தோழர் சுப. உதயகுமரன் பச்சைத் தமிழகம் கட்சி

‘பாசிசம்’ என்பது அடக்கியாள விரும்புகிற ஓர் அரசியல் சித்தாந்தத்தைக் குறிக்கும் சொல். சர்வாதிகாரம், சாதியவாதம், இனவாதம், மதவாதம், இந்துத்துவம், ஆரியத்துவம், பார்ப்பனத்துவம், வலதுசாரி, பிற்போக்குவாதி என்றெல்லாம் நமது அன்றாட அரசியல் வாழ்வில் நாம் பயன்படுத்துகிற பற்பல சொற்களின் உட்கருத்துகளையும் உள்ளடக்கிய ஒரே சொல்தான் பாசிசம்.

பாசிசத்தை தனிமனிதர்களின் அதிகாரவெறி என்றோ, வெறும் வெறுப்பரசியல் மட்டும்தான் என்றோ சுருக்கிப் பார்ப்பது பெரும் தவறு. முதலாளித்துவ நாடுகளில் முதலாளித்துவம் நெருக்கடியான காலக்கட்டத்தை எதிர்கொள்ளும்போது, பிற்போக்கு ஆதிக்கசக்திகளின் ஈடுபாடுகளைப் பாதுகாக்கும் அரசியல் போக்குத்தான் பாசிசம் என்று கம்யூனிசம் விவரிக்கிறது. இன்றைய உலகில் தாராளமயம், தனியார்மயம், உலகமயம் எனும் முதலாளித்துவ மும்மை ‘வளர்ச்சி’ என்கிற பெயரில் அதீத மாசுபாடு, புவி வெப்பமயமாதல், பருவநிலைச் சிதைப்பு என்று பூவுலகின் அடிப்படைகளையேத் தகர்த்துக் கொண்டிருக்கும்போது, பாசிசம் பல நாடுகளில் பல்வேறு வழிகளில், பற்பல தன்மைகளுடன் தன் கோரப்பற்களைத் துருத்தி நிற்கிறது.

அதிகாரத் தளங்களில் மட்டுமல்லாமல், உலகளாவிய குடிமைச் சமூகங்களிலும் புதிய பாசிச சித்தாந்தமும் (நியோ -பாசிசம்), அமைப்புகளும் பல்கிப் பெருகியிருக்கின்றன. இன்றைய இணையத்தில்கூட பாலியல் தளங்களுக்கு இணையாகப் பாசிசத் தளங்கள் நிறைந்திருப்பதாகப் புள்ளிவிபரங்கள் சொல்கின்றன. பல நாடுகளில் வலதுசாரி பாசிசக் குழுக்கள் தடை செய்யப்பட்டிருந்தாலும், அவை இன்னல்கள் ஏதுமின்றி இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றன.

உலகெங்கும் பல ஆட்சியாளர்கள் அதிகாரத்தைத் தட்டிப் பறிக்கவும், தக்க வைத்துக் கொள்ளவும் பாசிசச் சிந்தனையையும், செயல்பாடுகளையும் பிரயோகிக்கின்றனர். ‘ஏழ்மையை அகற்றுவோம்,’ ‘வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிப்போம்’ என்றெல்லாம் சொல்லி மக்கள் ஆதரவைப் பெறுவதைவிட, ‘புதிய தேசம்,’ ‘நமது பேரரசு,’ தேசியப் புண்ணாக்கு என்றெல்லாம் வெற்று முழக்கங்களை, வெறுப்புப் பேச்சைப் பயன்படுத்தி, மக்களை உசுப்பேற்றி எளிதில் அடிமைகளாக்குகின்றனர்.

தம்மினத்தின் வரலாற்றுப் பின்னடைவுகள் மீதான கோபம், தற்காலச் சமூகத்தின் ஒரு சாரார் மீதான வெறுப்பு, வருங்காலத்தைத் தமதாக்கிக் கொள்ள வேண்டுமெனும் பேராசை போன்ற எதிர்மறை உணர்வுகளைச் சாமர்த்தியமாகப் பயன்படுத்துகிறார்கள் பாசிஸ்டுகள். முன்னாள் பிரெஞ்சு அதிபர் சார்ல்ஸ் டி கால் சொன்னதுபோல, உங்கள் மக்கள் மீதான அன்பு முதன்மை பெறும்போது, அதன் பெயர் நாட்டுப்பற்று; பிற மக்கள் மீதான வெறுப்பு முதன்மை பெறும்போது, அதுதான் தேசியவாதம். பாசிஸ்டுகள் எப்போதுமே கொடும் தேசியவாதிகள் என்பதால் வெறுப்பையே உமிழ்கிறார்கள்.

இந்த ஆபத்தான பாசிச அரசியலை இந்திய மண்ணில் நடாத்திக் கொண்டிருக்கும், தமிழ்நாட்டில் நடாத்த முயலும் பார்ப்பனியத்தை தோலுரித்துக் காட்ட, தொலைத்துக் கட்ட, தமிழக மக்கள் முன்னணி எதிர்வரும் சனவரி 6, 2024 அன்று சென்னையில் நடத்தவிருக்கும் “பாசிச பார்ப்பனிய எதிர்ப்பு மாநாட்டை” பச்சைத்தமிழகம் கட்சி நன்றியுடன் வரவேற்கிறது, ஆதரிக்கிறது.

