நாகம்மையார் மறைவு ; கிறிஸ்துவ திருமணம் ; நிலவிய சூழல்

பொதுவுடைமை கொள்கைகளை ஆதரித்ததாலும், கிறிஸ்தவ மதத்தை எதிர்த்ததாலும் கடும் அடக்குமுறைகளை பெரியாரும் ‘குடிஅரசு’ம் எதிர் கொண்டன. இக்கட்டுரை, நாகம்மையார் மறைவைத் தொடர்ந்து பெரியார் நடத்தி வைத்த புரோகித மறுப்பு கிறிஸ்தவ திருமணம் நடந்த வரலாற்றுச் சூழலை விளக்குகிறது.

15-05-2014, 22-05-2014 ஆகிய நாள்களிட்ட ‘புரட்சிப் பெரியார் முழக்கத்தில்’ நாகம்மையார் மறைவு - அடுத்து தடையை மீறி நடத்தப்பட்ட கிறிஸ்துவர் சுயமரியாதைத் திருமணம் - அதன் தொடர்ச்சியாக வெளிவந்த ‘கத்தோலிக்கர்களே, இனி பலிக்காது’ என்ற கட்டுரை ஆகியவற்றை வெளியிட்டிருந்தோம்.

இவை தொடர்பான வேறு சிலவற்றையும், அதாவது அந்த நாட்களில் நிலவி வந்த சமூக, அரசியல் சூழல்களையும் சற்று நோக்குவோம்.

அப்போது நாட்டை ஆண்டு வந்த ஆங்கில அரசு சில ஆண்டுகளாகவே பொதுவுடைமைக் கருத்துப் பரவலுக்கு எதிரான அடக்குமுறைகளைத் தொடங்கியிருந்தது.

1929 ஆம் ஆண்டே எஸ்.ஏ.டாங்கே, அதிகாரி, தேசாய் முதலிய கம்யூனிஸ்ட் தலைவர்கள் 32 பேர்கள் மீது “இந்தியாவில் பிரிட்டிஷ் மன்னரின் ஆட்சியைக் கவிழ்க்க”சதி செய்ததாக வழக்குத் தொடுத்திருந்தது. “மீரட் கம்யூனிஸ்ட் சதி வழக்கு” என்று அறியப்பட்ட அவ்வழக்கு ஏறத்தாழ நான்காண்டுகள் நடைபெற்று, அவ்வழக்கில் இருந்தோரில் 5 பேர்களை விடுதலை செய்தும் மீதி 27 பேருக்கும் மூன்று ஆண்டு முதல் இருபது ஆண்டுகள் வரையிலான சிறை தண்டனை வழங்கி 1933 ம் ஆண்டின் தொடக்கத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

இது குறித்து 22-01-1933 நாளிட்ட ‘குடிஅரசு’ தலையங்கத்தில் “இந்த 27 பேர் மாத்திரமல்ல; இன்னும் 270 பேர்களையும் சேர்த்து தூக்கில் போட்டிருந்தாலும் சரி, நாம் அதற்காகக் கவலைப்படப் போவதில்லை” என்றும் இதனால் “பொதுவுடைமைக் கொள்கை என்பது, அதாவது முதலாளிகளின் ஆட்சியை சிதைத்து நசுக்கி, சரீரத்தால் பாடுபடுகின்ற மக்களுடைய ஆட்சிக்கு உலக அரசாங்கங்களையெல்லாம் திருத்தியமைக்க வேண்டும் என்கிற கொள்கையோ, உணர்ச்சியோ அருகிப் போய்விடும் பயம் நமக்கில்லை” என்று அழுத்தமாகக் குறிப்பிட்டு பெரியார் எழுதியிருந்தார்.

1932 டிசம்பர் 28, 29 ஆகிய நாட்களில் ஈரோட்டில் சுயமரியாதை இயக்கத்தின் முன்னணித் தலைவர்கள் அனைவரையும், தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் என்று அறியப்படும் தோழர் மா.சிங்கார வேலரையும் அழைத்து செயல் திட்டக் கூட்டம் ஒன்றை நடத்தினார். அதில் சுயமரியாதை இயக்கத்தின் அரசியல் பிரிவாக‘சுயமரியாதை சமதர்மக் கட்சி’ என்ற ஒன்றையும் உருவாக்கினார்.

மேலும் அக்கூட்டத்தில் “பிரிட்டிஷ் முதலிய எவ்வித முதலாளித் தன்மை கொண்ட ஆட்சியி லிருந்தும் இந்தியாவை பூரண விடுதலை அடையச் செய்வது” என்ற முதல் தீர்மானத்தையும் நிறைவேற்றியிருந்தார்.

