15-05-2014 ஆம் நாளிட்ட ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்தில் 14-05-1933 அன்று பல தடைகளை மீறி, பெரியார் தலைமையில் சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்ட தோழர் எம்.ஏ.சவுந்தரராஜன், 27-05-1979 இல் எழுதி வைத்திருந்த நினைவுக் குறிப்பு வெளி வந்துள்ளது.

‘குடிஅரசு’ ஏட்டின் பதிப்பாளராய் இருந்துவந்த நாகம்மையார் 11-05-1933 அன்று காலமாகிப் போனதால், புதிய பதிப்பாளரின் பெயருக்கு பத்திரிக்கையை மாற்றுவதற்காக அந்த இதழோடு (மாலை-9; மலர்-3) ‘குடிஅரசு’ நிறுத்தப்பட்டது.

பெரியாரின் தங்கை சா.ரா.கண்ணம்மாள் அவர்கள் பதிப்பாளராக பதியப் பெறுவதற்கு இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன.

அடுத்த ‘குடிஅரசு’ இதழ் ( மாலை-9; மலர்- 4 ) 16-07-1933 அன்று தான் வெளிவந்தது.

அவ்விதழின் 9ஆம் பக்கத்தில் “கத்தோலிக் கர்களே, இனி பலிக்காது” என்ற தலைப்பில் வெளிவந்துள்ள கட்டுரையை இங்கு வெளியிடுகிறோம்.

“எவனெழுதினாலென்ன?” என்ற புனைப் பெயரில் இக்கட்டுரை வெளி வந்துள்ளது.

திருச்சியில் மே மாதம் 14 –ந் தேதி நடந்த ஒரு சுயமரியாதைத் திருமணத்தை முன்னிட்டு தோழர் ஈ.வெ.ராமசாமியும், மணமகனும் மணமகளும் இருவருடைய தந்தைமாரும் ஆகிய ஐவர்களை இரண்டு போலீஸ் சர்க்கிள் இன்ஸ்பெக்டர்கள், இரண்டு சப் இன்ஸ்பெக்டர்கள், பல போலீஸ் ஏட்டுகள், கான்ஸ்டேபிள்கள் ஆகியவர்கள் திருமணம் நடந்த இடத்துக்கு, துப்பாக்கி சகிதம் வந்து அரஸ்ட் செய்து, பாலக்கரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றதும் அங்கு போலீஸ் ஸ்டேஷனில் மாலை 5-30 மணி முதல் 10-30 மணி வரையில் வைத்திருந்து ஸ்டேட்மெண்டுகளும் முச்சலிக்காக் களும் (ஒப்பந்தம்) எழுதி வாங்கிக்கொண்டு விடுதலை செய்ததும் யாவரும் அறிந்ததேயாகும்.

மற்றும் திருமண ஒப்பந்தம் நடந்த இடத்தின் முன்வாசலில் தோழர் ஈ.வெ.ராமசாமியை போலீஸ் சர்க்கிள் இன்ஸ்பெக்டர்கள் பல கேள்விகள் கேட்டபோது தோழர் ராமசாமி இன்ஸ்பெக்டரைப் பார்த்து, “நீங்கள் என்ன முறையில் எந்த ஆதாரத்தின் மீது இந்தக் கேள்விகள் கேட்கின்றீர்கள்?” என்று கேட்டதற்கு “மிஸ்டர் ராமசாமி நாய்க்கரே உங்களை அரஸ்ட் செய்து இருக்கிறோம். நீங்கள். கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லவேண்டும்” என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தக் கூட்டத்தில் சுமார் 200, 300 பேர்கள் அறிய கர்ச்சனையோடு சொன்னார்.

அதற்கு தோழர் ராமசாமி என்ன ஆதாரம் என்று கேட்க, “நீங்கள் செய்துவைத்த கல்யாணம் சட்ட விரோதமானது செஷன்சுக்கு கமிட்டி செய்யக் கூடிய கேசு, 10 வருஷ தண்டனைக்கு உட்பட்டது, வாரண் டில்லாமல் அரஸ்ட் செய்யக்கூடியது, ஆதலால் ஆதாரம் தேவை இல்லை” என்றும் சொன்னார்.

இப்படியிருக்க இன்றைய தினம் அதே போலீசார் தோழர்களான ஈ.வெ.ராமசாமியையும், மண மக்களையும், பெற்றோர்களையும் போலீசார் அரஸ்ட் செய்யவில்லை என்றும், ஸ்டேட் மெண்டோ, முச்சலிக்காவோ வாங்கவில்லை என்றும், கலகம் நடக்குமோ என்கின்ற சந்தேகத்தின் மீது (கல்யாணத்தை நடத்திக்கொடுப்பதற்காக) கல்யாண வீட்டுக்குப் போனதாகவும் சொல்லு கின்றார்கள் என்றால், இதற்கு எதை ஒப்பிடுவது என்பது நமக்கு விளங்கவில்லை.