***

தோழர் கண. குறிஞ்சி தமிழ்நாடு மக்கள் உரிமைப் பேரவை

இந்திய மக்களின் இரு பெரும் பகை சக்திகள், பார்ப்பனியமும், முதலாளியமும் என வரையறுத்தார் அண்ணல் அம்பேத்கர். இன்றைய சூழலிலும் இது பொருத்தப்பாடு மிக்கதாக விளங்குகிறது. பொருளாதார மாற்றத்தைப் பொதுவுடைமை இயக்கங்களும், பண்பாட்டு மாற்றத்தைத் திராவிட இயக்கங்களும் முக்கியத்துவம் கொடுத்துத் தனித்தனியே செயல்பட்டன. பொருளாதாரம், பண்பாடு எனும் இரு தளங்களிலும் மாற்றத்திற்கான முயற்சியை, இன்றைய உலகமயச் சூழலில் தனித்தனியாகவோ அல்லது ஒன்றன் பின் ஒன்றாகவோ மேற்கொள்ள முடியாது; கூடாது.

பொருளாதார மாற்றத்தையும் பண்பாட்டுப் புரட்சியையும் ஒருங்கிணைத்து முன்னெடுக்க வேண்டிய அவசரத் தேவை இன்று எழுந்துள்ளது. அதன் வெளிப்பாடுதான் பார்ப்பனியம் மற்றும் பாசிசத்திற்கு எதிரான முழக்கம்.

பாசிசம் மற்றும் பார்ப்பனியம் ஆகியவற்றை எதிர்ப்பதோடு, தேசிய இனங்களின் முற்றுரிமைக்காகவும் போராட வேண்டிய அவசரத் தேவையும் எழுந்துள்ளது. அதுவும் எல்லாவற்றையும் மையப்படுத்தி ஒற்றைமயமாக்கும் போக்கு மேலெழுந்துள்ள இன்றைய சூழலில், மாநிலங்களின் இறையாண்மையை முன்னுரிமைப் பட்டியலில் இணைக்க வேண்டியது தவிர்க்க முடியாததாகி விட்டது.

எனவேதான் பாசிச எதிர்ப்பு / பார்ப்பனிய ஒழிப்பு / தேசிய இனங்களின் இறையாண்மை எனும் முப்பெரும் இலக்குகளை நமது செயல்நெறியாக வரித்துக் கொள்ள வேண்டிய தேவை எழுந்துள்ளது. அவற்றை வலியுறுத்தச் சென்னை மாநாடு நம்மை அறை கூவி அழைக்கிறது. ஒன்றிணைவோம்! அதிர்வுகளை உருவாக்குவோம்!

***

தோழர் வாலாசா வல்லவன் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி

இந்தியாவைப் பொறுத்தவரை பார்ப்பனியமே பாசிசம். ஆர் எஸ் எஸ் பா.ச. க. கும்பல்கள் நம்மை 2000 ஆண்டுகளுக்குப் பின்னோக்கி அழைத்து செல்ல திட்டமிட்டுப் பணியாற்றுகிறார்கள். அவர்களுடை மொழியையும் பண்பாட்டையும் மற்ற இன மக்கள் மீது திணித்து வருகின்றனர். மநு நீதியை மீண்டும் சட்ட ஏற்பிசைவு அளிக்கும் வகையில் சன்னியாசிகள் நிழல் அரசியல் நிர்ணய அவையை உருவாக்கி புதிய அரசமைப்பை இயற்றிக் கொண்டிருக்கிறார்கள். மீண்டும் நால்வருணத்தை நிலைநாட்ட முயற்சி செய்து வருகிறார்கள். இந்தியா என்றால் இந்தியும் சமற்கிருதமும் மட்டும் என வெளி உலகுக்குக் காட்டுவதற்காக அரசுப் பணத்தைக் கோடிக் கணக்கில் செலவழிக்கிறார்கள். இந்தப் காவி பாசிச பார்ப்பனிய சதிகாரக் கூட்டத்தின் செயல்திட்டங்களை முறியடிக்கவே இந்தப் பார்ப்பனிய பாசிச எதிர்ப்பு மாநாடாகும். அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும்.

***

தோழர் நிலவழகன் மக்கள் தமிழகம் கட்சி

தமிழக மக்கள் முன்னணி எதிர்வரும் 2024 சனவரி 6ஆம் நாள் தலைநகர் சென்னையில் பாசிச பார்ப்பனிய எதிர்ப்பு மாநாட்டை நடத்துகிறது. தமிழ்நாடு பன்னெடுங்காலமாகப் பொதுமை மற்றும் சமத்துவச் சிந்தனையால் வழிநடத்தப்பட்ட தேசமாகவே இருந்து வந்திருக்கிறது. அதற்கு வள்ளுவரும் வள்ளலாரும் சிறந்த சான்றாளர்கள்.

தேசங்களையும், இனங்களையும், மொழிகளையும் கடந்து உலகைப்பொதுமறை என்று வள்ளுவம் போற்றப்படுவதற்குக் காரணம் அது உலக மக்கள் அனைவருக்குமான வாழ்வியல் நெறிமுறைகளைப் பற்றி பேசியதால்தான். உயிர்கள் என்பதைத் தவிர வேறெந்த வேறுபாடுகளும் மனிதர்களுக்குள் இல்லை, ஒரு மனிதன் சக மனிதரை நேசிப்பதும், அவர் துன்பம் கண்டு இரங்குவதையும் தவிர தெய்வீக நிலையென்று ஒன்றில்லை என்ற நன்னெறியர் வள்ளலாரின் தமிழ்நிலத்தில் பார்த்தீனியம் எனும் நச்சு செடிகளைப்போல பார்ப்பனியம் எனும் நச்சுப் பாம்பு தன் கோரப் பற்களோடு தமிழ்நாட்டு மக்களுடன் ஊடாடித் திரிகிறது.