அதற்கு முன்பாகவே, ஈரோட்டில் 10-5-1930 அன்று நடைபெற்ற இரண்டாவது சுயமரியாதை மாநாட்டில் “ எந்த பொதுக் கூட்டங்களிலும் ஆரம்பத்திலாவது முடிவிலாவது ராஜ வணக்கம், கடவுள் வணக்கம், தலைவர் வணக்கம் ஆகியவைகள் செய்யும் காரியத்தை விட்டுவிட வேண்டுமென்று இம்மாநாடு தீர்மானிக்கிறது” என்ற ஒரு தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. அதுவரை நடந்துவந்த எல்லா காங்கிரஸ்மாநாடுகளிலும்கூட மாநாட்டின் தொடக்கத்தில் பிரிட்டிஷ் அரசரை வாழ்த்தியும்,அவராட்சித் தொடர கடவுளைப் பிரார்த்தித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டே வந்துள்ளது என்பதை இணைத்துப் பார்த்தால் தான் மேற்கண்ட தீர்மானத்தின் தாக்கம் புரியும்.

அதோடு நின்றதா ? 1931 ஆகஸ்டில் விருதுநகரில் நடைபெற்ற சுயமரியாதை வாலிபர் மாநாட்டின் முதல் தீர்மானமே, “சமதர்ம தத்துவமும் பொது வுடைமைக் கொள்கையும் நாட்டில் ஓங்க வேண்டும் என்பதே நமது இலட்சியமாய் இருக்கிறபடியால், விதி, கடவுள் செயல் என்பன போன்ற உணர்ச்சிகள் மக்கள் மனதிலிருந்து ஒழிக்கப்பட வேண்டும்” என்பதே முதல் தீர்மானமாக இருந்தது.

அதுமட்டுமல்லாமல், சுயமரியாதை இயக்கத் தலைவரான பெரியார் 1931 டிசம்பர் முதல்1932 நவம்பர் வரையிலான ஏறத்தாழ ஓராண்டு காலம் உலக சுற்றுப்பயணம் செய்துவிட்டு, அதிலும் சோவியத் ரஷ்யாவில் மட்டும் மூன்று மாதம் தங்கியிருந்து சோசலிச அரசின் கூட்டுப் பண்ணைத் திட்டங்கள், கல்வி முறை, சுகாதார முறை என அனைத்து செயல்பாடுகளையும் நுணுகிப் பார்த்தறிந்ததோடு, 1932 ஆம் ஆண்டின் மே தின விழாவிலும் அரசின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று விட்டு திரும்பியிருந்தார்.

அவை மட்டுமில்லை. 1848 லேயே வெளியிடப் பட்டிருப்பினும், மார்க்சும் எங்கல்சும் எழுதி சமர்ப் பித்திருந்த, முதலாம் அகிலம் ஏற்றுக்கொண்டிருந்த ‘கம்யூனிஸ்ட் கட்சி’அறிக்கையை இந்திய மொழி களில் எதிலும் அதுவரை மொழிபெயர்த்து வெளி யிடப்படாதிருந்த சூழலில் 4-10-1931 முதல் தொடர்ச்சியாக ‘குடிஅரசு’ இதழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வந்திருந்தார் பெரியார்.

அது போலவே 30-4-1933 நாளிட்ட ‘குடிஅரசி’ல் ‘குடிஅரசு – ஒன்பதாம் ஆண்டு’ என்ற தலைப்பில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் பாடல், முன் அட்டையிலேயே வெளியிடப்பட்டிருந்தது.

“ ..........................................

கண்கலங்கும் ஏழ்மைக்கு விடைகொடுக்கத்

தலை நிமிர்ந்து சமதர்மப் போரில் ஏறி

சக முழங்கும் குடிஅரசே நீயும் உன்றன்

உலவு சுயமரியாதைப் புலிக் குழாமும்

ஒன்பதாம் ஆண்டினிலே வெல்க நன்றே !

போர் முகத்தில் அணிவகுக்க இன்றழைத்தாய் !

பொதுவுடைமை முரசறையக் கோலெடுத்தாய் !

ஓர் முகத்தில் சந்தோஷம் ஓர் முகத்தில் வாட்டம்

உண்டாக்கும் அரசியலை விழிநெறித்தே

ஊர்முகத்தில் நிற்காதே என முழங்க

ஒன்பதாம் ஆண்டிலேயே உயர்ந்தாய் இந்நாள் !

