modi 350 copy copy copy copyபாசக தலைமையிலான மோடி அரசின் 4 ஆண்டுகால ஆட்சி சந்தி சிரித்து வருகிறது. இவற்றையெல்லாம் திசை திருப்பிவிட்டு மீண்டும் எப்படியாவது ஆட்சிக்கு வந்துவிட வேண்டுமென எத்தனிக்கிறது காவிக்கும்பல். அதற்கான வேலையில் முழுவீச்சுடன் இறங்கியுள்ளது. அரசின் மக்கள் விரோதச் செயல்களை அம்பலப்படுத்துபவர்களையும், மக்கள் பிரச்சினைகளுக்காகப் போராடுபவர்களையும் பாசிசச் சட்டங்கள் மூலம் அடக்கி விடலாம் என முயற்சிக்கிறது.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், சனநாயக உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்துவரும் கவிஞர் வரவர ராவ், வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், பேராசிரியர் வெர்ணன் கன்சால்வேஸ், வழக்கறிஞர் அருண் பெரிரா, பத்திரிக்கையாளர் கௌதம் ஆகியோரும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் படுகொலையை ஐ.நா அவையில் அம்பலப்படுத்திய மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியும் கொடூரமான ஊபா (UAPA) சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்கள். மணற் கொள்ளை, கனிமக் கொள்ளை போன்றவற்றை அம்பலப்படுத்திய சுற்றுச்சூழல் ஆர்வலர் தோழர் முகிலன் கைது, கேரள வெள்ள நிவாரண நிதி திரட்டிய மாணவி வளர்மதி கைது,  தமிழக வாழ்வுரிமை இயக்கத் தலைவர் தோழர் வேல்முருகன் கைது, விவசாயிகளுக்கு ஆதரவாகப் பேசிய நடிகர் மன்சூர் அலிகான் கைது, பெரியார் இந்திய தேசிய கொடியை எரித்த படத்தை  முகநூலில் பதிவிட்டதற்காக தற்சார்பு விவசாயி சங்க தலைவர் தோழர் பொன்னையன் கைது என இப்படிப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இந்த மக்கள் விரோத பாசிச மோடி அரசுக்கு எதிராக யார் பேசினாலும் அவர்கள் தீவிரவாதிகள் என முத்திரை குத்தப்படுகிறார்கள். குறிப்பாக தமிழகத்தில் தீவிரவாதிகள் அதிகரித்துவிட்டதாக கதறுகிறார்கள் பாசகவின் சூத்திர அடிமைகளான பொன்னாரும், தமிழிசையும். ஒரு கருத்தை பேசினாலே அதனை தீவிரவாதம் என கூறும் இவர்கள் யார்?

இந்தியாவில் ஆரியப் பார்ப்பன மேலாதிக்கத்தை தொடர்ந்து நிலை நாட்ட, பொதுமையர்கள், அனைத்து இடதுசாரி முற்போக்கு சனநாயக சக்திகளைக்  கொலை செய்வது, மதக்கலவரங்களைத் தூண்டிவிட்டு அப்பாவி மக்களைப் படுகொலை செய்வது, தனக்கு எதிரான கருத்துள்ளவர்களை - அது காந்தியே ஆனாலும் - சுட்டுக் கொல்வது இதுதான் ஆர்.எஸ்.எஸ் பரிவாரங்களின் அன்றாட வேலைமுறை. இந்துத்துவா போர்வையில் மதவாதக் கொடுநெறி (பாசிசக்) கொள்கையையுடன் செயல்படும் இந்த அமைப்புகளின் அரசியல் கட்சிதான் பாரதீய ஜனதாக் கட்சி. இவர்களுக்கு தீனி போட்டு வளர்ப்பது இந்தியத் தரகு முதலாளிகளும், உலகெங்கிலும் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்களும். இந்து சாதியப் படிநிலையில் உள்ள  சாதி ஆதிக்கவாதிகளின் துணையோடு, அனைத்து இடதுசாரி முற்போக்கு சனநாயக சக்திகளையும், தாழ்த்தப்பட்ட மக்களையும், மதச் சிறுபான்மை மக்களையும், பல்வேறு இந்திய தேசிய இனங்களையும், மலைவாழ் மக்களையும்  ஒடுக்குவது, அவர்களுடைய வளங்களைக் கொள்ளையடிப்பது போன்றவைதான் இவர்களுடைய இந்துத்துவா தேசியவாதக் கொள்கை.

