இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியல் அண்மையில் வெளியானது. மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள, National Institutional Ranking Framework என்ற அரசு நிறுவனம் இந்தியா முழுவதும் உள்ள கல்விநிறுவனங்களில் ஆய்வுசெய்து மேற்கண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்த ஆய்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்விநிறுவனங்கள் அகில இந்திய அளவில் பல்வேறு பிரிவுகளின் கீழ் 37 முதன்மை இடங்களைப் பிடித்துள்ளன. திராவிட இயக்கங்களால் நாடு சீரழிந்து விட்டது என்று இந்துத்துவாவாதிகளும், தமிழ்த்தேசியர்களும் காலந்தோறும் நடத்திய பரப்புரையை இந்த ஆய்வு முறியடித்துவிட்டது என்று சமூகவலைத்தளங்களில் செய்திகள் பரவின.

தொழில்தொடர்பாகவோ, சுற்றுலாவாகவோ வடமாநிலங்களுக்கு நேரில் சென்று வந்தவர்களுக்கு தமிழ்நாட்டின் கல்வித்தரம், நிர்வாகச் சிறப்பு, தொழில் வளர்ச்சி, சுகாதார வளர்ச்சி ஆகியவை மிகச் சிறப்பாக இருப்பது நன்றாகப் புரியும். இதையெல்லாம் குழு போட்டு ஆய்வு நடத்தித்தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை.

modi 600ஆய்வுகளின் போக்கு

இந்த ஆய்வுகளில் நமக்கு நம்பிக்கையில்லை. இப்படிப்பட்ட ஆய்வுகளை நடத்தும் அரசு அமைப்புகள் ஏற்கனவே பல உள்ளன. இந்தியக் கல்விநிறுவனங்களை உலகத்தரத்துக்கு உயர்த்த National Board of Accreditation NBA என்ற தரநிர்ணய அமைப்பு இயங்கி வருகிறது.  ஒவ்வொரு கல்வி நிறுவனமும் இந்த என்.பி.ஏ அங்கீகாரம் பெறுவதற்குக் கடும் முயற்சிகள் செய்து வருகின்றன.

நாட்டில் என்ன நடந்தாலும் உடனே சி.பி.அய் விசாரணைக்கு உத்தரவிடு என்று போராடுகிறோம். சி.பி.அய் யில்  நேர்மையானவர்கள் மட்டுமே இருப்பார்கள் என்று நம்புகிறோம். அதைப்போலவே, கல்வித்துறையில் என்.பி.ஏ அங்கீகாரம் என்றால் அது மிகப்பெரும் உயர்ந்த அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.

ஒரு கல்விநிறுவனம் என்.பி.ஏ எதிர்பார்க்கும் தரத்தில் உள்ளதா என ஆய்வு செய்யப்போகும்  குழுவில் பெரும் பெரும் கல்வியாளர்கள் இருப்பார்கள். அவர்கள் கல்லூரிகளை ஆய்வு செய்யப் புறப்படும் முன்பே அந்தக்குழுவில் உள்ள அனைவரின் பலவீனங்களையும், கல்வி நிறுவன நிர்வாகிகள் ஆய்வுசெய்து கண்டுபிடித்து விடுவார்கள். பிறகு ஆய்வு எப்படி இருக்கும், அந்த ஆய்வின் முடிவு எப்படி இருக்கும் என விளக்க வேண்டியதில்லை. என்.பி.ஏ ஆய்வில் மட்டுமல்ல; ஏ.ஐ.சி.டி.இ, யு.ஜி.சி போன்ற அனைத்து அமைப்புகள் நடத்தும் ஆய்வுகளும் இதே நிலையில்தான் உள்ளன.

