் முன்னேற்றத்தையும், சுதந்திரத்தையும் கருதுவார்களானால், அவர்கள் தங்களுக்கு அரசியல் துறையிலும், சமுதாயத்துறையிலும் நியாயமான உரிமை கிடைப்பதற்குரிய வசதிகளைச் செய்து தர வேண்டுமென்று அரசாங்கத்தாரைக் கேட்பது எந்த வகையிலும் குற்றமற்ற நியாயமேயாகும். உயர்வு தாழ்வான வகுப்புப் பிரிவுகள் நிலைத்திருக்கும் வரையிலும், படிப்பும், பணமும், பதவியும் பெற்ற உயர்ந்த வகுப்பினர்கள் அவை இல்லாத தாழ்ந்த வகுப்பினரை அடக்கி வைத்திருக்கும் வரையிலும், அவ்வாறு அடக்கி வைத்திருப்பதுதான் மதக் கட்டளையும், சாஸ்திர நீதியும் என்ற எண்ணமுடையவர்களாய் இருக்கும் வரையிலும் முன்னேற்றமடைவதற்கு வழி இல்லாமல் கொடுமைப்படுத்தப் பட்டிருக்கும் மக்கள், தங்கள் சுதந்தரத்திற்கு அரசாங்க அமைப்பில் பாதுகாப்பு தேடிக் கொடுக்க வேண்டும் என்று கேட்பது தவறானதென்றோ, தேசத்திற்குத் தீமை தரக்கூடிய காரியமென்றோ நிதான புத்தியுடனிருந்து யோசனை செய்து பார்க்கின்ற கடுகளவு அறிவுடைய எந்த மனிதனாவது சொல்ல முடியுமா?

ஆகவே நமது நாட்டில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக அடிமைப் படுத்தப்பட்டும், மிதிக்கப்பட்டும், நசுக்கப்பட்டும், கொடுமைப் படுத்தப்பட்டும் கிடக்கின்ற மக்கள் தங்களை இதுவரையிலும் முன்னேற வொட்டாமல் தடைப் படுத்தி வைத்திருந்த கூட்டத்தாரின் கையில் அரசியல் அதிகாரம் கிடைக்கப் போகின்ற காலத்தில், அவர்கள் தங்களுக்கு வேண்டிய பாதுகாப்பை அரசியல் சுதந்திரத்தில் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று கேட்க முன் வந்திருக்கிறார்கள். இவ்வாறு தாழ்த்தப்பட்டவர்கள் கேட்பதை இதுவரை யிலும் ஏகபோக உரிமையாகச் சுகம் அனுபவித்து வந்த கூட்டத்தார் “இப்படிக் கேட்பது வகுப்புத் துவேஷமான காரிய”மென்றும் “தேச ஒற்றுமைக்கு விரோதமானக் காரிய”மென்றும் கூறித் தடுத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்ற விஷயம் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கும் அவர்களிடத்தில் அனுதாப முள்ளவர்களுக்கும் தெரியாத தொன்றல்ல. இதன் உண்மையை வட்ட மேஜை மகாநாட்டில் தாழ்த்தப்பட்ட வகுப்புப் பிரதிநிதிகளும், முஸ்லீம் வகுப்புப் பிரதிநிதிகளும், கிருஸ்தவர், ஐரோப்பியர், சட்டைக்காரர் முதலான சிறுபான்மை வகுப்புப் பிரதிநிதிகளும் எதிர்கால அரசியல் சீர்திருத்தத் திட்டத்தில் தங்களுக்குத் தனிப்பட்டத் தேர்தல் தொகுதி இருக்க வேண்டுமென்று கூறியதையும் இதைக் காங்கிரஸ் பிரதிநிதியாகவும் வருணாச்சிரம தருமத்தின் பிரதிநிதியாகவும் இந்து மகாசபையின் பிரதிநிதியாகவும் வட்டமேஜை மகாநாட்டிற்குப் போயிருந்த திருவாளர்களான, காந்தி, மாளவியா, மூஞ்சே முதலானவர்கள் ஆதிமுதல் அந்தம் வரையிலும் எதிரிகளாக இருந்து மறுத்துப் பேசியதிலிருந்தும் அறியலாம்.

