கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

மிகவும் கடினமான சூழ்நிலையில் உள்ள தீண்டாதோரைக் கண்டு வருந்தும் அனைவரும் இவ்வாறுதான் ஆரம்பிக்கிறார்கள்: “தீண்டாதோருக்கும் நாம் ஏதேனும் செய்ய வேண்டும்” ஆனால், இந்தப் பிரச்சனையில் அக்கறையுள்ள எவரும் “இந்துவை மாற்ற நாம் ஏதாவது செய்வோம்” என்று கூறுவதை யாரும் கேட்டதேயில்லை. அவைவருமே தீண்டாதோர்தான் சீர்திருத்தப்பட வேண்டியவர்கள் போலச் சிந்திப்பது வழக்கமாகிவிட்டது.

ambedkar 354தீண்டாமை, ஏதோ, தீண்டாதோரின் தவறினால், குறைபாட்டினால் ஏற்பட்டதைப் போலவும் தீண்டாதவர்தான் அவன் நிலைமைக்கும் காரணம் என்பது போலவும் பேசுவது வழக்கம். ஏதாவது இயக்கம், பணி தேவைப்படுகிறதென்றால் அது தீண்டாதோருக்குத்தான் தேவை. இந்துவைப் பொறுத்தவரை அவனுக்குச் செய்ய வேண்டியது எதுவுமில்லை. அவன் மனம், பழக்க வழக்கம் மற்றும் ஒழுக்க ரீதியாக மிகவும் நன்றாக இருக்கிறான் அவன் முழுமை படைத்தவன்: அவனிடம் எந்தக் குறையும் இல்லை. அவன் பாவி அல்ல.

ஆனால், உண்மை நிலவரம் என்ன? இந்துக்களிடம் எந்தக் குறையும் இல்லை; தீண்டாதோரின் துன்பங்களுக்குக் காரணம் அவர்களேதான் என்ற வாதம், யூதர்களின் துன்பங்களுக்குக் காரணம் அவர்களேதான் என்று கிறித்துவர்கள், யூதர்களுக்கு இழைத்த மனிதாபிமான மற்ற கொடுமைகளைப் பற்றிக் கேட்டால் முன்வைக்கும் எதிர்வாதத்தைப் போன்றதுதான் இது. துன்பப்படும் யூதர்களுக்காகக் கிறித்துவர்களின் வாதத்தினைத் தவிடு பொடியாக்கும் கீழ்க் கண்ட பதிவை அளித்தார்

 “யூதர்களின் பிரச்சினை உண்மையில் யூதரல்லாத புறமதத்தவரான உயர்குடிப் பிரச்சினைதான் என்பதற்குச் சாதாரணமாக வீடுகளில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியைச் சுட்டிக்காட்டி அதை எப்படிப் பார்க்க வேண்டும் எனச் சொல்ல விரும்புகிறேன். எனக்குத் தெரிந்து ஒரு ஐரீஸ் கலப்பின ஐரீஸ் டெர்ரியர் நாய் இருந்தது. என் நண்பர் பேடி என்னும் அந்த நாயைத் தன்னுடைய இரு கண்களின் கருமணி போல எண்ணி வந்தார். என் நண்பரின் நாய்க்கு ஸ்காட்ச் டெர்ரியர் நாயைக் கண்டால் பிடிக்காது.

ஸ்காட்ச் டெர்ரியர் நாய், அதன் அருகில், ஏன், இருபது அடி தூரத்தில் போனால், கூட போதும் ஐரீஸ் டெர்ரியர்நாய் உடனே அக்கம்பக்கம் உள்ளவர்கள் காது செவிடாகும்படி குரைக்க ஆரம்பித்து விடும். சொல்லப் போனால் இந்த நாய் குரைக்கக் காரணமான ஸ்காட்ச் டெர்ரியரோ கொஞ்சமும் ஆபத்தில்லாத பிராணியாகும். அது முதலில் குரைக்க ஆரம்பிப்பதேயில்லை. என்னுடைய நண்பருக்குத் தன்னுடைய நாயின் மீது மிகுந்த பாசம் இருந்தாலும், அதனுடைய விரும்பத்தகாத நடத்தைக்குக் காரணம் அதனுடைய குறையேதான் என்று என் நண்பரே கருதுகிறார். மாலை வேலைகளில் சாதாரணமாக மோப்பம் பிடித்துக் கொண்டு வரும் ஒரு அண்டை நாயைப் பார்த்து ஐரீஸ் டெர்ரியர் குரைக்க ஆரம்பித்தால் அதற்காக அண்டை வீட்டார்தான் தண்டிக்கப்பட வேண்டும் என்பார்களே தவிர, உண்மையான குறை என்ன என்று இதுவரை ஒருவரும் சொல்லவில்லை”.