திருச்சி போலீசாரும் கத்தோலிக்க பாதிரிகளும் தோழர் ராமசாமி மீது கிறிஸ்தவ கல்யாணச் சட்டப்படி கேசு செய்வதற்கு அவர்கள் பட்டபாட்டை திருச்சி பொது ஜனங்கள் கண்டு சிரிப்பாய் சிரித்து விட்டார்கள்.

திருச்சி கத்தோலிக்க பாதிரிகள் சென்னையில் பல பாதிரி குருக்களையும் பல பாரிஸ்டர்களையும் மேதாவி வக்கீல்களையும் போய் அபிப்பிராயம் கேட்டும் பார்த்து விட்டார்கள். திருச்சி பப்ளிக் பிராசிக்கூட்டரையும் அதிகாரிகளையும் கெஞ்சியும் பார்த்து விட்டார்கள். எங்கு போய் அழுதும் ஒரு பயனும் ஏற்படாததால் உப்புக் கண்டம் பறி கொடுத்த பாப்பாத்தி போல் வாயை மூடிக்கொண்டார்கள்.

இந்த லட்சணத்தில் இந்த பித்தலாட்ட தட புடலுக்கு பிறகு திருச்சியிலும் சுற்றுப் பக்கங்களிலும் இது போன்ற பல திருமணங்கள் நடந்தும் ஆய்விட்டது. கிறிஸ்தவர்களுக்குள்ளாகவே ஒரு மனைவி இருக்க மற்றொரு மனைவியை மணக்கும் திருமணமும் சிலது நடந்தாய் விட்டது.

இவற்றின் பயனாய் திருச்சி ஜில்லாவில் இப்போது அனேகர் தங்களை கிறிஸ்தவர் என்று சொல்லிக் கொள்ளவே வெட்கப்படும்படியான நிலைமை வந்து விட்டது. பாதிரிமார்களுக்கும் தனியாய் வழியில் நடக்க பயம் ஏற்பட்டு விட்டது.

அவ்வளவு தூரம் போவானேன் உலக கிறிஸ்தவ சமூகத்துக்கே தலைமையான ரோம்நகரில் உள்ள சர்ச்சுக்கே வெடிகுண்டு போட்டு சேதம் விளைவித்து விட்டார்கள். என்பதோடு போப்பரசர் என்று சொல்லப்படுபவரும் “கடவுளுக்கு” சமானமாய் கத்தோலிக்க கிறிஸ்தவர்களால் மதிக்கப்படுவருமான ரோம் பிரதம குருவுக்கே, கட்டடத்தை விட்டு வெளியில் வரவேண்டுமானால் போலீசு –ஒற்றர்கள் (சி.ஐ.டி) பந்தோபஸ்து இல்லாமல் வரமுடியவில்லை என்று கத்தோலிக்க பத்திரிகைகள் கூக்குரல் இடுகின்றன.

நிலைமை இப்படி இருக்க - இதற்கெல்லாம் காரணம் தங்கள் மதத்தின் போலித்தனமும், பாதிரிகளின் பித்தலாட்டமும், சூட்சிகளுமே காரணம் என்று எண்ணாமல், குடிஅரசின் மீதும் சும (சுயமரியாதை) இயக்கத்தின் மீதும் பழி கூறுவதும், குடிஅரசை ஒழிப்பதற்காக கமிட்டி போட்டு பணம் வசூலிப்பதும், குடிகாரன் வெறிகாரன் போல் கண்டபடி இழி வார்த்தைகளால் வைவதும், சில குடிகாரர்களை ஏவி விட்டு கலகம் செய்யச் செய்வதுமான காரியங்களால், தங்கள் மத வியாபாரத்தைக் காப்பாற்றிக் கொள்ளலாம் என்று பாதிரிகள் நினைத்தால் இந்த 20வது நூற்றாண்டில் செல்லுமா என்று தான் கேட்கின்றோம்.

குடிஅரசு பத்திரிகை செத்துப் போகலாம், சு-ம இயக்கமும் மறைந்து போகலாம். என்றாலும் அவை களுக்கு பதில் உடனே அவற்றை விட வேகமானதான பத்திரிக்கையும் இயக்கமும் அவைகள் புதைபட்ட இடத்திலிருந்தே தோன்றி விடும் என்பதை யாரும் மறுக்கமுடியாது. ஆனால் கத்தோலிக்க கிறிஸ்தவ மத இயக்கம் மாத்திரம் வெகு சீக்கிரத்தில் அழுவாரற்ற பிணமாக சாகப் போகின்றது. என்பதற்கு பந்தயம் கட்டத் தயாராய் இருக்கிறோம்.

இன்றைய தினம் திருச்சி தஞ்சை இரண்டு ஜில்லாக்களிலும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்து வர்களை “இந்து மதக்” காரர்கள் சேர்த்துக் கொள் வதாய் இருந்தால் 100 க்கு 75 பேர் ‘இந்து’ க்களாக தயாராய் இருக்கிறார்கள். கத்தோலிக்க கிறிஸ்துவர் களுக்கு உள்ள சர்க்கார் சலுகை “இந்து” க்களுக்கு இருந்து அதன்மூலம் மதம் மாறுகின்றவர்களுக்கு ஏதாவது பிழைப்புக்கு வழி செய்வதாய் இருந்தால், பாக்கி 24 பர்செண்டும் மன்னிப்பு கேட்டுக்கொண்டு “மனந்திரும்ப”த் தயாராய் இருக்கிறார்கள்.