பெரும்பாலும் பொய்யான தகவல்கள், மிகைப்படுத்தப்பட்ட புள்ளிவிபரங்கள், போலியான ஆதாரங்கள் இவற்றைத்தான் கல்விநிறுவனங்கள் ஆய்வு அமைப்புகளுக்கு வழங்குகின்றன. அவர்கள் வழங்கும் தகவல்களின் உண்மைத்தன்மை பற்றி எந்த ஆய்வு அமைப்பும் எப்போதும் கேள்வி எழுப்புவதில்லை.

கல்வி நிறுவன - ஆய்வு அமைப்புகளின் கூட்டு

ஒரு கல்லூரியில் பேராசிரியர் பணிக்கு பி.எச்.டி என்ற முனைவர் பட்ட ஆய்வை முடித்திருக்க வேண்டும். பி.எச்.டி முனைவர் பட்டத்தோடு 10 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும் என்பவை அடிப்படைத் தகுதிகளாக உள்ளன. அப்படித் தகுதி வாய்ந்த பேராசிரியர்கள் பெரும்பாலான தனியார் கல்விநிறுவனங்களில் இருக்க மாட்டார்கள். ஒரு கல்லூரியில் கடந்த ஆண்டு பட்டப்படிப்பை முடித்த மாணவர் இந்த ஆண்டு அதே கல்லூரியில் பேராசிரியராக இருப்பார்.

ஆய்வுக்குச் செல்லும் அமைப்புகள் செல்லும்போது மட்டும் வேறு கல்லூரிகளில் பணியாற்றும் தகுதிவாய்ந்த பேராசிரியர்களின் பெயர்களையும், அவர்களின் சான்றிதழ்களையும் ஆய்வு நடக்கும் கல்லூரி பயன்படுத்திக்கொள்ளும். சான்றிதழ்களையும், நபர்களையும் ஒரே நேரத்தில் சரிபார்த்தால் பல நிறுவனங்களின் மோசடி தெரியவரும். மேலும் ஆய்வு நடக்கும் போது மட்டும் தகுதிவாய்ந்த நபர்கள் சிலரை ஒப்பந்த அடிப்படையில் பேசி, அந்தக் கல்லூரியில் பணிபுரிவது போலக் காட்டுவதும் உண்டு. எல்லாம் ஆய்வுக்குழுவில் வரும் கல்வியாளர்களுக்கு நன்கு தெரியும்.

கல்விநிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்கும் அமைப்புகள் பல விதிமுறைகள வைத்துள்ளன. கல்லூரியின் பரப்பளவு, அந்தப் பரப்பளவில் கட்டிடங்களின் பரப்பளவு, ஆய்வுக்கூடங்களின் எண்ணிக்கை, அவற்றின் பரப்பளவு எனத் தொடங்கி, கழிவறைகளின் நீள அகலம், அவற்றின் எண்ணிக்கை என்பது வரை பல்வேறு கடுமையான - சரியான விதிமுறைகள் உள்ளன. ஆனால் அந்த விதிமுறைகள் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய வரும் அதே அமைப்புகளின் பிரதிநிதிகள் அவற்றில் அக்கறை செலுத்துவதில்லை. அந்த விதிமுறைகளில் உள்ள சிறு சிறு ஓட்டைகளைப் பயன்படுத்தித்தான் தமிழ்நாட்டில் கல்வி வளருகிறது.

தரவரிசைப் பட்டியலில் தமிழ்நாட்டின் கல்விநிறுவனங்கள் பல்வேறு பிரிவுகளின்கீழ் 37 முதன்மை இடங்களைப் பிடித்திருப்பது மேற்கண்ட ஆய்வுகளைப் போலத்தான் நடந்திருக்கும் என்பது இதுபோன்ற ஆய்வுக்குழுக்களில் பங்கேற்ற கல்வியாளர்களுக்கும் தெரியும் - அடுத்த ஆண்டு இந்தத் தரவரிசையில் எப்படி இடம் பிடிப்பது என்பது கல்வித் தந்தைகளுக்கும் தெரியும்.

