கன்னையா குமாரின் உரை

ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் இந்தியாவின் மூவர்ணக் கொடியை எரித்தவர்கள். பிரிட்டிஷாரிடம் மன்னிப்புக் கேட்க சவார்க்கரைப் பின்பற்றுபவர்கள்; பகத்சிங்கின் பெயரைத் தாங்கி நின்ற ஹரியானா விமான நிலையத்தின் பெயரை மாற்றி, ஆர்.எஸ்.எஸ்.சுடன் தொடர்புடைய ஒருவரின் பெயரை இட்டவர்கள்.

நாட்டுப் பற்று குறித்த நற்சான்றிதழும், தேசியவாதி என்ற சான்றிதழும் இவர்களிடமிருந்து எங்களுக்குத் தேவையில்லை. நாங்கள் இந்நாட்டைச் சேர்ந்தவர்கள். இந்நாட்டின் மீது அன்பு செலுத்துகிறோம். இந்த நாட்டின் விழுக்காட்டினரான ஏழைகளுக்காகப் போராடுகிறோம். இதுதான் எங்களது நாட்டு வணக்கம்.

JNU student 600அம்பேத்கர் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. சங் பரிவாரத்தினரானாலும் யாரானாலும் சரி அரசியலமைப்பை மாற்ற முயன்றால் அதை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்று அழுத்தமாகக் கூறிக் கொள்கிறோம்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. ஆனால், ஜன தீவாலனிலும் (டெல்லியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகம்), நாகபுரியிலும் கற்றுக் கொடுக்கப்படும் அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும் மனுஸ்மிருதி மீதும் சாதி அமைப்பின் மீதும் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. பாபா சாகேப் அம்பேத்கர் சரியான வழிமுறையைக் காட்டியுள்ளார். மரண தண்டனை ஒழிப்பு குறித்தும் பேச்சுரிமை குறித்தும் அவர் பேசியுள்ளார். அரசியலமைப்புச் சட்டத்தையும் எங்கள் உரிமைகளையும் நிலைநாட்ட விரும்புகிறோம்.

ஏபிவிபி-யின் இணைச் செயலாளர் உதவித் தொகைக்காகப் போராடுவதாகக் கூறினார். ஆனால் அவர்களது அரசின் திருவாட்டி மனுஸ்மிருதி ராணி உதவித் தொகைக்கு முடிவு கட்டுகிறார். அவர் களோ உதவித் தொகைக் காகப் போராடுகிறோம் என்கிறார்கள். உயர் கல்விக்கான உதவித் தொகை ஒதுக்கீட்டில் 17 விழுக்காட்டை பிஜேபி அரசு குறைத்திருக்கிறது. வைஃபி இல்லை. பல்கலைக் கழகத்திற்கு பேருந்து ஒன்றை பெல் நிறுவனம் வழங்கி யுள்ளது. அதற்கு எரிபொருள் நிரப்பப் பல்கலைக் கழகத்திடம் பணம் இல்லை. நாட்டின் அடிப்படைத் தேவைகள் குறித்து விவாதம் நடந்தால் அவர்கள் அம்பலப்பட்டுப் போவார்கள்.

ஜேஎன்யூ மாணவர்கள் நாம் பெருமைப்படுகிறோம். ஏனெனில் இந்நாட்டின் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து நாம் விவாதிக்கிறோம். பெண்களின் கண்ணியம், தலித்துகள், ஆதிவாசிகள், சிறுபான்மையினர் நலன் என்பன குறித்து விவாதிக்கிறோம். ஆகையால்தான் அவர்களின் ஸ்வாமி (சு.சா.) ஜிகாத்துகள் வாழ்வதாகவும் அங்குப் பயிலும் மாணவர்கள் வன்முறையைப் பரப்புவதாகவும் கூறுகிறார்கள். ஜேஎன்யூ சார்பில் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்திற்கு சவால் விடுக்கிறோம். விவாதம் நடத்த அழைப்பு விடுக்கிறோம். வன்முறை என்பது குறித்து விவாதிக்க விரும்புகிறோம்.

ஏபிவிபி-யின் ஸ்லோகம் குறித்து கேள்வி எழுப்ப விரும்புகிறோம். நெற்றியில் ரத்தத் திலகம் இடலும் தோட்டாக்களால் ஆரத்தி எடுத்தலும் அவர்களின் ஸ்லோகமாய் உள்ளது.

யாருடைய ரத்தத்தை அவர்கள் தெளிக்க விரும்பு கிறார்கள். பிரிட்டிஷாரிடம் கூட்டு வைத்து இந்நாட்டு விடுதலைப் போராளிகளின் மீது தோட்டாக்களால் சுட்டார்கள். பசியால் வாடிய ஏழை மக்கள் உணவு கேட்ட போதும் உரிமை கேட்ட போதும், இஸ்லாமியர் மீதும், சம உரிமையைக் கேட்ட பெண்கள் மீதும் சுட்டார்கள்.