நாம், ஐரீஸ் கலப்பினமான பேடி நாயை ஓர் இந்துவுக்கும், ஸ்காட்ச் டெர்ரியர் நாயைத் தீண்டாதோருக்கும் பொருந்திப் பார்த்தோமானால் அவர்களின் வாதம் கிறித்துவர்களுக்கு எவ்வளவு பொருந்துகிறதோ, அவ்வளவுக்கு இந்துவுக்கும் பொருந்துகிறது. திரு. கோல்டிங் அவர்கள் கூறியிருப்பதிலிருந்து யூதர்களின் பிரச்சினை எந்த அளவுக்கு உண்மையில் கிறித்தவர்களின் பிரச்சினையோ அந்த அளவுக்குத் தீண்டாதோரின் பிரச்சினை அடிப்படையில் ஓர் இந்துவின் பிரச்சினையே!

தீண்டாதோரின் பிரச்சினை உண்மையில் தங்களுடைய பிரச்சினைதான் என்பதை இந்துக்கள் உண்மையில் உணருகிறார்களா? அவ்வாறு அங்கீகரிக்கிறார்களா? அவர்கள் அதைப்பற்றிக் கவலைப்படுகிறார்களா? அது அவர்கள் மனங்களில் உரைக்கிறதா? சில முடிவான பரிசோதனைகளின் வாயிலாக நாம் இந்த உண்மையைக் கண்டு பிடிக்கலாம். ஒன்று, இது சம்பந்தமாக இதுவரை பெருமளவில் வெளியாகி உள்ள புத்தகங்கள், நீக்ரோக்கள் பிரச்சினை குறித்து அமெரிக்க நாட்டில் வெளியாகியுள்ள புத்தகங்களின் எண்ணிக்கையை இதற்கு அளவுகோலாக வைத்துக் கொள்ளலாம்.

நீக்ரோக்கள் பிரச்சினை குறித்து அமெரிக்காவில் வெளியாகியுள்ள புத்தகங்களின் எண்ணிக்கையை ஒருவர் பார்த்தால் மிக மிக வியப்பாக இருக்கிறது. நீக்ரோ பிரச்சினை குறித்து வெளியாகியுள்ள புத்தகங்களின் பட்டியலைப் பார்த்தால் அவை நூறாயிரக்கணக்கில் இருக்கும். இது தொடர்பான நூல்கள் உண்மையில் அளவிடமுடியாதவை. இது வெள்ளையருக்கு எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருக்கிறது என்பதை இந்த நூல்கள் வெளிப்படுத்துகின்றன. பல தலைமுறைகளாக இந்தப் பிரச்சினை அமெரிக்காவின் மத, ஒழுக்கவாதிகள், அரசியல் தத்துவவாதிகள், ராஜதந்திரிகள், சமூக சேவகர்கள், சமூக விஞ்ஞானிகள், அரசியல்வாதிகள், வியாபாரிகள், மற்றும் சாதாரணக் குடிமகன் அனைவரையும் பாதித்திருக்கிறது.

ஆனால், தீண்டாதோரைப் பற்றி இந்தியாவில் உள்ள புத்தகங்களின் எண்ணிக்கை என்ன? இது பற்றி அரை டஜன் துண்டுப் பிரசுரங்கள் தான் இங்குவெளியாகி உள்ளது.

