திறந்த போட்டியில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள முன்னேறிய ஜாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை மோடி ஆட்சி அவசர அவசரமாய் கொண்டு வந்தது. தேர்தலில் வாக்கு அரசியல் நடவடிக்கையே தவிர, உண்மையாக அந்த 10 சதவீத ‘ஏழைகளுக்கு’ பயன் கிடைக்க வேண்டும் என்பது அல்ல. இது குறித்து இந்து ஆங்கில நாளேட்டில் (ஏப். 10, 2019) ஒரு ஆய்வுக் கட்டுரை வெளி வந்துள்ளது. ஏற்கனவே உயர் கல்வியில் மேற்குறிப்பிட்ட பொருளாதார நலிந்த பிரிவினர் 10 சதவீதத்துக்கு கூடுதலாகவே இடம் பெற்றிருக்கின்றனர் என்பதை புள்ளி விவரங்களுடன் நிறுவியுள்ளது அக்கட்டுரை. கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள்:

மத்திய மனித வளத் துறை அமைச்சகம் 2016ஆம் ஆண்டில் இந்தியாவில் உயர்கல்வி நிறுவனங்களை தர வரிசைப்படுத்தும் ஒரு முறையை 2016ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. அதன்படி தர வரிசையை முறைப்படுத்தும் தேசிய நிறுவனம் ஒன்று உருவாக்கப்பட்டது. (National Institute Ranking Frame Work-NIRF) இந்த நிறுவனம் 2018இல் 445 உயர்கல்வி நிறுவனங்களை தர வரிசைப்படி பட்டியலிட்டுள்ளது. இந்த தர வரிசை ஆய்வில் பொருளாதார அடிப்படையில் பின் தங்கியவர்கள் சமூக ரீதியான நெருக்கடிக்குள்ளான பட்டியல் பழங்குடிப் பிரிவு, பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாணவர்களின் எண்ணிக்கை பற்றிய தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

2016-17இல் 445 உயர்கல்வி நிறுவனங்களில் 28 சதவீதம் மாணவர்ககள் (4.55 இலட்சம்) பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்கள் என்றும், தனியார் கல்வி நிறுவனங்களில் இப்பிரிவைச் சார்ந்தவர்கள் 30 சதவீதம் பேர் படிக்கிறார்கள் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது. உயர்கல்வி நிறுவனங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது தர வரிசைப்படுத்தப்பட்ட 445 உயர்கல்வி நிறுவனங்களில் 66 சதவீத நிறுவனங்களில் பொருளாதார அடிப்படையில் பின் தங்கியவர்கள் 10 சதவீதத்துக்குக் கூடுதலாகவே இருக்கின்றனர். அரசு உயர்கல்வி நிறுவனங்களில் இந்த நிலை என்றால், 68 சதவீத தனியார் உயர்கல்வி நிறுவனங்களிலும் பொருளாதார அடிப்படையில் பின் தங்கியப் பிரிவினர் 10 சதவீதத்துக்கு அதிகமாகவே உள்ளனர். இது கூட ஆண்டுக்கு ரூ.2 இலட்சத்திலிருந்து ரூ. 5.5 இலட்சம் வரை வருமானம் வரக்கூடியவர்கள் என்ற அடிப்படையில் எடுக்கப்பட்ட கணக்கீடு. இப்போது பா.ஜ.க. ஆட்சி கொண்டு வந்திருக்கும் பொருளாதார வரம்பு ரூ.8 இலட்சமாகும். இந்த அடிப்படையில் இத்தகைய பிரிவினரை கணக்கிட்டால் மாணவர் எண்ணிக்கை மேலும் அதிகமாகி விடும்.

அதே நேரத்தில் பட்டியல் இனப் பிரிவினர் - பழங்குடியினர் - பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் - அவர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய இடங்களைவிட மிகக் குறைந்த அளவிலேயே இடம் பெற்றிருக்கின்றனர். 445 உயர்கல்வி நிறுவனங்களில் (அரசு மற்றும் தனியார் நிறுவனங்களையும் சேர்த்து) சமூகக் கல்வி ரீதியான இடஒதுக்கீட்டுப் பிரிவினர் - அதாவது பட்டியல் இனப் பிரிவு, பழங்குடிப் பிரிவு, இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவு அனைத்தையும் சேர்த்து 38 சதவீதம் பேர் இடம் பெற்றுள்ளனர். நியாயமாக இவர்களுக்கான இடஒதுக்கீடு 49.5 சதவீதமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் 11.5 சதவீதம் குறைவாகவே 38 சதவீத மாணவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தனியார் நடத்தும் உயர்கல்வி நிறுவனங்களில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலின பழங்குடி பிரிவினருக்கு 30 சதவீத இடங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. (அதாவது தரப்பட வேண்டியதைவிட 19.5 சதவீதம் குறைவு) இதே 30 சதவீத அளவுக்கு பொருளாதார அடிப்படையில் பின்தங்கியப் பிரிவினரும் சம அளவில் இடம் பெற்றிருக்கிறார்கள். பட்டியல் - பழங்குடி மற்றும் பிற்படுத் தப்பட்ட பிரிவைச் சார்ந்தவர்கள் மக்கள் தொகை அடிப்படையில் 70 சதவீதம் இருந்தாலும் (தேசிய மாதிரி கணக்கெடுப்பு 2011-2012இன்படி 70 சதவீதம்) உயர் கல்வி நிறுவனங்களில் அவர்களுக்கான பிரதிநிதித்துவம் மிக மிகக் குறைவு. தர வரிசைப்படுத்தப்பட்ட 445 உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள நிலை இது. தர வரிசையில் இடம் பெறாத கல்வி நிறுவனங்களில் பொருளாதாரத்தில் பின் தங்கியோர் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும்.

இதிலிருந்து என்ன தெரிகிறது? தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோருக்கு உரிய ஒதுக்கீடுகள்; உயர்கல்வி நிறுவனங்களில் முழுமையாக நிரப்பப்படவில்லை; மோடி ஆட்சி அறிமுகப்படுத்தியுள்ள 10 சதவீத இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் பல மடங்கு கூடுதலாகவே இடம் பிடித்துள்ளனர்.

இந்த நிலையில் 10 சதவீதம் பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு கொண்டு வந்து சட்டத்திருத்தம் செய்வது என்பதன் நோக்கம் இட ஒதுக்கீட்டின் அடிப்படையைக் குலைத்துவிட வேண்டும் என்பதைத் தவிர வேறு காரணம் இருக்க முடியாது. பார்ப்பன உயர் ஜாதியினரைத் திருப்திப்படுத்தி அவர்கள் ஓட்டுகளைப் பெறுவதும் இதன் நோக்கம்.

Pin It