பார் முகத்தை சமப்படுத்த ஓகோ கோ கோ

பரந்தோதுகின்றாய் நீ வாழி நன்றே !”

என்று பொதுவுடைமையை வரவேற்று, அதைப் பரப்பும் குடிஅரசை வாழ்த்தும் பாடலே அது.

இவ்வாறு அரசினர் அடக்கி ஒடுக்க எண்ணும் பொதுவுடைமைக் கொள்கைகளை உயர்த்திப் பிடிக்கும் செயல்பாடுகள் ஒரு புறம்; அரசினர் மதமான கிறிஸ்துவத்தைக் கடுமையாக விமர்சிக்கும் மத எதிர்ப்பு செயல்பாடுகள் மறு புறம்.

அதே ‘குடிஅரசு’ இதழின் 12 ஆம் பக்கத்தில் “பாதிரிகள் கோபம் – ‘தமிழ்நாடு’தலையங்கக் குறிப்புகள்” என்ற தலைப்பில் சுயமரியாதை இயக்கத்தை எதிர்க்க, ரோமன் கத்தோலிக்க கிறிஸ்துவ பாதிரிகள் முன்வந்திருப்பது தென்னிந்திய சரித்திரத்தில் குறிப்பிடத்தக்க விஷயமாகும்…என்று தொடங்கி, “ஹிந்துக்களும், ரோமன் கத்தோலிக்க கிறிஸ்துவர்களும் நீதியுள்ள சமத்துவ தர்மத்தை ஏற்றுக்கொண்டு, அதை அமுலுக்குக் கொண்டு வருவதே சிறந்த - சமயோஜிதமான முறையாகும்.

அதை விட்டு குறுக்கு வழியில் சென்று ‘சுயமரியாதை’ மீதில் பாய்வதில் பிரயோஜனமில்லை” என்று அத் தலையங்கம் முடியும், பெரியாரின் நண்பரான டாக்டர் வரதராஜுலுவின் ‘தமிழ்நாடு’இதழில் வெளிவந்திருந்த தலையங்கத்தை ‘குடிஅரசு’ வெளியிட்டது.

அதே பக்கத்தில் “மதமும் வாழ்க்கையும் ‘மெயில்’ பத்திரிக்கை தலையங்கக் குறிப்புகள்” என்ற தலைப்பில் ஒரு செய்திக் குறிப்பு இடம் பெற்றிருந்தது.“சென்னையில் நடந்த ஒரு கூட்டத்தில் மதத்தைக் கண்டனம் செய்து பேசிய ஒருவர்,மக்களிடமிருந்து மத சம்பந்தமான எண்ணங்களை வேரோடு கல்லி எறிய வேண்டும் என்று கூறிய பொழுது யாதொரு குழப்பமும் செய்யாமல் ஜனங்கள் பொறுமையாய்க் கேட்டுக் கொண்டிருந்ததை” என ஆதங்கத்தோடு ‘மெயில்’ எழுதியிருந்ததையும் ‘குடிஅரசு’வெளியிட்டிருந்தது.

அதே இதழின் 14 ஆம் பக்கத்தில் ‘குடிஅரசு ஒன்பதாவது ஆண்டு’ என்று தலைப்பிடப்பட்டு வெளியாகியுள்ள தலையங்கத்தில் “இந்த நிலையில் எட்டாம் ஆண்டைக் கடந்து 9ஆம் ஆண்டில் பிரவேசிக்கின்றது. ஆரம்பம் வெகு உக்கிரமான எதிர்ப்புகளைச் சமாளிக்க வேண்டிய பொறுப்புகள் அதன் தலைமீது விழுந்து கிடக்கின்றது என்பதை “இந்து, முஸ்லீம், கிறிஸ்துவ வருணாசிரமக்காரர் களும்,சனாதனதர்மிகளும் உறுமும் உறுமலைப் பார்த்தாலே தெரியவரும்” என்று எழுதியிருப்பதி லிருந்து கிறிஸ்துவ மதவாதிகளின் எதிர்ப்பைப் புரிந்துகொள்ள முடியும்.

அதே இதழின் 16 –ஆம் பக்கத்தில் ஈரோடு டெய்லர் எம். ஆரோக்கியசாமி என்பவர்“கத்தோலிக்க வாலிபர்களே! எழுந்திருங்கள் ! முன்வாருங்கள் !” என்ற தலைப்பில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் “..

