இந்தியாவில் ஜாதிய கட்டமைப்பு குறித்து ஊடகங்களோ, அரசியல் கட்சிகளோ, இயக்கங் களோ விவாதிக்கக்கூட தயாராக இல்லை. சமூகத்தில் ஆழமாக புரையோடிப் போயிருக்கும் ஜாதியத்தை தகர்க்காமல், எத்தனை பொருளாதாரத் திட்டங் களையும் அறிமுகப்படுத்தினாலும் வறுமையை ஒழித்துவிட முடியாது என்ற கருத்தை பெரியார் இயக்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது பல்வேறு ஆய்வுகளும் இதே கருத்தை உறுதி செய்து வருகின்றன. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, வளர்ச்சிக்கான பொருளாதாரக் கொள்கைகள் உருவாக்கப்பட்டன. அப்போது சமூகவியலாளர்கள், மானுடவியலாளர்கள், அரசியல் ஆய்வாளர்கள் வறுமை ஒழிப்புக்கான திட்டங்களை தீட்டுவது குறித்து, தொடர்புடைய பல்வேறு சமூகப் பிரச் சினைகள் குறித்து ஆராய்ந்தனர். அத்தகைய ஆய்வு நடத்திய நார்வே நாட்டைச் சார்ந்த குன்னர்மிர்தால் என்ற சமூக ஆய்வாளர் ‘ஏசியன் டிராமா’ என்ற ஆய்வு நூலை 1968இல் எழுதினார். வறுமைக்கான பிரச்சினையை வறுமை என்ற எல்லைக்கோட்டுக்குள் நின்று பார்க்க முடியாது. இந்திய சமூகத்தில் இறுகிப் போய் நிற்கும் ‘ஜாதிய கட்டமைப்புடன்’ அதை இணைத்துப் பார்க்க வேண்டும் என்ற கருத்தை முன் வைத்த அவர், ஜாதிய கட்டமைப்பே வறுமையை உறுதிப் படுத்திக் கொண்டிருக்கிறது என்று தமது ஆய்வில் நிறுவினார்.

இதில் குறிப்பிடப்பட வேண்டிய முக்கிய அம்சம், இந்த ஆய்வு நூல், நோபல் பரிசைப் பெற்றது என்பதாகும். இப்போது இதேபோல் மற்றொரு ஆய்வு நூல் வெளி வந்திருக்கிறது. இந்தியாவில் நிலை கொண்டுள்ள வறுமை (Persistence of Poverty inIndia) என்ற நூலை நந்தினி கூப்து, ஜொனாத்தன் பாரி என்ற ஆய்வாளர்கள் தொகுத்துள்ளனர். பல்வேறு ஆய்வு கட்டுரைகள் இதில் இடம் பெற்றுள்ளன. இந்த நூல் குறித்த விரிவான திறனாய்வு, ‘இந்து’ ஆங்கில நாளேட்டில் (ஏப்.5, 2015) வெளிவந்திருக் கிறது. இந்தியா முழுதும் பல்வேறு மாநிலங்களில் இதற்காக பல ஆண்டுகாலம் செலவிட்டு இந்த ஆய்வு நூல் விரிவாக தொகுக்கப்பட்டுள்ளது. ஜாதி அடிப் படையிலான சமூக கட்டமைப்பும் அதனடிப்படை யில் நிர்ணயிக்கப்பட்ட ஜாதித் தொழில்களும் ஏழ்மையும் நெருக்கமாக பின்னிப் பிணைந்து நிற்கிறது. ஏழைகளின் மேம்பாட்டை இலக்காகக் கொண்ட திட்டங்கள், அதன் இலக்கில் தோல்வி அடைந்துவிட்டன. நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் சென்றாலும், வறுமையில் வாழும் மக்கள் நிலை மேலும் மோசமாகிக் கொண்டிருப்பதற்கு ஜாதி யமைப்பே காரணம் என்று ஆய்வு அழுத்தமாக எடுத்துரைக் கிறது. கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வறுமையை ஒழிப்பதில் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றத்தைக் கொண்டு வரவில்லை என்பதை புள்ளி விவரங்களுடன் உறுதிப்படுத்துகிறது. விவசாயம் முடக்கப்பட்ட நிலையில் இப்போதும் விவசாயக் கூலிகளாகவே உழலும் தலித் மற்றும் ஆதிவாசிகள்தான் வறுமைப் பிடிக்குள் பெருமளவில் சிக்குண்ட மக்களாக இருக்கிறார்கள்.

