(மதச்சார்பின்மை பேசிக் கொண்டு ‘இந்துத்துவா’ எதிர்ப்பாளர்களாக வலம் வரும் பார்ப்பனர்களிடமும் அவர்களின் பார்ப்பனியப் பிறவி பெருமிதம் அடிநாதமாக இயங்கிக் கொண்டிருப்பதை விவரிக்கிறது இக்கட்டுரை, ‘அவுட் லுக்’ இதழில் (டிச.1) எஸ்.ஆனந்த் எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவம் இங்கே தரப்படுகிறது.)

பார்ப்பனர்களிலேயே தங்களை மிகவும் மேலாகக் கருதிப் பெருமைப்படுவோர் “கவுத் சரஸ்வதி பிராமணர்” என்ற பார்ப்பனப் பிரிவினர். தங்களின் பிறவிப் பெருமைக்கு ஒரு ‘கற்பனை’யை வரலாறாக அவர்கள் கூறிக் கொண்டிருக்கிறார்கள். வேதத்தில் கூறப்படும் சரஸ்வதி ஆறு ஓடிய காலத்திலேயே இவர்கள் ரிக் வேதத்தை ஓதியவர் களாம்! (இப்போது அப்படி ஒரு ஆறு கிடையாது. ஆனாலும் பூமிக்கடியில் அது ஓடிக் கொண்டிருப் பதாக பார்ப்பனர்கள் கூறுகிறார்கள்.) விஷ்ணு ‘பரசு ராமனாக’ அவதாரம் எடுத்து வந்து சத்திரிய வம்சத்தையே 21 முறை தாக்கி பூண்டோடு அழித்து விட்டபோது, சத்திரியர்கள் இடத்துக்கு ‘சரசுவதி பிராமணர்கள்’ வருவார்கள் என்று அறிந்த ‘பரசு ராமன்’ அவர்களுக்கான ‘புண்ணிய பூமி’யை சகா யாத்தி மலைகளோடு உருவாக்கி அவர்களை குடிய மர்த்தினான் என்று பெருமை பேசுகிறார்கள். இது ஏனைய பார்ப்பனர்களுக்கே கிடைக்காத ‘சரசுவதி பிராமணர்களுக்கு’ மட்டுமே கிடைத்த தனி சிறப்பாம். மோடி அமைச்சரவை விரிவாக்கத்தில் சுரேஷ் பிரபு, மனோகர் பாரிக்கர் என்ற இரண்டு சரசுவதி பார்ப்பனர்கள் இடம் பெற்றவுடன், சர்தேசி என்ற சரசுவதி பார்ப்பனர் தனது வலைதளத்தில், சரசுவதி பார்ப்பனர்களின் வரலாற்றில் ஒரு பொன்னாள் என்று பூரிப்போடு பதிவுகளை போட்டார்.

