‘ஏ’ பிரிவு பணியில் ஒரு பிற்படுத்தப்பட்டோர்கூட இல்லை!

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் உறுப்பினராக இருப்பவர் காங்கிரஸ்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கார்வேந்தன். அவரது பேட்டியை தமிழ் ‘இந்து’ நாளேடு, ஏப்.5, 2015இல் வெளியிட்டிருக்கிறது. அதில் பிற்படுத்தப் பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீடு மத்திய அரசுப் பதவிகளில் முழுமையாகப் புறக்கணிக்கப் படுவதை சுட்டிக்காட்டியிருக்கிறார். 1993ஆம் ஆண்டு முதல் 27 சதவீத இடஒதுக்கீடு அமுலில் இருந் தாலும் ‘ஏ’ பிரிவு அதிகாரிகளாக ஒரு பிற்படுத்தப் பட்டவர்கூட இதுவரை நியமனமாகவில்லை. அனைத்து துறைகளிலும் பார்த்தால் பூஜ்யம் சதவீதத்திலிருந்து 10 சதவீதம் பேர் மட்டுமே உள்ளனர். ‘ஏ’, ‘பி’, ‘சி’ பிரிவுகளில் பல பதவிகள் காலியாக இருந்தும் நிரப்பப்படவில்லை. நிரப்புவதற்கு எவ்வித முயற்சியும் எடுக்கப்படவும் இல்லை.

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களிலும் இதே நிலைதான். மத்திய அரசின் கேந்திரவித்யாலயா பள்ளிகள் மற்றும் இந்திய இராணுவ அமைச்சகத்தின் சைனிக் பள்ளிகளில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு வழங்கப்பட்டா லும், இதுவரை, பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு வழங்கப்படவே இல்லை. எத்தனையோ முறை பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் வேண்டு கோள் விடுத்தும் பலனில்லை. அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 15(5)க்கு புறம்பாக அவை செயல்படு கின்றன.

பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றும் பிற்படுத்தப்பட்ட ஊழியர்களின் உரிமைகளைக் காக்க பணியாளர் நலத்துறை அமைச்சகம் வலியுறுத் தும் வழி காட்டும் முறைகள் பின்பற்றப்படுவது மில்லை. இதன்படி, பிற்படுத்தப்பட்ட ஊழியர் களுக்காக தனி ஒருங்கிணைப்பு அதிகாரி, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திலிருந்து நியமிக்கப்பட வேண்டும்; குறைந்தது ஆண்டுக்கு இருமுறை ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும்; பிற்படுத்தப்பட்ட ஊழியர்களுக்காக அனைத்து வசதிகளுடன் தனி அலுவலக அறை ஒதுக்கித் தரவேண்டும்; பணி நியமனங்களுக்கான குழுவில் ஒரு பிற்படுத்தப்பட்ட பிரதிநிதி இடம்பெற வேண்டும். ஆனால், பல பொதுத் துறை நிறுவனங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் இதில் எந்த ஒரு வழிகாட்டுதலையும் பின்பற்றவில்லை என்று கூறியிருக்கிறார், எஸ்.கே. கார்வேந்தன். தலித் மக்களுக்கு எதிராக, தமிழ்நாட்டில் தொடை தட்டி கிளம்பும் பிற்படுத்தப்பட்ட ஜாதிக் கட்சிகள், மத்திய அரசில், இப்படி, உரிமைகளை இழந்து நிற்பதற்காக போராட முன் வருவதில்லை. 27 சதவீத இடஒதுக்கீடு அமுலுக்கு வந்து 22 ஆண்டுகள் ஓடிய நிலையிலும் ‘ஏ’ பிரிவு அதிகாரியாக ஒரு பிற்படுத்தப்பட்டவர் கூட வர முடியாமல் பார்ப்பன உயர்ஜாதி ஆதிக்க வாதிகள் தடுத்து வருவதை கருத்தில் கொள்ளாமல் பார்ப்பனியத்தைக் காப்பாற்றும் சங்பரிவாரங்களுக்கு வெட்கமில்லாமல் ‘ஜால்ரா’ தட்டுகிறார்கள், இந்த பிற்படுத்தப்பட்ட ஜாதிக் கட்சியினர்!

கார்ப்பரேட் நலனுக்கு கைப்பற்றப்படும் நிலங்கள்

அரசு நிலம் கையகப்படுத்தும் சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் ‘சிறப்புப் பொருளாதார மண்டலம்’ என்ற திட்டத்துக்காக அரசு ஏற்கெனவே கையகப்படுத்திய 18,024 எக்டேர் நிலங்கள் பயன்படுத்தப்படாமல் கிடக்கின்றன என்ற தகவல்கள் வெளி வந்துள்ளன. இந்த சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் தொழில் தொடங்கும் பெரும் தொழில் நிறுவனங்களுக்கு வரி விலக்கு - மின்சாரம் - தண்ணீர் என்று ஏராளமான சலுகைகளை வாரி வழங்கியும், இதில் தொழில் தொடங்கிய நிறுவனங்கள் பலவும் வெளியேறி விட்டன. ஆனாலும், இதற்காக 20 மாநில அரசுகள் கைப்பற்றிய நிலங்கள் எந்தப் பயன்பாடுமின்றி கிடக்கின்றன.