இன்னொரு சோதனை, சமூக நடத்தையாகும். நான் இதற்குச் செய்தித்தாளில் வெளியிடப்பட்டுள்ள இரண்டு வழக்குகளைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

1926 மார்ச் 5-ஆம் தேதி பிரதாப் என்ற இதழில் வெளியாகியுள்ள ஒரு நிகழ்ச்சி:-

“பிப்ரவரி மாதம் 23 ந் தேதி லக்னோ, பேகம்கஞ்சில் பகல் சுமார் 11.00 மணியளவில் 12 அல்லது 13 பேர் கொண்ட குழுவினர் பூமியைத் தோண்டிக் கொண்டு இருந்தனர். அப்போது திடீரென்று சுரங்கம் சரிந்து அவர்கள் அனைவரும் மண்ணுக்குள் புதைத்து விட்டார்கள். ஒரு சிறுவனும் 6 பெண்களும் மண்ணைத் தள்ளி வெளியே எடுக்கப்பட்டதில் அவர்களில் மீர்பூரைச் சேர்ந்த ஒரே ஒரு பெண்மணி மட்டும் உயிருடன் இருந்தார். அவளுக்கும் கடுங்காயங்கள் ஏற்பட்டிருந்தன என்பதால் அவள் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தாள். ஆனால், பேகம் கஞ்ச்சில் இருந்த இந்துக்கள் அந்தப் பெண்மணியைக் கிடத்தப் படுக்கை தர மறுத்து விட்டார்கள். கடைசியில் ஒரு முஸ்லீம் படுக்கை தர முன்வந்தார். ஆனால், அவளை அவள் வீட்டிற்குத் தூக்கிச் செல்ல முன் வரவில்லை. கடைசியில் ஒரு தெருக்கூட்டும் தொழிலாளி அழைத்து வரப்பட்டு அந்தத் தொழிலாளி அவளைப்படுக்கையுடன் தூக்கிச் செல்ல ஒப்புக்கொண்டார்.”

தீண்டாதோரைப் பொறுத்தவரை இந்துக்களுக்கு மனசாட்சியேயில்லை எனபது ‘சங்ராம்’ இதழின் செய்தியாளரின் தகவலின் பேரில் 1946 ஜுலை மாதம் 10-ஆந் தேதி மேற்கண்ட இதழில் பிரசுரமாகியுள்ள கீழ்க் கண்ட நிகழ்ச்சிதான் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

“1946 –ஆம் ஆண்டு ஜுலை மாதம் 8 –ஆம் தேதி கோவாவில் மாப்சே என்ற கிராமத்தில் கிறித்துவர்களால் நடத்தப்பட்ட ‘அசில்’ என்னும் அனாதை ஆசிரமத்தில் இருந்த ஒரு பெண்மணி இறந்துவிட்டார். இந்து எனக் கருதப்படும் அந்தப் பெண்மணிக்கு உறவினர் இல்லை; தனியாக இருந்தார். அந்தப் பெண்மணியின் சடலத்தைப் புதைப்பதற்கும் இறுதிச் சடங்குகளைச் செய்வதற்கும் வேறு ஆட்கள் இல்லை என்பதால் கிராமத்தில் இருந்த இந்துக்கள் ஊரில் நிதி திரட்டினார்கள். பிணத்தைப் பிச்சைக்காரர் இல்லத்திலிருந்து அவர்கள் கொண்டு வரும்போது, அங்கு வந்த தீண்டாதோர் சிலர் அந்தப் பிணத்தை அடையாளம் கண்டு கொண்டார்கள். அந்தப் பெண் தீண்டாதோரைச் சேர்ந்தவள் என்று தெரிந்த மறுகணமே இந்துக்கள் பிணத்தை அப்படியே விட்டு விட்டுச் சென்றுவிட்டார்கள்.

தீண்டாதோர், இந்துக்கள் திரட்டி வைத்திருந்த நிதியையாவது சவப்பெட்டி வாங்குவதற்கும் பிணத்தைச் சுருட்ட த் தார்ப்பாய் வாங்குவதற்கும் கேட்டார்கள். ஆனால் இந்துக்கள், இறந்தவர் இந்து என்று சொல்லித்தான் பணம் வசூலிக்கப்பட்டதால் பணத்தைத் தர மறுத்து விட்டார்கள். அவள் இந்துவாக இல்லாமல் தீண்டாதவனாக இருப்பதால் பணத்தை அவன் இறுதிச்சடங்கிற்குச் செலவு செய்ய முடியாது என்று சொல்லி விட்டார்கள். தீண்டாதோர் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்து ஒருவாறு புதைத்தார்கள். இவ்வாறு தீண்டாதோருக்கு இந்துக்களுக்குத் தங்கள் மீதிருந்த அன்புக்கும் பாசத்துக்கும் நல்ல சாட்சியம் கிடைத்தது.”

