பெண்களின் திருமண வயதை 18-ல் இருந்து 21-ஆக உயர்த்துவதற்கு அமைச்சரவை ஓப்புதல் வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு பட்ஜெட் உரையில், 'பெண்களின் திருமண வயதை உயர்த்துவது தொடர்பாக ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. சமதா கட்சியின் முன்னாள் தலைவர் ஜெயா ஜெட்லி தலைமையில் மத்திய சுகாதார அமைச்சகம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், சட்ட அமைச்சகம் ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் அடங்கிய 10 பேர் கொண்ட குழு இதற்காக அமைக்கப்பட்டது. அவர்கள் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் தற்போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஒரு பக்கம் பெரியாரிய இயக்கங்கள் இதை ஆதரிக்க கம்யூனிஸ்ட் இயக்கங்கள், கட்சிகள் எதிர்த்துள்ளன. இரண்டு தரப்புமுமே அவர்கள் நியாயத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள். ஆனால் பெண்களின் திருமண வயதை 21ஆக உயர்த்துவதால் அவர்களின் கல்வி, திருமணத்திற்குப் பின்னான உடல்நலன் இவற்றைப் பற்றி பேசுபவர்கள் ஏன் இன்றைய இந்திய சூழ்நிலையில் பெண்களின் உண்மையான இருப்பு என்னவாக உள்ளது என்பதைப் பற்றி பேச மாட்டேன் என்கின்றார்கள். அதேபோல மற்றொரு தரப்பு இது முஸ்லிம்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதலாக ஏன் குறுக்கிப் பார்க்கின்றார்கள். (அது உண்மையாக இருந்தாலும் குழந்தைத் திருமணம் போன்றவற்றை நாம் ஒருக்காலும் அது எந்த மதத்க்ச் சார்ந்தவர்கள் செய்தாலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதால் அதைப் பற்றி நாம் அலட்டிக் கொள்ள தேவையில்லை)
ஆனால் உண்மையிலேயே பிஜேபி அரசுக்கு பெண்களின் நலன் மீது அக்கறை இருக்குமானால் அது முதலில் செய்திருக்க வேண்டியது திருமண வயதை உயர்த்துவதை அல்ல. மாறாக பெண்கள் இடஒதுக்கீடு வரைவுச் சட்டத்தை நிறைவேற்றி இருக்க வேண்டும்.
இந்தச் சட்டம் இதுவரை கிடப்பில் போடப்பட்டுள்ள ஒரு வரைவு சட்டமாகும். இந்திய அரசியல் அமைப்பின் 108 வது சட்டத் திருத்தமாக இது கொண்டு வரப்பட்டது. இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையில் இது மார்ச் 2010ல் நிறைவேற்றப்பட்டது. ஆனால் கீழவையான மக்களவையால் இன்னும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
இந்தச்சட்டம் இந்திய மக்களவையிலும், மாநில சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கிட வழிவகை செய்கிறது. இச்சட்டத்தின் படி பெண்களுக்கென ஒதுக்கப்படும் தொகுதிகள் மூன்று பொதுத் தேர்தல்களுக்கு ஒருமுறை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும்.
மக்கள் தொகையில் பாதி அளவுள்ள பெண்கள், நாடாளுமன்ற பிரதிநிதிகள் என்று வரும்போது, வெறும் 11 விழுக்காடு பேர் மட்டுமே உள்ளார்கள். இந்த மசோதாவுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் கட்சிகள்கூட தங்களது கட்சயில் பெண்களுக்கு தேர்தலில் போட்டியிட தாமாக முன்வந்து 33 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கின்றார்களா என்று பார்த்தால் அது நடப்பதில்லை.
அடுத்து இந்திய சமூகத்தில் புரையோடிப் போய் கிடக்கும் ஆணாதிக்கம் பெண்களை ஊதியமற்ற கொத்தடிமைகளாக நடத்துவதால் அவர்களின் பொருளாதாரப் பங்களிப்பு மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றது.
உலகத் தொழிலாளர் ‘நிரோணம்’ சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 20 விழுக்காட்டுக்கு குறைவான பெண்கள் மட்டுமே மாத வருமானம் பெரும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.