‘ஐந்து விரல்களும் சமமாய் இருக்குமா’ என்பார்கள். சீதையைப் போன்று பெண்கள் அக்னிப் பிரவேசத்திற்கு ஆளாக வேண்டும் என்கிறார்கள். இந்த நாட்டில் ஜனநாயகம் உள்ளது. ஜனநாயகமானது சமத்துவமான உரிமைகளை நமக்கு வழங்கியுள்ளது. மாணவர்கள், உழைப்பாளிகள் ஏழையாக இருந்தாலும் பணக்காரனாக இருந்தாலும் அம்பானி அதானியாக இருந்தாலும் பெண்களின் சம உரிமை குறித்துப் பேசிவிட்டால், இந்தியப் பண்பாட்டை அழிப்பதாக நம் மீது குற்றம் சாட்டுகிறார்கள். சுரண்டல் பண்பாடு, சாதிப் பண்பாடு, மதவாதப் பண்பாடு, பிராமணியம் என்பனவற்றை நாம் அழிக்க விரும்புகிறோம்.

பண்பாடு குறித்த உங்களது வரையறையைக் கொண்டு எங்களது வரையறையைத் தீர்மானிக்க இயலாது. ஆங்கில ஆதரவு கொண்டிருந்தோர் இன்று தேசியம் குறித்த சான்றிதழ் வழங்குகிறார்கள்.

நண்பர்களே...! என்னுடைய அலைபேசியைப் பாருங்கள். என் தாய், சகோதரி ஆகியோர் குறித்து அசிங்கமான வசவுகளால் நிரம்பி நிற்கிறது. நீங்கள் எந்த அன்னை இந்தியாவைப் பேசுகிறீர்கள். என்னுடைய தாய் உங்கள் அன்னை இந்தியாவின் ஒரு பகுதி இல்லையா...? அன்னை இந்தியா குறித்த உங்கள் கருத்தாக்கம் எனக்குப் பொருந்தாதா...?

என் தாய் மூவாயிரம் ரூபாய் மாத ஊதியம் வாங்குகிறார். இந்த ஊதியத்தைக் கொண்டுதான் எங்கள் குடும்பம் நடக்கிறது. என் தாயைத் திட்டுகிறார்கள். இந்த நாட்டில் ஏழைத் தாய்மார்கள், தலித் விவசாயத் தாய்மார்கள் இந்தியத் தாய்நாட்டின் ஓர் அங்கமாகக் கருதப்படாமை குறித்து பெரிதும் வெட்கப்படுகிறேன். இந்த நாட்டின் தந்தையர்கள், சகோதரிகள், ஏழைக் குடியானவர்கள், தலித்துகள், ஆதிவாசிகள், தொழி லாளர்கள் ஆகியோரைப் போற்றுகிறேன்.

“இன்குலாப் ஜிந்தாபாத், பகத்சிங் ஜிந்தாபாத், சுகதேவ் ஜிந்தாபாத், அஷப்குல்லாகான் ஜிந்தாபாத், பாபாசாகேப் அம்பேத்கர் ஜிந்தாபாத்” என்று நீங்கள் (ஏபிவிபியினர்) முழக்கமிட்டால், இந்த நாட்டில் உங்களுக்குப் பற்றுள்ளதாக நான் நம்புவேன்.

அம்பேத்கரின் 125வது பிறந்த நாளைக் கொண்டாடுவதாக அவர்கள் நாடகமாடுகிறார்கள். துணிச்சலிருந்தால் அம்பேத்கர் எழுப்பிய பிரச்சினை களை அவர்களும் எழுப்பட்டும். இந்த நாட்டின் மிகப் பெரிய பிரச்சினை சாதி என்ற கருத்தை அம்பேத்கர் முன்வைத்தார். அவர் முன்வைத்த இக்கருத்தை இவர்களும் முன்மொழியட்டும். சாதி அமைப்பு குறித்து, தனியார் துறை உட்பட அனைத்துத் துறைகளிலும் இடஓதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவது குறித்து அவர்கள் பேசட்டும். இந்தக் கருத்துகளை நீங்கள் முன்வையுங்கள். இப்படிச் செய்தால் இந்த நாட்டின் மீது, உங்களுக்குப் பற்று இருப்பதாக நான் நம்புவேன்.

இந்த நாடானது, உங்களுக்கு உரியதாக இருந்தது மில்லை, இருக்கப்போவதுமில்லை. ஒரு நாடானது மக்களால் உருவாக்கப்படுவது. இந்த நாட்டில் பசியும் ஏழ்மையும் கொண்ட மக்களுக்கு இடமில்லை என்ற

உங்கள் கருத்தை வலியுறுத்தினால் இந்த நாடே இருக்காது.