அது, புரட்சியாளர் அம்பேத்கார் அவர்கள் குறிப்பிட்டதை போல நாவில் கடவுளர் பெயர்களையும் கரங்களில் கொலைக்கருவிகளையும் வைத்துக் கொண்டு திரிகிறது. தமிழ்நாட்டின் செம்மார்ந்த அறிவு செல்வங்களை, வரலாற்று ஆய்வுகளையும் ஆவணங்களையும் மறைக்கிறது அல்லது சிதைக்கிறது.

தமிழ் முன்னோர்கள் போற்றிய மானுடத்தின் உயர்ந்த அறக்கோட்பாடுகளை மறைத்து சக மனிதர்களிடையே பாசிச வெறுப்பரசியலை விதைத்து வருகிறது. அது தனது வெறுப்பரசியலுக்கு நமது கல்வி நிலையங்களையும், ஊடக துறையையும் பயன்படுத்திக் கொள்ள முனைகிறது.

தமிழ்நாட்டின் கல்வி, வேலை வாய்ப்பு, சட்டத்துறை, நீதித்துறை, மருத்துவம் போன்ற அனைத்துத் துறைகளிலும் தனது மேலாதிக்கத்தை நிறுவ எத்தனிப்பதோடு மட்டுமல்லாமல் தமக்குச் சாதகமான பா.ச.க. ஆட்சியின் அதிகாரங்களை, ஆளுநர்களைப் பயன்படுத்திக் கொண்டு தமிழ் மக்களின் பாதுகாப்பு அரண்கள் மீது தாக்குதல் நடத்தவும் துணிந்திருக்கின்றனர்.

தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறிப்பது, கனிம வளங்களைச் சூறையாடுவது, மக்கள் விரோத திட்டங்களைக் கொண்டு வந்து வேளாண் நிலங்களைப் பாழாக்குவது எனப் பார்ப்பனியத்தின் பாசிச வெறிதிட்டங்களின் பட்டியல் நீள்கிறது.

அந்த அவர்களின் சதிகளைப் புரிந்து கொள்ளவும் அதை முறியடிக்கவுமான செயற்பாட்டுக் களத்தை உருவாக்குவதற்கான சனநாயக திசைவழியை தீர்மானிப்பதற்கான பாசறைப்பள்ளி எழுச்சியே இம்மாநாடு.

நமது தமிழ்நிலத்தைச் சூழும் காவி இருளகற்ற.. செங்கதிர்களாய்த் தமிழ்நாட்டு இளையோர், மாணவர்கள், சான்றோர், பெண்கள், தொழிலாளர்கள் அனைவரும் கூடும் இம்மாநாட்டில் பங்கேற்பதன் மூலம் தங்கள் வரலாற்றுக் கடமையை ஆற்ற அனைவரையும் மக்கள் தமிழகம் கட்சி உரிமையோடு அழைக்கிறது. மாநாடு வெல்லட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!

***

தோழர் பாவெல் இனங்களின் இறையாண்மைக்கான இளைஞர் மாணவர் இயக்கம்

வரலாற்று வளர்ச்சிக்கான முழக்கங்களைக் கொண்ட மாநாட்டுக்கு ஆதரவை வழங்குவது தமிழ்நாட்டு மக்களின் அனைவரின் கடமையாகும்.

மதவெறி பாஜக மோடி காவிக்கும்பல், டெல்லி ஒன்றிய [நடுவண்] ஆட்சியைக் கைப்பற்றி, மதவெறி பாசிச ஆட்சியை நிறுவியுள்ளது. இது இனங்களின், தேசங்களின், மக்களின் அரசியல் பொருளாதாரம், மொழி, பண்பாட்டு உரிமைகளைப் பறித்து நசுக்குகிறது.

மக்களின் குடியுரிமை, சனநாயக உரிமை, மத உரிமை இனங்களின் இறையாண்மை போன்ற சமூக வளர்ச்சிக்கான போராட்டங்களை தீவிரவாதம், பயங்கரவாதம் என முத்திரை குத்தி, சனநாயக போராளிகளின் மீதும், மக்களின் மீதும், சிறுபான்மை மதங்களின் மீதும், அரசு பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டு, மண்டை ஓட்டு மாலையுடன் தொடர்ந்து கொண்டாட்டம் போடுகிறது. இன்று மணிப்பூர் மக்களின் மண்டை ஒடுகளில் மத போதை மது அருந்தி மகிழ்கின்றது.

இந்த மதவெறி பாசிச கும்பல், உலக மேலாதிக்க பாசிச ஏகாதிபத்திய கும்பலுடனும், உள்நாட்டுப் பாசிச ஏகபோக அதானி, அம்பானி போன்றவர்களுடனும், கிராமப்புற சாதி ஆதிக்க எதேச்சதிகார கும்பலுடனும் கைகோர்த்துக்கொண்டு, ஒரு கூட்டுப் பாசிச சர்வாதிகார ஆட்சியை நடத்துகிறது.