50 விழுக்காடு பெண்கள் சுய தொழில் செய்பவர்களாகவும், கிட்டத்தட்ட 30 விழுக்காடு பெண்கள் ஐ.எல்.ஒ அளிக்கும் விளக்கத்தின்படி, “குடும்பப் பணிகளில் உழைப்பை செலுத்துவோர்” என்ற பிரிவின் கீழ் வருபவர்களாகவும் இருக்கின்றனர்.
மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், வட அமெரிக்க நாடுகளில் மாத வருமானம் ஈட்டுவோர் 89.4 விழுக்காடாகவும், ஐரோப்பிய நாடுகளில் 88.4 விழுக்காடாகவும், அரபு நாடுகளில் 75 விழுக்காடாகவும், லத்தின் அமெரிக்க நாடுகளில் 66.6 விழுக்காடாகவும், மத்திய மற்றும் மேற்கு ஆசிய நாடுகளில் 63.2 விழுக்காடாகவும், கிழக்கு ஆசிய நாடுகளில் 55.3 விழுக்காடும், ஆப்ரிக்க நாடுகளில் 21.4 விழுக்காடாகவும், அதுவே இந்தியாவில் 20 விழுக்காடாகவும் உள்ளது என்பதிலிருந்து, நமது பெண்கள் உழைப்பு சந்தையில் எந்த இடத்தில் உள்ளனர் என்பதை அறிந்து கொள்ள முடியும். (ஆதாரம் ஐ.எல்.ஒ அறிக்கை)
அமைப்பு ரீதியாக திரட்டப்பட்ட தொழில்களில் பெண்கள் பங்கேற்பு குறைவாக இருப்பதால், நம் நாட்டின் மொத்த வருமானத்தில் பெண்களின் பங்கு 17 விழுக்காடு மட்டுமே. அதே நேரம் உலக சராசரி அளவு 37 விழுக்காடு ஆகும் என மெக்கின்சி ஆய்வுகள் கூறுகின்றன.
இந்தியா இன்னும் 20 விழுக்காடு பின்தங்கி உள்ளது. மக்கள் சீனத்தில் அந்நாட்டு மொத்த உற்பத்தியில் பெண்கள் பங்கு 41 விழுக்காடாக உள்ளது. பெண்கள் உழைப்பு எப்போதுமே கணக்கில், வராத உழைப்பாகவே இந்திய சமூகத்தில் நீடிக்கிறது. இதை மாற்றுவதற்கு இதுவரை எந்த அரசுகளும் எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.
மேலும் வீடுகள், நிறுவனங்கள் போன்றவற்றில் வேலைக்குப் போகும் பெண்களுக்கு ஆண்களை விட மிகக் குறைவான ஊதியமே வழங்கப்படுகின்றது. சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படுவதில்லை. ஊதிய விசயத்தில் கடுமையான பாரபட்சம் காட்டும் மனநிலை அனைத்து இடங்களிலும் நீடிக்கின்றது.
கல்வியை எடுத்துக் கொண்டால் இந்தியாவில் 65.5 விழுக்காடு ஆண்கள் படிப்பறிவு பெறும் நிலையில் 50 விழுக்காடு பெண்கள் மட்டுமே கல்வியறிவு பெறுகின்றனர். பெரும்பாலான பெண்களின் படிப்பறிவு பள்ளியோடு முடிந்து விடுகின்றது.
மேலும் ஆண் குழந்தையை விட பெண் குழந்தைக்கு சத்துணவு குறைவாகவே கிடைக்கிறது. பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பலவீனமாகவும், நோய் எதிர்ப்பு சக்தி அற்றவர்களாகவும் உள்ளனர். குடும்பத்தில் அனைவரும் சாப்பிட்ட பின்னர் கடைசியாகவும் மீதமிருப்பதையும் உண்ணும் நிலையில் பல பெண்கள் உள்ளனர்.
சட்டம் என்னதான் பெண்களின் சொத்துரிமை பற்றி பேசினாலும் இந்திய ஆணாதிக்க சமூகம் அதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளும் மன நிலையில் இல்லை. பெண்களுக்கு என எந்த சொத்தும் இருப்பதில்லை. அதே போல பெற்றோரது சொத்தில் எந்த பங்கும் அவர்களுக்கு அளிக்கப்படுவதுமில்லை.
மேலும் இந்தியா சமூகம் ஏழைகளுக்கு கட்டமைத்துள்ள மிக மோசமான மருத்துவ சேவையாலும், குழந்தை திருமணம், ஊட்டச்சத்துக் குறைபாடு போன்றவற்றாலும் தாய் சேய் இறப்பு விகிதம் இந்தியாவில் மிக அதிகமாக உள்ளது.