நேரடியாக நாம் பார்த்தோமானால்  National Institutional Ranking Framework ன் தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்த கல்விநிறுவனங்களைவிடச் சிறந்த பல நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உள்ளன என்பதை அறியலாம். பொதுநல வழக்குப் போடுவது போல, ஏதாவது ஒரு இயக்கம், பொது நல ஆய்வாக கல்விநிறுவன ஆய்வை நடத்தினால் இந்த உண்மை உறுதியாகத் தெரிய வரும்.

சமூகநீதிக்கு எதிரான ஆய்வு

இந்த ஆய்வில் கிடைத்த சில தகவல்கள் மிகப்பெரும் இயலாமையையும், ஏமாற்றத்தையும், கோபத்தையும் தான் கொடுத்துள்ளன. என்.ஐ.ஆர்.எஃப் வெளியிட்டுள்ள பட்டியலில்,  ஒவ்வொரு நிறுவனத்தைப் பற்றியும் விளக்கமாக பல தகவல்கள் உள்ளன. ஒவ்வொரு நிறுவனத்திலும் உள்ள பேராசிரியர்களின் மொத்த எண்ணிக்கை, அதில் பெண்களின் எண்ணிக்கை, ஒவ்வொரு நிறுவனத்தின் ஒட்டு மொத்த மாணவர் சேர்க்கை, அதில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடியினரின்  எண்ணிக்கை என பல தகவல்களும் இடம்பெற்றுள்ளன.

அதில் பெரும்பாலான கல்விநிறுவனங்களில் தமிழ்நாடு அரசின் 69 சதவிகித இடஒதுக்கீடு என்பது பின்பற்றப்படவே இல்லை. சில கல்லூரிகளில் முற்றிலுமாகவே இடஒதுக்கீடு பின்பற்றப் படாமல் 0 சதவிகிதமாகவே உள்ளன என்பது அதிர்ச்சியாக உள்ளது.

இடஒதுக்கீடு 0 சதவீதம் என்றால், முற்றிலும் பார்ப்பன உயர்ஜாதியினரை மட்டும் சேர்த்திருப் பார்களா என்றால், அப்படி இல்லை. இதே பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களை ‘பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு’ மற்றும் பணம் வாங்கிக்கொண்டு அனுமதி என்ற முறைகளில் மாணவர் சேர்க்கை நடந்துள்ளது.

பல நிறுவனங்களில் பொருளாதார ரீதியாக இடஒதுக்கீடு வழங்கப்படுள்ளதாக பட்டியலில் தகவல் உள்ளது. பொருளாதார ரீதியான இடஒதுக்கீடு பற்றி தனியாக ஒரு கணக்கெடுப்பையே என்.ஐ.ஆர்.எஃப் நடத்தியிருக்கிறது. மத்திய அரசு ‘பொருளாதார ரீதியாக இடஒதுக்கீடு’ என்பதைச் சட்டமாக்கி யுள்ளதா?அ ப்படி இல்லாவிட்டால் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள ஒரு நிறுவனம் பொருளாதார ரீதியான இடஒதுக்கீடு பற்றி எதற்காகக் கணக்கெடுப்பு நடத்தியது? தனியார் கல்வி நிறுவனங்கள் எந்த சட்டத்தின் அடிப்படையில் அல்லது எந்த உத்தரவின் அடிப்படையில் பொருளாதார ரீதியான இடஒதுக்கீட்டைப் பின்பற்றினார்கள்?

சட்டப்படி இல்லாத பொருளாதார இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டுள்ளது. சட்டப்படி நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய ஜாதிவாரி இடஒதுக்கீடு சில கல்லூரிகளில் 0 சதவிகிதமாகவும், சில கல்லூரிகளில் அரைகுறையாகவும் உள்ளது. ஆனாலும் அவற்றுக்கு இந்த NIRF நிறுவனம் தரவரிசையில் முக்கிய இடங்களை வழங்கியுள்ளது.

