பெரியாரை மூலத்தில் படிப்போம் என்பது தான் நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிற செய்தி, எனவேதான், குடிஅரசு என்ற இதழை தொகுத்துத் தர வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டோம். பெரியாரைப் பற்றி விளக்க வருபவர்கள், அவர்கள் விருப்பத்திற்கு விளக்கிக் கொண்டிருந்தார்கள். ஒரே பிரம்ம சூத்திரத்திற்கு வெவ்வேறு உரையெழுதினார்கள். உரை எழுதப்பட்டதெல்லாம் தனித்தனி மதமாக மாறியது. சங்கரர் எழுதிய உரை, இராமானுஜர் எழுதிய உரை போன்றவை தனித்தனி மதங்களாகிப் போனது. அது போன்று ஆகிவிடக் கூடாது. பெரியார் தன் நீண்ட வாழ்நாளில் அறிஞர்களை நோக்கிப் பார்த்து எழுதியவராக இருந்தது இல்லை. பாமரர்களைத் தேடிச் சென்று, அவர்களுடைய மொழியில், அவர்களின் அளவுக்கு இறங்கிச் சென்று, பேசிய உரைகள் தான் அவர்களுடையச் சிந்தனைகளாக அதிகம் நாம் பெறுகிறோம்.எழுதியதை விட பேசியது தான் அதிகம். பெரியார், கோட்பாட்டு ரீதியாக, கோட்பாடுகளுக்கு உள்ளடக்கி தனியாக எதையும் எழுதவில்லை. எனவே அதைப் புரிந்து கொள்பவர்கள் அதற்கு ஆளுக்கொரு விளக்கம் கொடுத்துக் கொண்டிருப்பவர்களாக இருக்கிறார்கள்.

பெரியாரை முழுமையாகப் புரிந்து கொண்டிருக்கிற அறிஞர்களைத் தான் பேச வைத்து அதை நூலாக்கி அதை நிரந்தரப் பதிவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் தோழர் பசு. கவுதமன் இந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். ஏற்கெனவே அவர் பெரியாரை பல தொகுதிகளாக நமக்குக் கொடுத்திருக்கிறார். ‘ஈ.வெ.இராமசாமி யாகிய நான்’ என்ற இரண்டு தொகுதிகளைக் கொடுத்துள்ளார். அடுத்து ‘நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும்?’ என்ற அய்ந்து தொகுதிகளாகக் கொடுத்து இருக்கிறார். இப்படிப்பட்ட முயற்சிகள் பரவலாக நடந்து கொண்டிருக்கிறது. பெரியாரைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்வதற்காகத்தான் இந்த கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

சுருக்கமாக தன் கொள்கையைப் பற்றி பெரியாரிடம் கேட்டபோது அவர் சொன்னார், ‘மனிதாபிமானம், வளர்ச்சிப் போக்கில் மனிதாபிமானம்’ அவ்வளவு தான் என் கொள்கை என்று சொன்னார். மிகச் சுருக்கமான உரையாக அவர் அதை வைத்தார். அவர் மனிதாபிமானத்தைப் பற்றி சொல்லும்போது, மனித சமூகம் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்பினார். கையிலோ, காலிலோ, நாசியிலோ, கண்ணிலோ வலி வந்தால் எப்படி எனக்கு வலிக்கிறது என்று சொல்கிறோமோ, அதைப் போல, உலகில் உள்ள மானுட சமுதாயத்தில், ஒரு பிரிவில் பாதிப்பு வந்தாலும் நமக்கே வந்ததைப் போல உணர்ந்து கொள்ள வேண்டும்’ என்பது அவருடைய விருப்பமாக இருந்தது. அதில், ஜாதி ஒழிப்பைத் தான் முதன்மை நோக்கமாகக் கொண்டார். அடுத்து ஜாதிக்கு இணையாக பாதுகாக்கப்பட்ட பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராக பெண்ணுரிமைக்கு வந்தார். அடுத்தது பொதுவுடமை, தனித்தமிழ்நாடு ஆகியவை சேர்த்த பகுத்தறிவு. இப்படித்தான் நாம் அவரை அடக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.