கடைசியாக இந்த வகுப்பு சம்மந்தமான தகராறு ஒரு முடிவுக்கு வராத காரணத்தினாலேயே வட்ட மேஜை மகாநாடும் பயன்தரத் தகுந்த ஒரு முடிவுக்கும் வராமல் வீணாகக் கலைந்தது. அப்போது முதல் மந்திரியாகிய திரு. மெக்டொனால்டு அவர்களும் “வகுப்புப் பிரச்சினை சம்பந்தமாக நீங்களே ஒரு சமரசமான முடிவுக்கு வருவீர்களானால் அதனை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளு” மென்றும் “இல்லாவிட்டால் இனி ஏற்படுத்தப்படும் வட்ட மேஜை மகாநாட்டுக் கமிட்டிகளின் மூலம் அரசாங்கமே முடிவு செய்யு”மென்றும் கூறி அனுப்பிவிட்டார். அவ்வாறே இப்பொழுது அரசியல் சீர்திருத்தத்தை ஏற்படுத்துவதற்காக பிரிட்டிஷ் அரசாங்கத்தாரால் நியமிக்கப்பட்ட தனித் தனி மூன்று கமிட்டிகள் இந்தியாவில் துரிதமாகத் தமது வேலைகளைச் செய்து கொண்டு வருகின்றன. இவற்றுள் திரு. லோதியன் அவர்களைத் தலைமையாகக் கொண்ட வாக்குரிமைக் கமிட்டியானது பல இடங்களிலும் சுற்றுப் பிரயாணம் செய்து எவ்வாறு வாக்குரிமை அளிப்பது என்பது பற்றியும் எந்த முறையில் தேர்தல் தொகுதி களை ஏற்படுத்துவது என்பதைப் பற்றியும் விசாரணை செய்து கொண்டு வருகிறது. இக்கமிட்டி கடைசியில் எந்த விதமாக முடிவு செய்கிறதோ அந்த முடிவே அநேகமாக ஆங்கிலப் பாராளுமன்ற சபையாரால் ஒப்புக் கொள்ளப் பட்டு அரசியல் சீர்திருத்தமாக வரக்கூடுமென்று நம்பலாம். ஆகவே இச்சமயத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரும், மற்ற சிறுபான்மை வகுப்பினரும் தங்களுக்கு வேண்டிய பாதுகாப்பைத் தேடிக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். ஆகையால் அவர்களுக்கு அதிகாரம் வாய்ந்த சட்டசபை முதலிய ஸ்தாபனங்களில் பங்கு பெற எந்த விதமான தேர்தல் தொகுதி இருந்தால், அவர்களின் உண்மையான பிரதிநிதிகள் யாருடைய செல்வாக்கிற்கும் எதிர்ப்புக்கும், தயவுக்கும், தாட்சண்யத்திற்கும் கட்டுப்படா மல் தேர்ந்தெடுக்கப்பட்டு, அச்சமூகத்தின் உயர்வுக்காகவும், விடுதலைக் காகவும் உழைக்க முடியும் என்னும் விஷயத்தில் நமது அபிப்பிராயம் என்னவென்பதை இப்பொழுது முடிவாகத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்.

முஸ்லீம் வகுப்பினரின் உண்மையான பிரதிநிதிகளாகிய மௌலானா ஷெளக்கத் அலி போன்றவர்கள் முஸ்லீம்களுக்குத் தனித்தேர்தல் தொகுதியே இருக்க வேண்டுமென்று விரும்புகிறார்களென்பதும், இந்தியக் கிறிஸ்துவர்களும், சீக்கியர்களும், ஐரோப்பியர், சட்டைக்காரர் முதலியவர் களும் தனித்தேர்தல் தொகுதியையே விரும்புகிறார்களென்பதும், எல்லோரும் அறிந்த செய்கையாகும். இதைப் போலவே தாழ்த்தப் பட்டவர்களும் தனித் தேர்தல் தொகுதியையே விரும்புகின்றார்களென்பதை அச்சமூகத்தார் இந்தியாவெங்கும் பலவிடங்களிலும் கூடிய பல மகாநாடுகளிலும் மற்றும் அவர்களுடைய ஸ்தாபனங்களாக இருக்கின்ற பல சங்கங்களிலும் செய்யப் பட்டுள்ள தீர்மானங்களின் மூலமாகவும், இச்சமூகத்தாரின் செல்வாக்கு வாய்ந்த தலைவர்களான திருவாளர்கள் அம்பேட்கார், சீனிவாசன், எம். சி. ராஜா, சிவராஜ், முனிசாமி பிள்ளை, சுவாமி சகஜானந்தம் முதலியவர்களின் அபிப்பிராயங்களிலிருந்தும் தெரிந்து கொள்ளலாம்.