உலகளவில் நாள் ஒன்றுக்கு 800 கர்ப்பிணி பெண்கள் குழந்தைப்பேறு தொடர்பாக உயிரிழக்கின்றார்கள் என்றால் இவற்றில் 20 சதவீதம் பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்களாக உள்ளார்கள் என யுனிசெஃப் அமைப்பு கூறுகிறது.
அடுத்து பெண்கள் மீதான வன்முறையில் உலகிலேயே மிக மோசமான நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு நிமிடத்திற்கும் 26 பெண்கள் வன்முறைத் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். ஒவ்வொரு 34 நிமிடத்திற்கும் ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகின்றார். ஒவ்வொரு 42 நிமிடத்திற்கும் ஒரு பெண் உடல் ரீதியான வன்முறைக்கு உள்ளாகிறார், ஒவ்வொரு 43 நிமிடத்திற்கும் ஒரு பெண் கடத்தப்படுகிறார், ஒவ்வொரு 93 நிமிடத்திற்கும் ஒரு பெண் கொல்லப்படுகிறார்.
தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையின்படி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 2018ல் 3.78 லட்சமாக இருந்தது. அதுவே 2019இல் 4.05 லட்சமாக அதிகரித்துள்ளது. 2019 ல் இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 87 பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகத் தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கை தெரிவிக்கிறது.
2001 முதல் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் தற்கொலை செய்து கொள்ளும் திருமணமான பெண்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தைத் தாண்டுகிறது. உலக அளவில் தற்கொலை செய்து கொள்ளும் பெண்களில் 40% பேர் இந்தியப் பெண்களே. சர்வதேச தற்கொலை சராசரி விகிதத்தைவிட இந்தியப் பெண்களின் தற்கொலை விகிதம் இருமடங்கு அதிகமாகும்.
"தற்கொலைகளில் குறைந்தது 50 சதவிகிதம் வரதட்சணை சம்பந்தப்பட்டதாக இருக்கலாம். ஆனால் அவை குறைவாக மதிப்பிடப்படுகின்றன" என்கிறது பெண்களுக்கான "விமோச்சனா" அமைப்பு. காஸ் அடுப்பு வெடித்தல், குளியலறையில் விழுதல் போன்ற ‘தற்செயலாக’ நடந்த மரணங்களுக்கும் இதில் இடமுண்டு. 2019ல் நாடு முழுவதும் ஏற்பட்ட சமையல் சிலிண்டர் வெடித்த விபத்துகளில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
இப்படி பல பிரச்சினைகளை சந்திக்கும் நிலையில்தான் இந்தியப் பெண்கள் தொடர்ந்து இருந்து வருகின்றார்கள். உடல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் அவர்கள் ஆண்டாண்டு காலமாக ஒட்டச் சுரண்டப்பட்டு வருகின்றார்கள்.
ஆனால் நம்முடைய எண்ணமோ அவர்களை எப்படி மேலும் மேலும் அடிமைத்தனத்தில் தள்ளுவது என்பதை நோக்கி உள்ளதே தவிர பெண் விடுதலையின் முழுமையை நோக்கியதாக இல்லை.
அதனால் பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்துவதால் எந்த பெரிய சமூக மாற்றமும் வந்துவிடப் போவதில்லை. சமூக வெளியில் அரசியல் பொருளாதார வாய்ப்புகள் அனைத்தும் மறுக்கப்பட்டு அடிமைகளாக பெண்கள் நடத்தப்படும் நிலை நீடித்திருக்கும் வரை இது போன்ற சட்டங்கள் எந்த பெரிய சமூக தாக்கத்தையும் ஏற்படுத்திவிடாது.
சட்டத்தை ஆதரிப்பதா எதிர்ப்பதா என்பதல்ல இப்போதுள்ள பிரச்சினை, அந்த சட்டத்தால் ஏதாவது பெண்களுக்கு உருப்படியான நல்லது நடக்கின்றதா என்பதும் அதற்கான கட்டமைப்பு இங்கு ஏற்படுத்தப் பட்டிருக்கின்றதா என்பதுதான் பிரச்சினை. அப்படி பார்த்தால் இந்த சட்டம் புண்ணுக்கு புனுகு பூசுவது போன்றதுதான்.
- செ.கார்கி