இந்த சர்தேசி, ‘சி.என்.என்., அய்.பி.என்.’ தொலைக் காட்சியில் இருந்த போது, 2002 குஜராத் கலவரத்துக்கு மோடியை குறை கூறிப் பேசியதற்காக பதவி இழந்தவர். 2014 செப்டம்பர் 28இல் நியூயார்க் நகரில் மேடிசன் மைதானத்தில் மோடி ரசிகர்கள் பங்கேற்ற கூட்டத்தில் மோடி புகழ் பாடியதை விரும்பாமல் இவர் கோபமடைந்தபோது கூடியிருந்த கூட்டத்தின் கேலி கிண்டலுக்கு உள்ளானவர். ‘இந்துத்துவா’வை எதிர்ப்பவராக கருதப்படுபவர். “அப்படி எல்லாம் மதவெறி இருக்கக் கூடாது; மற்றவர்களையும் மதிக்க வேண்டும்” என்ற ‘தாராள சிந்தனை’யை தங்களது பொதுப் புத்தியில் ஏற்றிக் கொண்டவர்கள் உண்டு; இவர்கள் இந்துத்துவா கொள்கை சரியானது அல்ல என்று கூறிக் கொண்டே ‘இந்து தர்மம்’ உயர்வானது என்று பெருமைப்படுவார்கள். இதேபோல் பொதுப் புத்தியில் படிந்து நிற்கும் மற்றொரு கருத்து - சாதி தலைதூக்குவதற்குக் காரணமே இடஒதுக்கீடு கொள்கைதான் என்பதாகும். இவர்கள் ஜாதி விஷத்தை முறிக்க அம்பேத்கர் முன் வைத்த நோய் தீர்க்கும் மருந்தான இடஒதுக்கீட்டுக் கொள்கையை எதிர்ப்பார்கள். சரசுவதி பார்ப்பனர்களுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைத்து விட்டது என்றவுடன் துள்ளிக் குதித்து, ‘பிறவிப் பெருமை’ பேசும் சர்தேசியின் இந்துத்துவா எதிர்ப்பும் இந்த ‘ரகம்’ தான். தனது ஜாதிக்காரர்கள் அமைச்சர்களானவுடன் ஆனந்தக் கூத்தாடும் இவருக்கு சரஸ்வதிப் பார்ப்பன நடிகை தீபிகா படுகோன் படங்களைப் பார்ப்பது மட்டுமே பிடிக்கும்போலும். கத்ரினா கைஃப் நடித்தப் படம் என்றால் கசக்குமோ! கிரிக்கெட் விளையாட்டுக்காரர், சரசுவதி பார்ப் பனரான சச்சின் டென்டுல்கர் சாதனையை அந்த ஜாதியல்லாதவர் முறியடித்து விட்டால், இவரால் தாங்கிக் கொள்ள முடியாது என்பாரா? அதேபோல் பெரும் தொழிலதிபர் விஜய் மல்லையா செயல்கள் குறித்த தனது கருத்துகளை அதன் நிறைகுறைகளைப் பார்க்காமல், தனது ஜாதிக்காரர் என்ற கண்ணோட் டத்தோடுதான் பார்ப்பாரா? நமக்குப் புரியவில்லை. ஊடகங்களில் முடிவெடுக்கும் அதிகாரம் படைத்த வர்களாக 49 சதவீத அளவுக்கு பார்ப்பனர்களே இருக்கிறார்கள் என்றும் ‘தலித், ‘பழங்குடியினர்’ ஊடகங்களில் அதிகாரமிக்கவர்களாக இல்லை என்றும் 2006ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது. ஒரு ஊடகவியலாளர் என்ற முறையில் சர்தேசி இதுபற்றி எப்போதாவது கவலைப்பட்டிருப்பாரா?

“நான் ஒரு இந்தியன்; நான் ஒரு கோவாக்காரன்” என்று பெருமைப்படுவதைப் போன்றது அல்ல ‘சரசுவதி பிராமணர்’ என்பதற்கான பெருமை. ‘கோவா-இந்தியப்’ பெருமை என்பது இந்தப் பகுதியில் வாழும் அனைவருக்கும் பொதுவானது. ஆனால் ‘சரசுவதி பிராமணன்’ என்ற பெருமை எல் லோருக்கும் கிடைத்துவிடாமல் தடுக்கப்பட்டிருக் கிறது. அது அந்த ஜாதிக்கு மட்டுமே உள்ள பெருமை!

ஏனைய ஜாதிகளுக்கான அடையாளங்களுக்கும் பார்ப்பன ஜாதி அடையாளங்களுக்கும் வேறுபாடு உண்டு. பார்ப்பன ஜாதிக்கான அடையாளம் என்பது ஏனைய ஜாதிகளை ஒதுக்கி வைப்பதாகும். ஜாதி யமைப்பு என்ற ஏணிப் படிக்கட்டு வரிசையில் மேலே உயரத்தில் உள்ள ஜாதிகள் பெருமைக்குரியதாகவும் கீழ் நோக்கியிருக்கும் ஜாதிகள் இழிவுக்குள்ளாவதும் தான் ஜாதியமைப்பின் கட்டுமானமாக உள்ளது. எனவே, மாயாவதிக்காகவும் மலம் எடுக்கும் இழிவுக்கு எதிராக இயக்கம் நடத்தும் பெஸ்வாடாவுக் காகவும் தலித் மக்கள் பெருமைப்படுவதும் சரசுவதி பார்ப்பனர்களான பாரிக்கரும், பிரபுவும் - மத்திய அமைச்சர்களாக முடிசூட்டப்பட்டதற்கு சர்தேசி பெருமையடித்துக் கொள்வதும் ஒரே படித்தானது அல்ல. பார்ப்பனர்களுக்கான பெருமைக்குள்யே கடவுள் அவர்களுக்காக தனித்துவமாக வழங்கி யிருக்கிற ‘பிறவி உயர்வும்’ அடங்கியிருக்கிறது.

