தலைப்பைப் பார்த்ததும் பலரும் ஆச்சரியப்படலாம், இலஞ்சத்திற்கும் கடவுள் நம்பிக்கைக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்,? என்று நினைக்கலாம். தொடர்பு இருக்கிறது!

முதலில் இலஞ்சம் என்றால் என்ன என்பதை விளங்கிக்கொள்வோம். இலஞ்சம் என்பது தமிழ்ச் சொல்லாக இருக்கமுடியாது. தமிழில் சொல்வதானால், “கையூட்டு” என்று தூய தமிழில் சொல்லலாம். அதாவது கையால் ஊட்டுவது! எதை ஊட்டுவது? ஒரு தாய் தான் பெற்ற குழந்தைக்குப் பால் குடிக்கும் பருவம் தாண்டியதும் சோற்றைப் பிசைந்து ஊட்டு கிறாள். குழந்தை தானாகத் தன் உணவை உண்ண முடியாதபோது தாய் தன் கையால் ஊட்டுகிறாள். குழந்தைக்கு உணவூட்டுவதைப்போல, ஒருவருக்கு இன்னொருவர் கையால் ஊட்டுவதையே கையூட்டு என்கிறோம்! இங்கு ஊட்டப்படுவது உணவன்று, பணம்!

உணவுப்பசிக்கு உணவு, பணப்பசிக்குப் பணம்! பணப்பசி கொண்டவர்களுக்குப் பணத்தைக் கையால் ஊட்டுவதால் கையூட்டு என்றாயிற்று! தாய் தன்பிள்ளைக்கு உணவை, ஊட்டவில்லையென்றால் குழந்தை உண்ணாது. இது போலவே, பணப்பசி கொண்டவர்கள் தாமாகத் தம் கையால் பணத்தை எடுத்துக் கொள்ளமாட்டார்கள். பணப்பசியைத் தீர்த்து வைக்கப் பணத்தைக் கையால் மற்றோர் ஊட்டு கிறார்கள். அதனால் தான் இலஞ்சத்திற்குக் ‘கையூட்டு’ என்று பேர் உண்டாயிற்று.

இனி, கடவுளுக்கும் இலஞ்சத்திற்கும் எப்படித் தொடர்பு என்று பார்ப்போம்! கடவுள் என ஒன்று அல்லது ஒருவர் உண்டா இல்லையா என்பது தருக்கத்திற்குரியது. கடவுளை நம்புபவர்கள் பெரும்பான்மையினர். கடவுளை நம்பாத வர்களும் இருக்கின்றார்கள். ஆனால் அவர்கள் சிறுபான் மையராய் உள்ளனர். நம்புகிறவர்கள் எல்லோரும் ஒரே கடவுளை நம்புகிறவர்களாக இல்லை. பல மதங்கள் கடவுள் பற்றிய கொள்கைகளில் வேறுபடுகின்றன. ஆனால் எல்லா மதங்களும் கடவுள் உண்டு என்று நம்புகின்றன.

கிறித்துவ மதத்தில் கர்த்தர் என்கிறார்கள். கர்த்தருடைய சார்பாக அவருடைய தூதர் அனுப்பப்பட்டுள்ளார் என்று நம்புகிறார்கள். முஸ்லீம்களோ அல்லா ஒருவரே என்று நம்பித் தொழுகிறார்கள். கிறித்துவம், இஸ்லாம் அல்லாத இந்தியாவில் வாழும் ஏனைய மக்கள் அனைவருக்கும் இந்துக்கள் என்றே பேர் வைத்துவிட்டார்கள், இவர்களும் ஏற்றுக்கொண்டார்கள்.

தமிழர்கள் தனித் தன்மையுடையவர்கள். அவர்கள் இயற்கையோடியைந்து வாழ்ந்து வந்தவர்கள். இடையில் தமிழரிடையே வந்து புகுந்த வந்தேறி ஆரியர்களுக்கு எப்படியோ அடிமைப்பட்டுப் போய், மக்களை நான்கு வருணங்களாகப் பிரிக்கும் வருணாசிரம தருமம் என்ற ஆரியக் கோட்பாட்டை ஏற்றுக்கொண்டு நான்கு வருணங் களாகப் பிரிந்து, அந்த வருணங்களிலும் நாலாம் வருணமான சூத்திரர் என்ற வருணத்துள்ளும் பல்வேறு சாதியினராய்ப் பிரிந்து தாழ்ந்து போயினர்.