இவர்கள் பின் தங்கிய மதவாத சக்திகளை அடித்தளமாகக் கொண்டு செயல்படுகின்றனர். இந்த சக்திகளைக் குறித்து மார்க்சிய கண்ணோட்டத்தில் கூறினால், தன்னைத்தானே இன்னும் கண்டறிந்து கொள்ளாமல், தன்னையே இழந்துவிட்ட, மனிதனின் உணர்ச்சியும், சுய உணர்வும்தான் மதம் என்பது. இது சமூக முன்னேற்றத்திற்கு என்றுமே பயன்படாத உணர்வாகும். இவர்களை மதவெறியூட்டி பிற்போக்கு சக்திகள் எளிதாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இன்று மதவெறி பாசிசத்தை எதிர்க்கின்ற கட்சிகளிடம் இப்பாசிசத்தின், பொருளியல் அடித்தளத்தையும், அதன் விளைவான சாதிய உறவுகளை அகற்றுவதற்கான, அடிப்படை மாற்றத்துடன் கூடிய இன விடுதலையைச் சாதிப்பதற்கான எந்த திட்டமும் இல்லை. இக்கட்சிகள் நிலவும் மதவெறி பாசிசத்திற்கு மாற்று, அடிப்படை மாற்றத்துடன் கூடிய இனவிடுதலைதான் என்று ஏற்றுக் கொள்வதும் இல்லை.

மாறாக, இக்கட்சிகள் இன்று சமூக நீதி என்ற பெயரில் வேலைவாய்ப்பில் சாதிய இட ஒதுக்கீட்டை மட்டுமே பிரதான ஆயுதமாக கையில் எடுத்துள்ளனர். இது பாசிசத்தின் பொருளியல் அடித்தளத்தையும், சாதியின் அடித்தளத்தையும், மதவாதத்தின் அடித்தளத்தையும் ஒருபோதும் தகர்க்காது. அடிப்படை மாற்றங்களுக்கு மாற்றான இந்த சீர்திருத்தங்கள், பாசிசத்தின் அடித்தளத்தைப் பதப்படுத்தி வைத்திருக்கவே பயன்படும்.

சாதிமுறையைத் தனது அடித்தளமாகக் கொண்ட இந்து மதம், இங்குள்ள இனங்களின் மதம் அல்ல. இனங்களில் இருந்து தோன்றிய மதமும் அல்ல. இனங்களிடையே நீண்ட காலமாய் நிலவிவந்த கிராமச் சமுதாயத்திலும், மலைவாழ் மக்களிடையிலும், வழிபாட்டைத்தவிர, மதம் தோன்ற வாய்ப்பே இல்லை.

மாறாக வந்தேறி ஆரியப் பார்ப்பனர்கள், தங்களின் தலைமையை மதவாத அடிப் படையில் நிறுவ உருவாக்கிக் கொண்டதுதான், வேதங்களைக் கொண்ட இந்து மதம்.

மார்க்ஸ் இதுகுறித்து, கிருத்துவ பாதிரிகளின் அறைகூவலை எதிர்த்து விமர்சிக்கும்போது, "மதவாதிகளாகிய நீங்கள் முன் கூட்டியே ஆய்வின்றி, ஆதாரமின்றி; விஞ்ஞான உண்மைகளும், மத உண்மைகளும் ஒன்றே எனக் கூறுவதும், எனவே மக்கள், கடவுள் பற்றியும், மதம் பற்றியும், வேதங்கள் பற்றியும் தெளிவான கண்ணோட்டம் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என அறைகூவல் விடுகின்ற தீர்க்கதரிசிகள் ஆகிவிட்டீர்கள்" எனக் கூறியதுடன், இந்திய பிராமணர்களின் கீழ்க்காணும் நிலைப்பாட்டை அவர்கள் முன்பு கேள்வியாய் வைக்கின்றார்.

‘‘ஆனால் வேதங்களைப் படிக்கும் உரிமையைத் தனக்கு மட்டுமே வைத்துக் கொண்டே, வேதங்களின் புனிதத் தன்மையை நிரூபிக்கும் இந்திய நாட்டு பிராமணனைப் பொறுத்தவரையிலும் உங்கள் நிர்ணயிப்பு என்ன பயனை விளைவிக்க இயலும்” -மார்க்ஸ் [ மதத்தைப் பற்றி, பக் 26] உழைக்கும் மக்கள் இந்து மத வேதங்களைப் படிப்பதும், படிப்பதை காதால் கேட்பதும் கொடும் தண்டனைக்குரிய [நாக்கை அறுக்கணும், காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றணும்] குற்றம் என்றால், அது எவ்வாறு இங்குள்ள மக்களின், இனங்களின் மதமாக இருக்க முடியும்.

எனவேதான் வழிபாடெல்லாம் மதமல்ல வந்தேறிகளின் இந்துமதம் நமதல்ல _ என்ற முழக்கத்தை, இனங்களின் இறையாண்மைக்கான இளைஞர் மாணவர் இயக்கம், நீண்ட காலமாக முழங்கிவருகின்றது.

மக்கள் தங்களின் தேவைகளைத் தாங்களே தேடிக்கொள்ள வேண்டும்; தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற நிலை உள்ள வரையும், யாராலும், எதனாலும் எந்தத் தலையீடும் இல்லாத குடும்பங்கள் அமையாத வரையும், மக்கள் தங்களின் இன்னலுக்குத் தீர்வுகான, இறைவனை நாடுவது இயல்பேயாகும்.