இந்தியாவில் தொலைக்காட்சியில் பிரபலமான ஒருவர், தனது ஜாதிக்காரர் அமைச்சராவதற்கு இப்படி பேரானந்தத்தை வெளிப்படுத்துவதுபோல், அமெரிக்காவில் ஒரு முன்னணி தொலைக்காட்சியின் இங்கிலாந்துக்காரர் ஒபாமா அமைச்சரவையில் தனது சொந்த நாட்டுக்காரருக்கு வாய்ப்பு கிடைத்ததற்காகவோ, இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமானால், தனது நாட்டைச் சேர்ந்த எவருக்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லையே என்று கவலையை வெளிப்படுத்த முடியுமா? என்று கற்பனை செய்து பாருங்கள். அப்படி எல்லாம் நடக்காது. ஆனால், இங்கே உள்ள பார்ப்பனர்கள் இப்படி எல்லாம் வெளிப்படுத்திக் கொள்வார்கள். 2013 ஆம் ஆண்டு ஜெய்ப்பூரில் நடந்த இலக்கிய விழாவில் அஷீஷ் நந்தி என்ற ‘அறிவு ஜீவி’ “பிற்படுத்தப்பட் டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் தான் அதிகமாக ஊழல் செய்கிறார்கள்” என்று வெளிப்படையாக பேசிவிட்டு, பிறகு மிக சாதாரண ஒரு வருத்தத்தைத் தெரிவித்துவிட்டு அவரால் கடந்து செல்ல முடிகிறது. (இதை நியாயப்படுத்தும் அவரது தீவிர ஆதரவாளர்கள்கூட இருக்கிறார்கள்)

ஆனால், ‘எப்படி வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் எங்களால் பேச முடியும்’ என்ற சர்தேசியின் இந்த ஆணவமான கருத்துகள், சமூகத்தின் பொதுப் புத்தியில் எந்த சலசலப்பையும் ஏற்படுத்திடவில்லை. ‘அது அப்படித்தான்; இதெல் லாம் தவறில்லை’ என்ற ஜாதி உணர்வில் ஊறிப்போன புரிதலோடுதான் இதையும் பார்க்கிறார்கள். பாதாள சாக்கடையை சுத்தப்படுத்துவதற்காக இறங்கி, அதற்குள்ளேயே மரணத்தைச் சந்திக்கும் சாக்கடைத் தொழிலாளர்கள் மரணங்களை எப்படி ஒரு பிரச்சினையாகவே சமூகம் கண்டு கொள்ள வில்லையோ, அதேபோல் ஜாதிப் பெருமை யடிப்பதையும் இயல்பாகவே ஏற்கப் பழகிப் போய் விட்டோம். இங்கே இவை எல்லாம் அவமானத் துக்கோ, தலைகுனிவுக்கோ உரியவை அல்ல.

இரண்டாவதாக மற்றொரு சரசுவதி பார்ப்பனரைப் பற்றி பார்ப்போம். கிரிஷ் கார்னாட் என்ற இந்த சரசுவதி பார்ப்பனர், இலக்கியத்துக்கான ‘ஞான பீட விருது’ பெற்றவர். இவரது விரிவான பேட்டி 2013, செப்டம்பர் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஏட்டில் வெளி வந்தது. அதில் 1970இல் வெளி வந்து பிறகு தடை செய்யப்பட்ட ‘சமஸ்காரா’ என்ற திரைப் படம் பற்றி தனது கருத்துகளை வெளியிட்டிருந்தார். இந்த நாவலை கன்னடத்தில் எழுதியவர் யு.ஆர். அனந்த மூர்த்தி என்ற பார்ப்பனர். இதை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தவர் ஏ.கே. இராமானுஜம் என்ற பார்ப்பனர்.