ஆனால், அதை இந்த சமுதாயத்திலிருந்து, இந்தச் சமுதாயத்திற்கு தேவையான, ஏற்கெனவே உருவாக்கி வைத்துள்ள தத்துவங்களிலிருந்து உள்ள பிழைகளை நீக்கிவிட்டு, காலத்திற்கு ஏற்ப முன்வைக்கிற ஒரு தத்துவ ஆசிரியராக பெரியார் இருக்கவில்லை. உலகத்தைப் பார்த்து புரிந்து, அதில் பாதிக்கப்படுகிற மக்கள் அவர்களுக்கான தீர்வாக எதை முன்வைப்பது, அதை உருவாக்குபவர்களுக்கு எதிரான இயக்கமாக எப்படி முன்னெடுப்பது என்பதே அவருடைய வாழ்நாள் முழுவதுமான பணியாக இருந்திருக்கிறது. ஒவ்வொரு கட்டத்திலும் பல கட்டங்களாக தாண்டியிருக்கிறார். இசையைப் பற்றி நாம் சொன்னோம், நோகாமல் விரலசைத்து இசைக்கிற இசைக்கும், உழைப்பை செலுத்தி ஆவேசமும் அதிர்வும் அதிகம் கொடுக்கும் பறையிசைக்கும் எவ்வளவு வேறுபாடு. இசை என்று வரும்போது கூட அவர் பார்ப்பனரல்லாத இசைக் கலைஞர்களை வைத்து இசை நிகழ்ச்சிகளை நடத்த முன்வருகிறார். 1930 இல் தன்னுடைய மாநாட்டில் ஒரு இசை நிகழ்ச்சியை நடத்துகிறார். அடுத்து நாற்பதுகளில் தமிழிசை இயக்கம்.

பெரியார் சொன்னார், தெலுங்கில், சமஸ்கிருதத்தில் பாடினால் கூட புரியாது, இவன் தமிழில் பாடி மூட நம்பிக்கையை வளர்த்துக் கொண்டிருக்கிறான் என்று சொன்னார். அதற்குத் தான், தமிழில் பாடு, தமிழனுக்கானதைப் பாடு என்று; வெறும் தமிழில் மட்டும் பாடுவது மட்டும் போதாது தமிழனுக்கானதைப் பாடு என்றார். அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டே இருந்தார். ஒவ்வொரு முன்னெடுப்புகளிலும் சமுதாயத்தோடு சேர்ந்து தான் பயணித்தார். முன்னே சென்று இலக்கை காட்டி விட்டு அங்கே நின்று கொண்டிருக்கவில்லை. சமுதாயத்தையும் சேர்த்து அழைத்துக் கொண்டு செல்ல வேண்டும் என்று தான் அவர் முயற்சித்தார். அதில் பல முறை அவர் வெற்றியும் கண்டிருக்கிறார். இன்றைக்கு இருக்கிற சூழலில், இந்த மனித சமுதாயத்திற்கு, அவர் சொல்லுவார், ‘உலகில் உள்ள எந்தெந்த ஸ்தாபனங்களால், எந்தெந்த வகுப்புக் கூட்டங்களால் மனித சமூகத்திற்கு இடைஞ்சல்களும், முற்போக்குக்கும் சமத்துவத்திற்கும் தடைகளும், சாந்திக்கும் சமாதானத்திற்கும் முட்டுக் கட்டைகளும் ஏற்படுகின்றனவோ, அவைகளையெல்லாம் அழித்து ஒழித்து அவை தலைதூக்காமலும், இல்லாமல் போகும்படியாக செய்வதுதான் சுயமரியாதை இயக்கத்தினுடைய வேலை’.