***

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தைக் குறித்த அவதூறுகள் பரப்பப்பட்டு வந்த சூழலில் ரோகித் வெமுலாவின் மரணத்திற்கு நீதிகேட்டுப்  போராடும் மக்கள் இயக்கத்திற்கான ஆயத்தங்கள் தொடங்கின. இதன் அடிப்படையில் கலை நிகழ்ச்சி ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. 2016 பிப்ரவரி ஏழாம் நாளன்று  பல்கலைக்கழக விடுதியில் ஏபிவிபியினர் மோதல்களில் ஈடுபட்டனர். அவர்கள் எழுப்பிய முழக்கங்கள் வெறியூட்டுவனவாய் இருந்தன.

                அன்னை இந்தியா அழைக்கிறாள்

                குருதியால் பொட்டிட்டு

                தோட்டாக்களால் ஆரத்தி எடுப்போம்

இந்த முழக்கத்தின் ஊடாக, என்ன பிரச்சினை என்றபோது அப்சல் குருவின் நினைவுநாள் கொண்டாடப்படுவதாக குற்றம் சாட்டினார்கள்.

இவர்களுக்கு அய்ம்பது மீட்டர் தொலைவில் வட்டமாக மாணவர்கள் சிலர் கூடியிருந்தனர். அவர்களுக்கு நடுவில் பெஞ்ச் ஒன்றில் நின்றவாறு பெண் ஒருத்தி உரையாற்றிக் கொண்டிருந்தார். அவர்களுக்கருகில் காவல்துறையின் வாகனம் நின்றிருந்தது. சீருடை அணியாத காவலர்கள் சிலரும் அதன் அருகில் நின்று கொண்டிருந்தனர். ஏபிவிபி மாணவர்களும், அதில் இணைந்திருந்த மாணவர்களும் எதிர் எதிராக நின்ற நிலையில் இருதரப்பினரும் மோதிக்கொள்வதைத் தடுக்கும் முயற்சியில் கன்னையா குமார் ஈடுபட்டார். ஏபிவிபியினர்,

                காஷ்மீர் நம்முடையது

                காஷ்மீர் நம்முடையதாக்க

                சியாம் பிரசாத் முகர்ஜி

                தன்னுடைய உயிரை ஈந்தார்

                காஷ்மீர் முழுமையும் நம்முடையது

                சீனாவின் தரகர்களை வெளியேற்று

என்று முழக்கங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர். காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர், மாணவர் திரளிடம் உரையாற்றி அவர்களைக் கலைந்து செல்லக் கூறும்படி கன்னையா குமாரிடம் கேட்டுக்கொண்டார். ஏனெனில் பெரும்பாலான மாணவர்களின் கோபம் ஏபிவிபியினர் மீது வெளிப்பட்டிருந்தது தெரிந்தது.

எப்பொழுதுமே தங்களுடைய சித்தாந்தத்திற்கு எதிரான எந்த ஒரு நிகழ்ச்சியையும் நடக்கவிடாமல் செய்வதில் ஏபிவிபியினர் முனைப்புடன் செயல்படுவர் என்பதை இவர் அறிவார். இருந்தபோதிலும் தம் கருத்தை வெளிப்படுத்தும் அவர்களது சனநாயக உரிமையை மதித்தார். எனவே அவர்களது

அரசியலைப் பகடி செய்யும் வகையில் மாணவர்களிடம் உரையாற்றி ஒருவாறு அவர்கள் கலைந்து போகும்படி செய்தார்.

அன்று இரவு அனைத்து மாணவர் அமைப்பினரும் கலந்து கொள்ளும் கூட்டம் ஒன்றை இவர் நடத்தினார். அக்கூட்டம் முடியும் தறுவாயில் ஏபிவிபியினர் காவல்நிலையத்தில் அன்றைய நிகழ்ச்சி குறித்து புகார் கொடுக்கச் சென்றுள்ளதாகச் செய்தி வந்தது.

அனைத்துக் கட்சி மாணவர் பிரதிநிதிகளும், காவல்நிலையம் சென்று அங்கு என்ன நடக்கிறது என்று அறிந்து கொள்ள விரும்பினர். அதன்படி பத்துபேர் அடங்கிய மாணவர் குழு காவல் நிலையம் சென்றபோது, அங்கு ஏபிவிபி குழுவினரைக் கண்டனர். அவர்கள் அங்கு ஏன் வந்துள்ளனர் என வினவியபோது அடிதடி தொடர்பாகப் புகாரளிக்க வந்துள்ளதாகக் கூறினர்.