எனினும் இதற்கு நீண்ட நெடுங்கால கிராமச் சமுதாயத்தினுடையதுமே, இன்னும் தொடரும், இயற்கை வழிபாடு, நடுகல் வழிபாடு, மாண்டோர் கோயில் வழிபாடு போன்றவை பற்றி ஏற்கெனவே உள்ளது. ஆனால் இன்று வந்தேறி இந்துமதத்தின் கொடூரங்கள், இவற்றுடன் கூடிக் குலாவி, அவற்றைக் கொலைக் களத்திற்கு அனுப்பிவிட்டு, தனது சாதிமுறை கொண்ட மத ஆதிக்கத்தை நிறுவ முயற்சிக்கின்றது. இதை மக்கள் உணரும்படி செய்வது அவசியமாகும்.

ஆனால், இந்து மதவெறி பாசிசத்தை எதிர்ப்பவர்கள், தாங்கள் இந்து மதத்தின் எதிரிகள் அல்லர், மாறாக தாங்கள்தான் இந்து மதத்தின் உண்மையான பாதுகாவலர்கள் என்று கூறி, அறநிலையத்துறையின் சாதனைகளைப் பட்டியலிடுவது தீர்வாகாது. இது இடைக்காலமாக ஒரு மிருதுவான காவி பாசிசத்தை மினுக்கச் செய்ய வேண்டுமானால் பயன்படலாம். எனவே, மாநாட்டின் முழக்கமான பார்ப்பனிய இந்து மதவெறி, சாதிவெறி பாசிசத்தை முறியடிப்போம் என்பதே சரியான முழக்கமாகும்.

எனவே, சிறுவீத உற்பத்தியை அடிப்படையாகக் கொண்ட சாதி சமுதாயத்தை, அப்படியே பாதுகாத்து, தங்களின் சுரண்டலுக்காக, அதில் வாடகை இயந்திரங்களையும், விதை, உரம், உயிர்க்கொல்லிகள் போன்ற இரசாயனங்களைப் புகுத்திக் கொள்ளையடிக்கும் ஏகபோகங்களான அம்பானி, அதானி உள்ளிட்ட அந்நிய நாட்டு கம்பெனிகளையும், அவர்களின் மூலதனங்களையும் பறிமுதல் செய்வோம் என்ற முழக்கம் இனங்களின் அடுத்தக் கட்டப் பாய்ச்சாலுக்கானதே.

மேலும், மேற்கண்ட கூட்டங்களின் சுரண்டல் ஆதிக்க நலனுக்காக இனங்களின் எதிர்ப்பை ஒடுக்க, இனங்களை நசுக்க ஆங்கிலேயனால் உருவாக்கப்பட்ட ஆளுநர் முறையை ஒழிக்கப் போராடுவோம் என்ற முழக்கமும், இனங்களின் உரிமைக்கான சரியான முழக்கமேயாகும்.

இடைக்காலமாக மக்களவை கலைக்கப்பட்டுச் சம உரிமை கொண்ட மாநிலங்களவையிலிருந்தே ஒன்றிய(நடுவண்) அமைச்சரவை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற முழக்கம் இனங்களின் போராட்டம் இறுதி இலட்சியத்தை அடைய படிக்கல்லாகப் பயன்படும் சரியான செயல்தந்திர முழக்கமேயாகும்.

அனைத்துக்கும் அச்சாரமாக விளங்கும் தேசிய இனங்கள் விரும்பினால் தாங்களே ஒரு வாக்கெடுப்பை நடத்தி, பிரிந்து செல்லும் உரிமையை, படை கொண்டு தடுக்கும் பாசிச ஒன்றிய (நடுவண்) அரசை எதிர்த்து, அடிப்படை மாற்றத்துடன் கூடிய இன விடுதலைக்குப் போராடுவது என்ற மாநாட்டின் முழக்கம் வரலாற்று வளர்ச்சிக்கு உகந்தது என்பதால் அனைத்து இன உணர்வாளர்களும், சனநாயக சக்திகளும், உழைக்கும் மக்களும் மாநாட்டிற்கு ஆதரவளித்து, மாநாட்டு முழக்கத்தின் கீழ் ஒன்று திரள்வது வரலாற்றுக் கடமையாகும்.

***

தோழர் தங்க. குமரவேல் தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்கம்

தமிழக மக்கள் முன்னணி நடத்தும் பாசிச பார்ப்பனிய எதிர்ப்பு மாநாட்டில் பங்கேற்று உழைக்கும் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க அறைகூவி அழைக்கிறது தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்கம்!

கார்ப்பரேட், காவிக் கூட்டணி நம்மை நாசமாக்கி காடு, மலை, நதி, கடல் என அனைத்து இயற்கை வளங்களையும் சுரண்டிக் கொழுக்கிறது! அதனை முறியடித்து புதிய சனநாயகம் படைத்திடுவோம்! அணிதிரள்வோம் மாநாட்டுக்கு!

மதவெறி அரசியல் செய்து மனித மாண்புகளை மணிப்பூர் உள்ளிட்ட அனைத்து இந்தியத் தேசங்களின் மண்ணிலும் புதைத்து வரும் ஆரியக் கோட்பாடுடைய ஆர்.எசு.எசு உள்ளிட்ட சங் பரிவாரங்களுடன் சங்கத் தமிழராய்ச் சாதி மதமற்ற தன்மானத் தமிழராய் நின்று சமர் புரிவோம்! அணிதிரள்வோம் மாநாட்டுக்கு!

பார்ப்பனியம் என்னும் பார்த்தீனியம் நமது பண்பாடு என்னும் பயிரில் களையாய் வளர்ந்து நம் வாழ்வைச் சிதைக்கிறது! அதனைக் களையெடுத்து சமத்துவப் பண்பாட்டுப் பயிர் வளர்ப்போம்! அணிதிரள்வோம் மாநாட்டுக்கு!