நம்மைப் போல் பிறரையும் நேசி என்பதை வாயில் சொல்லிக்கொண்டு காரியத்தில் மாறாய் நடக்கின் றோம். சர்வேசுவரனுடைய தேவாலயத்தில் மேல் ஜாதி வேறாகவும் கீழ் ஜாதி வேறாகவும் சர்வேசுவரனைப் பிரார்த்திப்பது நம் மதத்திற்கு நியாயமா?” என்று எழுதியிருப்பதும் கவனிக்க வேண்டிய ஒன்றாய் உள்ளது.

அதே இதழின் (30-04-1933) 19ஆம் பக்கத்தில் “பக்திக்கு லஞ்சம்” என்ற தலைப்பில் அமெரிக்காவில் ஒரு மாதாகோவில் பிரார்த்தனைக்கு வருவோர் மோட்டார் (கார்)களுக்கு இனாமாக பெட்ரோல் அடிக்கப்படும் என்று அறிவித்திருப்பதைக் கேலி செய்து “ஏசுவின் சீடர்கள் மேல் நாடுகளில் இப்படி இருக்கும் போது, இங்கு சர்க்காரை ஆதரிக்க பதவிகளைக் கொடுப்பதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது ?” என்று குத்தலாகக் கேட்டிருப்பதும் வெளியிடப்பட்டுள்ளது.

அதே இதழின் 20 –ஆம் பக்கத்தில் “மத வரிக் கொள்ளை கத்தோலிக்க கிறிஸ்து மத தேவத்திரவிய அனுமானங்களும் அக்கிரம வரிகளும்” என்ற தலைப்பில் தோழர் யோ.அ.தாஸ் என்பவர் கத்தோலிக்க மதத்தைக் கண்டித்து விரிவான கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.

அவ்விதழின் பிறிதொரு பக்கத்தில் “9-4-33 அன்று சென்னை ‘கத்தோலிக்க லீடர்’பத்திராதிபர் தாமஸ் சுவாமியார் தலைமையில் நடைபெற்ற கத்தோலிக்கக் கிறிஸ்துவர்களின் போலிக் கூட்டத்தைக் கண்டித்து, கத்தோலிக்க கிறிஸ்துவ அங்கத்தினர்களைக் கொண்டே ஒரு கண்டனக் கூட்டத்தை நடத்துவது” என சென்னை சுயமரியாதை சங்கம் தீர்மானித் திருக்கும் செய்தியும் அவ்விதழில் வெளியாகியுள்ளது.

அதே இதழின் 4ஆம், 25ஆம் பக்கங்களில் “பாதிரிகளும், பெண்களும், பாவமன்னிப்பும்”என்ற தலைப்பில் செனிக்யூ பாதிரியாரின் தொடர்க் கட்டுரையும், 5ஆம், 23ஆம் பக்கங்களில் தோழர் குத்தூசி குருசாமி “கத்தோலிக்கர்களின் ஆவேசம்”என்ற தலைப்பில் ஏப்ரல் 17ஆம் தேதி, ஜார்ஜ் டவுன் செயிண்ட் மேரீஸ் ஹாலில் சென்னை ஆர்ச் பிஷப் தலைமையில் கூடிய கத்தோலிக்கர்களின் கூட்டம் சுயமரியாதை இயக்கத்தையும், குடிஅரசு இதழையும் ஒழிப்பதற்கு பிரயத்தனங்கள் செய்யவேண்டுமென தீர்மானம் இயற்றிய செய்தி மாலை செய்தி ஏடான ‘மெட்ராஸ்மெயில்’ பத்திரிக்கையின் 7ஆம், 8ஆம் பக்கங்களில் அன்றைய தினமே வெளி வந்திருப்பதைச் சுட்டிக் காட்டி “தனிப்பட்ட விரோதமின்றி, பொது நலன் நோக்கில் அனைத்து மதங்களையும் விமரிசித்து வரும்போது கத்தோலிக்கர்கள் மட்டும் ஏன் ஆவேசங்கொண்டு கிளம்புகிறார்கள்?” என்ற கேள்வியை எழுப்பி பெர்னாட் ஷா,பெட்ரண்ட் ரசல், பாதிரியாக இருந்து மனம் திருந்தி மூன்று தொகுதிகளாக கிறிஸ்துவ மத தத்துவம், நடைமுறை ஆகியவற்றை விமர்சனம் செய்து எழுதிச் சென்றுள்ள ஜீன் மெஸ்லியர் ஆகியோரைப் பற்றி விரிவாக எழுதியுள்ளார்.