இவர், தாராள சிந்தனையுடைய மதச் சார்பின்மையாளர் என்று கருதப்படுபவர். இப்படி பார்ப்பனர்களின் கூட்டு முயற்சியிலான ஒரு திரைப்படம், ‘பார்ப்பன எதிர்ப்பை’ப் பேசுவது குறித்து கிரிஷ் கார்னாட்டிடம் கேட்கப்பட்டது. அந்தப் படத்தின் கதாநாயகன் பாத்திரம் பற்றி, கார்னாட் கட்டுரை எழுதியிருந்ததால் இந்தக் கேள்வி முன் வைக்கப்பட்டது. உடனே ஆத்திர உணர்ச்சி யோடு அவர் அளித்த பதில், “கதையை எழுதியவர் ஒரு ‘பிராமணர்’; தயாரிப்பாளர் ஒரு ‘பிராமணர்’ அதேபோல் இந்தத் திரைப்பட உருவாக்கத்தில் தொடர்புடைய எல்லோருமே ‘பிராமணர்’தான். பிறகு ஏன், நாம் ‘பிராமண எதிர்ப்பு’ கருத்துகளை முன் வைக்க வேண்டும்?” என்று திருப்பிக் கேட்டார்.

இத்தனைக்கும் கார்னாட் நேரு தலைமுறையின் மதச்சார்பற்ற பார்ப்பனராக தன்னை அடையாளப் படுத்துபவர். பொதுவாகவே பார்ப்பனர்கள், பார்ப்பன எதிர்ப்புக் கருத்துகளை வெளிப் படுத்துவதை அவர்களின் இயல்பான உணர்வு தடுத்து நிறுத்துகிறது. அதற்குக் காரணம், மதச்சார்பின்மை பேசிக் கொண்டே ‘பிராமணராக’ இருக்க முடியும் என்பதுதான்.

மதச்சார்பின்மை பேசும் பார்ப்பனர்கள், நேருவை நோக்கி ஈர்க்கப்பட்டார்கள். (நேருவும் காஷ்மீர் சரசுவதி பார்ப்பனர்தான்) நேருவின் இடஒதுக்கீடு கொள்கைகளுக்கு தங்கள் ஆதரவைக் காட்டினார்களே தவிர, அம்பேத்கரோடு அதே கொள்கையை பகிர்ந்து கொள்ள தயங்கினார்கள். காரணம், அம்பேத்கர், ஜாதியை ஒழிக்க வேண்டும் என்றார்.

 ரிக்வேதத்தில் இடம் பெற்றுள்ள நால் வர்ணத்தை நியாயப்படுத்தும் வர்ணாஸ்ரமம், ஒழுக்கமற்ற சமூக விரோத கிரிமினல் கோட்பாடு என்றார். எனவே இதை அவர்களால் ஏற்க முடியவில்லை. கார்னாட், சர்தேசி போன்றவர்கள் இப்படி, பார்ப்பன உணர்வில் நம்பிக்கையுள்ளவர் களாகவே இருக்கிறார்கள். இதற்குக் காரணம், ‘பிராமணர்’ என்ற அடையாளம் தங்களுக்கே உரிய தனித்துவமானது. அது மேலாண்மையானது என்ற நம்பிக்கைதான்.

மூன்றாவதாக ஒரு தமிழ் பார்ப்பனர் கதையைப் பார்ப்போம். அவர்தான் இராமச்சந்திர குகா. தேசிய வரலாற்று நூல்களின் ஆசிரியர். 2004 ஆம் ஆண்டு சி.இராஜகோபலாச்சாரி பற்றி அவர் எழுதிய கட்டுரை ‘சுராஜ்யா’ என்ற இணைய இதழில் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் தனது பார்ப்பனப் பெருமையை பச்சையாக அடையாளம் காட்டுகிறார்.