இதில், குஜராத் முதலிடத்திலும், மகாராஷ்டிரா இரண்டாவது இடத்திலும், தமிழ்நாடு மூன்றா மிடத்திலும் உள்ளன. 10,714 எக்டேர் நிலங்கள் இந்த மாநிலங்களில் கைப்பற்றப்பட்டு, வீணாகக் கிடக்கின்றன. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 27.95 எக்டேர் நிலங்கள்! விவசாயிகளிடமிருந்து அவர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி இந்த நிலங்கள் கைப்பற்றப் பட்டது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசு 438 சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு பூர்வாங்க அனுமதி வழங்கியது. இதில் 347 மண்டலங்கள் முறையாக தொடங்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், செயல்பாட்டுக்கு வந்தவை 199 மட்டுமே. ஏற்கெனவே சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக விவசாயிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட நிலங்களே பயன்படுத்தப் படாமல் கிடக்கும்போது, மேலும் ஏன் நிலத்தைப் பறிக்கிறீர்கள் என்று மதுரை விவசாயிகள் கேட் கிறார்கள். விவசாயத்துக்குப் பயன்படாத வறண்ட நிலங்கள் இருக்கும்போது அதை எடுக்காமல், விவசாயத்துக்கு பயன்பட்டு வரும் வளமான நிலங்களை 1480 ஏக்கர் அளவுக்கு கரிசல்கலான் பேட்டை, சுவாமி மல்லப்பேட்டை போன்ற மதுரையைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து அரசு கைப்பற்றுகிறது. இதை எதிர்த்து 50க்கும் மேற்பட்ட போராட்டங்களை விவசாயிகள் நடத்தியுள்ளனர்.

கார்ப்பரேட் நலன்களுக்காகவே ஆட்சி நடக்கிறது. அதில், பார்ப்பன மேலாதிக்கமும் இணைந்து நிற்கிறது. (தகவல்: டைம்ஸ்ஆப் இந்தியா, மார்ச். 27).

தமிழகம் எதிர்நோக்கும் ஆபத்து

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்குமுன் ‘இந்துத்துவா’ மதவெறி நடவடிக்கைகளை தீவிரப் படுத்திட, பா.ஜ.க., சங் பரிவாரங்கள் திட்டமிட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் ஜாதி அடிப்படையில் மக்களை அணி திரட்டி, அதை இந்துக்களின் வாக்கு வாங்கியாக மாற்ற வேண்டும் என்பதே பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, தமிழ்நாட்டுக்காக வகுத்துள்ள தேர்தல் உத்தி. இது குறித்து பெயர் சொல்ல விரும்பாத பா.ஜ.க. தலைவர், கூறுகையில் : “உ.பி. மாநிலத்தைப் போல், ‘இந்து-முஸ்லிம்’ என்ற அடிப்படையில் பிளவு ஏற்படுத்துவது தமிழகத்தில் சாத்தியமல்ல என்பதால், ஜாதியமைப்புகளை ஊக்குவித்து அவர்களிடம் இந்து பழம் பெருமைகளை எடுத்துக் கூறி, பல்வேறு ஜாதியமைப்புகளையும் ஒருங் கிணைத்து வாக்கு வங்கிகளாக்க திட்டமிட்டுள் ளோம். இதற்கு எங்கள் கூட்டணியில் இடம் பெறும் கட்சிகளை பயன் படுத்துவோம்” என்று கூறினார். இஸ்லாமியர்களை மீண்டும் இந்து மதத்துக்குள் கொண்டு வரும் முயற்சிகளில் பா.ஜ.க. முன்னணி அமைப்புகள் தீவிரம் காட்டி வருகின்றன. கடந்த மார்ச் 2ஆம் தேதி பொள்ளாச்சியில் 55 முஸ்லிம்களை மீண்டும் ‘இந்து’க்களாக மாற்றும் நிகழ்வை இந்து முன்னணி நடத்தியுள்ளது.

பா.ஜ.க., சங்பரிவாரங்களின் செயல்பாடுகளை தமிழகத்தில் முடுக்கிவிட ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகர் கேசவ விநாயக் என்பவர் தமிழ்நாட்டுக்கு கூடுதல் செயலாளராக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே அமைப்பு செயலாளராக உள்ள எஸ்.மோகன் ராஜூலு என்பவருடன் இணைந்து இவர் செயல்படுவாராம். தமிழகத்தில் காலூன்ற ஜாதி வெறியையும் மதவெறியையும் தூண்டிவிட்டு, தமிழகத்தைப் பின்னோக்கி இழுத்துச் செல்லும் ஆபத்துகளை முறியடிக்க பெரியார் கொள்கை கைத்தடியை தமிழகத்தின் முற்போக்கு இயக்கங்கள் கையில் எடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.

Pin It