பெரியரின் வாழ்க்கைத் துணையாகவும் அவரது காங்கிரஸ் கால போராட்டங்களான கள்ளுக்கடை மறியல், வைக்கம் போராட்டம் ஆகியவற்றில் ஏராளமான பெண்களையும் உடன் இணைத்துக் கொண்டு வீதியில் இறங்கி ஆவேசமாகப் போராடிய கொள்கைத் துணையாகவும் விளங்கியவர் நாகம்மையார்.

பெரியாரின் சுயமரியாதை இயக்கக் காலகட்டத்திலும் சுயமரியாதை இயக்கத் தோழர்களுக்கு உணவும், உபசரிப்பும் கொடுத்துப் பேணிய தாயாகவும், பல சுயமரியாதை, சாதிமறுப்பு, மறுமணங்களை முன்னின்றும், தலைமையேற்றும் நடத்தியும் பெரியாருக்கு கொள்கைத் துணைவராக விளங்கியவர் அவர்.

அவர் 11-5-1933 அன்று இறந்து போனார். அதற்கு அடுத்த நாளே திருச்சிக்கு புறப்பட்டுப் போய், 144 தடை உத்திரவையும் மீறி, கிருத்துவர்களின் சுயமரியாதை திருமணத்தை நடத்தி வைத்தார். அதற்காக கைது செய்யப்பட்டாலும், இரவு 11 மணிக்கு விடுதலை செய்யப்பட்டார் என்று பெரியாரின் வாழ்க்கை குறிப்புகள் நமக்கு கூறுகின்றன.

அவ்வாறு பெரியார் தலைமையில் மணம் முடித்துக் கொண்ட அந்த கிருத்துவ இளைஞர் எம்.ஏ.சவுந்திரராஜன். 46 ஆண்டுகள் கழித்து 27-5-1979 இல் பெரியார் நூற்றாண்டின்போது, அந்த செய்திகளை நினைவுகூர்ந்து அவர் எழுதி வைத்திருந்த ஒரு பதிவையும், அவரது தந்தையார் அச்சிட்ட திருமண அழைப்பிதழையும் அவர்கள் திருமணம் குறித்து Self Respect Marriages – Are they valid in Law?” என்ற தலைப்பிட்டு பெரியாரின் நண்பரும் வைக்கம் போராட்ட வீரரும், பாரிஸ்டருமான ஜார்ஜ் ஜோசப் ஒரு ஆங்கில நாளேட்டில் மணமக்களின் புகைப்படத் தோடு, எழுதியிருந்த கட்டுரை வெளிவந்திருந்த நாளேட்டையும் அவரது குடும்பத்தினர் கழகத் தலைவரிடம் ஒப்படைத்துள்ளனர். எம்.ஏ. சவுந்தர ராஜன் எழுதியுள்ள அப்பதிவில் சில சொற்றொடர்கள் முற்று பெறாமலும், பொருள் குழப்பத்தோடும் இருப்பினும் அதை அப்படியே வெளியிடுகின்றோம்.

தந்தை பெரியார் அவர்கள் காங்கிரசில் நடக்கும் அக்கிரமங்களையும், ஜாதிக் கொடுமைகளையும் பார்த்து சகிக்காமல் அதிலிருந்து விலகி சுமார் 50 வருடத்திற்கு முன்பு சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தார். அதன் முக்கிய கருத்து தீண்டாமை ஒழிப்பு, மதங்களில் நடக்கும் ஊழல்களை எடுத்து பேசிவந்தார்கள். அக்காலத்தில், ஜாதி வெறிபிடித்தவர்களும் மத பற்றுள்ளவர்களும் சுயமரியாதை இயக்கத்தை நசுக்கப் பார்த்தார்கள்.

சுயமரியாதை கூட்டங்கள் நடக்கும் இடங்களிலெல்லாம் கலாட்டா வும், கல்லடியும் சாணி அடியும் நடந்துவந்தது. அக்காலத்தில் தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்களாகிய நாம் பண்டை காலம் தொட்டு குருமார்களாலும், கன்னியர்களாலும், ஜாதி கிறிஸ்தவர்களாலும் கோவில்களில் கிராதி வைத்துக்கொண்டு மேல்ஜாதி கிறிஸ்தவர்களுக்கு தனி இடமும், பள்ளு பறையர் களுக்கு தனியிடமும் தெய்வ சன்னிதியில் நடந்து வந்தது.

நம் முன்னோர்களும் எவ்வளவோ பாடு பட்டும் முடியவில்லை. பெரியாருடைய பேச்சு நம் தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கு வெகு பிடித்தமாக இருக்கவே 100 க்கு 90 பேர் அவரை வரவேற்று பின்பற்றத் தொடங்கினார்கள். எங்கு கூட்டம் நடந்தாலும் நம் தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்கள் தக்க பாதுகாப்புடன் உயிரையும் கொடுக்க தயாராக இருந்தார்கள். நம்முடைய ஒத்துழைப்புக் கண்டு கிறிஸ்து மதங்களில் குருமார்களாலும், கன்னியர்களாலும் நடக்கும் கொடுமைகளை, மேடைகளிலும், பத்திரிகைகளிலும் பேசியும் எழுதியும் வந்தார்.