 கீழ்க் கண்ட செய்தி ‘மிலாப்’ என்ற செய்தித்தாளில் 1925-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ஆந் தேதி வெளியானதும் செய்தியாளர் கூறுகிறார்:-

“ருத்திரப் பிரயாக் என்ற ஊரில் இருந்த தர்மசாலைக்குச் செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் ஒரு அரிஜன் வந்ததாக ருத்திரப் பிரயாக்கிலிருந்து தகவல் கிடைத்தது. அங்கு ஒவ்வொரு நாளும் இரவு புலி வருவதாக அவருக்குத் தெரியவந்ததால் ஆசிரமத்தின் பூசாரியிடம் புலியிடமிருந்து தாம் தப்பிக்கத் தன்னை ஆசிரமத்தில் எங்காவது ஒரு மூலையில் ஒளிந்திருக்க அனுமதிக்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டார். ஆனால் அந்த மோசமான பூசாரி அவன் கோரிக்கை ஏற்க மறுத்து ஆசிரமத்தின் கதவுகளைப் பூட்டி விட்டான். கெட்ட நேரத்தின் காரணமாக அந்த அரிஜன் பயத்துடன் வெளியில் படுத்துக் கொண்டான், இரவின் முடிவில் புலி வந்து அந்த மனிதனைத் தாக்கியது. அந்த மனிதன் நல்ல வலிவுடன் திடகாத்திரமாக இருந்ததாலும் இடுக்கண் காரணமாக அச்சமும் இல்லாததாலும் அவன் புலியின் கழுத்தைப் பிடித்துக் கொண்டு ‘நான் புலியைப் பிடித்து விட்டேன்; வந்து அதைக் கொல்லுங்கள்’ என்று சத்தம் போட்டான். ஆனால் மேல் சாதியைச் சேர்ந்த அந்தப் பூசாரி புலியைக் கொல்லவும் வரவில்லை; வேறு உதவியையும் செய்யவில்லை. வெகு விரைவில் அரிஜனின் பிடி தளர்ந்தது: புலியும் ஓடி விட்டது. தற்போது அந்த மனிதன் ஸ்ரீ நகரில் (கார்வால்) காயத்துடன் விழுந்து கிடக்கிறான். அவனுக்குச் சிகிச்சை அளிக்கிறார்கள். அவனுடைய நிலைமை மிகவும் கவலைக்குரியதாக இருக்கிறது.”

 இந்த நிகழ்ச்சிகளிலிருந்து இந்துக்களின் இதயமற்ற தன்மை வெளிப்படுவதோடு தீண்டாதோருக்கு அவர்கள் செய்யும் கொடுமைகளைப் பற்றியோ தீண்டாதோரிக்கு என்ன நடக்கிறது என்பதைப் பற்றியோ அவர்கள் கவலைப்படுவதில்லை என்றும் தெரிகிறது.

மூன்றாவது சோதனை என்னவென்றால், தீண்டாதோரை உயர்த்து வதற்குச் செய்திடும் சேவையையும் தியாகத்தையும் அமெரிக்காவில் நீக்ரோவிற்கு அமெரிக்கர்கள் செய்த சேவை மற்றும் தியாகத்தையும் அளவுகோலாகக் கொண்டு மதிப்பிடுவதாகும்.

 கீழ் வருவன சில புள்ளி விவரம்:- நீக்ரோக்களின் நலனுக்காக அமெரிக்கர்கள் அளித்துள்ள நன்கொடைகளைக் கவனிக்க: (நீக்ரோ இயர்புக் 1931-32 ப. 202 லிருந்து எடுத்த தகவல்படி தயாரித்த தகவல்)

 

