மோடியின் ஆட்சி மதன் மோகன் மாளவியா-வாஜ்பாய் இருவருக்கும் நாட்டின் உயர் விருதாக கருதப்படுகிற ‘பாரத ரத்னா’ விருதுகளை வழங்க முடிவு செய்திருக்கிறது. இவர்கள் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனியவாதிகள் என்ற அடையாளத்தோடு வாழ்ந்தவர்கள் என்பதைத் தவிர வேறு சாதனைகள் ஏதும் நிகழ்த்தாதவர்கள். மதச்சார்பற்ற நாடு என்று கூறப்படும் இந்தியாவில் ஆட்சி அதிகாரம் முறைகேடாக பயன்படுத்தப்படுவதற்கு இந்த அறிவிப்புகளும் ஒரு சான்று. வாஜ்பாய்- மதன் மோகன் மாளவியாவின் பின்னணிகள் என்ன?

வாஜ்பாய் யார்?

‘ஜென்டில்மேன் வாஜ்பாய்’ என்று சில தமிழ் நாட்டு தலைவர்கள் அவரைப் புகழ்ந்தாலும் வாஜ்பாய் தீவிர மதவெறியர் என்பதே அவரது வரலாறு.

சில சான்றுகள்:

1.            பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு முதல் நாள் லக்னோவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் வாஜ்பாய் இவ்வாறு பேசினார்:

                “நாளை அயோத்தியில் என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது. கூரிய கற்கள்மீது அமர்ந்து கொண்டு, பக்திப் பாடல்களைப் பாட முடியாது. மண்ணைச் சமன்படுத்தி அமர்வதற்கு ஏற்றபடி சமன் செய்ய வேண்டும்.” இதன் பொருள் என்ன? மசூதியை இடித்து தரைமட்டமாக்கி சமன் செய்ய வேண்டும் என்பதுதானே!

                மசூதி இடிப்புக்குப் பிறகு, ‘அவுட் லுக்’ பத்திரிகை அவரை சந்தித்து இந்தப் பேச்சு பற்றி கேட்டது. “நான் பேசியது உண்மைதான். அது நகைச்சுவைக்காக பேசப்பட்டது” என்றார், வாஜ்பாய்.

                அடுத்த மதக்காரர் வழிபாட்டுத் தலத்தை இடித்து ‘சமன் செய்ய’ சொல்வது வாஜ்பாய்க்கு நகைச்சுவை பேச்சு போலும்!

2.            குஜராத்தின் மோடி ஆட்சி 2002இல் இஸ்லாமியர் இனப்படுகொலையை நடத்தியபோது அன்றைய குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன், பிரதமர் வாஜ்பாயுடன் அவசரமாக தொடர்பு கொண்டு, உடனே குஜராத்துக்கு இராணுவத்தை அனுப்பி, கலவரத்தைத் தடுக்க வேண்டும் என்று கேட்டார். வாஜ்பாய் அந்தக் கோரிக்கையை உதறித் தள்ளினார்.

3.            பிரதமராக இருந்தபோது அமெரிக்காவுக்கு பயணம் போனபோது அங்கு ஸ்டேட்டன் தீவில் விசுவ இந்து பரிஷத் நிகழ்ச்சியில் பேசும்போது இப்படி கூறினார்: “ஆர்.எஸ்.எஸ்.சில் இருப்பதற்கு நான் பெருமைப்படுகிறேன். இப்போது எங்கள் ஆட்சிக்கு பெரும்பான்மை இல்லை. இருந்திருக்குமானால் அயோத்தியில் இராமர் கோயிலைக் கட்டியிருப்போம்” என்று பேசினார்.