ஆண்ட பரம்பரை என இடைநிலைச் சாதிகளின் கொம்பு சீவி, மறுபுறம் சிவகுலத்தார் எனப் பட்டியல் சாதியினருக்குப் பூணூல் மாட்டி போலிப் பெருமையில் வீழ்த்தி சூத்திரராய்ப் பஞ்சமராய் நமைப்பிரித்துச் சூதாட்டம் ஆடிவரும் ஆரிய மாயைதனை அம்பலப்படுத்துவோம்! அணிதிரள்வோம் மாநாட்டுக்கு!

மனுநீதி என்னும் அநீதியை உடைத்து சமூகநீதி எனும் சமநீதி படைப்போம்! அணிதிரள்வோம் மாநாட்டுக்கு!

அதானி அம்பானியின் தனியுடைமை ஆகிப்போன இந்தியாவை மீட்டுப் பொதுவுடைமை இந்தியாவை உருவாக்குவோம்! அணிதிரள்வோம் மாநாட்டுக்கு! பாசிச ஒற்றை இந்தியாவைக் கருவறுத்துத் தேசங்களின் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சோசலிச ஒன்றிய இந்தியாவைக் கருக்கொள்ள வைப்போம்! அணிதிரள்வோம் மாநாட்டுக்கு!

***

தோழர் சௌ. சுந்தரமூர்த்தி, தமிழர் விடுதலைக் கழகம்

நம் தமிழ் மண் அய்யன் திருவள்ளுவர், வள்ளலார், வைகுண்டர், தந்தை பெரியார், பாவலரேறு பெருஞ்சித்திரனார், தோழர் தமிழரசன், புலவர் கலியபெருமாள் போன்ற எண்ணற்ற ஆளுமையர்களால் சாதி மதங்களைக் கடந்து மனித நேயம் மிக்க மண்ணாக, மனித சமத்துவத்திற்கான மண்ணாக ஏற்றம் பெற்று நிற்கிறது. கடந்த கால் நூற்றாண்டுக் காலமாக மதவாத சக்திகள் பல வழிகளில் இந்த மண்ணை வீழ்த்திப் பார்ப்பனிய அடிமைத்தனத்தின்கீழ் கொண்டு செல்ல தொடர்ச்சியான முன்னெடுப்புகளைச் செய்து கொண்டிருக்கின்றன. எளிமையாக மனிதர்களை ஆட்படுத்தக்கூடிய சாதி, மத உணர்வைத் தூண்டி அதன் வழியாக அவருடைய அறியாமையை வளர்த்து அவர்களைப் படுகுழிக்குத் தள்ளும் வேலையைத் தொடர்ச்சியாக இந்தப் பாசிச பார்ப்பனிய பாஜக மற்றும் இந்திய ஆளும் வர்க்கங்களும் அதன் ஒட்டு சதையாகத் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய சில அமைப்புகளும் தொடர்ச்சியாக நம்மிடையே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்தியாவிலிருந்து 50 ஆண்டுக் கால முன்னேற்றத்தைப் பெற்றிருக்கக்கூடிய தமிழ்நாட்டில் தமிழ்நாட்டின் வளங்களை எல்லாம் சுரண்டுவதற்காகவும், தமிழ்நாட்டின் விடுதலை உணர்வை மட்டுப்படுத்துவதற்காகவும் தொடர்ச்சியாக இது போன்ற பிளவுகளையும், பிரிவுகளையும் இந்தியப் பார்ப்பனியம் செய்து கொண்டிருக்கின்றது.

அண்மைக்காலமாகத் தொடர்ச்சியாகப் பல்வேறு மதச் சடங்குகளையும், தொடர்ச்சியாக நடக்கக்கூடிய மத விழாக்களை எல்லாம் பார்ப்பனியம் தன் வயப்படுத்த முயல்கிறது. அது மட்டுமின்றித் தமிழ்ச் சான்றோர்களையும், தமிழ்ச் சான்றோர்களின் படைப்புகளையும் தனதாக்கிக் கொள்ள சமசுக்கிருதப் பார்ப்பனியம் இங்கே முயற்சி செய்து கொண்டிருக்கிறது. சாதி மத வேறுபாடற்றுத் தமிழர்கள் ஒன்றாக வாழ்ந்து தமிழர்கள் ஒன்றாகப் பெரும் சாதனைகளை எட்டிக் கொண்டு இருக்கக் கூடிய இந்த வேலையில் தமிழர்களுக்குள் குடிப்பெருமை, தமிழ்ச்சாதி, தமிழ்க் குடி என்ற பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி அதைத்தான் தமிழ்த் தேசியம் என்றும், இந்தியப் பார்ப்பனியத்திற்கு தமிழர்களை இட்டுச் செல்லக் கூடிய வேலையை ஒரு கும்பல் தொடர்ச்சியாக செய்து வருகிறது.