வடக்கே அண்ணல் அம்பேத்கரும், தெற்கே தந்தை பெரியார் போன்றவர்களும் இவர்களை சமூக அறிவியல் ரீதியாக அம்பலப்படுத்தி, கருத்தியல் ரீதியாக எதிர்த்துப் போராடி வந்தவர்கள். அம்பேத்கரியத்தையும், பெரியாரியத்தையும் எதிர்கொள்ள முடியாமல் இந்த இந்துத்துவா வாதிகள் அவர்களுக்கு எதிரான நச்சுக் கருத்துகளை இன்னும் பரப்பி வருகின்றனர்; விலங்காண்டித்தனமான செயல்களில் இன்னும் ஈடுபட்டு வருகின்றனர். அதற்காக முதலாளித்துவ ஊடகங்களை தன் கைப்பாவையாக மாற்றி விட்டனர். மத்தியிலும் சில மாநிலங்களிலும் ஆட்சி அதிகாரத்தில் உள்ளதைப் பயன்படுத்திக் கொண்டு கொடூர தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். 1992 இல், 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வரலாற்றுச் சின்னமான பாபர் மசூதியை இடித்துத் தள்ளி தன் குரங்குப்படையை (பஜ்ரங்தள்) ஏவிவிட்டு நூற்றுக்கணக்கான மக்களைக் கொன்று குவித்தனர்.

2002 இல் கோத்ரா இரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து மோடியின் குஜராத்தில் 2000 க்கும் மேற்பட்ட அப்பாவி மக்களைக் கொன்று குவித்தனர். சட்டத்துறையையும், நீதித் துறையையும் கொண்டு உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து தண்டிக்காமல் மாநிலத்தின் முதல் அமைச்சரே சிறுபான்மை மக்களுக்கு எதிராக ரௌடிகளையும், காவல் துறையையும், பாஜக குண்டர்களையும் பயன்படுத்தி  வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டதை ஒரு பாசிஸ்ட் மட்டுமே செய்ய முடியும்.    

தமிழ் நாட்டிலும் அதுபோன்ற கலவரத்தை நடத்தி அரத்தம் குடிக்கத் திட்டமிட்டு, அண்மையில் தமிழ்நாட்டிலும் ர(த்)த யாத்திரை  யைத் தொடங்கினர்; தமிழகத்தின் அனைத்து இடதுசாரி, முற்போக்கு சனநாயக சக்திகளின் கடும் எதிர்ப்பால் குரங்குப்படை தன் வாலைச் சுருட்டிக்கொண்டு வடக்கே ஓடிவிட்டது.

அண்மையில் (13/08/2018) தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் தலைவர்களில் ஒருவரான உமர் காலித் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. குடியரசுத் தலைவர் மாளிகை, நாடாளுமன்ற அலுவலகம்  அருகே உள்ள கான்ஸ்டிட்யூசன் கிளப்புக்கு வெளியே இது நடந்தது. உயர் பாதுகாப்புப் பகுதியில் நாடாளுமன்ற கட்டடத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் இச்சம்பவம் நடந்துள்ளது. ஆனால் சம்பவம் நடந்து கால் மணி நேரத்திற்குப் பிறகுதான் காவலர்கள் அங்கு வந்துள்ளனர். இசுலாமியரான இவர் ஒரு நாத்திகவாதி; இடதுசாரி சிந்தனையாளர்.

அதேபோல் கன்னட எழுத்தாளரும், பத்திரிகையாளருமான பி. கவுரி லங்கேஷ், கர்நாடக முற்போக்கு இயக்கத்தில் மிக முக்கியமான ஆளுமையாக இருந்தவர்.  பார்ப்பனிய மடங்களும், சாதி ஆதிக்கமும், சனாதனமும் நிறைந்த கர்நாடகத்தில் தன் கவிதைகள், நாடகங்களின் மூலம் சீர்த்திருத்தக் கருத்துக்களை விதைத்தவர் லங்கேஷ். சமூகநீதியை நிலைநாட்ட லங்கேஷ் பத்திரிகை என்ற வார இதழைத் தொடங்கி தீவிரமான அரசியல் கட்டுரைகளை எழுதிவந்தவர். இந்துத்துவ எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, பெண் விடுதலை, மூட நம்பிக்கை ஒழிப்பு உள்ளிட்டவற்றுக்காக முதல் ஆளாக கவுரி லங்கேஷ் களத்தில் நின்று போராடியவர்.