ஆனால் சமீபத்தில் திரு. எம். சி. ராஜா அவர்கள் இதற்கு முன் வெளியிட்ட தனது அபிப்பிராயங்களை மாற்றிக் கொண்டு இப்பொழுது பொதுத் தொகுதியில் ஸ்தானங்கள் ஒதுக்கப்படுவது மூலமாகத் தேர்ந்தெடுக் கப்படுவதனாலேயே தாழ்த்தப்பட்ட சமூகத்தாருக்கு விமோசனமுண்டு என்று கூறமுன் வந்திருப்பது பற்றி நாம் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. திரு. ராஜா அவர்கள் தமது அபிப்பிராயத்தை மாற்றிக் கொண்டதைப் பற்றி அவர்கள் கூறும் காரணங்களை சிறிது ஆராய்ந்து பார்ப்போம்.

1. தனித் தொகுதி ஏற்படுத்தினால் தேர்தலுக்கு முன் வரும் அபேட்சகர்கள் ஓட்டர்களைச் சந்திக்க இரண்டு மூன்று ஜில்லாக்களில் சுற்றுப் பிரயாணம் செய்ய வேண்டுமாகையால் ஏழைமக்களாய் இருக்கின்ற அச் சமூகத்தின் பிரதிநிதிகளுக்கு இது மிகவும் கஷ்டமாக இருக்கும்; ஆகையால் பொதுத் தொகுதியில் ஸ்தானங்கள் ஒதுக்கி வைப்பதே நன்மையாகும்.

2. தாழ்த்தப்பட்ட சமூகத்தார் இப்பொழுது மத பக்தியிலும், தெய்வ வணக்கத்திலும் வர வர அதிகப்பட்ட ஜாதி இந்துக்களின் ஆதரவு பெற்று வருவதாலும், ஜாதி இந்துக்களும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு உதவி செய்ய முன் வந்து கொண்டிருப்பதாலும் பொதுத் தொகுதி யிலேயே அவர்களின் சரியான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கப்படக் கூடும்.

3. வரப்போகும் மாகாண சுயாட்சியில் அரசியல் கட்சிகளே அதிகாரம் வகிக்குமாகையால் தாழ்த்தப்பட்ட சமூகத்தாரும் ஏதேனும் ஒரு அரசியல் கட்சியை ஆதரித்து நின்றால்தான் மந்திரி பதவி பெற முடியும்; ஆகையால் தனித் தேர்தல் தொகுதி ஏற்படுத்திக் கொண்டு ஒதுங்கி நிற்பதை விட பொதுத் தேர்தல் தொகுதியில் ஒதுக்கப்பட்ட ஸ்தானங்களில் அரசியல் கட்சிக்காரர்களின் ஆதரவு பெற்று அச் சமூகத்தாரின் சரியான பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட முடியும்.

என்ற காரணங்களை திரு. ராஜா அவர்கள் கூறுகின்றார். இக்காரணங் கள் எவ்வாறு பொருத்த மற்றவையாக இருக்கின்றன என்பதைச் சிறிது காட்டுகின்றோம்.

தனித் தொகுதி ஏற்படுத்தினால் அபேட்சகர்கள் அதிக தூரம் சுற்றுப் பிரயாணம் செய்ய வேண்டுமென்று பயப்பட வேண்டிய அவசியமே இல்லை. தாழ்த்தப்பட்ட சமூகத்தாருக்கு அவர்களுடைய உண்மையான நன்மையைக் கவனிக்கின்ற தலைவர்கள் யார் என்பது தெரியும். ஆகையால் அவர்களுக்கு ஓட்டுச் செய்ய முன் வருவார்கள் என்பதில் ஐயமில்லை. உதாரணமாகச் சென்ற வட்டமேஜை மகாநாட்டில் தாழ்த்தப்பட்ட சமூகத்தாருக்காக உண்மை யோடு போராடிய திரு. அம்பெட்கார், திரு. சீனிவாசன் ஆகியவர்களின் அபிப்பிராயங்களை ஆதரித்துக் கிராமங்களிலும், நகரங்களிலும் உள்ள தாழ்த்தப்பட்டவர்கள் தீர்மானங்கள் செய்யவில்லையா? இன்று அந்தப் பிரதிநிதிகள் இந்தியாவுக்கே ஒரு அபேட்சகராக முன் வந்தால் அவர்கள் இந்தியா முழுதும் சுற்றுப் பிரயாணம் செய்து தாழ்த்தப்பட்ட சமூக ஓட்டர் களை எல்லாம் சந்தித்தால் தானா அவர்களுக்கு ஓட்டுக் கிடைக்கும்? அவர் கள் சுற்றுப் பிரயாணம் செய்யாமலே தாழ்த்தப்பட்ட சமூகத்தாரின் ஓட்டு களைப் பெற்று வெற்றி பெறுவார்கள் என்பதில் சந்தேகமில்லை யல்லவா? அது போலவே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உண்மையாகப் பாடுபடுகின்ற தலைவர்கள் கஷ்டமில்லாமலே தேர்ந்தெடுக்கப்பட முடியும் என்பதில் கொஞ்சமும் சந்தேகமில்லை.