 இதன் வழியாக இந்திய ஒன்றியம் முழுக்க முழுக்கத் தமிழ்நாட்டின் உரிமைகளை மறுப்பதோடு, அனைத்து உரிமைகளையும் தன்பால் பிடுங்கிக் கொண்டு தமிழ்நாடு அரசையும், தமிழ்நாட்டு மக்களையும் இந்தியப் பார்ப்பனியத்தின் கீழ் கையேந்தும் நிலைக்குக் கொண்டு செல்கிறது. இந்த நிலையில் இருந்து மாற்றம் பெற்று தேசிய இன உணர்வு பெற்று தமிழர்களின் தொன்மை, வரலாற்றை உணர்ந்து தமிழர்களின் தன்னாட்சியை இந்த மண்ணில் நிலைநிறுத்தவும் அதற்கு எதிராக இருக்கக்கூடிய இந்தப் பாசிச வெறிபிடித்த பார்ப்பனிய பாஜக மற்றும் அதன் தொங்கு சதைகளாக இங்குச் செயல்படக்கூடிய பல்வேறு அமைப்புகளையும் அடையாளம் காட்டவும் இந்தப் பணி அவசியமாய் இருக்கிறது. அதன் வழியே இந்த மண்ணில் இனியும் இந்தப் பார்ப்பனிய பாசிசத்திற்கு இடம் கொடுத்தால் ஒவ்வொரு குடும்பத்தில் இருக்கக் கூடிய உறவுகளுக்குள்ளேயே பிரிவுகளையும், பிளவுகளையும் ஏற்படுத்தக்கூடிய செயலைத் தொடர்ச்சியாகச் செய்துவிடும். இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இந்த மண்ணில் பார்ப்பனியம் எந்த வழியில் எல்லாம் ஆளுமை செலுத்துகிறது. எப்படியெல்லாம் தமிழர்களுடைய வாழ்வியலை மடைமாற்றம் செய்கின்றது என்பதை உணர்த்துவதற்கும், பார்ப்பனிய பாஜகவையும், பார்ப்பனிய இந்துத்துவ இந்திய சக்திகளையும் வேரறுத்துச் சாதி மதமற்ற சமத்துவ தமிழ்நாட்டை உருவாக்கவும் தமிழ்த் தேசிய குடியரசை நிறுவ ஏற்ற வழிவகை செய்ய அனைவரையும் அன்போடு அழைக்கிறது தமிழர் விடுதலைக் கழகம். ஒன்றிணைவோம்; தமிழ்நாட்டில் மாற்றத்தை உருவாக்குவோம்.

***

தோழர் சுப்பு. மகேசு, தமிழர் உரிமை இயக்கம்

கடந்த 19 11 2023 அன்று தமிழ்நாடு முழுவதும் ஆர் எஸ் எஸ் பேரணி நடந்து முடிந்துள்ளது. பலமுறை இந்திய ஒன்றிய அரசால் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு ஆர் எஸ் எஸ் இருந்தாலும் உச்ச நீதிமன்றத் தவறான வழிகாட்டலால் தமிழக முழுவதும் ஆர் எஸ் எஸ் பேரணி நடத்தப்பட்டுள்ளது. இந்திய ஒன்றியத்தில் நடைபெற இருக்கிற ஐந்து மாநிலச் சட்டமன்ற தேர்தலில் பரப்புரையில் ஈடுபட்டு வருகிற ஒன்றிய பா ஜ க அரசின் தலைமை அமைச்சர் நரேந்திர மோதி ராஜஸ்தான் பொதுக்கூட்டங்களில் பேசுகிறபோது அவர் இந்த ஒன்பது ஆண்டுக்கால ஆட்சியில் என்ன செய்தார் என்பதைச் சொல்லி வாக்குக் கேட்பதற்கு பதில் இந்தியா கூட்டணியின் சனாதன எதிர்ப்புத் திட்டம் நமது பண்பாட்டைச் சிதைப்பதாகும் என்று பேசுகிறார்.

சனாதானம் என்றாலே பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வை உறுதிப்படுத்துவது தானே நான்கு வருணக் கோட்பாட்டையும் அதன் நடைமுறையையும் செயல்படுத்துவதுதானே இதைத்தான் இந்த ஒன்பது ஆண்டுக்கால பாஜக ஆட்சியில் செம்மையாகச் செயல்படுத்தி வந்துள்ளனர். பழைய காட்டுமிராண்டிக் காலத்திற்கு மக்களைக் கொண்டு செல்வது மதக் கருத்துகளும் சாதிய ஒடுக்குமுறைகளும் மீண்டும் மீண்டும் எழுச்சியூட்டப்படுகிறது.

பாஜக, ஆர் எஸ் எஸ் ஆட்சியில் மணிப்பூர் மக்களை இனரீதியாக, மதரீதியாக பிளவுபடுத்திக் கொன்று குவித்த இரட்டை எஞ்சின் ஆட்சியின் இலட்சணத்தை மக்கள் அறிவர். இந்த இரட்டை எஞ்சின் ஆட்சியை இந்திய ஒன்றியம் முழுவதும் உள்ள பல் தேசிய இன மக்கள் மீதும் திணிக்கத் துடிக்கிறது. ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் தேர்தல் கட்சியான பாஜக இப்படித் தமிழ்நாட்டில் நீதிக் கட்சி தொடங்கி திராவிட கட்சிகள் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சமூகநீதி திட்டங்களைக் காவு வாங்கியுள்ள பாஜக அரசுத் தகுதி தேர்வுகளை நடத்தித் தடுத்து வறுவதோடு புதிய கல்விக் கொள்கை என்கிற பெயரிலே நால்வருணக் கல்வியைத் திணிக்கத் துடிக்கிறது. மேடைதோறும் ஊழலுக்கு எதிராகச் செயல்படுகிறோம் எனக் கூறும் மோதி கும்பல் சாகர்மாலா என்கின்ற சாலை போடும் திட்டத்தில் மட்டும் சுமார் 7.5 லட்சம் கோடி ஊழல் செய்துள்ளார்கள் என்றால் இந்திய ஒன்றியம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திட்டங்களில் எந்த அளவுக்கு ஊழல் செய்திருப்பார்கள் என கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.