சென்னை குடிசைப் பகுதியில் ஏழ்மையில் வாழும் வயதில் மூத்தவர்கள் நிலை குறித்து பல ஆண்டுகாலம் ஆய்வு நடத்திய இலண்டன் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த பென்னி வெரா - சார்கோ என்ற பெண் ஆராய்ச்சியாளர், தனது கட்டுரையில் நிறுவியுள்ள முடிவுகள் வழமையாக முன் வைக்கப்படும் கருத்து களை மறுக்கின்றன. மக்கள் தொகை அதிகரிப்பு காரணமாக முதியவர்கள், குறிப்பாக அவர்களில் பெண்கள் எண்ணிக்கையில் அதிகம் இருந்தாலும், அது அவர்களின் வறுமை ஒழிப்புக்கோ வளர்ச் சிக்கோ உதவிடாமல், வாழ்நிலையை மேலும் மோசமாக்கி யுள்ளது. சமூக நலத் திட்டங்கள், சமூகப் பாதுகாப்பு களை அரசு கை கழுவி, ‘வர்த்தக சந்தை’க்குள் கொண்டு வந்தது - நெருக்கடிகளுக்கு மற்றொரு காரணம். அரசு பள்ளிகளை, அரசு மருத்துவமனை களை வசதி படைத்தவர்களும் நடுத்தரப் பிரிவினரும் முற்றிலுமாக புறக்கணித்ததால் ஜாதி அடிப்படையில் ஒடுக்கப்பட்டு, வறுமையில் உழலும் மக்களுக்கு மட்டுமே அவை அடைக்கலம் வழங்கும் இடங்களாகிவிட்டன.

தமிழ்நாட்டில் காவிரி பாசனப் பகுதிகளில் நடத்தப்பட்ட விரிவான ஆய்வுகளும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளது. இந்த ஆய்வு வேறு ஒரு முக்கிய கருத்தை முன் வைக்கிறது.

1960ஆம் ஆண்டுகளிலிருந்து இந்தப் பகுதியில் திராவிடர் இயக்கமும், இடதுசாரி கட்சிகளும் ஜாதி கட்டமைப்பு, ஜாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக இயக்கம் நடத்தியதால்தான், இப்பகுதியில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கைத் தரம் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ந்தது. விவசாயம் மற்றும் உள்ளூர் தொழில் வளர்ச்சியும் பெருகியது. அரசுகளையும் ஒதுங்கி நிற்காமல் முனைப்பாக செயல்பட வைத்தது இதற்கான காரணம் ஜாதியத்தை எதிர்த்து நடத்தப்பட்ட இயக்கங்கள்தான் என்று பதிவு செய்கிறது இந்த ஆய்வு. (The working of democraticforces since mid-1960s through the Dravidian andLeft Parties has led to “a general rise in living standards...with modest agricultural growth, localindustrialisation and an active role for the state.”)

- ஜாதிய கட்டமைப்பைத் தகர்க்காமல், அதன் இறுக்கத்தைக் குலைக்காமல் பொருளாதாரத் திட்டங்களால் மட்டும் எந்தத் தாக்கத்தையும் உருவாக்க முடியாது என்பதை உறுதியாக நிலைநாட்டுகின்றன ஆய்வுகள்! பெரியாரும் அவரது இயக்கமும் இடது சாரிகளும் நடத்திய ஜாதி எதிர்ப்பு இயக்கத்தின் சமூகத் தாக்கத்தையும் பதிவு செய்கிறது; இந்த உண்மைகளை கருத்தில் கொள்ள மறுத்து பெரியாரை சிறுமைப்படுத்திட துடிக்கிறார்கள் நவீன பார்ப்பனியர்கள்!     

Pin It