I - கொடையாளர் தொகை (டாலர்களில்) II -  கொடையாள் தொகை (டாலர்களில்)
கேன் 50,000 மேஸன் 1,00,000
ஹர்ட்டன் 5,000 நான் பெர்ட் 40,000
டிரப்டன் 1,60,000 ஹாரிசன் 2,30,000
ஒட்டார்கள் 500 மஸ்கர் 75,000
கேம்பிரில் 35,000 காலாலிஸ் 45,000
ஜரப்கி 1,000 ராசன் பானின் 1,000
ஸ்ட்ராக் 500 கான்ராய் 1,00,000
கிளோடின் 10,000 பர்ட்டன் 1,000
உட் 500 கான்ராய் 1,00,000
ஹர்க்னஸ் 12,50,000 சென்ட் 10,000
பீட்டி 2,90,000 பியூக் 1,40,000
மார்க்கென்ட் 5,000 மார்சிலண்ட் 5,000
நியூடன் 5,000 மேசே 25,000
அம்மில்டன் 25,000 நிக்கோலஸ் 20,000
பெல்ப்ஸ் ஸ்ட்ரோகிஸ் 2,80,000 கார்ரெட்சன் 15,00,000
பட்டலர் 30,000 ஹேட்சர் 20,000
    காட் 10,000

இந்தத் தொகை 1930க்கு முன்னால் கொடுக்கப்பட்டதாகும். நீக்ரோக்களின் கல்வி முன்னேற்றத்திற்காக ஏற்படுத்தப்பட்ட கல்வி நிதியையும் ஒப்பிட்டுப் பார்க்க (பார்க்க ::முன்குறிப்பிட்ட ‘இயர் புக்’ பக். 213-18.2)

  • ஆவரி நிதி
  • விலாஸம் நிதி
  • ஆப்பிரிக்க நிதி
  • பக்கிங்காம் நிதி
  • ஜார்ஜ் வாஷிங்டன் கல்வி நிதி
  • மைனர் நிதி
  • ஸ்பீவர்டு மிஷினரி நிதி
  • டேனியல் கை நிதி
  • ஜான் ஸ்லேட்டர் நிதி
  • பெல்ப் ஸ்டோக்ஸ் நிதி

இதைத் தவிர கார்னிஜ் கார்ப்பரேசன் ஜுலியஸ் வால்டு நிதி, ராக்பெல்லர் பவுண்டேஷன் நிதி ஆகிய நிதியங்களின் மூலம் நீக்ரோக்களுக்கு உதவுகின்றனர். இவற்றின்மூலம் எவ்வளவு செலவழிக்கிறார்கள் என்று தெரியவில்லையாயினும் இது லட்சக் கணக்கில் இருக்கும் எனலாம்.

 மத நிறுவனங்கள் நீக்ரோக்கள் நலனுக்காகச் செலவிடும் தொகையும் ஒப்பிடுவோம்.( முன்காட்டிய நூல், ப. 213.). இதன்படி, நீக்ரோக்களின் முன்னேற்றத்திற்கு 1865 முதல் 1930 வரை மத மற்றும் சேவை நிறுவனங்கள் அமெரிக்காவில் 13,50,00,000 டாலர்கள் செலவிட்டுள்ளார்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்தத் தொகையில் 8,50,00,000 டாலர்கள் வெள்ளையர்கள் மட்டுமே அளித்திருக்கிறார்கள்.

ஆனால், தீண்டாதோர் முன்னேற்றத்திற்காக இந்துக்கள் செய்துள்ள சேவை அல்லது தியாகம் எவ்வளவு என்று சொல்லிக் கொள்ளும்படியான அளவு எங்குள்ளது? அரிஜன் சேவக் சங்கம் என்ற ஒரே நிறுவனம்தான் இத்தகைய பெருமைப்பட்டுக் கொள்ள முடியும். அதனுடைய மூல நிதி சுமார் 10 லட்சத்திற்கு மேல் போகாது. அதனுடைய ஆண்டுச் செலவு சிறிய, முக்கியத்துவமற்ற அவசியமற்ற பணிகளுக்காக, செலவிடப்படுவது சில ஆயிரம் ரூபாய்களுக்கு மேல் போகாது. மேற்கண்ட நிதி நல நிதி அன்று. அது, முக்கியமாக அரிசனங்கள் சாதி இந்துக்களுடன் வாக்களிக்க வேண்டுமென்பதற்கு உருவாக்கப்பட்ட அரசியல் நிதியாகும்.