BJP 350நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, எம்.எம்.கல்புர்கி ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டதைக் கண்டித்து குரல் கொடுத்தவர்.  மறைந்த கன்னட எழுத்தாளர் யு.ஆர். அனந்தமூர்த்தி கொலை மிரட்டலுக்கு ஆளானபோது, அவருக்குத் தைரியமூட்ட தினமும் வீட்டுக்குப் போய் வந்தார். மாதொருபாகன் நாவலுக்காக பெருமாள் முருகனை சாதிவெறி அமைப்பினர் மன்னிப்பு கேட்க வைத்தபோது, அவருக்காக கர்நாடகத்தில் கவுரி லங்கேஷ் குரல் கொடுத்தார். ரோஹித் வெமூலா சாம்பலாக்கப்பட்போது, குற்றவாளிகளைத் தண்டியுங்கள் என்று கொதித்தெழுந்தார். இவரைச் சுட்டுக் கொன்ற ஒரு இந்துத்துவா பயங்கரவாதியை காவல்துறை தற்போது தளைப்படுத்தியுள்ளது. அவனிடமிருந்து ஒரு கொலைப் பட்டியலையும் காவல்துறை கைப்பற்றியுள்ளது. பாசக - ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு எதிராக செயல்படும் அனைவரையும் கொலை செய்வதுதான் இவர்கள் திட்டம்.

இதற்காக ஆர்.எஸ்.எஸ் இல் உள்ள  ஆண்கள், பெண்கள் ஆகியோருக்கு ஆயுதப் பயிற்சி உள்ளிட்ட எல்லாப் பயிற்சிகளும் அளித்து அனைத்து சனநாயகவாதிகளுக்கும் எதிராகப் பயங்கரவாதச் செயல்களைத் தூண்டி விடுகிறது. இவர்கள்தான் தமிழ்நாட்டில் தீவிரவாதிகள் ஊடுருவி விட்டனர் என்கிறார்கள். தமிழ்நாட்டின் வளங்களை தில்லி ஏகாதிபத்தியமும், பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களும் தங்கு தடையின்றிக் கொள்ளையடிக்க தமிழ்நாட்டின் இடது சாரிகளும், சனநாயக ஆற்றல்களும் தடையாக உள்ளார்கள் என்பதாலேயே தமிழிசையும், பொன்னாரும் தீவிரவாதப் பூச்சாண்டி காட்டி  வருகின்றனர்.

மத்தியில் தாங்கள் அதிகாரத்தில் உள்ளதைப் பயன்படுத்திக் கொண்டு அனைத்து ஊடகங்களையும் தனக்குச் சாதகமாக மாற்றிக் கொண்டுள்ளது பாசக. சனநாயக உரிமைகளுக்காகப் போராடும் மக்களுக்கு எதிராக கோயபல்சை மிஞ்சுமளவிற்கு பொய்ப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. பொதுமையர்கள், சனநாயகவாதிகளுக்கு எதிரான பொய்ப் பிரச்சாரம்தான் எப்போதும் பாசிஸ்டுகளின் அரசியல் ஆய்தமாக இருக்கிறது. இவர்கள் சட்டத்தையும், நீதியையும் என்றுமே மதிப்பதில்லை. நீதித் துறையையும் தன் முழுக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டனர். அண்மையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் செயல்பாடுகளுக்கு எதிராக நான்கு உச்ச மன்ற நீதிபதிகள் ஒன்று சேர்ந்து வெளியிட்ட அறிக்கையே இதற்குச் சான்று.

எனவே, தமிழக மக்கள் விழிப்போடிருந்து இந்துத்துவா பாசிசத்தை முறியடித்தாக வேண்டும். தில்லியின் எடுபிடி தமிழ்நாட்டு எடப்பாடி அரசு காவி பயங்கரவாதத்திற்குத் ஆதரவாகச் செயல்பட்டு வருகிறது. தமிழக மக்களின் சனநாயகப் போராட்டங்களை காவல்துறையைக் கொண்டு ஒடுக்கி வருகிறது. மக்களை வீடு புகுந்து மிரட்டுவது, சமூக முன்னணியாளர்களைக் கைது செய்வது, சிறைப்படுத்துவது, பொய் வழக்குகள் புனைவது, கொலை செய்ய முயற்சிப்பது போன்ற கொடுநெறி (பாசிச) நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.  ஆனால் பாசிஸ்டுகள் என்றும் வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை. இத்தகைய ஒடுக்குமுறைகள் மூலம் மக்களின் எழுச்சியை தடுத்துவிட முடியாது. அது மீண்டும் மீண்டும் எரிமலையாக வெடித்துக் கொண்டுதான் இருக்கும்.

Pin It