அப்படி எதுவுமே நடக்கவில்லை என்றதுடன், அப்படி நிகழ்ந்திருந்தால் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் புகார் அளித்திருக்கலாம். காவல்துறையில் புகார் அளிக்கும் வகையில் எதுவும் நடக்கவில்லையே என்றார் கன்னையா குமார். அடிபட்டதற்கான மருத்துவச் சான்றிதழ் எதுவும் அவர்களிடம் இல்லை. அவர்கள் கொடுத்த புகார் மனுவை, காவல் நிலையத்தில் வாங்கிப் பார்த்தபோது இவருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. அம்மனுவில் பல்கலைக்கழக வளாகத்தில் செயல்பட்டு வந்த ஒவ்வொரு அமைப்பின் முக்கிய செயல்பாட்டாளர் களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. அவர்களில் பெரும்பாலோர் தலித்துகள், பெண்கள், முஸ்லீம்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக இருந்தனர்.

சதித்திட்டம்

மறுநாள் காலையில் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் இருந்து தொலைபேசி அழைப்பு இவருக்கு வந்தது. அப்சல் குருவின் பிறந்தநாள் ஜே.என்.யூ.வில் கொண்டாடப்பட்டு தேசவிரோத முழக்கங்கள் எழுப்பப் பட்டன என்ற செய்தி உண்மையானதா என்று கேட்டு அது தொடர்பான இவரது கருத்துக்களைக் கேட்டனர்.

இக்கேள்வி அதிர்ச்சியளித்த நிலையில், இது தொடர்பாக நேர்காணல் நிகழ்த்த விரும்புவதாகவும் கூறினர். இதற்கு இவர் உடன்பட்ட நிலையில் நேர்காணல் நிகழ்ந்தது.

அப்சல் குருவின் நினைவுநாள் கொண்டாடப்பட்டதா? என்ற கேள்வி எழுப்பப்பட இவர் அதை மறுதலித்தார். அடுத்து தேசவிரோத முழக்கங்கள் எழுப்பப்பட்டனவா என்ற வினாவும் கேட்கப்பட்டது. இதையும் மறுத்த இவர், மாணவர்களின் உரிமைக்காகப் போராடுவதை விட்டுவிட்டு அரசின் கையாளாக ஏபிவிபியினர் செயல் படுவதாகக் கூறினார். இதைத் தொடர்ந்து வேறுபல தொலைக்காட்சிகளும் தொலைபேசி வாயிலாக இவரிடம் நேர்காணலை நடத்தின.

இதன் அடுத்தகட்டமாக தொலைக்காட்சி நிலையத்திற்கு அழைத்து இது குறித்து விவாதித்தன. ‘நியூஸ் 24’ என்ற தொலைக்காட்சி இவரையும் ஏபிவிபியின் பிரதிநிதி ஒருவரையும் தொலைக்காட்சி அரங்கிற்கு ஒன்றாக அழைத்தது. அழைப்பை ஏற்று இவர் சென்றபோது அங்கே இந்து மகாசபைத் தலைவர் ஒருவரும், காங்கிரஸ் தலைவர் ஒருவரும் விவாதத்தில் கலந்துகொள்ள வந்திருந்தனர். பிப்ரவரி 9-ஆம் நாளன்று இந்தியாவைத் தாக்கும் முழக்கங்களும், காஷ்மீரிகளின் இந்திய எதிர்ப்பு முழக்கங்களும் அடங்கிய வீடியோ அதில் ஒலிபரப்பானது. இந்நிகழ்வுகள் ஜே.என்.யூ.வில் நிகழ்ந்ததாகக் காட்டப்பட்டன.

ஜே.என்.யூ. மீதான ஏபிவிபியின் திட்டமிட்ட தாக்குதலே இவ்வீடியோ என்பதை இவர் புரிந்து கொண்டார். இது ஒரு போலி வீடியோ.

ஏபிவிபியானது கல்வி பயில்வதில் இருந்து ஏழை மக்களை விலக்கி வைக்கவே விரும்பியது. மாதம் 3000 மட்டுமே ஈட்டுவோரின் மகன்களும் மகள்களும் முனைவர் பட்ட ஆய்வாளராகி சிக்கலான கேள்விகளைக் கேட்பதை அவர்கள் விரும்பவில்லை. ரோகித் வெமுலாவின் மரணத்திற்கு நீதி கேட்கும் இயக்கத்தைத் திசை திருப்பவே இவ்வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது என்பது இவரது கருத்தாகும்.

இந்நிகழ்ச்சியை முடித்துவிட்டு தொலைக்காட்சி நிலையத்தை விட்டு வெளியேறும் முன்னர் ‘ஜீ நியூஸ்’ தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பத்து நிமிடம் கலந்து கொள்ளும்படி அழைப்பு வந்தது. அதை ஏற்று இவர் சென்றபோது நிகழ்ச்சி தொடங்கிவிட்டது. நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர், ஜே.என்.யூ. நிகழ்ச்சியை நேரில் பார்த்தவர் போலவும் நீதிபதியைப் போலவும் உரையாற்றிக் கொண்டிருந்தார். கன்னையா குமாரின் முதற்கேள்வி அவரை நோக்கியதாய் இருந்தது.