ஆக, மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை மறைமுகமாக நமக்குச் சொல்வது என்னவென்றால், “பொருளாதார அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்திய கல்வி நிறுவனங்கள் தரவரிசையில் முதன்மையான இடங்களைப் பெறும். ஜாதிவாரி இடஒதுக்கீடு என்பது தேவையில்லை. அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை” என்ற இரண்டு ஆபத்தான பார்ப்பனக் ஆதிக்கக் கருத்தை நமக்கு விதைத்துள்ளன.

தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அண்ணா பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக் கழகம், வேளாண்மைப் பல்கலைக்கழகம் போன்றவை ஜாதிவாரி இடஒதுக்கீட்டைப் பின்பற்றியுள்ளன. ஆனால் பெரும்பாலான தனியார் கல்லூரிகள், தனியார் தன்னாட்சிக் கல்லூரிகள், வேலூர் வி.ஐ.டி, சென்னை எஸ். ஆர்.எம், தஞ்சை சாஸ்த்ரா போன்ற தனியார் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் தமிழ்நாட்டின் அடையாளமான சமூகநீதிக்கொள்கைக்கு முற்றிலும் எதிராக உள்ளன என்பதை இந்த ஆய்வு உறுதிப்படுத்துகிறது.

அரசுகள் - நிறுவனங்கள் - உச்சநீதிமன்ற வலைப்பின்னல்

தனியார் பல்கலைக்கழகங்கள், தனியார் சுயநிதிக் கல்லூரிகள், சுயநிதிப் படிப்புகள் என்பவற்றில் 50 சதவிகித இடங்களை மட்டுமே அரசின் ஒற்றைச்சாரளமுறைக்குக் கொடுத்திருப்பார்கள். மீதம் உள்ள 50 சதவிகித இடங்களை  தனியார் கல்வித் தந்தைகள் தாங்களே நிரப்பிக்கொள்வார்கள். அதில் எந்த இடஒதுக்கீடும் பின்பற்றப்படமாட்டாது. இது அரசின் தவறான முடிவு.

ஒரு பொறியியல் கல்லூரியில் சிவில் பாடப்பிரிவில் 40 மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளலாம் என்றால், அதில் 20 மாணவர்களை தனியார் கல்லூரி நிர்வாகமே நிரப்பிக்கொள்ளும். மீதமுள்ள 20 இடங்களில் 69 சதவிகித இடஒதுக்கீடு பின்பற்றப்படும். சாஸ்த்ரா, வி.ஐ.டி, எஸ்.ஆர்.எம் போன்ற தனியார் பல்கலைக் கழகங்களில், ஒரு பாடப்பிரிவுக்கு 40 மாணவர்கள் சேர்த்துக்கொள்வதாக இருந்தால் அந்த 40 இடத்தையுமே அந்தத் தனியார் நிறுவனங்களே நிரப்பிக்கொள்ளும் நிலைதான் உள்ளது.

அனைத்துக் கல்விநிறுவனங்களிலும், அனைத்து இடங்களையும் அரசே நிரப்ப வேண்டுமே ஒழிய, தனியாரிடம் அந்தப் பொறுப்பைக் கொடுத்தது மிகப்பெரும் தவறு. இந்த முடிவுதான் கட்டணக் கொள்ளைக்குக் கதவைத் திறந்துள்ளது.

கல்வி வணிகமயமாக்கப்பட்டதற்கும் - ஜாதிவாரி இடஒதுக்கீடு பின்பற்றப்படாமல் இருப்பதற்கும் பின்னணியில் உச்சநீதிமன்றத்தீர்ப்புகளும் உள்ளன என்பதை பேராசிரியர் தோழர் இளங்கோவன் அவர்கள் ‘தலித் முரசு’ ஏட்டில் விளக்கியுள்ளார். அதாவது,

“டி.எம்.ஏ பாய் பவுண்டேஷன் - எதிர் - கர்நாடக அரசு (2003)) வழக்கில், பதினோறு நீதிபதிகள் கொண்ட அமர்வு, கல்வியை வர்த்தகப் பொருளாக, அதாவது கல்வி நிறுவனங்களை நிறுவி நிர்வகிப்பது அரசமைப்புச் சட்டப்பிரிவு 19(1)(ப)இன்படி வாணிபம் செய்யும் அடிப்படை உரிமை எனத் தீர்ப்புரைத்தது. இத்தீர்ப்பின்படி அரசு உதவி / மானியம் பெறாத எந்த ஒரு கல்வி நிறுவனத்தின் செயல்பாட்டிலும், அரசு தலையிட முடியாது.