அடுத்தபடியாகத் “தாழ்த்தப்பட்ட மக்கள் பெரும்பாலும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களாகயிருந்து வருவதாலும், ஜாதி இந்துக்களும் அவர்களுக்கு உதவி செய்ய முன் வருவதாலும் அவர்களுக்குத் தனித் தேர்தல் தொகுதி வேண்டாம்; பொதுத் தேர்தல் தொகுதியில் ஸ்தானங்கள் ஒதுக்கப்படுவதே போதுமானது” என்பதைப் போன்ற மோசமான அபிப்பி ராயம் வேறொன்றும் இல்லையென்றே நாம் சொல்லுவோம். இன்று அன்னிய மதங்களை அனுசரித்து வருகின்ற தாழ்த்தப்பட்டவர்களைக் காட்டிலும் இந்து மதத்திலேயே இருந்து வருகின்ற தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தான் அதிக மான கஷ்டங்களும், நிர்ப்பந்தங்களும் இருந்து வருகின்றனவென்பதும், இவைகளுக்கு இந்து மதமே காரணமாக இருக்கின்றதென்பதும், ஆகையால் இந்து மதம் அழிந்தாலே அல்லது இந்து மதத்தை விட்டு வெளியேறினாலோ ஒழிய தாழ்த்தப்பட்ட சமூகத்தாருக்கு விமோசனமில்லை என்பதும் பகுத்தறிவுடையவர்களுக்குத் தெரியாத செய்தி அல்ல. வர்ணாச்சிரம தருமத்தை அடிப்படையாகக் கொண்ட இந்து மதத்தை நம்பியிருக்கும் உயர்ந்த சாதிக் காரர்களாலும், மதங்களையும், கடவுள்களையும், வருணாசிரம தருமங் களையும் காப்பாற்ற வேண்டுமென்ற அரசியல்வாதிகளாலும், தாழ்த்தப்பட்ட சமூகத்தார் சமத்துவம் பெற முடியுமா? என்று யோசித்துப் பாருங்கள்! அன்றியும் இன்று தாழ்த்தப்பட்ட சமூகத்தார் பள்ளிக் கூடங்களில் சேர்ந்து படிப்பதற்கும், கோவிலுக்குள் செல்வதற்கும், பொதுக்குளம், கிணறுகளில் தண்ணீர் எடுப்பதற்கும், பொதுத் தெருக்களில் நடப்பதற்கும் தடையாக இருக்கின்ற உயர்ந்த சாதி இந்துக்கள் எப்படி அவர்களின் சமத்துவத்திற்கு உழைக்கும் உண்மையான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பார்களா? என்றுதான் கேட்கின்றோம்.

அடுத்தபடியாகத் தாழ்த்தப்பட்ட சமூகத்தார் ஏதேனுமொரு அரசியல் கட்சியை ஆதரித்தால் தான் மந்திரி பதவி பெற முடியுமென்பதற்கும், தனித் தேர்தல் தொகுதிக்கும் என்ன சம்பந்தமிருக்கிறதென்பது நமக்கு விளங்க வில்லை. அரசியல் கட்சிகளின் ஆதரவு பெற்று பொதுத் தொகுதியில் ஒதுக்கப்பட்ட ஸ்தானங்களுக்கு அபேட்சகராக வருகின்றவர்கள் ஏன் அவ்வாறே தனித் தேர்தல் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட முடியாது என்று கேட்கின்றோம். இன்று தனித் தேர்தல் தொகுதியில் இருக்கும் முஸ்லீம்களின் பிரதிநிதிகளும், கிறிஸ்தவர்களின் பிரதிநிதிகளும் அரசியல் கட்சிகளின் பேரால் அபேட்சகராக நிற்பதும், தேர்ந்தெடுக்கப்படுவதும் தெரியாத விஷயமா? ஆகையால் மந்திரி பதவி பெறுவதற்கு பொதுத் தேர்தல் தொகுதி அனுகூலமாய் இருக்குமென்று சொல்லுவதும், தனித்தேர்தல் தொகுதி பிரதி கூலமாய் இருக்குமென்று சொல்லுவதும் தவறான அபிப்பிராயம் என்பதில் சந்தேகமில்லை.