அதோடு “சில மாதங்களுக்கு முன்புமைலாப் பூரில் சில கத்தோலிக்க மக்கள் புரோகிதத்தை ஒழித்து - தரகர் இல்லாமல் சில திருமணங்கள் நடத்தினார்கள். (திருச்சி ஜில்லாவிலும் தஞ்சை ஜில்லாவிலும் இது போல நூற்றுக்கணக்கான திருமணங்கள் நடந்திருக் கின்றன) இதனால் பாதிரிகளுக்குக் கோபமுண்டாகி கல்யாண தினத்தில் சர்ச்சில் ‘சாவு மணி’ அடிக்கும் படி செய்தார்களாம்” என்று எழுதியிருப்பதைப் படிக்கும் போதுதான் நாம் இப்போது விவாதித்துக் கொண்டிருக்கும் ‘எம்.ஏ.சவுந்திரராஜன்-எஸ்.ஏ.மேரி ஆகியோரின் கத்தோலிக்கக் கிறிஸ்துவ சுயமரியாதை திருமணத்துக்கு எவ்வளவு எதிர்ப்புகள் பாதிரிகளின் தரப்பிலிருந்து வந்திருக்கும் என்பதையும், அந்த கிறிஸ்துவ பாதிரிகள், அரசினரின் போக்குக்கு எதிராக சமதர்ம (பொதுவுடைமை)க் கொள்கைகளைப் பரப்பிவரும் சுயமரியாதை இயக்கத்தை நசுக்குவதற்கு சுயமரியாதை இயக்கத் தலைவர் பெரியாரின் மீது காவல்துறையை நடவடிக்கை எடுக்க வைப்பதற்கு எவ்வளவு, முயன்றிருப்பார்கள் என்பதை உணர முடியும்.

அவ்வாறான பாதிரிகளின் முயற்சிகள் அரசினர் வழியாக வெற்றிகரமாக நிறைவேற்றியதன் அடை யாளமாக சில மாதங்களில் ‘குடிஅரசு’ ஏடு நின்று போனது.

1933 நவம்பர் 26ஆம் நாளிலிருந்து புதிதாக ‘புரட்சி’ என்ற பெயரிலான ஏட்டில் தன் கருத்துக் களைத் தொடர்ந்து முன்வைக்கத் தொடங்கினார் பெரியார்.

‘புரட்சி’ ஏட்டின் முதல் தலையங்கத்தில் “….. நமது முதலாளி வர்க்க ஆட்சியானது தனது காவலாளி களாகிய பாதிரி வர்க்கத்துக்கு அடிமையாக இருக்க வேண்டியிருப்பதால்‘குடிஅரசை’ அதன் முதுகுப் புறத்தில் குத்தி விட்டது” என்றும், “ஆதலால் நமது ‘புரட்சியானது ‘குடிஅரசை’க் காட்டிலும் பதின்மடங்கு அதிகமாய் பாதிரி வர்க்கத்தை அதாவது மதப்பிரச்சார வர்க்கத்தை அடி யோடு அழிப்பதையே கங்கணமாய்க் கொண்டு வெளி வர வேண்டியதாகி விட்டது” என்றும் எழுதியுள்ளார்.
அது போலவே ‘புரட்சி’ ஏடும் அரசால் முடக்கப்பட்டபோது பெரியார், ‘பகுத்தறிவு’ என்ற பெயரில் ஓர் ஏட்டினைத் தொடங்கி வெளியிட்டார்.

அவ்வாறு வெளிவந்த ‘பகுத்தறிவு’ ஏட்டில் ‘மதம் ஏன் ஒழிய வேண்டும்?’ என்ற தலைப்பில் எழுதிய முதல் தலையங்கத்தில் பெரியார், “கிறிஸ்துவ மதத்தைப் பற்றி எழுதினோம் என்பதற்கு ‘குடிஅரசு’ பத்திரிக்கை நிறுத்தப்பட்டுப் போயிற்று. மகமதிய மதத்தைப் பற்றி எழுதினதற்காக ‘புரட்சி’ப் பத்திரிக்கை நிறுத்தப்பட்டு போயிற்று.
இந்து மதத்தைப் பற்றி எழுதுகிறோம் என்பதற்காக தினம்தோறும், நிமிஷம் தோறும் அடைந்துவரும் தொல்லையும், நசுங்கு சேஷ்டை உபத்திரவங்களும் கணக்கு வழக்கில் அடங்காது” என்று குறிப்பிட்டுள்ளதிலிருந்து நாம் குறிப்பிட்டுள்ள கத்தோலிக்க சுயமரியாதைத் திருமணம் கத்தோலிக்கப் பாதிரிகளாலும், அவர்கள் சொற்கேட்டு இயங்கும் ஆங்கில அதிகாரிகளாலும் சுயமரியாதை இயக்கத்துக் கும் அதன் தலைவர் பெரியாருக்கும் இழைத்திருக்கக் கூடிய தொல்லைகளை நம்மால் உய்த்துணரமுடியும்.