சிலர் இஸ்லாம் மதத்தை பின்பற்ற துவங்கினார்கள், சிலர் கோவிலில் தாலிக் கட்டாமல் ரிஜிஸ்டர் திருமணங்கள் செய்து பார்த்தோம் தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்களாகிய எங்களை திரும்பி கூட பார்ப்பதில்லை. கிறிஸ்து மதத்தில் ஒருவன் பிறந்து ஞானஸ்நானம் கொடுப்பதிலிருந்து அவனை கல்லறையில் கொண்டு வைக்கும் வரை ஜாதி வித்தியாசம்.

பெரியார் கூட்டமென்றால் எங்கு நடந்தாலும் தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்களாகிய நாங்கள் அதை திருவிழா கோலமாக நடத்தி வந்தோம். பிறகு சுயமரியாதை இயக்கத்தில் எல்லா மக்களும் பங்கு கொண்டு மகாநாடுகளும், கூட்டங்களும் நடத்தி வந்தார்கள். தாழ்ந்து கிடந்த ஒவ்வொருவனுக்கும் மனிதன் என்ற உணர்ச்சி ஏற்பட்டது.

அது சமயம் எனக்கு திருமண ஏற்பாடுகள் நடந்தது. அதாவது எனது சொந்த தாய்மாமன் மகளையே என் பெற்றோர் முடிவு செய்தார்கள். என் மாமன் சுயமரியாதை இயக்கத்தில் அதிதீவிரவாதி. நாங்கள் குருமாரிடம் போய், எங்கள் திருமணம் நடு ஹாலில் நாற்காலி போட்டு நடத்தவேண்டுமென்று கேட்டோம்; அது முடியாது என்று சொல்லி விட்டார்கள்.

உடனே பெரியாரிடம் போய் எங்கள் பிள்ளைகளுக்கு சுயமரியாதை திருமணம் செய்ய வேண்டும், எங்கள் குருமார்கள் ஜாதி கிறிஸ்தவர்களுக்கு ஒரு மாதிரியும், தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒரு மாதிரியும் நடத்திவருகிறார்கள் என்ற காரணங்களை எடுத்துச் சொல்லவே பழம் நழுவி பாலில் விழுந்த மாதிரி எடுத்துக்கொண்டு ஒப்புக் கொண்டார்கள்.

கல்யாண பத்திரிகையில் 1933 ஆம் வருடம் மே மாதம் 14 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை ராகுகாலம் 41/2 லிருந்து 6 மணிக்குள் திருச்சி தேவர் மன்றத்தில் சுயமரியாதை கத்தோலிக்க திருமணம் பெரியார் முன்னிலையில் நடைபெறும் என்று போட்டு இருந்தோம்; குடிஅரசு பத்திரிகையிலும் வெளிவந்து இருந்தது. அப்பொழுது வெள்ளையர் ஆட்சியா யிருந்தபடியால், குருமார்களுக்கு சாதகமாக இருந்தது.எப்படியும் இந்தத் திருமணத்தை நடக்க ஒட்டாமல் ஏற்பாடுகள் செய்து வந்தார்கள். அது சமயம் எங்கள் கல்யாணத்திற்கு முன் இரண்டு நாட்கள் இருக்கு மென்று நினைக்கிறேன், பெரியாரின் அருமை பத்தினி நாகம்மை இறந்துவிட்டார்கள்.

தமிழ்நாடே துக்கத்தில் ஆழ்ந்து இருந்தார்கள். எங்கள் வீட்டில் யாவரும், பெரியார் வரமுடியாத நிலைக்கு ஆளாகிவிட்டார் என்று கவலையோடு இருந்தோம். எப்படியும் நாளை வந்துவிடுவேன் என்று தந்தி எங்களுக்கு பெரியார் கொடுத்து அதைபோல் வந்த உத்தமர்.

13 ஆம் தேதி சனிக்கிழமை இரவு புறப்பட்டு நீலாவதி அம்மையார் வீட்டில் இறங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. ஞாயிற்றுக்கிழமை 14 ஆம் தேதி பிற்பகல் எங்கள் வீட்டில் யாவரும் திருமணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்து கொண்டு இருந்தோம்.

குருமார்களை எதிர்த்து திருமணம் செய்யப் போவதால் பிற்பகல் இரண்டு மணிக்கே பொது ஜனங்கள் மேல புலிவலம் ரோட்டில் லட்சகணக்கில் கூடி விட்டார்கள். இது தான் முதல் சுயமரியாதை கிறிஸ்துவ திருமணம். பொது ஜனங்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டு இருந்தார்கள். அப்பொழுது சுநளநசஎந ஞடிடiஉந வந்து தேவர் ஹாலுக்குள் பொது ஜனங்கள் நுழையாவண்ணம் முற்றுகையிட்டு விரட்டிக் கொண்டு இருந்தார்கள்.