4.            ஆர்.எஸ்.எஸ். அதிகாரபூர்வ ஏடான ‘ஆர்கனைசரில்’ வாஜ்பாய், ‘ஆர்.எஸ்.எஸ். என் ஆன்மா’ என்ற தலைப்பில் கட்டுரை எழுதினார் (7.5.1955). அதில் முஸ்லிம்களை வழிக்குக் கொண்டு வர மூன்று வழி முறைகளை முன் வைத்தார். இந்துக்களை அணி திரட்டி, முஸ்லிம்கள் அடை யாளங்களை இழக்கச் செய்து அவர்களையும் செரிமானம் (Assimilation) செய்ய வேண்டும் என்றும், முஸ்லிம்கள் இதற்கு ஒத்து வரா விட்டால், நாட்டின் ‘குடிமக்கள்’ என்ற நிலையி லிருந்து ஒதுக்கிட வேண்டும் என்றும் எழுதினார்.

5.            மோடியின் குஜராத்தில் டாங்கல் மாவட்டத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக மதவெறியர்கள் கலவரம் செய்தபோது அங்கு நேரில் பார்வையிடச் சென்ற பிரதமர் வாஜ்பாய், கலவரத்தைக் கண்டிக்கவில்லை. மாறாக, மதமாற்றம் பற்றிய தேசிய விவாதம் தேவை என்று விவாதத்தைத் தொடங்கி வைத்தார்.

6.            பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக நியமிக்கப்பட்ட லிபரான் ஆணையத்தில் மசூதி இடிப்பு குற்றவாளிகள் பட்டியலில் இடம் பெற்றிருந்தவர் வாஜ்பாய்.

7.            மொரார்ஜி பிரதமராக இருந்த ஜனதா ஆட்சிக் காலத்தில் வெளிநாட்டுத் துறை அமைச்சராக இருந்தார் வாஜ்பாய். அப்போது யூதவெறி பிடித்த இஸ்ரேல் நாட்டுடன் தூதரக உறவு இந்தியாவுக்கு இல்லை. அதையும் மீறி இஸ்ரேல் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த ‘மோஷி தயான்’ என்பவரை ரகசியமாக இந்தியா வுக்கு வரச் சொல்லி சந்தித்தவர் வாஜ்பாய். மோஷி தயான் மாறு வேடத்தில் போலி ‘கடவுச் சீட்டில்’ இந்தியாவுக்கு வந்து, வெளியுறவுத் துறை அமைச் சராக இருந்த வாஜ்பாயை சந்தித்துப் பேசினார். முதலில் மறுத்த வாஜ்பாய், மொரார்ஜி பதவி விலகிய பிறகு சந்தித்ததை ஒப்புக் கொண்டார்.

8.            1942இல் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக் கத்தையொட்டி ம.பி. மாநிலம் பட்டேசுவரத்தில் கலவரம் வெடித்தது. இதில் வாஜ்பாய், தனது சகோதரர் பிரேம் பிகார் லால் பாஜ்பாய் என்பவருடன் கலந்து கொண்டார். அப்போது கைது செய்யப்பட்ட வாஜ்பாய், சிறையிலிருந்து தன்னை விடுதலை செய்து கொள்வதற்காக உள்ளூரில் ‘கலவரக்காரர்கள்’ பெயர்களை காவல் துறைக்கு காட்டிக் கொடுத்து விட்டு நீதிபதிக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து விடுதலை யானார். (வாஜ்பாய் எழுதித் தந்த மன்னிப்பு கடிதத்தை ‘பிரன்ட் லைன்’ ஏடு ஆவணக் காப்ப கத்திலிருந்து தேடிப் பிடித்து வெளியிட்டது) வாஜ்பாய் சகோதரர் பீகார் லால் பாஜ்பாயும் ம.பி. அரசே நடத்திய ‘சந்தேஷ்’ எனும் பத்திரிகையில் இது உண்மைதான் என ஒப்புக் கொண்டு கட்டுரை எழுதினார் (12.5.1973 இதழ்).

இவருக்குத்தான் இப்போது ‘பாரத ரத்னா’ விருதாம்!

மதன் மோகன் மாளவியா - யார்?