நம்மைப் பொருத்தவரை கிறிஸ்துவரானாலும், இஸ்லாமியரானாலும், இந்துவானாலும் மற்றும் யாரானாலும், மதத்தையே அடியோடு விட்டு விடுவதானால் விட்டு விடட்டும். அப்படிக்கில்லாமல் ஒரு மதத்தை விட்டு மற்றொரு மதத்துக்கு போவது என்பது (வாழ்க்கை சௌகரியத்தைத் தவிர) யாதொரு காரியத்துக்கும் பயன்படாது என்றும், புத்திசாலி தனமாகாது என்றும் தான் கருதுகிறோம்.

உலகில் உள்ள மதங்களில் சில மதங்களுக்கு நல்ல கொள்கைகள் உண்டு புத்தி இல்லை. சில மதங்களுக்கு புட்தியுண்டு கொள்கையில்லை. சில மதங்களுக்கு புத்தியுமில்லை கொள்கையுமில்லை, என்கின்ற முறையில் உலகில் உள்ள மதங்களை எல்லாம் பிரித்துப் பார்ப்போமேயானால்; இந்த கத்தோலிக்க கிறிஸ்துவ மதமானது, கொள்கையும் இல்லை புத்தியும் இல்லை, என்கின்ற கூட்டத்தில் தான் சேர்க்கக் கூடியதாயிருக்கிறது. இந்தக் காரணத்தால் தான் இப்படிப்பட்ட மதங்கள் இந்தக் காலத்தில் வாழ முடியாது என்று சொல்ல வருகின்றோம்.

இந்த மதங்களுக்கு தாய் வீடுகளாய் இருக்கும் மேல் நாடுகளில், உதாரணமாக ஸ்பெயின், ஜர்மனி, ருஷியா, முதலிய தேசங்களில் கோயில்கள் இடிபடுவதும், கோவில் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படுவதும், பாதிரிமார்கள் போலீஸ் பந்தோபஸ்தில் வாழ்வதும், மத ஆதாரங்களைத் தூள் தூளாக்கி எரிப்பது போல் எதிர்ப் பிரசார புஸ்தகங்கள், துண்டு விளம்பரங்கள் ஆகியவைகளைப் பதிப்பித்து வெளியிடுவதுமான காரியங்கள், இன்று அளவிட முடியாதபடி நடந்துவருவதை, எவ்வளவு அசத்திய சாமர்த்திய பாதிரியும் மறுக்க முடியாதபடி விளங்குகின்றன.

இதற்காக குடிஅரசையும் சு-ம வையும் வைவதால் பயனென்ன? கிறிஸ்துவ மார்க்கம் ஒழிவதற்கும் பழிக்கப்படுவதற்கும் காரணம், மனிதர்களுக்கு அறிவு வளர்ச்சியும், சுயமரியாதை உணர்ச்சியும், பெருகிவருவது தான் காரணமே ஒழிய வேறல்ல.

ஆகையால் கிறிஸ்தவ மதம் மாத்திரமல்லாமல், உலகில் இனி எந்த மதம் வாழவேண்டுமானாலும் மக்களை மூடர்களாக வைத்திருக்க முயற்சித்து வெற்றி பெற்றால் மாத்திரம் ஒரு சமயம் முடியுமே ஒழிய, மற்றபடி குடிஅரசையும், சு-ம இயக்கத்தையும், இராமசாமியையும், வைது பழித்து தூற்றுவதன் மூலம், தங்கள் மதத்தைக் காப்பாற்றிவிடலாம் என்று நினைப்பது, இனி பலிக்காது என்பதை உணர வேண்டுமாய்த் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

“குடி அரசை” ஒழிக்க பண வசூலாம் “குடி அரசை” எதிர்த்துப் போராட கத்தோலிக்கர்கள் நிதி என்ற பெரிய தலைப்பின் கீழ் “கத்தோலிக்க லீடர்” என்ற ஆங்கில பத்திரிகையில் ஒரு முறையீடு காணப்படுகிறது.

கத்தோலிக்க கிறிஸ்தவ பாதிரிகள் சு.ம. இயக் கத்தின் மீதும், ‘குடி அரசின்’ மீதும், ஆத்திரங் கொண்டு, அவைகளை அழிப்பது என்கிற முடிவு கொண்டு நிதி வசூல் செய்து வருகிறார்கள்.

அவர்களின் வேண்டுகோளின் பிரகாரமே இது வரையிலும் ரூ. 250க்கு மேல் பணம் சேர்ந்திருப்ப தாகவும் நமக்குத் தெரியவருகிறது.

சபாஷ்! கத்தோலிக்கர்களே!! மெச்சினோம் புத்திசாலித்தனத்தை !!! 

Pin It