annaimuthu 3001978இல் மா.பெ.பொ.க. தொடங்கி வைத்த பிற்படுத்தப்பட்டோருக்கான விகிதா சார வகுப்புவாரி உரிமைக் கோரிக்கை, 2015 மே திங்களில்-அனைத்திந்திய எண்ணெய் வாணியர் பேரவையின் மகாராட்டிரக் கிளையினரால் தூக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது.

எண்ணெய் வாணியர் வகுப்பைச் சார்ந்தவர் இன்றைய இந்தியத் தலைமை அமைச் சர் நரேந்திர தாமோதரதாஸ் மோடி. அவர் குசராத் மாநில முதலமைச்சராக இருந்தபோது, அவருடைய ஆதர வைப் பெறவேண்டி, 2012 ஏப்பிரலில் வே.ஆனைமுத்து-கவிஞர் காவிரிநாடன் இருவரும் குசராத் மாநிலத் தலைநகர் அகமதாபாத் துக்குச் சென்றிருந்தனர். மூன்று நாள்கள் முயன்றும் முதலமைச்சர் மோடியிடம் நேர்காணலுக்கு நேரம் கிடைக்கவில்லை.

தில்லிக்குத் திரும்பி வந்து, குவாலியர் நகரில் உள்ள அனைத்திந்திய எண்ணெய் வாணியர் சங்கப் பொதுச்செயலாளர் மேவலால் (M-evalal) அவர்களுடன் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு, பிற்படுத்தப்பட்டோருக்கு விகிதாசார இடஒதுக்கீடு பெறவேண்டியதனை விளக்கும் ஆவணங் களை அவருக்கு அனுப்பிவைத்தோம்.

தொடர்ந்து 2013 ஏப்பிரலிலும், 2015 மார்ச்சிலும்-“எல்லா வகுப்புகளுக்கும் விகிதாசார இடப்பங்கீடு வேண்டும்” என்பது பற்றிய கோரிக்கை ஆவணங்களை அவருக்கு விடுத்து வைத்தோம்.

இப்போது 2015 மே திங்களில், “பாரதிய எண்ணெய் வாணியர் சங்கத்தின் பேரவை” சார்பில், (Bharatiya Tailak Sahu, Rathore Maha Sahba) மகாராட்டிரக் கிளையின் ஒரு கூட்டம், இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடியின் தமையனார் சோமாபாய் மோடி அவர்களின் தலைமையில் நடைபெற்றுள்ளது.

அக்கூட்டத்தில், சோமாபாய் மோடி, தம் தலைமை உரையில், “சமுதாயத்தில் உள்ள ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு, அரசு அதிகபட்ச முன்னுரிமையை அளிக்கவேண்டும். நம்முடைய எண்ணெய் வாணியர் சமூகமும் ஒடுக்கப்பட்ட பிரிவைச் சார்ந்ததாகும். பிற்படுத் தப்பட்ட வகுப்புக்கு 52 விழுக்காடு தனி இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும்” எனக் கோரிக்கை வைத்துள்ளார்.

பாரதிய எண்ணெய் வாணியர் பேரவையின் தேசியத் தலைவரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான ராம் நாராயணசாகு, “கல்வியிலும் அரசு வேலையிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு 52 விழுக்காடு ஒதுக்கீடு தரவேண்டும்” என, அக்கூட்டத்தின் வாயிலாகக் கோரினார்.

பாரதிய எண்ணெய் வாணியர் பேரவையின், மகாராட்டிரக்கிளையின் தலைவர்-வழக்குரைஞர் ஏக்நாத் பாவங்கர், “2015 ஆம் ஆண்டின் இறுதியில், அனைத்திந்திய அளவில், தில்லியில், வாணியர் பேரவை சார்பில், பெரும் பேரணி ஒன்றை நடத்தத் திட்டமிட்டிருப்பதாகவும், அப் பேரணிக்குத் தலைமை அமைச்சர் நரேந்தி மோடி அவர்களைத் தலைமை விருந்தினராக அழைக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் அக்கூட்டத் தில் குறிப்பிட்டார். நிற்க.