இக்கல்வி நிறுவனங்களில் இனவாரி இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தவோ, அரசு இடங்கள் இவை எனவோ எதையும் கோர முடியாது. இத்தீர்ப்புரை கல்வி வாணிபத்தை அங்கீகரித்தது மட்டுமின்றி, கல்வி தருவது அரசின் கடமை என்ற நிலையையும் மாற்றியமைத்தது. அரசும் கல்வி தரும் தன் அடிப்படைப் பொறுப்பிலிருந்து விலகி இத்தீர்ப்புரைக்கு ஆதரவாக இருந்தது.

மோசமான விளைவுகளுக்குக் காரணமான இத்தீர்ப்புரை பற்றி எந்த ஓர் அரசியல் கட்சியும், சமூக நீதி இயக்கமும் இன்றுவரை வாய் திறக்கவில்லை. மக்களுக்கு கல்வி தரும் பெரும் பொறுப்பைப் பற்றி கடந்த 16 ஆண்டுகளாக கவலையற்றவர்களாகவே இவர்கள் உள்ளனர். டி.எம்.ஏ. பாய் பவுண்டேஷன் - எதிர் - கர்நாடகா அரசு வழக்கின் தீர்ப்பே 2002ஆம் ஆண்டு முதல் புற்றீசல் போன்ற சுயநிதி பொறியியல், மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த கல்வி நிறுவனங்கள் தோன்ற முதன்மைக் காரணமாகி இருக்கிறது.

டி.எம்.ஏ. பாய் வழக்கினைத் தொடர்ந்து இஸ்லாமிக் அகாடமி ஆப் எஜுகேஷன் - எதிர் - கர்நாடக அரசு வழக்கில் (2003), அய்ந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, சுயநிதிக்கல்வி நிறுவனங்களில் அரசு இட ஒதுக்கீட்டிற்கான சட்டம் இயற்றும்வரை ஏற்கனவே நடைமுறையில் இருந்த இனவாரி இட ஒதுக்கீடு தொடரலாம் என தீர்ப்புரைத்தது. இந்தத் தீர்ப்புரையைத் தொடர்ந்து பி.ஏ. இனாம்தார் - எதிர் - மகாராட்டிரா வழக்கில், சுயநிதிக் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு என்ற பேச்சுக்கே இடமில்லை என ஏழு நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசமைப்பு அமர்வு தீர்ப்புரைத்தது. இதன் மூலம் நாடெங்கிலும் உள்ள சுயநிதி மருத்துவம் மற்றும் பொறியியல், மருத்துவம் சார்ந்த பாடப்பிரிவுகள் அடங்கிய கல்லூரிகளில் இடஒதுக்கீடு என்றைக்குமே இல்லாமல் ஆகியிருக்கிறது.”

இதுபோன்ற உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் - கல்வி வணிகத்திற்கும், சமூகநீதி மறுப்புக்கும் ஆதரவாக உள்ளன. தனியார் நிறுவனங்கள் - உச்சநீதிமன்றம் - அரசுகள் இவை அனைத்தையும் இணைக்கும் சங்கிலியாக பார்ப்பனர்கள் இயங்குகிறார்கள் என்பதை இந்த வலைப்பின்னலால் பயன்பெறுபவர் களின் பட்டியலை ஆய்வு செய்தால் புரியும்.