•             சங் பரிவாரத் தத்துவங்களின் முன்னோடியாகத் திகழ்ந்தவர் பண்டித மதன் மோகன் மாளவியா என்ற பார்ப்பனர். நான்கு முறை காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

•             1946இல் அவர் மரணமடையும்வரை, காங்கிரஸ் கட்சிக்குள் இருந்து கொண்டே இந்து தர்மத்தையும், சமூகத்தைக் கூறுபோடும் கொடிய வர்ணா ஸ்ரம தத்துவத்தையும் காப்பாற்றுவதற்காகப் பாடு பட்டவர்.

•             ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, வட மாநிலங்களில் வேரூன்றி வளர்வதற்கு, ஆரம்ப காலங்களில் பல உதவிகளைச் செய்தவர்.

•             இவரால் தொடங்கப்பட்டதுதான் காசியில் உள்ள ‘பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம்’. இதற்காக, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடமிருந்தும், சமஸ் தான மன்னர்களிடமிருந்தும், கோடிக்கணக்கான ரூபாய் நன்கொடை திரட்டினார். காங்கிரசில் இருந்து கொண்டே, உ.பி.யில் ‘பாரத தர்ம மகா மண்டலம்’ என்ற வைதீக இந்து மத அமைப்பின் தலைவராகவும் இவர் இருந்தார். மற்றொரு ‘தேசிய’த் தலைவரான லாலா லஜபதிராயுடன் சேர்ந்து, ‘இந்து மகாசபை’ என்ற அமைப்பைத் துவக்கிவரும் இவர்தான்.

•             இந்தியர்களுக்குச் சுயாட்சி வழங்குவது பற்றி விவாதிக்க, பிரிட்டிஷ் ஆட்சி இலண்டனில் கூட்டிய வட்ட மேசை மாநாட்டில் பங்கேற்றவர் மதன் மோகன் மாளவியா. ‘வர்ணாஸ்ரம’த்தின் படி - ஒரு பார்ப்பனர் கடல் தாண்டி பயணம் செய்யக் கூடாது. அதன் காரணமாகத்தான் இலங்கையில் உலக இந்து மத மாநாட்டில் பங்கேற்க காஞ்சிபுரம் மூத்த சங்கராச்சாரி அழைக்கப்பட்டபோது, அவர் கலந்து கொள்ள மறுத்துவிட்டார்.

•             பண்டித மதன் மோகன் மாளவியாவுக்கு ‘வர்ணாஸ் ரமத்தையும்’ மீறக் கூடாது. அதே நேரத்தில் - இலண்டன் வட்ட மேஜை மாநாட்டில் பங்கேற்று, தாழ்த்தப்பட்டவர்களுக்கான தனித் தொகுதி உரிமையைத் தரக்கூடாது என்று வாதிடவும் வேண்டும் என்ற துடிப்பு. இதற்காகக் கொஞ்சம் இந்திய மண்ணையும்,கங்கை நீரையும் அவர் தன்னுடன் எடுத்துச்சென்றார். கடல் தாண்டிப் போனாலும் - மண்ணையும் கங்கை நீரையும் உடன் எடுத்துச் செல்வதால், கடல் தாண்டிப் போவதாக அர்த்தமாகாது என்று ‘வியாக்யானம்’ செய்தார் மாளவியா! இதன் காரணமாக, ‘மண்ணுருண்டை மாளவியா’ என்று ‘குடிஅரசு’ கேலி செய்தது.

•             விடுதலை பெற்ற இந்திய தேசம் இந்துக்களுக்கான தேசியமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியவர். தான் உருவாக்கிய பனாரஸ் இந்து பல்கலைக் கழகத் தில் கோல்வாக்கர் ஆணையை ஏற்று ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளை மாணவர் களிடம் தொடங்கியவர்.

இவருக்கு ‘பாரதரத்னா’ பட்டமாம்!

Pin It