இவ்விஷயம் பெரியாருக்கு தெரிந்ததும் தோழர் பிரான்சிசை, தேவர் ஹாலுக்கு அனுப்பி பொது ஜனங்களுக்கு நீலாவதி அம்மையார் வீட்டில் திருமணம் நடப்பதாக அறிவிக்கும்படி சொல்லச் சொல்லி காரை எடுத்துக் கொண்டு 41/2 மணிக்கெல்லாம் எங்கள் வீட்டிற்கு வந்து விட்டார். அவர் முன்னிலையில் நாங்கள் மோதிரம் மாற்றி திருமணம் இனிது முடிந்தது.

பொது ஜனங்களும், போலீசும் நீலாவதி அம்மையார் வீட்டிற்கு போய் அங்கு யாரும் இல்லாததைக் கண்டு எங்கள் வீட்டிற்கு (4, அந்தோனியார் தெரு, பாலக்கரை, திருச்சி) வந்தார்கள். அப்பொழுது மணி 6ஙூ இருக்கும். போலீஸ் சர்க்கில், சப் இன்ஸ்பெக்டர்கள், பெரிய பெரிய ஆபீஸர்களெல்லாம் எங்கள் வீட்டு மாடிக்கு வந்து, பெரியாரையும் மணமக்களையும், எங்கள் தாய் தந்தையையும் அரெஸ்ட் செய்கிறோம் என்றார்கள். அதற்கு பெரியார் எந்த உத்தரவின் படி என்று கேட்டார்கள். உடனே சர்கிள் Obey the Law and Order அதற்கு Yes I Will Obey என்று கீழ் இறங்கி போலீஸ் படை சூழ பொது ஜனங்கள் மத்தியில் கொட்டும் மழையில் பாலக்கரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து செல்லப்பட்டோம்.

ஆயிரக்கணக்கான ஜனங்கள் கொட்டும் மழையையும் சட்டை பண்ணாமல் வெளியில் நின்று கொண்டு இருந்தார்கள். அப்பொழுது சுவாமிமார்கள் தரப்பில் து. ரெத்தினசாமி வக்கீல் பெரியாரை ஆங்கிலத்தில் கேள்விக் கேட்டுக்கொண்டு இருந்தார். பெரியாரும் ஆங்கிலத்திலேயே பதில் சொல்லி வந்தார். அப்பொழுது வக்கீல் கேட்டார் Are You Solemnising the Marriage? இதற்கு பெரியார் What is the meaning of Solemnising?

சரி நான் தமிழிலேயே பதில் சொல்லுகிறேன் என்று சொல்லி தமிழில் பேசினார், அவர் சொன்னதின் முக்கிய கருத்து எனக்கு திருமண பத்திரிகை வந்தது, என் தலைமையில் நடத்துவதாக பார்த்தேன், என் முன்னிலையில் பெண்ணும் பிள்ளையும் மோதிரம் மாற்றிக்கொண்டார்கள். இதற்கு சாட்சியாக இருந்தேன், உடனே என் தாயார் நாயிலும் கேடாக கோவிலில் எங்களை மதிக்கிறார்கள் அவர்களுக்கு அறிவு புகட்டவே இப்படி செய்ய வேண்டியதாயிற்று, இதை சர்கார் கேட்டு நியாயம் வழங்க இருக்க, இப்படி நீங்களே செய்வது நியாயமா?, திருடவில்லை சர்க்காருக்கு விரோதமா என்ன செய்தோம் அம்மா, நீங்க சும்மா இருங்களென்று அடக்கிவிட்டார்கள். பிறகு எங்களை பெரியார் தாலி எடுத்துக் கொடுத்தார் என்று ஒவ்வொன்றுக்கும் நடந்த உண்மையை அப்படியே கூறினோம்.

பிறகு இரவு 11 மணிக்கு வெளியில் வந்ததும் பொதுஜனங்கள் பெரியார் வாழ்க, சவுந்தரராஜன் மேரி வாழ்க என்று கோஷமிட்டனர் வீடு வந்து சேர்ந்தோம். பிறகு ஒருவாரம் கழித்து எங்கள் வீட்டிற்கு வந்தார். அவரிடம் சுவாமிமார்கள் Canon – Law பிரகாரம் (பைபிள் அடிப்படையிலான மதச் சட்டம்) எங்களை நாடு கடத்துவோம் என்கிறார்களே, கலியாணத்தை நடத்தவிடாமல் செய்துவிட்டார்களே என்று கேட்டதற்கு, உங்கள் திருமணம் போட்டோ உள்பட லண்டன், அமெரிக்கா வெளிநாடெல்லாம் போய்விட்டது, எல்லோரும் காறி துப்புகிறார்கள், இவர்கள் இதில் முட்டாள்தனமாக இறங்கி விட்டார்கள்.

இவ்விஷயம் கிராமத்துமக்களும், மற்றவர்களும் மதம் மாறினார்கள், பெரியாரை கேட்டதற்கு இதை விட இந்துகளாக மாறினால் பிற்காலத்தில் உங்களுக்கு நன்மையாயிருக்குமென்று சொல்லி வந்தார். இத்துடன் முடிக்கிறேன்.

Pin It