‘உங்களுக்கு யார் ஊதியம் வழங்குகிறார்கள். ஜீ நியூஸா? ஆர்.எஸ்.எஸ்.சா?’ என்பதுதான் அக்கேள்வியாகும்.

பிப்ரவரி 9-ஆம் நாளன்று இரவில் ‘ஜீ நியூஸ்’ தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளர், கங்காதபாவில் நின்றுகொண்டிருந்ததை இவர் பார்த்துள்ளார். அப்போது எடுத்த வீடியோவே மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது இவரது கருத்தாகும்.

முகநூலிலும், காணொளிக் காட்சியிலும் இவரது தலை உருளத் தொடங்கியது. முன்பின் அறியாதாரிடம் இருந்து வசவுச் செய்திகள் வரத் தொடங்கின.

11 பிப்ரவரி அன்று ஜே.என்.யூ. மாணவர் அமைப்பு கூடி பின்வரும் இரண்டு முடிவுகளை எடுத்து அவற்றைச் செயல்படுத்தியது. அதன்படி வீடியோ காட்சிகளில் இடம்பெறும் முழக்கங்கள் உண்மை யெனின் அவற்றைக் கண்டிப்பதாக துண்டறிக்கைகளை வெளியிட்டது.

முற்போக்கான பல்கலைக்கழகத்தின் பெருமையைக் குலைக்கும் வகையில், பல்கலைக்கழக வளாகத்தின் உள்ளேயும், வெளியேயும் அருவருப்பான செயல்களை மேற்கொண்ட ஏபிவிபிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டம் ஊடக வியலாளர்களை அதிக அளவில் ஈர்த்தது.

ஆர்ப்பாட்டம் நடத்தியோர் துணைவேந்தரைச் சந்தித்து நேர்மையானதும் முழுமையானதுமான விசாரணையை இது தொடர்பாக நடத்தும்படி வேண்டுகோள் வைத்தனர். இது தொடர்பாக உயர் மட்டக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அக்குழுவின் உறுப்பினர்கள் பெயரைத் தெரிவிக்கும்படி அவரிடம் கேட்டபோது, தனக்குத் தெரியாது என்றும் பதிவாளருக்குத் தெரிந்திருக்கும் என்றும் விடையளித்தார்.

ஊடகங்களில் இச்செய்தி பரவலாகிவிட்டதால் இதை விரைவில் மூடிமறைக்க அவரே குழுவொன்றை அமைத்துள்ளார் என்பதுதான் உண்மையாகும்.

பல்கலைக்கழகத்தின் அனைத்துத் துறை யினரையும், சமூக நிலையில் பின் தங்கியோரையும், உள்ளடக்கியதாக இக்குழு அமையவேண்டும் என்பது மாணவர் அமைப்பின் வேண்டுகோளாக இருந்தது. ஏனெனில் ரோகித் வெமுலா மரணம் தொடர்பான ஆய்வுக்குழுவில் நேர்மையான முறையில் உறுப்பினர்கள் இடம்பெறவில்லை. அது போன்ற செயல் இங்கும் நடந்துவிடக்கூடாது என்று மாணவர் அமைப்பு விரும்பியது.

பல்கலைக்கழகப் பதிவாளரைச் சந்தித்து விசாரணைக் குழுவில் இடம்பெறும் மூன்று  உறுப்பினர்களின் பெயர்களைக் கேட்டறிந்தனர். அக்குழுவில் இடம் பெற்ற மூவரும் பல்கலைக்கழக வளாகத்தில் சமூகநீதியை பலவீனப்படுத்துபவர்கள் என்ற குற்றச்சாட்டிற்கு ஆளானவர்கள் என்பது தெரியவந்தது.

விசாரணைக் குழுவானது அய்ந்து உறுப்பினர் களைக் கொண்ட குழுவாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியதுடன் அக்குழு பின்வரும் நிகழ்வுகளை ஆராயவேண்டும் என்றனர்.

  • கலை நிகழ்ச்சி ஏன் நிறுத்தப்பட்டது?
  • யார் அதை நிறுத்தினார்கள்?
  • ஊடகங்களுக்கு அழைப்பு விடுத்தது யார்?
  • வீடியோக் காட்சிகளின் நம்பகத்தன்மை எப்படிப்பட்டது?
  • மாணவர்களுக்கு முதலில் அனுமதி வழங்கிவிட்டு பின்னர் ஏபிவிபியினரின் வற்புறுத்தலினால் அனுமதியை மறுத்ததன் பின்புலம் என்ன?