“ஒரு அரசியல் தலைவரின் மரணத்துக்காக முதல் முறையும் கடைசி முறையும் நான் கண்ணீர் விட்டு அழுதது, 1972 டிசம்பர் 26ஆம் தேதி இராஜ கோபாலாச்சாரி இறந்தபோதுதான். என் கண்களில் கண்ணீர் உருண்டோடியது. காரணம் அப்போது மரணமடைந்த தலைவர் என்னுடைய தமிழ் ‘பிராமணர்’ சமூகத்தைச் சார்ந்தவர்” - என்று எழுதி யிருக்கிறார். ஜாதி உணர்வு இங்கே ‘பெருமை களோடு’ கைகோர்த்து நிற்கிறது. அதற்கு அடுத்த ஆண்டு பார்ப்பனிய எதிர்ப்பாளரான பெரியார் ஈ.வெ. ராமசாமி மரணமடைந்தார். அதற்காக குகா கலங்கவில்லை. எதிர்காலங்களில் மாயாவதியைவிட ஜெயலலிதாவுக்காகத்தான் குகாவின் இதயம் துடிக்கும் போலிருக்கிறது. ஜாதியப் பெருமைதான். ஜாதி வெறுப்புக்கு வழியமைத்துத் தருகிறது என்பதை உணராதவரை ஜாதி வேண்டவே வேண்டாம். அது தீங்கானது என்பதை உணராத வரை ஜாதிப் ‘பேய்’ விரட்டிக் கொண்டேதான் இருக்கும்; அது விடாது.

அதே உணர்வு கொண்ட நான்காவது பார்ப்பனர் கதை இது. இவரது பெயர் இந்திரா கிருஷ்ணமூர்த்தி நூயி. ‘பெப்சி’ நிறுவனத்தின் தலைமை நிர்வாகி. தனது சக பார்ப்பனரான நந்தன் நீலகேணியோடு (இவரும், ஒரு சரசுவதி பார்ப்பனர், இராமச்சந்திர குகாவின் நண்பர் ஆதார் அட்டைத் திட்டத்துக்கான சிறப்பு அதிகாரியாக காங்கிரஸ் ஆட்சியால் நியமிக்கப் பட்டவர்) நடந்த உரையாடலை நூயி குறிப்பிடுகிறார்.

ஒரு நாள் பெப்சி தலைமை அதிகாரியாக இருந்த போது வீட்டுக்குத் திரும்பியவுடன் அவரது தாயார், கடைக்குப் போய் பால் வாங்கி வரச் சொன்னாராம். அம்மா சொன்ன வேலையை தட்டாமல் செய்த அந்த உயர்ந்த அதிகாரப்பொறுப்பில் இருந்த அம்மணி, தன்னோடு ஊறிப்போன பார்ப்பனிய சிந்தனையை மட்டும் விடவில்லை. நீலங்கேணிக்கும் நூயிக்கும் நடந்த உரையாடல் இது:

நீலங்கேணி : அம்மா பேச்சை தட்டாமல் நீங்கள் அவ்வளவு பெரிய நிலையில் இருந்த போதும் கடைக்கு பால் வாங்கப் போனது உங்கள் உள்ளத்தில் அம்மாவின் பற்று பதிந்திருப்பதை காட்டுகிறது. ஆரம்ப காலத்திலிருந்தே, உங்கள் அம்மா, நன்றாக படிப்பதற்கும், கணிதத்தில் 100 மார்க் வாங்குவதற்கும் தூண்டி வந்திருப்பார் போலிருக்கிறது.

நூரி : இது தென்னாட்டு “பிராமணர்களுக்கே” உரித்தான வழக்கம். எனவே இதில் அதிசயம் ஏது மில்லை. என் அம்மா, மரபு வழியாகவே இதற்கேற்ப வடிவமைக்கப்பட்டவர் என்றே நினைக்கிறேன். எங்கள் குடும்பம் முழுதுமே எப்போதும் தேர்வுகளில் பெறும் மதிப்பெண்களுக்கே முன்னுரிமை கொடுக்கும். எங்கள் பெற்றோர்கள் ஒன்றாக கூடி விட்டால் குழந்தைகள் பெற்ற மதிப்பெண்களை பற்றியே ஒப்பீடுகள் செய்து பேசிக் கொள்வார்கள்.

