புரட்சியாளர் அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதைக் கண்டித்து, டிசம்பர் 19-ஆம் தேதி ராகுல் காந்தி தலைமையில் ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் பேரணியாகச் சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதன் பின்னர், ராகுல் காந்தி நாடாளுமன்றத்துக்குள் நுழைய முயன்றார். அங்கு, பாஜக எம்.பி.க்கள் சிலரும் வேண்டுமென்றே வந்ததால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் ஒடிசாவைச் சேர்ந்த பாஜக எம்.பி. பிரதாப் சாரங்கி கீழே விழுந்து காயமடைந்தார்.pratap sarangiஇவர் கூட்ட நெரிசலில் தடுமாறி கீழே விழுந்த நிலையில், ராகுல் காந்தி தான் தள்ளிவிட்டார் என்று பிரச்சினையை திசை திருப்பியது பாஜக. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல் நாளில் சிறிய கட்டுடன் காணப்பட்ட பிரதாப் சாரங்கி, மறுநாள் தலை முழுவதும் கட்டு போடப்பட்ட புகைப்படங்கள் வெளியாகின. ஒன்றிய அமைச்சர்களும், பாஜக நிர்வாகிகளும் வரிசையாக மருத்துவமனைக்குச் சென்று பிரதாப் சாரங்கிக்கு ஆறுதல் சொல்லுவது என உச்சபட்ச நாடகங்களை அரங்கேற்றியது பாஜக. இந்த நாடக அரங்கேற்றங்களுக்கு மத்தியில் பிரதாப் சாரங்கி யார் என்ற வரலாறும் அம்பலமானது.

1999-ஆம் ஆண்டு ஒடிசாவின் மனோகர்பூர்-கியோஞ்சர் ரயில் நிலையத்தில் வைத்து ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பாதிரியார் கிரகாம் ஸ்டெயின்ஸ் மற்றும் அவரது குழந்தைகளான பிலிப், தியோதி ஆகிய மூவர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். இந்தக் கொடூரச் செயலை செய்தது பஜ்ரங் தள் இந்துத்துவா கும்பல். அப்போது அதன் தலைவராக இருந்தவர் பிரதாப் சாரங்கி.

இந்த கொலைச் சம்பவத்தில் பஜ்ரங் தளை சேர்ந்த தாரா சிங் மற்றும் 11 பேர் குற்றவாளிகள் என 2003-ஆம் ஆண்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் தாரா சிங்கிற்கு தூக்குத் தண்டனையும், மற்ற 11 பேருக்கு ஆயுள் தண்டனையும் அளிக்கப்பட்டது. அந்த 11 பேரில் பிரதாப் சாரங்கியும் ஒருவர். இவர்கள் 12 பேரும் ஒடிசா மாநில உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். விசாரணை அமைப்புகள் உரிய ஆதாரங்களைத் திரட்டி சமர்ப்பிக்கத் தவறியதால், தாரா சிங்கின் தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட்டது. பிரதாப் சாரங்கி உள்ளிட்ட மற்ற 11 பேரும் விடுவிக்கப்பட்டனர்.

அதன்பிறகு ஒருவாரம் கழித்து, உச்சநீதிமன்ற நீதிபதி வாத்வா தலைமையில் நீதி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஆனால் இந்த விசாரணை குழுவுக்கு தேவையான ஆதாரங்கள் வழங்கப்படவில்லை. ஒடிசா மாநில உளவுத்துறையின் செயல்பாடுகளையும் இந்தக் குழு விமர்சித்தது. உண்மையில் பஜ்ரங் தள் அமைப்புதான் இந்த கொடூரச் செயலை செய்தது என்பதற்கான ஆதாரங்கள் இருந்தன. தேசிய சிறுபான்மையினர் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ விசாரணையில், கொலைக் குற்றவாளிகள் தாக்குதலுக்கு முன் “பஜ்ரங் தள் ஜிந்தாபாத்” என்று முழக்கமிட்டதை உறுதி செய்தது.

கிறித்துவ மிஷினரிகளை பிரதாப் சாரங்கி, கடுமையாக விமர்சித்துப் பேட்டி அளித்திருப்பதாக அம்மாநிலத்தைச் சேர்ந்த பி.பி.சி. செய்தியாளர் சந்தீப் சாகு என்பவரும் கூறியுள்ளார். ஏற்கெனவே இந்த கும்பலுக்கு மிஷனிரிகள் மீது நீண்ட காலமாக இருந்த வன்மத்தின் காரணமாகத்தான் இக்கொலைகள் நிகழ்த்தப்பட்டன என்பதை இச்செய்தி உறுதி செய்கிறது. இதுமட்டுமல்ல, 2002-ஆம் ஆண்டில் ஒடிசா மாநில சட்டமன்றத்தின் மீது இந்துத்துவா கும்பல் கண்மூடித்தனமாக நடத்திய தாக்குதல் வழக்கிலும் பிரதாப் சாரங்கி கைது செய்யப்பட்டார்.

 சிறு வயது முதலே ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் ஆகிய இந்துத்துவ அமைப்புகளில் பணியாற்றிய இவர், இத்தகைய வன்முறைச் செயல்களுக்குப் பின்னர் தேர்தல் அரசியலுக்குள் நுழைந்தார். 2019ஆம் ஆண்டில் ஒன்றிய இணை அமைச்சராகவும் இவருக்கு பொறுப்பு வழங்கியது பாஜக அரசு. இப்போது இவரைத்தான் தள்ளி விட்டு விட்டார் ராகுல் காந்தி என பாஜக கொக்கரிக்கிறது.

- விடுதலை இராசேந்திரன்