இப்போது மீண்டும் அந்த கத்தோலிக்க சுயமரியாதைத் திருமண செய்திக்கு வருவோம்.

அழைப்பிதழ்களில் நேரம், இடம் மாற்றம்-ஏன்?

15-05-2014 நாளிட்ட ‘புரட்சிப் பெரியார் முழக்கத்தில்’ திருச்சியில் 14-05-1933 அன்று மாலை பெரியாரால் ஒரு கத்தோலிக்கர் சுயமரியாதை திருமணம் நடத்தி வைக்கப்பட்டது குறித்தும், அதன் தொடர்ச்சியாக காவல் நிலையம் – விசாரணை - விடுவிப்பு குறித்தும், அத்திருமணத்தின் மண மகனான தோழர் எம்.ஏ.சவுந்திரராஜன், 27-05-1979 அன்று எழுதிய குறிப்பை வெளியிட்டிருந்தோம்.

அந்தக் குறிப்போடு அக்குடும்பத்தார் நம்மிடம் கொடுத்திருந்த அழைப்பிதழையும், ‘குடிஅரசு’ ஏட்டில் வெளிவந்திருந்த அழைப்பிதழையும் வெளி யிட்டிருந்தோம்.

மணமகன் தோழர் எம்.ஏ.சவுந்திரராஜன் திருமணத்தின் போது தென்னிந்திய இரயில்வேயில் டிராப்ட்ஸ் மேனாக பணிபுரிந்து கொண்டிருந்தவர். அவர் இன்றளவும் நம்மிடையே வாழ்ந்து வரும் மதிப்பிற்குரிய தோழர் ஆசிட் தியாகராஜனின் ஒன்று விட்ட சகோதரர் ஆவார்.

மணமகனின் தந்தை எம்.ஆரோக்கியசாமி (தென்னிந்திய இரயில்வே கார்டு), மணமகளின் தந்தை எஸ்.அந்தோணிசாமி ( தென்னிந்திய இரயில்வே பியூல் ஸ்டேஷன் கீப்பர்) ஆகிய இருவரும், இருவரது குடும்பத்தாரும் சுயமரியாதை இயக்கத்தவர்கள் ஆவர். அதுபோலவே தோழர் ஆசிட் தியாகராஜனின் தந்தையும், தனயனும் மணமகளின் அண்ணனும், தென்னிந்திய இரயில்வே பணியாளர்கள் ஆவர்.

இனி அழைப்பிதழ்கள் குறித்து பார்ப்போம் !

மணமகனின் தந்தையார் ஆங்கிலத்தில் அச்சிட்டுள்ள அழைப்பிதழில் “14-5-1933 ஞாயிறு அன்று பிற்பகல் 3-00 மணிக்கு நகராட்சிப் பொது மன்றத்தில் ) திருமணம் நடைபெறும் என்று உள்ளது.

7-5-1933 ‘குடிஅரசு’ இதழின் 12ஆம் பக்கத்தில் திருச்சி, உறையூர், தமிழ்நாடு புரோகித மறுப்புச் சங்கத்தினரால் வெளியிடப்பட்டுள்ள அழைப் பிதழில் “திருச்சி, பாலக்கரை,பருப்புக்கார தெரு 10ஆம் நெம்பர் இல்லத்தில்” 14-5-1933 ஞாயிறு மாலை 6-00 மணிக்கு என்று உள்ளது.

ஆனால் மணமகன் எம்.ஏ.சவுந்திரராஜன் எழுதி வைத்துள்ள குறிப்பில் “1933 ஆம் ஆண்டு, மே மாதம் பதினான்காம் தேதி ஞாயிற்றுக்கிழமை இராகு காலம் (பிற்பகல்) 4-30 மணி முதல் 6-00 மணி வரை திருச்சி, தேவர் மன்றத்தில் சுயமரியாதை கத்தோலிக்கத் திருமணம் பெரியார் முன்னிலையில் நடைபெறும் …என்று குறிப்பிட்டிருந்தோம்” என்று குறிப்பிட் டுள்ளார். (நகராட்சி பொது மன்றத்தை, திருச்சி நகராட்சித் தலைவராக விளங்கிய இரத்தினவேல் தேவர் நினைவாக தேவர் ஹால் என்று குறிப்பிடுவதும் உண்டு) ஆனால் அவ்வாறு அச்சிடப்பட்டிருந்த அழைப்பிதழ் எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை.

