ஈரோடு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில், ‘ஜாதி மத மறுப்பு இணையர் பாதுகாப்பு இயக்கம் “ தொடக்க விழா ஈரோடு பேருந்து நிலையம் அருகிலுள்ள ரீஜென்சி ஹோட்டலில், 11.5.2014 காலை 11 மணிக்கு நடைபெற்றது

• ஜாதி, மத மறுப்பு இணையருக்கு சட்டரீதியானப் பாதுகாப்பு வழங்குவது

• ஜாதி, மத மறுப்புத் திருமண இணையரின் திருமணத்தைப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யும்போது, ஏற்படும் இடர்ப்பாடுகளைக் களைய உதவுவது

• ஜாதி, மதமறுப்புத் திருமண இணையருக்கு வாழ்விடங்கள் மற்றும் வாழ்வாதாரத்திற்குத் தேவையான வழிகாட்டுவது

• ஜாதி, மத மறுப்பு இணையரின் வாரிசுகளுக்கு “ஜாதியற்றோர்” என்ற பிரிவில் தனி இடஒதுக்கீடு வழங்கக் கேட்டு அரசை வலியுறுத்துவது

• மத மறுப்புத் திருமணங்களைப் பதிவு செய்ய, விண்ணப்பித்த 30 நாட்கள் கழித்தே பதிவு செய்யப்படும் என்ற விதி இருப்பதால், பதிவுக்குள் இணையருக்கு உறவினர்களிடமிருந்து பாதிப்பு ஏற்படுவற்கு உள்ள வாய்ப்பைத் தடுக்க, மதத்துக்குள் நடக்கும் திருமணங்களைப் போல உடனே திருமணத்தைப் பதிவு செய்யுமாறு விதிகளைத் திருத்த அரசை வலியுறுத்துவது

• கருந்திணை தயாரித்து வெளியிட்டுள்ள அகமண முறையினால் விளையும் தீங்குகளை விளக்கும் “ஆவணப் படத்தை பரவலாகக் கிராமங்கள்தோறும் திரையிடுவது... போன்றவற்றை நோக்கங்களாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது, இந்த அமைப்பு.

இந்த அமைப்பின் தொடக்க விழா வுக்கு சசிக்குமார் தலைமை வகித்தார். செல்வராசு வரவேற்புரையாற்றினார். செல்லப்பன், சிவானந்தம், ஆகியோர் உரையாற்றினர். அமைப்பின் நோக்கங்கள் பற்றி கொமராபாளையம் கலைமதி விளக்கினார்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ஜாதிமறுப்புத் திருமணம் செய்து கொண்டு, தற்போது கழகத்தில் இணைந்து பணியாற்றிவரும் சென்னி மலைப் பகுதியைச் சார்ந்த ஜோதி ரவிக்குமார், தான் திருமணம் செய்யும் போது தனக்கு ஏற்பட்ட இடையூறுகளையும் அதனால் தான் பட்ட வேதனைகளையும், அப்போது இதுபோன்று ஆதரவான இயக்கங்கள் பற்றி தங்களுக்குத் தெரியாமல் இருந்ததையும் பற்றிக் கூறியதோடு, தாங்கள் திராவிடர் விடுதலைக் கழகத்தில் பெரியாரியலை ஏற்றுக் கொண்டு இணைந்த விதம் பற்றியும், இயக்கத்தில் இணைந்த பிறகு தனது கணவர் தன்னை ஒரு தோழமை உணர்வோடு நண்பர் போல நடத்து வதையும், இயக்கத் தோழர்களின் முயற்சியால் தனது பெற்றோருடன் தான் இப்போது சேர்ந்துள்ள விதம் பற்றியும் கூறி பெருமிதம் கொண்டார்.

குமராபாளையம் பகுதியைச் சார்ந்த ஜாதிமறுப்பு இணையர் கார்த்தி-சுசீலா ஆகியோர் இருவரும் தங்களது திருமண அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

தற்போது ஈரோட்டில் பணிபுரிந்து வரும் கிருஷ்ணன் தங்கள் ஜாதி மறுப்புத் திருமணத்துக்கு எதிராக தங்கள் வீடு சூறையாடப்பட்டதையும், கழகம் அதற்காக ஈரோட்டிலும் மேட்டூரிலும் நடத்திய போராட்ளடங்களைப் பற்றியும், தற்போது கழகத்தில் இணைந்து பணியாற்றி வருவதையும் விரிவாகக் கூறினார்.

தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் ப.சிவக்குமார், கழகப் பொருளாளர் ஈரோடு இரத்தினசாமி ஆகியோர் உரையாற்றினர்.

இறுதியாகக் கழகத் தலைவர் கொளத்தூர்மணி சிறப்புரை யாற்றினார். தனது உரையில், வேதங்களின் கருத்துப்படி இருந்த 4 வகை ஜாதிகள் எப்படி இன்று நாலாயிரம் ஜாதிகளாக உருவெடுத்தன என்பது பற்றி மனுசாஸ்திரமும் பிற மத நூல்களும் குறிப்பிட்டுள்ளதை விளக்கிக் கூறினார். இவ்வாறு ஜாதிக் கலப்பால் உருவான சாதிகளிடையே, இப்போது மட்டும், மேலும் கலப்பு உருவாகாமல், ஜாதி மறுப்புத் திருமணம் செய்ய விடாமல் தடுப்பது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார்.

இந்நிகழ்வில், யாருடைய உந்துதலும் இன்றி, தன்னெழுச்சியாக “பெரியார் கிரிக்கெட் கிளப்” என்று பெயர் வைத்துக்கொண்டும், பெரியார் படம் பொறித்த பனியன்களை அணிந்துகொண்டும் உள்ள அந்தியூர் ஆப்பக்கூடல் பகுதியைச் சார்ந்த 11 இளைஞர்கள், தோழர் வெங்கட் முயற்சியால் நிகழ்ச்சிக்கு வந்திருந்து, தாங்களும் பெரியார் கொள்கைகளை ஏற்றுக் கொண்டவர்கள், ஜாதி மறுப்பில் ஆர்வம் உள்ளவர்கள் என்று கூறி மேடையில் பேசியது அனைவரையும் வியப்படைய வைத்தது.

Pin It