kuthoosi gurusamy 263தியாகராயநகர் பாண்டி பஜார் என்ற கடைத் தெருவில் இவ்வாரத்தில் ஒரு புதிய போலீஸ் ஸ்டேஷனைப் டெப்டி கமிஷனர் சுகுமாரன் திறந்து வைத்தார். இதில் அதிசயமென்ன என்று நீங்கள் கேட்கலாம். கவனித்துப் படியுங்கள்! அதிசயமிருக்கிறது.

தியாகராயநகர் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஏரியாயிருந்தது. சென்னை நகர சபையார் அதை வீடு கட்டும் மனைகளாக ஆக்கி விற்றார்கள். அதைச் சுற்றிலுமிருந்த பிற மனைகளும் விற்கப்பட்டன.

இந்தப் பகுதிக்கு சர். பிட்டி. தியாகராய செட்டியார் (நீதிக் கட்சித் தலைவர்) பெயரை வைத்தனர். மற்றொரு தலைவர் பெயரால் பனகல் பார்க் என்று ஒரு பார்க்கும் ஏற்பட்டது. தெருக்களிலும் 10-க்கு 90 க்குமேல் நீதிக் கட்சித் தலைவர்களின் பெயர்களையே கொண்டிருக்கின்றனர்!

இங்கே ஒரு பெரிய முற்றுப்புள்ளி (பெண் சினிமா ஸ்டார்கள் நெற்றிப் பொட்டு அளவில்) வையுங்கள்! இவ்வளவு தான் நமக்குப் பெருமை! பிறகு, இங்கே அக்கிரகார வாசிகள் வீடுகளை ஏராளமாகக் கட்டிக் கொண்டனர். நம்மவர்களில் ஒரு சிலர் முதலில் சொந்தத்தில் வீடு கட்டிப் பிறகு அவர்களுக்கே விற்றனர்.

இதன் விளைவு என்ன தெரியுமா? தியாகராய நகர் என்ற பெயர் இந்த வேதமோதிகளின் வாயில் நுழையவில்லை! இந்தப் புது ஊருக்கு மேற்கே மாம்பலம் என்ற குக்கிராமம் இருக்கிறது. அதன் பெயரால் தான் பூணூல் திருமேனிகள் இன்றும் அழைக்கின்றனர்.

தப்பித்தவறிக் கூட ‘தியாகராய நகர்’ என்ற பெயர் இந்தப் புண்ய சீலர்களின் வாயில் வராது! நம் பன்னாடைகள் கூட மாம்பலம் என்றே சொல்லித் தொலைக்கின்றன!

இவ்வாறு, கறையான் புற்றெடுக்க நல்ல பாம்பு குடியேறிற்து!

உடனே, சிவா - விஷ்ணு கோவில் என்ற பெயரால் ஒரு கோவில் எழுந்தது! அது தானே முக்கியமான ஆயுதம்!

பிர்ம்மாவின் முகத்திலிருந்து பிறந்த உத்தம ஜாதியான ஒழுக்க சீலர்கள் இருக்குமிடத்தில் கோவில் எதற்காக என்று கேட்கலாம்!

பூதேவர்கள் நிறைந்த இடத்திற்குக் கோவில் தேவையில்லைதான்! என்னைப் போன்ற ‘பாவிகள்’ உள்ள இடத்தில் தானே கோவில் தேவை? “செந்தண்மை பூண்டொழுகும் அறவோராகிய அந்தணர்” குழாங்கள் அரும்பிக்கிடக்கும் இமிட்டேஷன் தேவலோகத்துக்குக் கூடவா கோவில் தேவை?

பணப்பிச்சை யெடுத்துக் கோவில் கட்டிவிட்டனர். அதுவும் அசாதாரணமான கோவில்! அதாவது சிவா - விஷ்ணு கோவில்! அரியும் சிவனும் ஒன்று என்று கண்டவர்களல்லவா? அதனால், என்க!

சரி, இந்த இரண்டு பெரிய புள்ளிகள் - ட்ரூமன் (சிவன்), ஸ்டாலின் (விஷ்ணு) போன்ற நிபுணர்கள் - நிர்வாகத்தில் என்ன குறை ஏற்பட்டு விட்டதோ, தெரியவில்லை!

இப்போது புதிய போலீஸ் ஸ்டேஷன் எதற்காக? அங்கிருப்பவர்கள் கிரிமினல் ட்ரைப்ஸை (குற்றவாளி பரம்பரையைச்) சேர்ந்தவர்களல்லவே! வெளியேயிருந்து கூட அங்கு யாரும் நுழையமுடியாதே! வலதுகையில் அக்னியை (அல்லது அதிகாரப் பேனாவை)க் கொண்ட பூசுரரிடம் எந்தத் திருடன் நெருங்க முடியும்?

புது போலீஸ் ஸ்டேஷன் ஏற்பட வேண்டிய அவசியமேயில்லை. குடிமக்களோ நல்லவர்கள்! “மேல் ஜாதி”க் காரர்கள்! பசுவுக்குச் சமான மானவர்கள்! அவர்களையும் மீறி யாராவது அயோக்கியர் புகுந்தாலும் சிவனும் விஷ்ணுவும் எதற்காக இருக்கிறார்கள்? ஒரு சப் இன்ஸ்பெக்டர் செய்கின்ற வேலையை சிவன் - விஷ்ணு இருவருமா செய்யமாட்டார்கள்? அவர்கள் மீது திறமையில்லாத் தீர்மானம் நிறைவேற்றி, தியாகராய நகர் வாசிகள் (ஒழுக்கத்தின்) மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறை வேற்றி - அவமானப்படுத்தும் அறிகுறியாக புதிய போலீஸ் ஸ்டேஷன் திறக்கப்பட்டதைத் தெய்வலோகம் சார்பாக நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்!

- குத்தூசி குருசாமி (13-12-50)

நன்றி: வாலாசா வல்லவன்