இந்தியாவில் ‘தூக்குத் தண்டனை’யை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சட்ட ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இது குறித்து கடந்த மே 23 ஆம் தேதி சட்ட ஆணையம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தூக்குத் தண்டனைக் குறித்து விரிவான ஆய்வுகள், விவாதங்கள் தேவை. இந்த விவாதங்களும் ஆய்வுகளும் சட்டத்தை உருவாக்குவோருக்கும் நீதித்துறைக்கும் பயன்பெறத்தக்க வகையில் உதவிட வேண்டும். தூக்குத் தண்டனைக்கு எதிராக உருவாகி வரும் சர்வதேசப் போக்கினைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

கடந்த பத்தாண்டுகளில் தூக்குத் தண்டனைக் குறித்து உச்சநீதிமன்றம் தீவிரமாக கவனம் செலுத்தி வருவதை சுட்டிக் காட்டும் இந்த அறிக்கை, இந்த தண்டனையை வழங்குவதில் ஒரே சீரான அணுகுமுறை மேற்கொள்ளப்படாததை சுட்டிக் காட்டியுள்ளது. சட்ட ஆணையம் இது குறித்து ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று பல நேரங்களில் உச்சநீதிமன்றமே பரிந்துரைத்துள்ளது.

கருணை மனுக்களை பரிசீலிப்பதில் நீண்ட காலதாமதம் செய்வது உயிர் வாழும் அடிப்படை உரிமைக்கு எதிரானது என்ற அடிப்படையில் 15 பேர் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்சநீதிமன்றம் அண்மையில் குறைத்துள்ளது.

தூக்குத் தண்டனையை சட்டத்தில் வைத்துள்ள 59 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. தூக்குத் தண்டனை தவறாக விதிக்கப்படும் நிலையில் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள கருணை காட்டும் அதிகாரம் போதுமான பாதுகாப்பாக இருக்க முடியுமா?

கருணை மனுவை நீண்டகாலம் கிடப்பில் போடுவது அடிப்படை உரிமைக்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தப் பிறகு கருணை காட்டும் அதிகாரத்தின் பாதுகாப்பு - தவறான தூக்குத் தண்டனைகளை தடுத்து நிறுத்தப் பயன்படுமா? என்பது குறித்து விவாதங்கள் நடத்தப்பட வேண்டும் என்று ஆணையத்தின் அறிக்கை கூறுகிறது.

உலகில் 140 நாடுகளில் தூக்குத் தண்டனை ஒழிக்கப்பட்டுள்ளன. 20 நாடுகளில் சட்டத்தில் இந்தத் தண்டனை இருந்தாலும் 10 ஆண்டுகளாக அதைப் பயன்படுத்தாமல் நிறுத்திவிட்டன.

இது குறித்து 30 நாட்களில் மக்கள் தங்கள் கருத்துகளை ஆணையத்துக்கு அனுப்பலாம் என்று ஆணையத்தின் அறிக்கை கூறுகிறது.

Pin It