இனி, பொதுத் தொகுதி, பொதுத் தொகுதியில் ஸ்தானங்கள் ஒதுக்கி வைக்கப்படுவதில், தனித்தொகுதி இம்மூன்றிலுமுள்ள நன்மை தீமைகளை மாத்திரம் எடுத்துக்காட்டி முடிக்கிறோம்.

தற்சமயத்தில் காங்கிரஸ்காரர்களும், இந்து மகாசபைக்காரர்களும் சொல்லுவதுபோல “பொதுத் தேர்தல் தொகுதியிலேயே தாழ்த்தப்பட்ட சமூகத்தார் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்” என்று முடிவு செய்து விட்டால் அச் சமூகத்தாரின் பிரதிநிதிகள் ஒருவரேனும் சட்ட சபையில் ஸ்தானம் பெற முடியாதென்பது நிச்சயம். வயது வந்தவர்களுக்கெல்லாம் ஓட்டுரிமை வழங்கப் பட்டாலுங் கூட உயர்ந்த ஜாதி இந்துக்களே மெஜாரிட்டி ஓட்டர் களாக இருப்பார்களென்பதும் அவர்கள் தாங்கள் இதுவரையிலும் அனு பவித்து வந்த ஆதிக்கத்திலும், அதிகாரத்திலும் சமத்துவம் பெற விரும்பு கின்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தாரின் பிரதிநிதிகளுக்கு ஓட்டளிக்க முன் வர மாட்டார்கள் என்பதிலும் சிறிதும் ஐயமில்லை.

அடுத்தபடியாகப் பொதுத் தேர்தல் தொகுதியில் ஸ்தானங்கள் ஒதுக்கப்பட்டாலும் மெஜாரிட்டி ஓட்டர்களாகிய உயர்ந்த ஜாதிக்காரர்களின் ஆதரவைப் பெற்றவர்களும், தாழ்த்தப்பட்ட சமூகத்தாரின் சுதந்தரங்களை விட்டுக் கொடுத்து உயர்ந்த சமூகத்தாரின் ஆதிக்கத்திற்கு சாதகமாய் இருக்கின்ற அடிமை மனப்பான்மை உடையவர்களும்தான் தேர்ந்தெடுக்கப் பட முடியும் என்று சொல்லுகிறோம்.

ஆகையால் தனித்தேர்தல் தொகுதி ஏற்படுவதின் மூலமாகவும், அச்சமூகத்தாரே தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதின் மூலமாகவும் தான் தாழ்த்தப்பட்ட சமூகத்தார்களும், மற்ற சிறுபான்மை வகுப்பினரும் தங்கள் சமூகத்திற்குழைக்கும் உண்மையான பிரதிநிதிகளைச் சட்டசபைகளுக்கு அனுப்பி நன்மை பெற முடியுமென்று துணிவாய்ச் சொல்லு கிறோம். ஆகையால் தாழ்த்தப்பட்ட சமூகத்தார்கள் இச்சமயத்தில் ராஜீயவாதிகளின் வார்த்தைகளையும், சமத்துவத்திற்குப் பாடுபடுவது போல் நடிக் கும் வைரம் பாய்ந்த வருணாச்சிரம தரும இந்துக்களின் வார்த்தைகளையும், அரசியல்வாதிகளாலும், வருணாச்சிரம தரும இந்துக்களாலும் ஏமாற்றப் பட்டிருக்கும் சிலருடைய வார்த்தைகளையும் கேட்டு மோசம் போகாமல் இருக்கும்படி எச்சரிக்கை செய்கின்றோம். உண்மையிலேயே தங்கள் சமூகத்திற்கு நன்மை செய்வதாக இருக்கின்ற தனித் தேர்தல் தொகுதி வேண்டு மென்றே கிளர்ச்சி செய்வார்களென்றும் இவ்விஷயத்தையே திரு. லோதியன் கமிட்டியின் முன் சாட்சியம் கூறும் போது எடுத்துச் சொல்லி தங்கள் நன்மையில் வெற்றி பெறுவார்களென்றும் எதிர்பார்க்கிறோம்.

(குடி அரசு - தலையங்கம் - 28.02.1932)

Pin It