எந்தெந்த ஸ்தாபனங்களால் (நிறுவனம்/அமைப்புகள்) பாதிப்பு வருகிறது மானுட சமூகத்திற்கு, பாதுகாப்பிற்கு, அமைதிக்கு, எந்தெந்த வகுப்புக் கூட்டத்தால் தடை வருகிறது. இவர்களை எதிர்க்கிற போது அவர்களை அடையாளம் காட்டி தனிமைப்படுத்தும்போது பெரியாரை ‘வகுப்புதுவேஷி’ என்றார்கள். புரட்சியாளர் அம்பேத்கர் அரசியல் சட்டத்தை அறிமுகப்படுத்தியபோது சொன்னார், அரசியல் சட்டத்தின் தொடக்கச் சொல்லாக இந்திய மக்களாகிய நாம் என்று தொடங்கினேன், என்னுடைய அரசியல் உணர்வுடைய நண்பர்களெல்லாம் சொன்னார்கள் ஏன் இந்திய தேசத்தாராகிய நாம் என்று தொடங்கியிருக்கக்கூடாது என்று கேட்டார்கள். நான் அவர்களுக்கு சமாதானம் சொன்னேன், நாம் எங்கு தேசமாக இருக்கிறோம்? இனிமேல்தான் தேசமாக வேண்டும்.

ஆயிரக்கணக்கான ஜாதிகளாக பிரிந்திருக்கும் நாம் எப்படி ஒரு தேசமாக முடியும்? என்று சொல்லிவிட்டு சொன்னார்: ஜாதிதான் ‘தேச விரோத சக்தி’ என்றார். அந்த தேச விரோத சக்திகளை விட்டு விட்டு ஏதோதோ ‘தேச விரோதம்’ என்று பேசிக் கொண்டிருக்கிற இந்த சூழலில், சமுதாயத்திற்கு, தேசத்திற்கு எதிரான சக்திகளை அறியச் செய்வதும், அவர்களை பலமிழக்கச் செய்வதும் அவசியம். அதற்காக எந்த முன்னெடுப்புகளை எடுத்துச் செல்வது? அதை நோக்கிய கருத்தரங்கமாகத்தான் தோழர்கள் இதை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இதை நீங்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

எப்போதும் இருந்ததைவிட இப்போது சூழல் மிக அவசியமாக இருக்கிறது. சுயமரியாதை என்பது பல துறைகளில் நமக்கு வேண்டும். பெரியார் ஒரு மாநாட்டு நிறைவுரையில் கூறுகிறார், ‘இந்த உலகத்திலுள்ள எல்லா அகராதிகளையும் கொண்டு வந்து போட்டு ஏடு ஏடாய் புரட்டிப் புரட்டிப் பார்த்தாலும் அழகும், பொருளும் சக்தியும் நிறைந்த வார்த்தையாகிய சுயமரியாதை என்கிற வார்த்தைக்கு மேலானதாகவோ ஈடானதாகவோ வேறு ஒரு வார்த்தையை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. புரட்டிப் போட்டாலும் சுயமரியாதை என்ற சொல்லுக்கு உரிய அழகும், பொருளும், சக்தியும் உள்ள வேறு சொல்லில் காண முடியாது’ என்று சொன்னார்.

இந்த சுயமரியாதை என்கிற இயந்திரத்தை சரியாக இயக்கத் தொடங்கிவிட்டால், ஒரு தோள் பட்டை (belt) மாட்டிவிட்டால் எந்த இயந்திரத்தையும் இயக்கலாம். நமக்குத் தேவை சுயமரியாதை. நானும் மனிதன் அவனும் மனிதன், அவனுக்குள்ள உரிமை எனக்கேன் இல்லை? நானும் மானுடப் பிறவி தான் நீயும் மானுடப் பிறவி தான். ஆணுக்குள்ள உரிமை எனக்கு ஏன் இல்லை? நீ மூலதனத்தைப் போட்டாய் நான் உழைப்பைப் போட்டேன் உனக்குள்ள பங்கு எனக்கு ஏன் இல்லை? இந்த மூன்றும் தான் சுயமரியாதை என்று சொன்னார். இந்த மூன்று பேதங்களை ஒழிப்பதற்கு தான் அவர் பாடுபட்டார். அது குறித்த விளக்கங்களை முன் வைப்பதற்கு வந்திருக்கின்ற பேராசிரியர்களுக்கு நன்றி சொல்லி இந்த அளவிற்கு என்னுடைய தலைமை உரையை நிறைவு செய்கிறேன்.

(கருத்தரங்கில் தலைமை உரை)

- கொளத்தூர் மணி

Pin It