இந்து இராஷ்டிரத்தை’ உருவாக்கும் கொள்கையைக் கொண்டவர்களிடம் அரசியல் அதிகாரம் போய்ச் சேர்ந்து விடக்கூடாது என்பதை மக்களிடம் உணர்த்த விரும்பியதால்தான் திராவிடர் விடுதலைக் கழகம் - இடதுசாரி கட்சிகள், இஸ்லாமிய அமைப்புகள், தலித் அமைப்புகளை ஆதரிக்கும் முடிவை எடுத்தது. எந்தக் கட்சி வெற்றி பெற வேண்டும் என்பதைவிட எந்தக் கொள்கை வெற்றி பெற வேண்டும் என்ற பார்வையில் கழகம் எடுத்த முடிவு இப்போது ‘இராஷ்டிரிய சுயம் சேவக் சங்’ என்ற ‘இந்து இராஷ்டிரத்தை’ அமைக்கத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ். ஆட்சி அதிகாரத்தைப் பிடித்துவிட்டது. அந்த அமைப்பு களமிறக்கிய நரேந்திர மோடி, நாட்டின் பிரதமராகிறார்.

 நாடாளுமன்றம், வாக்குரிமை என்ற “ஜனநாயக” வழிமுறைகளில் ‘இராம இராஜ்யத்தை’ அமைக்கும் முயற்சி என்பதேகூட ஒரு விசித்திர முரண்பாடுதான்.

 பார்ப்பன அதிகாரம் மட்டுமே இராமஇராஜ்யத்தை வழி நடத்தியதாக இராமாயணங்கள் கூறுகின்றன.

 இந்தியா, இறையாண்மை கொண்ட சோஷலிச மதச்சார்பற்ற குடியரசு என்று வலியுறுத்தும் அரசியல் சட்டத்துக்கு உண்மையாக இருக்க வேண்டியவர் ஒரு நாட்டின் பிரதமர். மோடி இதையே பதவி ஏற்பில் உறுதி கூற வேண்டும்.

ஆனால், ‘இந்தியா’ என்ற சொல்கூட மோடி ஏற்றுக் கொண்டுள்ள தத்துவத்துக்கு’ எதிரானது தான்! இந்துக்கள் அல்லாத பிற மதத்தினரையும் இணைத்து வாழ்வதற்காக சூட்டப்பட்ட ‘இந்தியா’ என்ற பெயரை, ஆர்.எஸ்.எஸ். ஒரு போதும் ஏற்பது இல்லை. மாறாக, ‘பரதன்’ வழி வந்த இந்துக்களைக் கொண்ட பாரதம், ‘பாரதியம்’ என்ற பெயரையே ஆர்.எஸ்.எஸ். வலியுறுத்துகிறது. அதனால்தான் ‘பாரதிய ஜனதா’ என்று கட்சிக்கு பெயர் சூட்டினார்கள். இந்த ‘பாரதியம்’, ‘இந்தியா’வுடன் எந்தப் புள்ளியில் இணையப் போகிறது? இதுவும்கூட ஒரு முரண்பாடுதான்! “இராமர் கோயில் கட்டுதல் - பொது சிவில் சட்டம் - காஷ்மீர் தனி உரிமை ரத்து” என்ற “பாரதிய” அடையாளங்களை ஒதுக்கிவிட்டு, “இந்தியாவுடன் சமரசம் செய்து கொள்ள முன் வந்தார், வாஜ்பாய்! அந்த சமரசத்துக்கு தாங்கள் தயாராக இல்லை என்று இப்போது பாரதிய - பா.ஜ.க.வினர் தேர்தல் அறிக்கையில் தெளிவாக்கி விட்டனர்.

 வெற்றி செய்தி கிடைத்தவுடன், மோடி ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை நோக்கி ஓடுகிறார். கங்கையில் ‘ஆரத்தி பூஜை’ நடத்துகிறார். தன்னுடைய ‘இராஷ்டிரிய சுயம் சேவக்’ அடையாளத்தை பெருமையுடன் வெளிப்படுத்துகிறார். பொய் முகம் காட்ட மோடி தயாராக இல்லை. இது வரவேற்கப்பட வேண்டியதுதான்! பல்வேறு கலாச்சார அடையாளங்களை ‘இந்து’, ‘இந்தியன்’ என்ற ஒற்றைச் சிமிழுக்குள் அடக்கிட நடக்கும் முயற்சிகள் குறித்து பெரியார் இவ்வாறு “அகில இந்திய மக்கள், பல நாடு, பல சாதி, பல இனம், பல மதம், பல கலாச்சாரமுடைய மக்களாவார்கள்.