அதானி அம்பானியிடம் இந்தியாவை ஒப்படைத்துள்ள மோதி அமித் ஷா கும்பல் தமிழகம் உள்ளிட்ட அனைத்து தேசிய இன மக்களின் வாழ்வுரிமையைப் பறித்துள்ளனர் விலைவாசி உயர்வும் வேலை வாய்ப்பு இன் மையும் இந்தியாவில் வாழும் இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் ஒரு நம்பிக்கையற்ற வாழ்க்கையை உருவாக்கியுள்ளது. மக்கள் தாங்கள் உயிர் வாழ்வதற்கு இந்திய ஒன்றியம் முழுவதும் நாடோடிகளாக இடம்பெயர்ந்து வருவது கண்கூடானது. வட மாநில இளைஞர்கள் தமிழகத்திற்கு வேலைவாய்ப்பு தேடி வருவதும் தமிழக இளைஞர்கள் வேலை வாய்ப்பு தேடி உலகம் முழுவதும் நகர்வதும் ஆகவே இந்திய ஒன்றியத்தின் பல் தேசிய இனங்களின் பண்பாடு பொருளியல் மற்றும் அரசியலைச் சிதைத்து வேற்றுமையில் ஒற்றுமை என்கிற கோட்பாட்டை நசுக்கிச் சமத்துவம் சகோதரத்துவம் சனநாயகம் என்கின்ற கோட்பாட்டிற்கு எதிராக வெறுப்புப் பண்பாட்டைச் சிறுபான்மை மக்களுக்கு எதிராக விதைத்து இந்தியாவை ஒரு மதத்தின் அடிப்படையில் கட்டமைக்கத் துடிக்கும் பாஜக ஆர் எஸ் எஸ் -ன் பாசிச பார்ப்பனிய ஒடுக்கு முறையைத் தடுத்து நிறுத்துவோம். தமிழ்நாடு உள்ளிட்ட பல தேசிய இனங்களின் உரிமைகளைப் பாதுகாக்க 2024 சனவரி 6 ல் தமிழக மக்கள் முன்னணியின் சார்பில் சென்னையில் நடைபெற இருக்கிற பாசிச பார்ப்பனிய எதிர்ப்பு மாநாட்டிற்கு அழைக்கிறோம்..

***

தோழர் தெய்வமணி, அம்பேத்கர் சிறுத்தைகள் இயக்கம்

வருகின்ற ஆண்டு 2024 சனவரி 6 ஆம் நாள் வடசென்னையில் தமிழக மக்கள் முன்னணி சார்பில் நடைபெற இருக்கின்ற பாசிச பார்ப்பனிய எதிர்ப்பு மாநாட்டினை அம்பேத்கர் சிறுத்தையில் இயக்கம் வரவேற்கின்றது

புரட்சியாளர்.அம்பேத்கர், தந்தை பெரியார் போன்ற ஆளுமைகளின் காலத்திற்குப் பிறகு தொடர்ந்து பார்ப்பனிய சித்தாந்தங்களை எதிர்ப்பதற்கும், தொடர் பிரச்சாரம் மூலமாய் அதனைச் சமூக, அரசியல் களத்தில் போரிடப் போதுமான ஆற்றல்கள் இல்லாத சூழலில் பார்ப்பனியத்தின் 10 ஆண்டுகால ஆட்சியின் அதிகாரத்தை இந்துராஷ்டிரம் நோக்கிப் பயணிக்க செய்கின்ற இந்தக்காலக் கட்டத்தில் பார்ப்பனிய பாசிசத்தைத் தோலுரித்துக் காட்ட இப்படியான ஒரு மாநாடு தமிழ்ச் சமூகத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் தேவையான ஒன்றாக உள்ளது. பாசிச சித்தாந்தங்கள் மேலை நாடுகளில் கால் நூற்றாண்டுக்குள் அடித்து நொறுக்கப்பட்டு அது சனநாயகத்தில் ஊடாக மனித மாண்புகளை மீட்டுருவாக்கம் செய்து விட்டது. ஆனால் பார்ப்பனிய சமுகம் பாசிசத்தின் கூறுகளான கார்ப்பரேட்டிசம் (கூட்டுழைப்பு) +நாசிசம் (இனவாதம்)

+ தன்னிறைவுப் பொருளாதாரம் ஆகிய கூறுகளைக் கொண்டு பார்ப்பனிய சமுகம் இயங்குவது மாத்திரம் அல்லாமல். 2000 ஆண்டுகளாய்ப் பாசிச ஒடுக்குமுறைகளைத் தமிழ்க்குமுகத்தின் மீது காலத்திற்கும் மாறாதாய் (சனாதனம்) எல்லா காலமும் நீடிக்கின்ற இந்தப் பார்ப்பனிய பாசிச ஒடுக்குமுறைகளைத் தமிழ்ச் சமூகத்திற்கு வெளி காட்ட இப்படியான மாநாடுகளும், கலந்துரையாடல்களும், போராட்டங்களும் தேவையாக உள்ளன. கற்பிப்போம் நம் அறம் சார்ந்த வாழ்க்கையை! ஒன்றுபடுவோம் தமிழினமாய்! போராடுவோம் சாதி,மதமற்ற தமிழ்த் தேசம் அமைக்க! இந்தப் போராட்டம் செல்வத்திற்காகவோ அதிகாரத்திற்காகவோ இல்லை. மனித விடுதலைக்கான போராட்டம், வெல்லட்டும் மாநாடு.

Pin It