மணமகன் குறிப்பிட்டிருப்பதைப் போல இராகு காலமான 4-30 – 6-00 மணிக்கு நடத்திட திட்டமிட் டிருப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது - ஏனெனில், சுயமரியாதை இயக்கத்தின் தொடக்க காலகட்டமான 1926 இல் வெறும் பார்ப்பனப் புரோகிதரை விலக்குதல் என்பதாகத் தொடங்கி, காலப்போக்கில் வட மொழி மந்திர விலக்காக முன்னேறியது.1929 –ல் பெரியார், சுயமரியாதைத் திருமணம் நடைபெறுகிறது; மகிழ்ச்சி.

ஆனால் ஜாதி மறுப்பு, விதவை மறுமணம் ஓரிரு விழுக்காடு தானே உள்ளது என்று எழுத, குருசாமி –குஞ்சிதம் ஆகியோரின் சாதிமறுப்புத் திருமணம் சிவகாமி சாமி சிதம்பரனார் ‘விதவை’மறுமணம் என தொடர்ந்தது. அடுத்ததாக, நல்ல நாள், நல்ல நேரம் என்ற மூடநம்பிக்கையை உடைக்கும் அடுத்த முன்னெடுப்புக் காலகட்டம். 1933 ஆம் ஆண்டு! எனவே 4-30 - 6-30 மணி என்பதே திருமண நேரமாக முடிவு செய்யப்பட்ட நேரமாக இருக்க வாய்ப்புகள் அதிகம் எப்படி இருப்பினும் மணமகனும் அவரது தந்தையும் குறிப்பிடும் மண விழா நிகழ்விடம் ஒன்றே. ஆனால் மண விழா நேரத்தை 3-00 மணி என்றும், 4-30 மணி என்றும் இருவரும் மாற்றி மாற்றி போட்டிருப்பது எதனால்?

மணமகனின் தந்தை தனது இரயில்வேத்துறை நண்பர்களுக்கும், அதிகாரிகளுக்கும் கொடுக்கும் நோக்கத்தோடு அழைப்பிதழை ஆங்கிலத்தில் அச்சிட்டிருக்கக் கூடும். மண விழா நேரத்தை 3-00 மணி என்று அச்சிட்டிருப்பதற்குக் காரணம் என்னவாக இருக்கும் என்பது புலப்படவில்லை. ஒரு வேளை இயல்பாக தாமதமாக வரும் நம்மவர்களின் பழக்கத்தை மனதில் வைத்துக்கொண்டு, சற்று நேரம் தாமதமாக வந்தாலும் முழு சொற்பொழிவுகளையும் கேட்கட்டும் என்பதற்காக அவ்வாறு முன்நேரம் குறிப்பிட்டு அச்சிட்டிருக்கலாம்; அல்லது ஆங்கிலேய அதிகாரிகள் 3-00 மணிக்கே வந்து மணமக்களைச் சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவித்துவிட்டு புறப் பட்டு செல்வதற்காக அவ்வாறு குறிப்பிட்டிருப் பார்களோ என்பதை உறுதி செய்ய முடியவில்லை.

ஆனால் திருமண நாளுக்கு (14-5-1933) சரியாக ஒருவாரம் முன்னதாக 7-5-1933 அன்று வெளியான ‘குடிஅரசில்’ திருச்சி, உறையூர், தமிழ்நாடு புரோகித மறுப்புச் சங்கத்தின் அழைப்பாக வெளிவந்துள்ள அழைப்பிதழிலோ ‘திருச்சி, பாலக்கரை, பருப்புக் காரத் தெரு, 10ஆம் நெம்பர் இல்லத்தில் 14-5-1933 ஞாயிறு அன்று மாலை 6-00 மணிக்கு நடைபெறும்’ என்று கூறப்பட்டுள்ளது.

