சுயமரியாதை வீரர் காரைக்குடி என்.ஆர். சாமியின் பேரனும், தோழர் சாமி. திராவிட மணியால் கொள்கை ஊட்டி வளர்க்கப்பட்ட அன்பு மகனுமான பெரியார் சாக்ரடீஸ், சென்னையில் மே 9 ஆம் தேதி சாலை விபத்தில் தலையில் அடிபட்டு 12 ஆம் தேதி மரணமடைந்தார் என்ற செய்தி சொல்லொண்ணா வேதனையில் ஆழ்த்துகிறது.

திராவிடர் கழகத்தில் சுறுசுறுப்பாக பணியாற்றிய துடிப்பான இளைஞர். தமிழ்நாடு அரசின் ‘தமிழரசு’ பத்திரிகையில் பணியாற்றிக் கொண்டு, ‘உண்மை’, ‘பெரியார் பிஞ்சு’ பத்திரிகைகள் பொறுப்பையும் ஏற்றார். ‘உண்மை’ இதழை வெகு மக்கள் படிக்கும் வகையில் உள்ளடக்கத்தை மாற்றிக் காட்டியவர். கழகம் என்ற எல்லை கடந்து, பெரியாரியல் வாதிகளிடம் தோழமை பேணியவர்.

கலை-இலக்கியவாதிகளிடம் தோழமை பேணி, திராவிடர் கழக மேடைக்குக் கொண்டு வந்த சிறந்த மக்கள் தொடர்பாளர். ‘மணிமகன்’ என்ற பெயரில் கட்டுரைகள் எழுதியவர். சுறுசுறுப்பும் துடிப்பும், பத்திரிகை அனுபவமும் நிறைந்த பெரியார் இயக்க இளைஞர் விடைபெற்றுக் கொண்டுவிட்டார்.

திராவிடர் விடுதலைக் கழகம், இந்த துயரத்தில் பங்கேற்கிறது. இது தாங்கவியலாத துயரம்!

Pin It