“யாதும் ஊரே யாவரும் கேளிர்!” என்று வாழ்ந்த வந்த தமிழர்கள், ஆரியரின் வரவால் நாலாவது வருணமான சூத்திரர் என்று தாழ்த்தப்பட்டுள்ளனர். யாவரும் கேளிர் என்று கூறி, வந்தோரையெல்லாம் ஏற்று வாழ்ந்த தமிழர் இழிசாதியினராகக் காலப்போக்கில் தாழ்த்தப்பட்டுப் போயினர். உயர்வு தாழ்வின்றி யாவரும் கேளிராக எண்ணி வாழ்ந்த தமிழர், நான்கு வருணங்களில் நாலாவது வருணமாக, தமக்கு மேலேயுள்ள மூன்று வருணத்தார்க்கும் உழைக்கும் வருணமாகத் தாழ்ந்தனர்.

இது தமிழர் வரலாற்றில் நிகழ்ந்த பெருங்கேடாகும். இயற்கையோடியைந்து வாழ்ந்து வந்த தமிழர்களிடையே இறை (கடவுள்) நம்பிக்கை எப்போது, எப்படிப் புகுந்தது என்று தெரியவில்லை. ஆதிமாந்தர் இயற்கையின் சீற்றத்திற்கும் காட்டு விலங்குகளின் தாக்குதலுக்கும் அஞ்சி ஏதாவது ஒன்றைப் பற்றிக்கொண்டு வாழ்ந்திருக்க வேண்டும். அவர்தம் முன்னோரையே, அவர்கள் இறந்தபின் நடுகல்லாக நட்டு வணங்கி வழிபட்டு வந்திருக்கவேண்டும்.

இப்படி நட்டகல்லே, பின்னர் இறையுருவாகக் காலப்போக்கில் மாறி, மாந்தர், தெய்வமென்று வழிபடும் பழக்கம் ஏற்பட்டு நிலைகொண்டிருக்க வேண்டும். இப்படி வழிபட்டு வந்த நடுகல் பற்றிப் பற்பல விதமான கற்பனைகளை மாந்தர் புனைந்து கொண்டு தெய்வமென நம்பி வாழத் தலைப்பட்டுவிட்டனர் என்றே தெரிகிறது. இதன் நீட்சிதான் இன்றைய கடவுள்களைப் பற்றிய கதைகளாக இருக்கமுடியும்.

இப்படி மாந்தர் தமக்குத் தோன்றியவாறெல்லாம் கற்பித்துக் கொண்டவற்றைக் கண்ணை மூடிக்கொண்டு நம்புவது அறியாமை என்று நாம் சொல்வதில் என்ன தவறு உள்ளது? கடவுள் ஒரு கற்பனை என்று விளக்கினோம்.

இப்படிக் கற்பிக்கப்பட்ட கடவுளை அல்லது கடவுள் களை இருப்பதாக நம்பியதோடு நில்லாமல், கடவுளுக் குப் பற்பல கதைகளைக் கட்டிப் பரப்பிவந்துள்ளோம்!. வணங்கி வழிபடுவதோடு நிறுத்திக்கொள்ளுவதில்லை. இறைவனுக்குக் காணிக்கையாகப் பலவற்iறைப் படைக்கிறோம். இக்காணிக்கை செலுத்துவது அல்லது படையல் அனைத்தையும் நாம் கையூட்டு (இலஞ்சம்) என்கிறோம். ஒரு பழைய பாடல் எம் நினைவில் எழுகிறது. அது, “பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை, நாலும் கலந்துனக்கு நான் தருவேன்-கோலஞ்செய் துங்கக் கரிமுகத்துத்தூ மணியே நீயெனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா” என்ற பாடல்

‘பாலும், தேனும் நான் உனக்குப் படைக்கிறேன். நீ எனக்குச் சங்கத்தமிழ் மூன்றையும் கொடு’ என்று கேட்பது பண்டமாற்று போல் இல்லையா! அறிவாளர்கள் இதில் கருத்தூன்றிப் பார்த்து, கொள்ளத்தக்க தாயின் கொள்க. அன்றேல் தள்ளதக்க தென்று கண்டால், தள்ளிவிட்டு இயற்கையோடியைந்து வாழலாமே!

Pin It