தந்தை பெரியார் பிறந்த நாளன்று, ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் மதத்தின் பெயரால் ஒரு காட்டுமிராண்டித்தனம் அரங்கேறி இருக்கிறது.

அந்த ஊரில் வசிக்கும் ஜான் பீட்டர் என்பவர் தன் வீட்டில், தன் உறவினர், நண்பர்களோடு ஜெபம் நடத்துவது வழக்கம். இதை அறிந்த இந்து முன்னணியினர் கடந்த 17ஆம் நாள் யாரும் அங்கு ஜெபம் செய்யக்கூடாது என்று வந்தவர்களை மிரட்டி இருக்கின்றனர். அச்சம் காரணமாக அனைவரும் திரும்பிப் போய்விட்டனர்.

ஆனால் ஜான் பீட்டர் மட்டும் அவர் குடும்பத்தினருடன் வீட்டிற்குள் ஜெபம் செய்துள்ளார். அப்போது கூட்டமாகக் கைகளில் கம்பு தடியோடு அங்கு வந்த, இந்து முன்னணியினர் சுமார் 30 பேர் வாசலிலேயே காத்திருந்திருக்கின்றனர். ஜெபம் முடிந்து வெளியில் வந்த அந்த ஆறு பேர் மீதும் கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது.hindutwa 640அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து, அவர்களைப் பெருந்து றை மருத்துவமனையில் கொண்டு போய்ச் சேர்த்திருக்கின்றனர். உயிருக்குப் போராடியவர்கள் ஓரளவு நலம் பெற்று மீண்டும் இப்போது வீடு திரும்பி உள்ளார்கள். இன்றும் அவர்களின் சொந்த வீட்டிற்குப் போக முடியாமல், உறவினர்களின் வீடுகளில் தங்கி உள்ளார்கள்.

காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு முதல் தகவல் அறிக்கையும் பதிவாகியுள்ளது.

இந்நிகழ்வு, தமிழ்நாடு அரசின் சிறுபான்மையினர் நல ஆணையம் மற்றும் சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவின் கவனத்திற்கும் வந்துள்ளது!

சட்டம் என்ன செய்யப் போகிறது என்பது ஒரு புறம் இருக்க, சமூகம் என்ன செய்யப் போகிறது என்பது நம் முன் இருக்கும் பெரிய வினாவாகும். சாதி வெறியும், மதவெறியும் கூடிக் கொண்டே போவது நாட்டை நாசப்படுத்தி விட்டுத்தான் ஓயும்!

ஒருவர் தன் வீட்டில் ஜெபம் செய்வது என்பது அவருடைய சொந்த விருப்பத்தைப் பொறுத்தது. அதனைத் தடுப்பதற்கு யாருக்கும் உரிமைஇல்லை. காவிக் கும்பலின் மதவெறி ஆட்டம் தமிழ்நாட்டிலும் இப்போது தலைகாட்டத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, கோவை, ஈரோடு மாவட்டங்களில் மிகுதியாகிக் கொண்டே போவதைப் பார்க்க முடிகிறது.

இது வெறுமனே மதம் தொடர்புடையதன்று, முழுக்க முழுக்க அரசியல் நோக்கமுடையது. இதுபோன்ற காட்டுமிராண்டித்தனங்களால், நாட்டில் மதக் கலவரத்தை உருவாக்கி, அதில் குளிர்காய நினைப்பதுதான் அவர்களின் நோக்கம்.

அது மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்று கூறி, மிகச் சிறப்பாக இன்று தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் திராவிட மாடல் ஆட்சிக்கு ஊறு விளைவிப்பதும் அவர்களின் இன்னொரு நோக்கம்.

இதுபோன்ற கொடூரங்கள் நிகழும் போது, தமிழ்நாடு அரசும், காவல்துறையினரும் இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நச்சுக் கலவரங்கள் நாட்டின் பிற பகுதிகளுக்கும் பரவாமல் இருக்க அது ஒன்றே வழியாகும்!

- சுப.வீரபாண்டியன்

Pin It