சிறுபான்மையினர் நிறுவனங்களில் இடஒதுக்கீடு

அரசின் கல்விநிறுவனங்களில் சிறுபான்மையினருக்கு அவர்களது மக்கள் தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப பிரநிதித்துவம் வழங்க வேண்டும் என்பதை கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும். இந்த என்.ஐ.ஆர்.எஃப் ஆய்வில், பொருளாதார இடஒதுக்கீடு என்ற சட்டத்துக்கு எதிரான  புள்ளிவிபரங்களைச் சேகரித்துள்ளார்கள். ஆனால் சிறுபான்மையினர் எண்ணிக்கை பற்றி எந்தத் தகவலும் இல்லை. அதை வன்மையாகக் கண்டிப்போம்.

அதேசமயம், இந்த ஆய்வில் சிறுபான்மையினர் நடத்தும் கல்விநிறுவனங்களிலும் இடஒதுக்கீடு பின்பற்றப்படாமல் இருப்பதும் தெரிய வந்துள்ளது. 2010 ஆம் ஆண்டில் தலித்முரசு இதழில் பேராசிரியர் தோழர் இளங்கோவன் அவர்கள் சிறுபான்மையினர் நடத்தும் 63 கல்விநிறுவனங்களில் இடஒதுக்கீட்டின் நிலை குறித்த தகவல்களை சான்றுகளுடன் பட்டியலிட்டார். இஸ்லாமியர்களும், கிறிஸ்த்தவர்களும் நடத்தும் அந்த 63 கல்லூரிகள் சமூகநீதிக் கொள்கைக்கு முற்றிலும் எதிராகவே உள்ளன.

அரசு நிறுவனங்களில் சிறுபான்மையினருக்கு உள்ள உரிமைக்காக நாம் போராட வேண்டும். அதேசமயம், சிறுபான்மையினர் நடத்தும் கல்விநிறுவனங்களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்குள்ள உரிமைகளுக்காகவும் போராடவேண்டும்.

முதலில், முற்போக்கு அமைப்புகள், தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் ஜாதிவாரி இடஒதுக்கீட்டின் நிலை என்ன? மாணவர் சேர்க்கை, பேராசிரியர்கள் நியமனம் அனைத்திலும் நிரப்பப்பட்டுள்ளவர்களின் பட்டியலில் இடஒதுக்கீட்டு நிலை என்ன? என்பவை பற்றி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி தகவல்களைக் கேட்டுப்பெற்று, இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த - சட்டரீதியான நடவடிக்கைகளையும், நியாய அடிப்படையிலான போராட்டங் களையும் மேற்கொள்ள வேண்டும். மாணவர் சேர்க்கை தொடங்கும் காலம் இது. திராவிடர் இயக்கங்களும், பொதுவுடைமை அமைப்புகளும் இதில் போட்டி போட்டுச் செயல்பட வேண்டும்.

என்.ஐ.ஆர்.எஃப் அமைப்பின் ஆய்வில் 37 முதன்மையான இடங்களைப் பிடித்த  தமிழ்நாட்டுக் கல்வி நிறுவனங்கள் சிலவற்றைப்பற்றி மட்டும் கீழே பட்டியலிட்டுள்ளோம். தமிழ்நாட்டின் அனைத்துக் கல்வி நிறுவனங்களைப் பற்றியும் - அகில இந்திய அளவிலான 100 முதன்மை இடங்களைப்பிடித்த கல்விநிறுவனங்களைப் பற்றியும் முழுமையாகத் தகவல்கள் ஏன்.ஐ.ஆர்.எஃப் பின் இணையதளத்தில் உள்ளன.  https://www.nirfindia.org/OverallRanking.html என்ற இணைப்பில் விரிவாகக் காணலாம். அவற்றைப் பதிவிறக்கம் செய்து அனைத்து தகவல்களையும் புரிந்துகொண்டு சமூகநீதிக்கான பயணத்தைத் தொடங்கவேண்டியது காலத்தின் கட்டாயம். அட்டவணையைப் பார்க்க…

census 60

 

Pin It