ஏன் இந்த வித்தியாசம்? ஏன் அமெரிக்கர்கள் நீக்ரோக்களின் உயர்வுக்காக இவ்வளவு சேவையும் தியாகமும் செய்கிறார்கள். ஆனால், ஏன் இந்துக்கள் தீண்டாதோரின் உயர்வுக்காக ஒன்றுமே செய்வதில்லை? இதற்கு விடையாதெனில் அமெரிக்கர்களுக்குச் சமூக மனசாட்சி உள்ளது. ஆனால் இந்துக்களுக்கு அது இல்லை, இதனால் இந்துக்களுக்குச் சரி, தவறு – நல்லது, கெட்டது – ஒழுக்கம் அல்லது ஒழுக்கமின்மை பற்றிய உணர்வேயில்லை என்பதல்ல. ஆனால், தவறு என்னவென்றால் இதெல்லாம் இந்துக்களுக்குத் தங்களுடைய சாதியைச் சேர்ந்தவர்களிடம் மட்டும்தான் பிறக்கும், பிறரிடம் வருவதில்லை. திரு,எச்.ஜே.பேட்டன் சொல்வதுபோல,

“ஒரு மனிதன் ஒரு வரம்புக்குட்பட்ட சமூகத்தில் நல்ல உறுப்பினராக அவன் நல்லொழுக்கம் உடையவனாக இல்லாவிட்டாலும் இருக்க முடியும் என்பது தெளிவு. தன்னுடைய வாழ்வில் தனிப்பட்ட கொள்கையைப் பின்பற்றியும் ஒரு மனிதனுக்கு உயர்ந்த ஒழுக்கம் குறித்த ஒரு எதிர்ப்பார்ப்பு அல்லது அதன் நிழல் உள்ளது. ஒரு மனிதன் ஒரு கட்டத்தில் விசுவாசமாக இருப்பின், அது திருடர் கூட்டமாக இருந்தாலும் அதையே நாம் நல்ல பண்பு என்று கூடக் கூறி விடுவோம். திருடர்களுக்குள் ஒருவர் கௌரவமானவராக இருப்பதாலேயே திருடர்களெல்லாம் கௌரவமானவர்கள் என்று நாம் சொல்லி விடமுடியாது. உண்மையில் ஒழுக்கமான மனிதன் என்றால் ஒரு சமூக வரம்புக்குள் மட்டுமல்ல எல்லையைக்கடந்த ஒரு சமூகத்திலும் நல்லவனாக இருக்க வேண்டும். பல்வேறு சமூகங்களை உள்ளடக்கிய ஒரு சமூகத்திலும் அதுவும், பல நோக்கங்களை, அந்தச் சமூகத்திற்கப்பால் வேறு முரண்பட்ட கடமைகள் கொண்ட சமூகமே ஆயினும் அங்கும் ஒழுக்கமானவனாக இருக்க வேண்டும்.”

தீண்டப்படாதவன் ஒருவன் இந்துக்களின் சமூகத்தைச் சேர்ந்தவன் அல்ல. இந்துக்களும் தீண்டப்படாதவரைத் தங்கள் சமூகத்தைச் சேர்ந்தவராகக் கருதுவதில்லை. இதனால்தான் ஒரு இந்துவின் நடத்தை, ஒழுக்கத்தைப் பற்றிய கவலையற்றதாக இருக்கிறது.

இந்த மனச்சாட்சி இல்லாததால் ஓர் இந்துவுக்குப், பிறருக்கு இழைக்கப்படும் அநியாயங்கள், அநீதிகள் ஆகியவற்றால் ஏற்படும் துன்பம் குறித்து ஒரு நியாயமான கோபம் ஏற்படுவதில்லை. இந்த அநீதிகள், அநியாயங்கள், தீண்டப்படாதவருக்கு இழைக்கப்படுவது தவறு என்று அவன் கருதுவதில்லை. இந்த மனசாட்சி இல்லாததால் தீண்டாமையை ஒழிக்கும் பாதையில், இந்து ஒரு பெரிய தடைக் கல்லாக இருக்கிறான்.

 (டாக்டர் அம்பேத்கர் பேச்சும் எழுத்தும் - தொகுதி 9)