இவர்களை ஒரு நாடு, ஒரு சாதி, ஒரு இனம், ஒரு மதம், ஒரு கலாச்சார மக்களாகக் கொண்டு ஒன்றுபடுத்தி ஆளுவது என்பது மக்கள் மடையர்களாய், மானமற்றவர்களாய், அடிமைகளாய் இருக்கும் வரைதான் முடியும். அல்லது ஆட்சியாளர் தேர்ச்சியுள்ள, யோக்கியமற்ற ஆட்சி வெறியர்களாக இருக்கும்வரை தான் முடியும்”. (‘விடுதலை’ 27.1.1959) பெரியார் கூற்று எவ்வளவு சரியானது என்பதற்கு நாட்டு நடப்புகளே உணர்த்துகின்றன. “ஊழல் ஒழிப்பு பொருளாதார வளர்ச்சி - வலிமையான தேசம்” என்ற சொல்லாடல்களுக்குள் “இந்து கலாச்சாரம் - பார்ப்பனியப் பெருமை - மதவெறுப்பு - பாரதியம்” என்ற நச்சுகள் பதுங்கிக் கிடக்கின்றன.

 இவைகள் ஒரு புறமிருக்க, ஆட்சி மாற்றத்துக்கு திரைமறைவில் தீவிரப் பணியாற்றிய ‘கார்ப்பரேட்’ நிறுவனங்கள், தங்களின் பொருளாதார சுரண்டலுக்கு ஏற்ற கொள்கைகளை மேலும் தொடருவதற்கு தயாராகி வருகிறார்கள். தேர்தல் முடிவுகள் வெளிவந்தவுடனேயே அம்பானி - அதானியின் பங்குகள் பல மடங்கு உயரத் தொடங்கியது எதைக் காட்டுகிறது?

‘இராம இராஜ்யம்’ அமைக்கப் போகும் கட்சி அதிகாரத்துக்கு வந்தவுடன் அம்பானி- அதானி பங்கு வர்த்தகம் ஏன் உயருகிறது? இரண்டுக்கும் உள்ள நெருக்கமான இந்து மதத்தின் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள பார்ப்பனர்கள், இந்திய பொருளாதாரத்தை தங்களது சுரண்டல் வர்த்தகத்துக்குள் கொண்டு வந்துள்ள கார்ப்பரேட்டுகள், இவர்களின் இணைப்புப் பாலமாக அதிகாரத்தைக் கட்டமைக்க வந்துள்ள நரேந்திர மோடிகள், இவர்களுக்கிடையிலான பரிமாற்ற உறவுகளில்தான் இந்தியா “வளரப்” போகிறது. இதுதான் உண்மை. இந்த ஆபத்துகளை எப்படி எதிர் கொள்ளப் போகிறோம்?

இதற்கான சமூக - அரசியல் மாற்றங்கள், அரசியல் அதிகாரத்திலோ அல்லது ஆட்சி மாற்றங்களிலோ நிகழப் போவதில்லை. மக்களிடம் உருவாக்கும் கருத்துப் புரட்சி, அதன் வழிப்பட்ட போராட்டங்களில்தான் சுயமரியாதைக்கும் சமூக சமத்துவத்துக்கும் நேரடி சவால்கள் வெளிப்படும் போதுதான் இந்தக் கொள்கைகளை மேலும் வலிமையாக முன்னெடுக்க முடியும் என்பதே பெரியார் விட்டுச் சென்ற செயல் முறை - அணுகுமுறை!

ஆட்சி மாற்றத்துக்காக காத்திருப்பதும் அடுத்து ஆட்சிக்கு வர விரும்பும் கட்சிகளின் நிழல்களில் பதுங்கிக் கொள்வதும் பெரியாரியல் அணுகுமுறை சமுதாய மாற்றத்துக்கு - மக்கள் மன்றத்தில் களங்களை தயார் செய்வதே பெரியாரியம் காட்டும் வெளிச்சம்! பெரியாரியத்தை மேலும் உறுதியாக முன்னெடுப்போம்! புதிய ஆட்சிக்கு வாழ்த்துச் சொல்லும் போலி சடங்குகளில் நமக்கு நம்பிக்கை இல்லை; அது தேவையும் இல்லை.

Pin It