பதிவாளரைச் சந்தித்த பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களிடம் மாணவர் அமைப்பின் நிலைப்பாட்டை விளக்கினர். பின்னர் அம்மாணவர்களிடம் கன்னையாகுமார் உரையாற்றினார்.

கன்னையா குமாரின் உரை

எழுத்து வடிவிலான உரைகள் ஆர்.எஸ்.எஸ்.  அலுவலகத்தில் இருந்து செய்தி ஊடகங்களுக்குச் செல்கின்றன. அவசர நிலைக் காலத்தில் காங்கிரஸ் அலுவலகத்திலிருந்து எழுதப்பட்ட செய்திகள் ஊடகங்களுக்குச் சென்றதை ஒத்ததாக இது உள்ளது.

வரி செலுத்துவோரின் பணத்தில் இருந்து பெறும் உதவித்தொகையால் ஜே.என்.யூ. நடைபெறுவதாக ஊடகவியலாளர்கள் சிலர் குறிப்பிட்டனர். உண்மைதான். அரசு வழங்கும் உதவித்தொகையால்தான் ஜே.என்.யூ. நடைபெறுகிறது. பல்கலைக்கழகங்கள் எதற்காக இயங்குகின்றன என்ற வினாவை எழுப்ப நான் விரும்புகிறேன். சமூகத்தை விமர்சன நோக்கில் ஆராயவே பல்கலைக்கழகங்கள் உள்ளன. இக்கடமையில் இருந்து பல்கலைக்கழகங்கள் தவறும் போது நாடு என்பதே இருக்காது.

துப்பாக்கியால் ஒருவனைச் சுடுவது மட்டும் வன்முறையல்ல. அரசியல் அமைப்புச் சட்டம் தலித்துகளுக்கு வழங்கியுள்ள உரிமைகளை ஜே.என்.யூ. மறுப்பதும்கூட வன்முறைதான். இது நிறுவனத்தின் வன்முறை.

ஜே.என்.யூ. நிர்வாகத்திடம் ஒன்றைக் கேட்க விரும்புகிறோம். பிப்ரவரி 9-ஆம் நாள் நிகழ்ச்சிக்குப் பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதி அளித்தது. அதன் அடிப்படையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. துண்டுவெளியீடுகள் விநியோகிக்கப்பட்டன. இப்படி அனுமதி வழங்கிய பல்கலைக்கழகம் யாருடைய வழிகாட்டுதலில் அனுமதியைத் திரும்பப் பெற்றது. இக்கேள்வியைப் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கேட்க விரும்புகிறோம்.

ஜே.என்.யூ.வில் பயிலும் உங்கள் அனைவரிடமும் ஒன்றைக் கூற விரும்புகிறேன். மார்ச் மாதம் மாணவர் பேரவைத் தேர்தல் வரும்போது வாக்களிக்க வேண்டி ஏபிவிபியினர் உங்களிடம் வருவார்கள். அவர்களை நோக்கி ‘நாங்கள் ஜிகாத்திகள், பயங்கரவாதிகள், தேசவிரோதிகள், எங்களுடைய வாக்குகளைப் பெறும் நீங்களும் தேசவிரோதிகளாகிவிடமாட்டீர்களா’ என்று கேளுங்கள்.

இப்படிக் கேட்டவுடன் ‘நீங்களில்லை; ஒரு சிலர்தான் தேசவிரோதிகள்’ என்பார்கள்.

அப்படியானால் ஊடகங்களிடம் இதை ஏன் கூறவில்லை என்று கேளுங்கள். அவர்களுடைய துணைவேந்தரும், பதிவாளரும் இதை ஏன் கூறவில்லை என்று கேளுங்கள்.

தமது உணர்ச்சிப்பூர்வமான உரையை ‘ஜெய்பீம் லால் சலாம்’ என்ற முழக்கத்துடன் கன்னையா குமார் நிறைவு செய்தார்.

அடக்குமுறை

மாணவர்களிடம் உரையாற்றிவிட்டு, மாணவர் அமைப்பின் கூட்டத்தை இவர் கூட்டினார். பல்கலைக் கழக வளாகத்தினுள் அமைதியை நிலைநிறுத்துவது குறித்தும், மூவர் குழுவின் அறிக்கை வெளிவரும்வரை பொறுமையாய் இருப்பதென்றும், அதன் பின்னர் அடுத்த நடவடிக்கைகளை மேற்கொள்வதென்றும் கருத்துரு முன்வைக்கப்பட்டது.

கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போது காவல் துறையினர் பல்கலைக்கழக வளாகத்தினுள் நுழைந்துள்ள தாகவும் செய்தி வந்தது. பா.ஜ.கவின் பாராளுமன்ற உறுப்பினர் மகேஷ்கிரி அளித்த புகார் மனுவின் அடிப்படையில் காவல்துறையினர் வந்துள்ளதாக ஏபிவிபியினர் தெரிவித்தனர்.