ஒரு வேளை, திருமண நாள் நெருங்க நெருங்க, கிறிஸ்துவ பாதிரியார்கள், காவல் துறைக்கும் அரசு உயர் அதிகாரிகளுக்கும், காவல் துறை, நிர்வாகத் துறை உயர் அதிகாரிகள் கொடுத்த நெருக்கடிகளைப் புரிந்துகொண்டு, சுயமரியாதை இயக்கத் தலைவர் பெரியாரையும், ‘குடிஅரசையும்’ கூர்மையாகக் கண்காணித்துக் கொண்டிருந்த உளவுத் துறையின் கவனத்தை திசை திருப்பும் நோக்கத்தோடு கூட அவ்வாறு மண நிகழ்விடமாக வேறு ஒரு இடத்தைக் குறிப்பிட்டதும், மணவிழா நிகழ்வு முடிவடையும் நேரமான மாலை 6-00 மணியை மண விழா நேரமாகக் குறிப்பிட்டதும் இருக்கக் கூடும் என்று கருத வேண்டியுள்ளது.

அது போலவே தான் மணமகன், அவரது தந்தையார் அழைப்பிதழ்களின் குறிப்பிட்டுள்ள நகராட்சி அரங்கத்தின் முன்பாக ஏராளமான காவல் படையை நிறுத்தி இருந்ததாக தோழர் சவுந்திரராஜன் அவர்களது குறிப்பு கூறுகிறது.

அதனால் தான் பெரியார் நகராட்சி மன்றத்தில் இருந்தவர்களிடம் தோழர் பிரான்சிஸ்வழியாக தோழியர் நீலாவதி (இராம சுப்ரமணியம்) வீட்டில் திருமணம் என்று தகவல் கூறச் சொல்லிவிட்டு, மணமகனும், அவரது தந்தையும் அழைப்பிதழில் குறிப்பிட்டிருந்த நகராட்சி பொதுமன்றம் - புரோகித மறுப்புச் சங்கத்தார் ‘குடிஅரசு’ அழைப்பிதழில் குறிப்பிட்டிருந்த, பாலக்கரை, பருப்புக்காரத் தெரு 10ஆம் நெம்பர் இல்லம் – தோழர் பிரான்சிஸ் வழியாக நகராட்சி மன்றத்தில் குழுமியிருந்த தோழர்கள், நண்பர்கள்,உறவினர்களிடத்தில் கூறப்பட்ட தோழியர் நீலாவதி அம்மையார் இல்லம் என்ற இந்த மூன்று இடங்களும் அல்லாத பாலக்கரை, அந்தோணியார் தெருவில் 4ஆம் கதவெண்ணில் உள்ள மணமகனின் இல்லத்தின் மாடியில் குறைந்த மக்கள் மத்தியில் திட்டமிட்டவாறு மண நிகழ்வை திட்டமிட்டிருந்த காலமான பிற்பகல் 4-30 முதல் 6-00மணிக்குள்ளான நேரத்தில் நடத்தி முடித்து விட்டார் என்பதைத்தான் மணமகன் சவுந்திரராஜனின் பதிவு நமக்குக் கூறுகிறது.

காவல்துறை அதிகாரிகள் மாலை 6-30 மணிக்குத் தான் மணவிழா நிகழ்விடம் வந்து பெரியாரையும், மணமக்கள், அவர்களது பெற்றோர்கள் ஆகி யோரைக் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றதாகவும் தோழர் சவுந்திரராஜன் தனது குறிப்பில் கூறியுள்ளவாறு காவல்துறையினரும் எல்லாம் முடிந்த பின்பே அங்கு வந்துள்ளனர்.

ஆக இரு குடும்பத்தவரும் மனம் ஒப்பி நிகழ்த்திக் கொள்ள எண்ணினாலும், கிறிஸ்துவ மதவாதிகளும், கிறிஸ்துவ மதவாதிகளுக்கு துணை நிற்கும் காவல் துறையும் தடுக்க எடுத்த முயற்சிகளையும், முதல் கத்தோலிக்க சுயமரியாதை திருமணத்தைத் திட்ட மிட்டவாறு நடத்தியே ஆக வேண்டும் என குடும்பத்தாரும், பெரியாரும் எடுத்த முயற்சிகளும் இரு தரப்பாரும் தங்கள் நிலைப்பாட்டில் பிடிவாதமாக இருந்ததைக் காட்டுகிறது..

மூன்று அழைப்பிதழ்களிலும் வெவ்வேறு நேரமும், வெவ்வேறு நிகழ்விடமும் குறிப்பிடப்பட் டிருந்ததற்கான காரணங்கள் இவை தாம்.

நாகம்மையார் மறைவு; அடுத்து நடந்த கத்தோலிக்கர் சுயமரியாதை திருமணம் ஆகியவை குறித்து உள்ள தேதி குழப்பம் குறித்து அடுத்த இதழில் காண்போம்.

Pin It