- இப்படி போகிறது அந்த உரையாடல். கணக்குப் பாடத்தில் நன்றாக படிக்கவும், மதிப்பெண்களை குவிக்கவும் முதன்மையான நோக்கம் கொண்டவர் களாக இந்த தென்னாட்டு பார்ப்பனர்கள் மரபின ரீதியாகவே வடிவமைக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்வளவு அறிவார்ந்த நூயி குடும்பம் ஒரு மாலைப் பொழுதில் கடைக்குப் போய் பால் வாங்கி வருவதற்கு வீட்டு வேலைக்காரியாக ஒரு அடிமையை வேலைக்கு வைத்துக் கொள்ளாமைக்காக நாம் நன்றி கூறலாம்.

ஜாதி பஞ்சாயத்துகள் பிறப்பிக்கும் ஆணைகள் எவ்வளவு இழிவுக்குரியதோ, அதே இழிவுக்குரியவை தான் சர்தேசி, குகா, கார்னாட் மற்றும் நூயி தந்திருக்கும் இந்த வாக்குமூலங்கள்.

கோயில்களுக்குள் தலித் மக்களை அனுமதிப்பது இந்து சாஸ்திரங்களுக்கு எதிரானது என்று கடந்த மாதம் பூரி சங்கராச்சாரி நிச்சலானந்தா சரசுவதி பேசி யது எவ்வளவு அருவெறுப்புக்கு உரியதோ, அதற்கு ஈடானதுதான் இந்தப் பார்ப்பனர்களின் பேச்சும்!

வெளிப்படையாக சனாதனத்தைப் பேசுகிற இவர்கள் முற்போக்கு அடையாளத்தைப் போர்த்திக் கொண்டு தங்களின் ‘ஜாதியையும் நிறத்தையும்’ அதற்கு வசதியாக பயன்படுத்திக் கொள்வது நம்மை உண்மையிலேயே அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. பிரபு, பாரிக்கர் என்ற சரசுவதி பார்ப்பனர்கள் அமைச்சர்களானதில் மகிழ்ந்து, தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, இவர்களே தங்களின் நெருக்கத்துக்குரியவர்கள் என்று எழுதும் இவர்கள், அதேபோழ்து மோடி அவ்வளவு உவப்பானவர் அல்ல என்பதையும் மறு உறுதி செய்கிறார்கள்.

‘இந்துத்துவா’ கொள்கைகூட ஏட்டளவில் அனைத்து சமூகப் பிரிவுகளையும் உள்ளடக்கியதாக கூறிக் கொள்கிறது. ஆனால், சரசுவதி பார்ப்பனர்கள், இந்துத்துவாவைவிட மோசமானவர்கள். தங்களை சமூகத்திலிருந்து உயர்ந்தவர்களாக ஒதுக்கிக் கொள்ளவே விரும்புகிறார்கள்.

மீண்டும் அம்பேத்கர் கேட்ட கேள்விதான் நம்மிடம் இருக்கிறது - “பார்ப்பனர்களில் ஏன், ஒரு வால்டேர் உருவாகவில்லை?”

(பின்குறிப்பு : முற்போக்கு முகம்காட்டும் பார்ப்பனர்கள், தங்கள் ‘பிறவிப் பெருமை’யிலிருந்து துண்டித்துக் கொள்வதே இல்லை என்பதை ஆழமாக படம் பிடித்துள்ள இந்த கட்டுரையாளரும் ஒரு பார்ப்பனர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. புரட்சியாளர் அம்பேத்கரை தீவிரமாக ஆதரித்து வரும் இவர், பெரியார் எதிர்ப்பிலும் தீவிரமாக இருப்பவர். பெரியாரிடம் நெருங்குவதற்கு இவரிடம் எது தடுக்கிறது என்பது நமக்குத் தெரியாது. ஆனாலும், இப்படி பார்ப்பன எதிர்ப்புக் கட்டுரைகளைக்கூட பார்ப்பனர்கள் எழுதினால் மட்டுமே இத்தகைய ஊடகங்களில் இடம் பெற முடியும் என்பது மட்டும் நமக்குப் புரிகிறது. - ஆசிரியர்)

Pin It