அவரது புகார் மனுவின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அதில் யாருடைய பெயரும் குறிப்பிடப்படவில்லை. வதந்திகளும் பயஉணர்வும் பல்கலைக்கழக வளாகத்தில் நிலவின. அதைப் போக்கும் வகையில், தபாக்களில் அவர்களுடன் கலந்து உரையாடிவிட்டு காலை 4.15 மணிக்கு உறங்கப்போனார்.

பிப்ரவரி 12 காலை 11.30 மணி அளவில் கண்விழித்து வெளியே வந்தபோது காவல் நிலைய அதிகாரி ஒருவர் நின்று கொண்டிருப்பதைக் கண்டார். அவரிடம் உரையாடியபோது பிப்ரவரி 9-ஆம் நாள் நிகழ்வு தொடர்பாக வந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

மோசமான நிகழ்வுகள் எதுவும் அன்று நிகழ வில்லை என்று இவர் குறிப்பிட்டார். மேலிருந்து வரும் நெருக்கடியினால் காவல்துறை இதில் தலையிட வேண்டியுள்ளது என்று கூறிவிட்டு புலனாய்வுக்கு உதவும் வகையில் சில கேள்விகளைக் கேட்பதற்காகத் தன்னுடன் வரும்படி காவல்துறை அதிகாரி கேட்டுக் கொண்டார்.

அதை ஏற்றுக்கொண்டு காவல்துறை வாகனத்தில் இவர் ஏறினார். போகும்வழியில் இவரது செல்போனை யும், பணப்பையையும் காவல்துறையினர் பறித்துக் கொண்டனர்.

லோதி சாலை காவல்நிலையத்திற்கு முகத்தை மூடியநிலையில் அழைத்துச் சென்றனர். சிறிய அறை ஒன்றில் இவரை அமரச் செய்து கேள்விகளைக் கேட்கத் தொடங்கினர். காவல்நிலையத்திற்கு இவரை அழைத்து வந்த அதிகாரி அமைதியாகக் கேள்வி கேட்டார். ஆனால் மற்றொருவர் மிகவும் முரட்டுத்தனமாக, ‘இது உன்னுடைய நாடு. ஆனால் இந்நாட்டிற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியிருக்கிறாய்’ என்றார்.

இது வினோதமாக இருந்தது. எதன் அடிப்படையில் தாம் கைது செய்யப்பட்டுள்ளோம் என்பதை அறியாத நிலையில் ‘கைது ஆணை உள்ளதா?’ என்று கேட்டார்.

‘சிறையில் அது கிடைக்கும்’, ‘அங்கு எல்லாமே கிடைக்கும்’ என்ற பதில் கிடைத்தது.

யாரோ ஒருவரிடம் தொலைபேசியில் பேசிய அதிகாரி, இவரைக் கைது செய்ய வேண்டுமா? என்று கேட்டார். பின்னர் இவரது தந்தையின் தொலைபேசி எண்ணைக் கேட்டு வாங்கி, தேசத் துரோகச் செயலுக்காக இவரைக் கைது செய்துள்ளதாகத் தொலைபேசி வழியாகத் தெரிவித்தார். பல்வேறு கோணங்களில் இவரைப் புகைப்படமெடுத்தனர். பின்னர் மருத்துவ சோதனை மேற்கொள்ள சப்தர் ஜங் மருத்துவமனைக்கு முகத்தை மூடிய நிலையில் அழைத்துச் சென்றனர். ஆனால் மருத்துவரை இவர் அருகில் அனுமதிக்கவில்லை. காவல்துறையினர், சில படிவங்களைப் பூர்த்தி செய்தனர். பின்னர் நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றனர்.

கன்னையா என்ற இவர் நாட்டிற்கு எதிராக முழக்கமிட்டதாகவும் அப்சல் குருவின் நினைவுநாளைக் கொண்டாடியதாகவும் நீதிபதியிடம் காவல்துறையினர் தெரிவித்தனர்.

காவல்துறையின் காவலில் இவரை அய்ந்து நாட்கள் வைக்க நீதிபதியிடம் அனுமதி வேண்டினர். நீதிபதி இவரை நோக்கியபோது, காவல்துறையினர் ‘பொய் கூறுவதாகவும், நாட்டிற்கு எதிரான முழக்கங்கள் எவற்றையும் தாம் எழுப்பவில்லை’ என்றும், ‘அப்சல்குரு நினைவுநாள் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யவில்லை’ என்றும் கூறினார்.