18, 19, 20-10-1991 ஆகிய மூன்று நாள்களில், புதுதில்லியில், மவுலங்கர் மன்றத்தில் நாம் நடத்திய மாநாடுகளின் போது தான், “அனைத்து வகுப்பினருக்கும் விகிதாசார இடஒதுக்கீடு வேண்டும்” என்கிற கோரிக்கையை மா.பெ.பொ.க.வும், அனைத்திந்திய ஒடுக்கப்பட்டோர் பேரவையும் இணைந்து முன்வைத்தன.

21-10-1991 முதல் 30-10-1991 முடிய 50 ஆடவரும், 10 மகளிரும் ஆக 60 பேர் அடங்கிய ஒதுக்கீடு பரப்புரைக்குழு - தில்லியிலிருந்து புறப்பட்டு-அலிகர், கான்பூர், லக்னோ, பாட்னா, கல்கத்தா முதலான நகரங்களில் 2 நாள்கள் வீதம் தங்கி, உ.பி. பீகார், மேற்குவங்க மாநிலங் களில் விகிதாசார வகுப்புரிமைப் பரப்புரையை மேற்கொண்டது.

1992 திசம்பரில் சென்னையில் அறிவாலயத்தில் கூடிய அனைத்திந்திய இடஒதுக்கீடு மாநாட்டில், விரிவான இடஒதுக்கீடு ஆவணம் ஒன்றையும், விகிதாசார இடஒதுக்கீடு மசோதாவுக்கான மாதிரிப் படியும் இணைப்பு ஒன்றையும் கொண்ட ஒரு நூலை 3000 படிகள் வெளியிட்டோம்.

1993, 1995இல் 6 பேர் கொண்ட குழுவினர் புதுதில்லியில் ஒரு திங்கள் தங்கியிருந்து. மூன்று குழுக்களாகப் பிரிந்து, எல்லா மாநில விருந்தினர் விடுதிகளுக்கும் சென்று, நாடாளுமன்ற உறுப் பினர்கள் 790 பேர்களுக்கும் நேரிலும் அஞ்சல் வழியாகவும் அந்த விரிவான ஆவணத்தைத் தந்து, விவாதித்து ஆதரவு திரட்டினோம்.

2000 ஆண்டு தொடங்கி, கடந்த 15 ஆண்டு களாக-“மா.பெ.பொ.க. என்றால் அது ஒரு இட ஒதுக்கீட்டுக் கட்சி” என்று குறைவாகக் கூறப்பட்ட இடித்துரைச் சொல்லையும் தாங்கிக் கொண்டு, மா.பெ.பொ.க.வும், பேரவையும் முழுவீச்சில், “விகிதாசார வகுப்புவாரி இடப்பங்கீட்டுக் கோரிக் கை”யை வலியுறுத்திப் பரப்புரை செய்து வரு கிறோம்.

“ஒன்றைச் செய்வோம்; ஒன்றையும் நான்றாகச் செய்வோம்; இடைவிடாமல் செய்வோம்” என் கிற நம் அணுகுமுறை வெற்றியைத் தந்தே தீரும் என, நாம் கூரைமீது ஏறி நின்று கூவலாம்.

“அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்” என்பது ஓர் அறிவார்ந்த முதுமொழி.

நான் உறுதியாக 2015, 2016 முழுவதும்; 2017 மார்ச்சு வரையிலும் தமிழ்நாட்டில் ஒரே இடத்தில் தங்கிப் பணியாற்ற வேண்டும். அது என் தலையாய கடமை.

ஆதலின், மா.பெ.பொ.க. கட்சிப் பொறுப்பாளர்கள் சிலரும்; பேரவை சார்பில் இரண்டொருவரும் ஒரு குழுவாக இணைந்து, உடனடியாக, தில்லி, மும்பை, அகமதாபாத், லக்னோ முதலான இடங்களுக்குச் செல்லுங்கள்.

ஓராண்டுக் காலத்தில், நம் இடப்பங்கீடு குறிக்கோள் வெற்றி பெறுவதற்கான சூழலை நாம் உருவாக்கிட முடியும் எனத் திடநம்பிக்கை கொள்ளுங்கள் என, நம் தோழர்களை அன்புடன் வேண்டுகிறேன்.

 

Pin It