குற்றச்சாட்டை உறுதிப்படுத்த வீடியோ ஆதாரம் உள்ளதாக விசாரணை அதிகாரி கூறினார். காவல்துறையினர் கூற்றை நம்பாது, அவர்கள் முன்வைக்கும் சான்றுகளைச் சரிபார்க்கும்படி இவர் கூறினார். தனக்கு வழக்கறிஞர் இல்லையென்றும், தகவலின்றியும் கைது ஆணையைக் காட்டாமலும் தன்னைக் கைது செய்துள்ளதாகவும் தெரிவித்தார். கைது செய்யப்படாமலேயே அவர்களுடன் காவல்நிலையம் சென்றதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் ஜே.என்.யூ. மாணவரான, தாம் பிரச்சினைகளுக்காகப் போராடியதாகவும், அரசுக்கு எதிராகப் பேசியதாகவும் ஆனால் ஒருபோதும் நாட்டிற்கு எதிராகப் பேசியதில்லை என்றும் கூறினார்.

வீடியோவைப் போட்டுக் காட்டும்படி நீதிபதி கூறினார். அதில் எந்த இடத்திலும் இவர் காணப்படவில்லை. முழக்கங்கள் எழுப்பப்படும் ஓசை கேட்டது. ஆனால் படத்தில் காண்பவர்களால் அது எழுப்பப்படவில்லை.

‘இந்தப் பையன் முழக்கங்கள் எழுப்பவில்லை. வீடியோவிலும், இவனைக் காணவில்லை’ என்று நீதிபதி கூற, முழக்கம் எழுப்புவோர் இவனது நண்பர்கள் என்று விசாரணை அதிகாரி குறிப்பிட்டார். இதை இவர் மறுத்தபோது, ‘இவன் காஷ்மீருக்குச் சென்று வந்தவன்’ என்று விசாரணை அதிகாரி குறிப்பிட்டார். ‘அதனால் என்ன? நான் கூட காஷ்மீருக்குச் சென்றுள்ளேன்’ என்று நீதிபதி கூறினார்.

சாட்சிகளின் கூற்றைப் பதிவு செய்தபோது அது இவருக்கு எதிராக இருந்ததாக விசாரணை அதிகாரி குறிப்பிட்டார். நீதிமன்ற அறையில் வழக்கறிஞர்கள் சிலர் இருந்தனர். வீடியோ காட்சி காட்டப்பட்ட பின்னர் அவர்களுள் ஒருவர் எழுந்துவந்து, ‘கவலைப்படாதே நான் உன்னுடன் இருக்கிறேன். நான் உன்னுடைய வழக்கறிஞர் என்று நீதிபதியிடம் கூறு’ என்றார். அதன்படி இவரும் செயல்பட்டார்.

குற்றம் சாட்டப்பட்டவர் தன்முன் நிறுத்தப் பட்டதாகவும், காவல்துறையினர் காட்டிய வீடியோவில் அவருக்கு எதிரான சான்று எவையும் இல்லை என்றும் நீதிபதி பதிவு செய்தார். இருப்பினும் தங்களிடம் சாட்சியம் இருப்பதாகக் காவல்துறையினர் கூறுவதால் அய்ந்து நாட்கள் காவல்துறையின் காவலில் வைக்க அனுமதியளித்து உத்தரவிட்டார்.

அய்ந்துநாள் கழித்து மற்றொரு நீதிமன்றத்திற்கு இவர் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு ஜே.என்.யூ. மாணவர்களும் பேராசிரியர்களும் திரண்டிருந்தனர். காவல்துறையின் காவலில் இருந்து திகார் சிறைக்கு மாற்றி நீதிமன்றம் ஆணையிட்டது.

திகார் சிறையில் அன்னை தெரசா வார்டில் இவர் அடைக்கப்பட்டார். சிறைக் காவலர்கள், அதிகாரிகள், சிறை உணவு, தம்மைப் பார்க்க வந்தவர்கள், சக சிறைவாசிகள் என சிறைவாழ்க்கையின் அனுபவங்களை சுவைபடப் பதிவு செய்துள்ளார் கன்னையா. நீதிமன்றத்திற்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டபோது நீதிமன்ற  வளாகத்திற்குள்ளேயே வழக்கறிஞர் போர்வையில் வந்தவர்களின் தாக்குதலுக்கு ஆளானார். தாக்கியவர்கள் யார் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

மார்ச் மூன்றாம் நாள் திகார் சிறையில் இருந்து பிணையில் வெளிவந்தார். இத்துடன் தன் அனுபவங்களின் பதிவை கன்னையா குமார் தற்காலிகமாக முடித்துக் கொண்டுள்ளார். நூலின் இறுதியில் அவர் முன்வைக்கும் சிந்தனைகள் ஓர் இயக்கவாதியின் அனுபவமுதிர்ச்சியாக வெளிப்படுகின்றன.

தொடரும்

Pin It